தொடர்புடைய படைப்புகள்

ன்றைய உலக அரசியல் பொருளாதாரத்தில் சீனா தவிர்க்க முடியாத ஓர் ஆற்றலாக உருவெடுத்துள்ளது. சீனாவின் எழுச்சியை எவ்வாறு புரிந்து கொள்வது? இது தொடர்பான எதிரும் புதிருமான உரையாடல்கள் கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அரசியல் பொருளாதாரத் தளத்தில் மட்டுமின்றி, மார்க்சியக் கோட்பாட்டு அடிப்படையிலும் இத்தகைய உரையாடல்கள் தொடர்கின்றன.

Socialism with Chinese Characteristics- ஜூலை மாதம் உங்கள் நூலகம் இதழில் ஆர்த்தர் க்ரோபரின் சீனப் பொருளாதாரம்: அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை (China’s Economy: What Everyone Needs to Know) என்ற நூல் அறிமுகம் வெளியானது. அது, சீனாவின் இக்கால அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய ஒரு விவரிப்பை வழங்கியது.

- கைலே ஃபெர்ரனாவின் உலகிற்கு சீனா ஏன் தேவை? - வளர்ச்சி, சூழலியல், தகராறு தீர்ப்பு, பொதுவான வளம் (Why the World Needs China? - Development, Environmentalism, Conflict Resolution, Common Prosperity) என்ற நூலைப் பற்றிய அறிமுகக் கட்டுரை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரு பகுதிகளாக வெளியானது. இக்கட்டுரை, கடந்த 100 ஆண்டு கால உலக ஏகாதிபத்திய அரசியலில் சீனாவின் மாறி வந்த இடத்தைப் பற்றி விளக்கியது.

உலக வரலாற்றில் சீனாவின் இன்றைய இடம் என்ன?

இந்தக் கேள்விக்கான விடையை, சீனாவின் அரசியல் அமைப்பு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள், அதன் பொருளாதாரக் கொள்கைகள், அயல்நாடுகளுடன் அதன் உறவு ஆகியவை தொடர்பான எடுத்துக்காட்டுகளையும் புள்ளிவிவரங்களையும் வைத்து மட்டும் வந்தடைய முடியாது.

ஏனென்றால்,

“எதார்த்த நிலையைச் சித்தரிப்பதற்கு எடுத்துக்காட்டுகளையோ தனிப்பட்ட புள்ளிவிவரங்களையோ எடுத்துக் கொள்ளக் கூடாது. சமூக வாழ்வின் நிகழ்வுகள் மிதமிஞ்சிய சிக்கல் வாய்ந்தனவாக இருப்பதன் காரணமாக, எடுத்துக்காட்டுகளையோ தனிப்பட்ட புள்ளிவிவரங்களையோ எத்தனை வேண்டுமானாலும் தேர்வு செய்து எந்த முன் கூற்றையும் மெய்ப்பிப்பது எப்போதும் சாத்தியமே.”

      - லெனின், ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம், தேர்வு நூல்கள் தொகுதி 4, பக்கம் 32

மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு நூல்களும் சீனாவின் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றிய எடுத்துக்காட்டுகளையும் புள்ளிவிவரங்களையும் தருகின்றன. அவற்றின் அடிப்படையில், “சீனா ஒரு சோசலிச நாடு” அல்லது “சீனா ஒரு முதலாளித்துவ நாடு” அல்லது “சீனா ஒரு ஏகாதிபத்திய நாடு” என்று எந்த முன்கூற்றையும் ஒருவர் மெய்ப்பித்து விடலாம்.

சீனாவின் உண்மையான உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த கால, நிகழ்கால, எதிர்காலச் செயல்பாடுகளின் போக்கைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கும் அந்த நாட்டையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியையும் வழிநடத்தும் தத்துவத்தைப் பற்றிய ஆய்வு தேவைப்படுகிறது.

அத்தகைய ஆய்வை வழங்குகிறது, ரோலண்ட் போயர் எழுதிய சீனத் தன்மையிலான சோசலிசம்: அயல்நாட்டவருக்கு ஒரு வழிகாட்டி (Socialism with Chinese Characteristics: A Guide for Foreigners) என்ற நூல். அந்த நூலைப் பற்றிய அறிமுகத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

முந்தைய இரு நூல்களும் “சீனா உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் என்ன செய்கிறது?”, “மாறிச் சென்ற ஏகாதிபத்திய உலகத்துடன் சீனா எவ்வாறு உறவாடுகிறது?” என்ற கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தால், ரோலண்ட் போயரின் புத்தகம், “ஏன் சீனா இவ்வாறு செய்கிறது?” என்ற கேள்விக்குப் பதிலளிக்கிறது. அதனைத்  தத்துவ வழியில், மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை மரபைச் சார்ந்து வழங்குகிறது.

இந்த மூன்று நூல்களும் சேர்ந்து, சீனாவின் பொருளாதாரம், பன்னாட்டு உறவுகள், அரசியல் தத்துவம் போன்றவற்றை இணைக்கும் ஒரு மார்க்சியக் கண்ணோட்டத்தை வழங்குகின்றன; இக்கால சீனாவின் சிக்கலான நடைமுறையைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

விடை காண வேண்டிய கேள்விகள்

21 ஆம் நூற்றாண்டில்

- சீனாவில் சோசலிச உறவுகளுக்கும் உற்பத்தி சக்திகளுக்கும் இடையிலான உறவு என்ன?

- உண்மையிலேயே சீனாவில் சோசலிச உறவுகள் உள்ளனவா?

- சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனக் குடிமக்களுக்கும் இடையிலான உறவு எத்தகையது?

- உலக அரங்கில் சீனாவுக்கும், அமெரிக்கா முதலான ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையில் எத்தகைய உறவு நிலவுகிறது?

- சீனாவுக்கும், மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையிலான உறவு எத்தகையது?

சீனாவில் மார்க்சியம்

ரோலண்ட் போயரின் புத்தகம், கடந்த 40 ஆண்டுகளில் சீன மார்க்சிய அறிஞர்களின் ஆய்வுகளைப் பயன்படுத்தி “சீனத் தன்மையிலான சோசலிசம்” என சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் தத்துவப் பார்வையை விளக்குகிறது. சீன மார்க்சிய அறிஞர்களின் ஆய்வுகள் சீன மொழியில் வெளியாகியுள்ளன. அவை சீனாவுக்கு வெளியில் பிற நாடுகளில், பிற மொழி வட்டங்களில் போதுமான அளவுக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்தியாவில் நடக்கும் உரையாடல்களுக்கும் இது பெருமளவு பொருந்தும்.

மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எல்லாக் காலத்துக்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்தும் மாறாநிலை வடிவத்தைக் கொண்டிருக்கவில்லை. அது, சமூக இயக்கத்தின் மூலம் நடைமுறையில் தன்னை மறுவடிவமைத்துக் கொள்கிறது. அல்லது, வர்க்கப் போராட்டத்தின் மூலம் நிகழும் சமூக இயக்கம் எப்படி புதிய முரண்பாடுகளை உருவாக்குகிறது, அவை எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதைக் காட்டும் இயக்கவியலாக மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் செயல்படுகிறது.

இதனை மார்க்சும் எங்கெல்சும் கீழ்க்கண்டவாறு முன்வைக்கின்றனர்.

“கம்யூனிஸ்டுகளின் கோட்பாட்டு முடிவுகள், உலகைப் புத்தமைக்க நினைக்கும் இந்த அல்லது அந்தச் சீர்திருத்தாளர் புனைந்து வைத்தோ கண்டுபிடித்தோ கூறிய கருத்துகளை, அல்லது கோட்பாடுகளை எவ்வகையிலும் அடிப்படையாகக் கொண்டவையல்ல.

நடப்பிலுள்ள வர்க்கப் போராட்டத்திலிருந்து, நம் கண்ணெதிரே நடைபெற்று வரும் வரலாற்று இயக்கத்திலிருந்து உதிக்கும் மெய்யான உறவுகளையே இந்த முடிவுகள் பொதுப்படையாக எடுத்துரைக்கின்றன.”

           -                             மார்க்ஸ், எங்கெல்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, பக்கம் 52 (பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் என்ற தலைப்பில்

எதிரெதிர் கூறுகளின் முரணியக்கம் - இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தின் வளர்ச்சி: லெனின், மாவோ, ஷி ஜின்பிங்

மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தின்  “முரண்பாடுகளின் இயக்கம்” என்ற அடிப்படைக் கோட்பாடு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்  நடைமுறை அரசியல் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கண்ணோட்டத்தின்படி, சமூக வளர்ச்சியானது தொடர்ச்சியான முரண்பாடுகளின்  வெளிப்பாடும் அவற்றின் தீர்வுமாகும்.

“முறையான பொருளில் சொன்னால், இயங்கியல் என்பது பொருட்களின் முதன்மைச் சாரத்தில் உள்ள முரண்பாட்டைப் பற்றி ஆராய்ந்து கற்பதே ஆகும் என்று லெனின் சொன்னார். இந்த விதி இயங்கியலின் முதன்மைச் சாரமானது என்று லெனின் அடிக்கடி குறிப்பிடுவார். அவர் அதை இயங்கியலின் உட்கரு என்றும் குறிப்பிடுவதுண்டு.”

“இயற்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் இயக்கப் போக்குகளிலும் (இவற்றில் மனம், சமூகம் ஆகியவை அடங்கும்) முரண்பாடான ஒன்றையொன்று மறுத்து நிற்கின்ற எதிர்மறையான போக்குகளைப் புரிந்து கொள்ளல் (கண்டறிதல்)” என்பது எதிர்மறைகளின் ஒற்றுமை பற்றிய விதியாகும் என்று லெனின் வரையறுத்தார்.”

           -                             முரண்பாடு பற்றி என்ற நூலில் மாவோ சே துங்

மாவோ இந்தச் சிந்தனையை சீன சமூகத்திற்குப் பொருத்தும்போது, நகரம்–கிராமம், உற்பத்தி–பங்கீடு, அரசியல்–பொருளாதாரம் போன்ற அனைத்துமே ஒரு பெரும் இயக்கத்தில் ஒன்றிணைகின்றன என்று விளக்கினார். அவரது “முதன்மை முரண்பாடு” பற்றிய பகுப்பாய்வு சீனக் கொள்கை வடிவமைப்பின் மையமாக மாறியது.

21ஆம் நூற்றாண்டில் ஷி ஜின்பிங் இந்த மரபை முன்னெடுத்துச் செல்கிறார். 2017இல் நடந்த 19 ஆம் கட்சிக் காங்கிரசில் அவர் “புதிய யுகத்துக்கான சோசலிசம்” (Socialism for the New Era) என்ற கருத்துநிலையை வெளியிட்டது,  முரண்பாடு பற்றிய தத்துவத்தின் அரசியல் வடிவமாகும்.

பொருளாதாரம், அரசியல், தத்துவம் - முரண்பாட்டின் இயக்கம்

- பொருளாதாரம்: சந்தைப் பொருளாதாரத்தின் செயல்திறனைப் பயன்படுத்துவதற்கும் (உற்பத்தி சக்திகளை வளர்த்தல்), சமூகத்தின் ஒட்டுமொத்த சோசலிச நோக்கத்துக்கும் (உற்பத்தி உறவுகளைப் பாதுகாத்தல்) இடையிலான முரண்பாடு இணக்கப்படுத்தப்படுவது:

  சீனாவின் “சோசலிசச் சந்தைப் பொருளாதாரம்” சோசலிசத்துக்கு மாறிச் செல்லும் கட்டத்தில் இந்த முரண்பாட்டைக் கையாள்வதற்கான நடைமுறை வடிவமாகும்.

- அரசியல்: கட்சியின் வழிகாட்டலின் கீழான பல்வேறு சமூகப் பிரிவுகளிடையேயான முரண்பாடுகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு இடையேயான சமநிலையைக் கண்டறியும் ஓர் அமைப்பாக சீன அரசமைப்பு செயல்படுகிறது. மாவோவின் “முரண்பாட்டின் இரண்டு பக்கங்களையும்” புரிந்துகொள்ளும் கோட்பாடு இங்கு அரசியல் நடைமுறையாக வெளிப்படுகிறது.

  “சீனத் தன்மையிலான சோசலிசம்” என்பது ஒரு மாறாநிலை இலக்கு அன்று; மாறாக, அது ஓர் இயக்கநிலைப் பயணம். இந்தப் பாதையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக வளர்ச்சியின் பொருள்முதல்வாத விதிகளுக்கு ஏற்ப,  முரண்பாடுகளை அடையாளம் கண்டு, முன்னுரிமை அளித்து, அவற்றுக்கு இணக்கம் காண முயல்கிறது. க்ரோபர் விவரித்த பொருளாதாரக் கட்டமைப்புகளும், ஃபெர்ரனா பகுப்பாய்வு செய்த பன்னாட்டு உறவுகளும், இந்த அடிப்படைத் தத்துவ இயக்கவியலின் வெளிப்பாடுகளே.

சீனத் தன்மையிலான சோசலிசம்  நூலின் உள்ளடக்கம்

இந்நூலில் 11 இயல்கள் இடம்பெறுகின்றன. இவை மேலே பட்டியலிடப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை வழங்குகின்றன.

1. அறிமுகம்: சீனாவின் தனித் திறனாக மார்க்சியம்

மார்க்சியத் தத்துவமும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஒரு கோட்பாட்டாளராக இருப்பதன் அவசியமும் வலியுறுத்தப்படுகின்றன. மேற்கத்தியக் கருத்தினங்களைப் பயன்படுத்தி சீனாவைப் புரிந்துகொள்ள முயலும் தவறு விமர்சிக்கப்படுகிறது.

2. தெங் ஷியாவ் பிங்-ஐ வாசித்தல்

  சிந்தனையை விடுவித்தல் - எதிலிருந்து? எதற்காக? மெய்விவரங்களிலிருந்து உண்மையைத் தேடுதல். உற்பத்திச் சக்திகளை விடுவித்தல்.

3. முரண்பாடு பற்றிய பகுப்பாய்வு - அதன் வரலாறு, பொருள், பயன்பாடு.

  லெனின், இயக்கவியல் பொருள்முதல்வாதம், மாவோ சேதுங்

4. சீர்திருத்தம் - திறந்த கொள்கையின் மார்க்சிய அடிப்படை

குடும்பப் பொறுப்பு, 1990களின் அத்துமீறல்கள், முதலாளித்துவ நாடுகளுடனான உறவு, உள்நாட்டு வர்க்க முரண்பாடுகள், பன்னாட்டு வர்க்க முரண்பாடுகள், ஹாங்காங், மக்காவ் பகுதிகளுக்குப் பொருத்தப்பட்ட “ஒரு நாடு: இரண்டு ஒழுங்கமைப்புகள்” என்ற கோட்பாடு

5. சீனாவின் சோசலிசச் சந்தைப் பொருளாதாரம் - திட்டமிட்ட பொருளாதாரம்

  திட்டமிடல் - சந்தை இரண்டுக்கும் இடையேயான முரணியக்கத்தின் பகுப்பாய்வு, சோசலிசத்தின் பொதுவான தன்மையும் குறிப்பான தன்மையும், திட்டமிடலையும் சந்தைப் பொருளாதாரத்தையும் தாண்டிச் செல்லும் இயக்கவியல் பாய்ச்சல்

6. மிதமான வளம் படைத்த சமூகத்தை நோக்கி... அல்லது சோசலிச நவீனமயமாக்கம்

நான்கு நவீனப்படுத்தல்கள், மகத்தான ஐக்கியம்-ஒத்திசைவு, இரண்டு நூற்றாண்டு இலக்குகள்

7. இறையாண்மை, மனித உரிமைகள் குறித்த சீன மார்க்சிய அணுகுமுறை

  பொய்யான பொதுமைப்படுத்தல்கள், - மண்ணுக்கேற்ற பொதுமைப்படுத்தல், மனித உரிமைகள் குறித்த மேற்கத்திய தாராளவாத மரபு, இறையாண்மை - வெஸ்ட்ஃபாலியா முதல் காலனியாக்கம் வரை

8. நடைமுறையில் சோசலிச சனநாயகம்

தேர்தல் சனநாயகம். மக்கள் மாநாடுகள், கலந்துரையாடும் சனநாயகம், வேர்மட்ட சனநாயகம், சிறுபான்மை தேசியங்கள், சட்டத்தின்படியான ஆட்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை

9. கோட்பாட்டில் சோசலிச சனநாயகம்

மார்க்ஸ்&எங்கெல்ஸ் - பாரிஸ் கம்யூன்,
லெனின் - சனநாயகத்தின் உச்சநிலை வடிவம்,
ஸ்டாலின் - கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை,
மாவோ சேதுங் - புதிய சனநாயகம்,
தெங் ஷியாவ் பிங் முதல் ஷி ஜின்பிங் வரை - சனநாயக மத்தியத்துவம் பற்றிய சிக்கல்

10. மார்க்ஸ்&எங்கெல்ஸ் குறித்து ஷி ஜின்பிங்

ஷி ஜின்பிங் சிந்தனை, சீனாவில் மார்க்சியம் - அறிவியல் சோசலிசம், காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள், மார்க்சைப் படித்தல்

11. தொகுப்பாக

அயல்நாட்டவருக்கு ஒரு வழிகாட்டி, சோசலிச அமைப்பு, பண்பாட்டுத் துணிச்சல்

உற்பத்திச் சக்திகள் -உற்பத்தி உறவுகள்: முரண்பாட்டின் வளர்ச்சி

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கும் சோசலிச உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாட்டைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு கையாண்டு வருகிறது என்பதைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது “சீனாவின் சோசலிசச் சந்தைப் பொருளாதாரம் - திட்டமிட்டப் பொருளாதாரம்” என்ற இயல் 5இல் இடம் பெறுகிறது.

அ. சந்தைப் பொருளாதாரத்தை முதலாளித்துவம் என்ற கட்டமைப்பிலிருந்தும், திட்டமிட்டப் பொருளாதாரத்தை சோசலிசம் என்ற கட்டமைப்பிலிருந்தும் பிரித்துப் பகுப்பாய்வு செய்தல்

சீன மார்க்சிய அறிஞர் யூ சூயாவ் 1979 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘ஒரு சோசலிஸ்ட் சந்தைப் பொருளாதாரம் குறித்து உரையாட ஒரு முயற்சி’ எனும் கட்டுரையை வெளியிட்டார். இதில் சந்தையை முதலாளித்துவத்திலிருந்து அவர் பிரிக்கிறார். பொதுவுடைமையின் கீழும் சந்தைப் பொருளாதாரம் செயல்பட முடியும் என்று அவர் முன்மொழிந்தார்.

- சந்தைப் பொருளாதாரத்தில் மதிப்பு விதியின் முதன்மை.

  முதலாளித்துவத்தில் மதிப்பு விதியானது தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கும் முதலாளிகள் மூலதனத்தைத் திரட்டுவதற்குமான அடித்தளமாகப் பயன்படுகிறது. சோசலிசக் கட்டமைப்பில் மதிப்பு விதியானது, உற்பத்தி ஆதாரங்களை சமூகத்தின் தேவைக்கேற்ப பங்கீடு செய்வதற்கு உதவுகிறது; மாறிவரும் தொழில்நுட்பங்கள், நுகர்வு விருப்பங்கள் போன்றவற்றுக்கு உற்பத்தியைத் தகவமைப்பதற்கான கருவியாகப் பயன்படுகிறது. ஒட்டுமொத்த சோசலிச அரசியல் கட்டமைப்பின் கீழ் மதிப்பு விதியின் ஒழுங்கீனமான சந்தைச் செயல்பாடு சமூக நோக்கத்தையும் நலனையும் நோக்கித் திருப்பி விடப்படுகிறது.

“சோசலிசச் சந்தைப் பொருளாதாரம்  அடிப்படை சோசலிச அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சோசலிசச் சந்தைப் பொருளாதாரத்தை நிறுவுவதன் நோக்கம், அரசின் பேரளவு கட்டுப்பாட்டின் கீழ் சமூகத்தின் வள ஆதாரங்களைப் பிரித்து ஒதுக்குவதில் சந்தைக்கு ஓர் அடிப்படை வகிபாகத்தை வழங்குவதாகும்” என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வகுத்தளித்தது. (சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக் குழு 1993, 2)

- முதலாளித்துவக் கட்டமைப்பு என்பது இலாப நோக்கத்தையும், அதற்கான மூலதனத் திரட்டலையும், முதன்மைப்படுத்துகிறது. சோசலிசக் கட்டமைப்பு என்பது இலாப நோக்கத்தைக் கீழ்நிலைப்படுத்தி மூலதனத் திரட்டலை ஒட்டுமொத்த சமூகத்தின் தேவைக்கேற்ப இணக்கப்படுத்துகிறது.

- சந்தைப் பொருளாதாரம் அல்லது பொருளாதாரத் திட்டமிடல் முதலியவற்றை கருவிகளாகக் கருத வேண்டும். இந்தக் கருவிகள் முதலாளித்துவத்தின் கீழ் மூலதனத்தின் நலன்களுக்குச் சேவை செய்கின்றன; சோசலிசத்துக்கு மாறிச் செல்லும் கட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டின் நலன்களுக்குச் சேவை செய்யும்படி ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

- இந்த அணுகுமுறையின் முதன்மையான நோக்கம் உற்பத்திச் சக்திகளைக் கட்டவிழ்த்து விடுதல் ஆகும். சோசலிசத்தைக் கட்டியமைப்பதில் முதன்மையான கடமை உற்பத்திச் சக்திகளை முழு வளர்ச்சியடைவதற்கான வழிகளைக் கண்டறிவதாகும்.

  “நவீன அறிவியலில் கடைசியாக வந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அமைந்த பெருவீத முதலாளித்துவப் பொறியியல் இல்லாமல் சோசலிசத்தைப் பற்றிச் சிந்திக்கவே முடியாது. உற்பத்தியிலும் பங்கீட்டிலும் ஒன்றிணைக்கப்பட்ட தரத்தை மிக மிகக் கண்டிப்புடன் பின்பற்றி வருமாறு பல கோடிக்கணக்கான மக்களைப் பயிற்றுவிக்கும் திட்டமிட்ட அரசு அமைப்பு இல்லாமல் அதைப் பற்றிச் சிந்திக்கவே முடியாது.” (லெனின், பண்ட வரி பற்றி)

என்று லெனின் கூறியதை இங்கு பொருத்திப் பார்க்கலாம்.

ஒரு நாட்டை சோசலிச நாடு என்று சொல்வதன் அடிப்படை என்ன?

சந்தைப் பொருளாதாரம் அல்லது திட்டமிட்ட பொருளாதாரம் எந்த அமைப்புக்குச் சேவை செய்கிறது? அவற்றைப் பயன்படுத்தும் அரசு அமைப்பின் தன்மை என்ன என்பது முதன்மையானது.

சந்தைப் பொருளாதாரம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு உதவுகிறதா அல்லது சோசலிசத்தைக் கட்டியமைக்கும் நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வலிமையின் மேம்பாட்டிற்கு உதவுகிறதா அல்லது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறதா என்பதன் அடிப்படையிலேயே அதனை மதிப்பிட வேண்டும்.

(1)   ஒட்டுமொத்த சோசலிச அமைப்பில் பல்வேறு கூறுகள் உள்ளன; ஆனால், அந்த அமைப்புக்குள் பொதுவுடைமை என்ற கருத்துநிலை பொருளாதாரத்தின் மையமான இயக்கியாக வலுவாகத் தொடர்கிறது;

(2)   அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டுமே உயிர்த்துடிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் எனினும், அவற்றின் முக்கிய நோக்கம் என்ன விலை கொடுத்தாவது இலாபம் அடைவது அல்ல; மாறாக, சமூக நலனும், அனைத்து மக்களின் தேவைகளையும் நிறைவு செய்வதுமே ஆகும். சுருக்கமாக, அது  ‘மக்களை மையமாகக் கொண்டது’.

(3)   ஒவ்வொருவரும் தம் திறனுக்கேற்பவும், ஒவ்வொருவருக்கும் அவரது பங்களிப்புக்கேற்பவும் எனும் சோசலிக் கொள்கையைப் பயன்படுத்தி, சுரண்டலைக் கட்டுப்படுத்தி, செல்வக் குவிப்பைக் (ஏற்றத்தாழ்வை) குறைத்து, பொதுச் செழுமையை நோக்கிச் செல்கிறது.

(4)   செயலுக்கான வழிகாட்டியாக எப்போதும் மார்க்சியம் இருக்கிறது

(5)   முதன்மை விழுமியம் என்பது எப்போதும் சோசலிசக் கூட்டுறவு மனப்பான்மையாக இருக்க வேண்டுமே தவிர, தனிமனிதவாதம் அல்ல.

சந்தை சோசலிசம் என்பதை சீன மார்க்சிய அறிஞர்கள் மேற்கூறியவாறு வகுத்துரைக்கின்றனர்.

இது நடைமுறையில் எவ்வாறு செயல்படுகிறது?

சீனாவில் செயல்படும் ஒவ்வொரு தொழில்‑வணிக நிறுவனமும், அது அரசு சார்புடையதாக இருந்தாலும், தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும், வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும், ஆண்டு சமூகப் பொறுப்பு அறிக்கைகளைத் தயாரிக்க வேண்டும்.

இது முதன்மையாக நிறுவனத்திலுள்ள  கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையின் பொறுப்பாகும். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சி உறுப்பினர்களைக் கொண்ட எந்த நிறுவனமும்,  சீன நிறுவனமாக இருந்தாலும் அல்லது அயல்நாட்டு நிறுவனமாக இருந்தாலும், ஒரு கட்சிக் கிளையைக் கொண்டிருக்க வேண்டும்.

நிறுவனத்தின் பொருளாதார ஆதாரத்தை உறுதி செய்வது இயக்குநர் குழுவின் பணி என்றால், சமூகப் பொறுப்பு அறிக்கைகள் என்பவை சமூக நலன், வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, கல்வி, பொதுக் கருத்தை வழிநடத்துவதும் மேம்படுத்துதலும், சோசலிசத்தின் முதன்மை விழுமியங்கள், கட்சிக் கட்டமைப்பு, சீனத் தன்மையிலான சோசலிசத்திற்கான பங்களிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

இவை பொது நலனுக்குச் சேவை செய்யும் நிறுவனத்தின் செயல்பாடுகளில் மையமானவையாகும். சந்தைப் பொருளாதாரம் செயல்படும் ஒட்டுமொத்த அமைப்பு வடிவம் முதலாளித்துவமாக மட்டும் இருக்க வேண்டியதில்லை; மாறாக, சந்தைப் பொருளாதாரம் எந்தச் சமூகப் பொருளாதார அமைப்பின் கூறாக உள்ளதோ, அதனால் அது வடிவமைக்கப்படுகிறது.

இயக்கவியல் நிலைமறுப்பும் நிலை இருப்பும் -
(dialectical sublation) - சந்தைப் பொருளாதாரமும் திட்டமிட்ட பொருளாதாரமும் உருமாற்றம் அடைவது

“கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிசக் கட்டுமானத்தைத் தொடங்கியவுடன் பேரளவில் திட்டமிடப்பட்ட பொருளாதாரம் அவசியமாக ஆகிறது. தேசியமயமாக்கல்கள், கூட்டுறவு மயமாக்கல், உற்பத்தி சாதனங்களின் முன்னாள்  முதலாளி-நிலச்சொத்து உடைமையாளர்களை நசுக்குதல் அல்லது மாற்றுதல் போன்றவை உற்பத்திச் சக்திகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. ஆனால் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு அது பொருளாதாரத் திறனையும் மேம்பாட்டையும் முடக்கி வைக்கும் புதிய முரண்பாடுகளுக்கு வழிவகுக்கிறது.” (லியாவ் 2008).

அரசியல் மேலாண்மையை அடைந்த பின்னர், உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதன் நோக்கத்தை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும் பின்வருமாறு வரையறுக்கின்றனர்.

“பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில் - அதாவது, ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும். மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்த தொகையைச் சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும். [அழுத்தம் சேர்க்கப்பட்டது] (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, பக்கம் 61-62)

நீதி என்பது  திட்டமிடப்பட்ட பொருளாதாரம், பொது உடைமை, வளங்களின் சமமான பகிர்வு மற்றும் வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றுகிறது (1930களில் சோவியத் ஒன்றியத்தில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட சோசலிசத்தின் வரையறை (போயர் 2017));  செயல்திறன் என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அம்சமாகும்; அது வளங்களைப் பிரித்து ஒதுக்குவதையும் புத்தாக்கத் திறனையும் ஊக்குவிக்கிறது.

நீதியும் செயல்திறனும் முதலாளித்துவ அமைப்பில் உள்ளதுபோல் ஒன்று-அல்லது-மற்றொன்று என்ற தேர்வாக இல்லை. மார்க்சிய மரபில் அதுவும் இதுவும் என்ற முறையில் செயல்படுவது உறுதி செய்யப்படுகிறது.

உற்பத்திச் சாதனங்களின் முதல்நிலையாக தனியார் உரிமையை வைப்பதன் மூலம் முதலாளித்துவத்தின் கீழ் உள்ள சந்தைப் பொருளாதாரம் ‘கட்டுக்கடங்காத காட்டுக் குதிரை’ போன்று அழிவுகளை ஏற்படுத்துகிறது. நீதியைக் கையாள முடியாமல், நெருக்கடிகளையும் சமூக இருமுனைப்படுத்தலையும் அநீதியையும் உருவாக்குகிறது.  மாறாக, ஒரு சோசலிசக் கட்டுமானத்தில் சந்தைப் பொருளாதாரத்தின் செயல்திறன், பொது உடைமையைக் கொண்ட திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தின் நீதி ஆகிய இரண்டும் உள்ளன.

அரசு சார்பு நிறுவனங்கள் (SOEs) கலப்பு உரிமைத்துவம் என்ற முறையில் ஆழமான சீர்திருத்தத்தைக் கண்டுள்ளன. பொது-தனியார் உரிமைக்கான இந்த அணுகுமுறையை முதலாளித்துவத்தின் கீழ் செயல்படும் அரசு நிறுவனங்களைப் போன்று கருதக்கூடாது. முதலாளித்துவத்தின் கீழ் அவை பொருளாதார நெருக்கடிகளின் போது ‘நிலைப்படுத்திகள்’ ஆகவும், பெரும் முதலாளிகளின் பைகளை மேலும் நிரப்பவும் பயன்படுத்தப்படுகின்றன (ஹெ 2016, 105–106). மாறாக, சோசலிசக் கட்டமைப்பில் பொதுத்துறை நிறுவனங்கள் ‘அனைத்து மக்களுக்கும் சொந்தமானவை, அவை அனைவருக்கும் செழிப்பை உறுதிசெய்வதில் கவனம் செலுத்துகின்றன (சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, மத்தியக் குழு, 2013, 1).

வரலாற்று வழியில், முதலில் சமத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; ஆனால், அது வறுமையின் சமத்துவமாக இருந்தது. சீர்திருத்தம் மற்றும் திறந்தநிலைக் கொள்கையின் இடைக் காலகட்டத்தில், செயல்திறன் முதன்மையானதாக இருந்தது. அது, 1990கள் தொடங்கி 2008-09 வரை வருமான ஏற்றத்தாழ்வு, பரவலான ஊழல், எதிர்ப்புப் போராட்டங்கள், சட்டத்தின் ஆட்சியை மீறுதல், நம்பிக்கையின்மை, சாத்தியமான மோதல் ஆகியவற்றுக்கு வழிவகுத்தது.

கடந்த 15 ஆண்டுகளில் சமத்துவத்துக்கும் செயல்திறனுக்கும் இடையிலான முரண்பாடு சமத்துவம் என்ற பக்கத்தில் அழுத்தம் பெற்று வருகிறது.

இந்த இயக்கவியல் சமன்பாட்டின் நடைமுறை விளைவுகள் என்ன?

கடந்த நாற்பது ஆண்டுகளில் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று என்ற நிலையிலிருந்து மிகச் செழிப்பான நாடுகளில் ஒன்றாக சீனா மாறியுள்ளது; 80 கோடி  மக்களை வறுமையிலிருந்து விடுவித்தது;  புத்தாக்கத் திறன், பல துறைகளில் உலகளாவிய தொழில்நுட்ப முன்னிலை, சூழல் நாகரிகத்தின் ‘சீன வேகம்’, உலக அரங்கில் பண்பாட்டு நம்பிக்கையின் முன்னேற்றம் ஆகிய  அனைத்தும் எதிர்காலத்தினுள் ஓர் இயங்கியல் (dialectical) தாவலாக அமைகின்றன.

சில எளிய புள்ளிவிவரங்கள் இவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன: 1949இல் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேச விடுதலை, பிரபுத்துவ எதிர்ப்பு உள்நாட்டு விடுதலை பெறுவதற்கு முன்பு, சீனாவில் 97% மக்கள் வறுமையில் வாழ்ந்தனர். சராசரி ஆயுட்காலம் 35 ஆக இருந்தது. 72 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான வறுமையின் கடைசி மிச்சமும் அழிக்கப்பட்டு விட்டது. சராசரி ஆயுட்காலம் 79  ஆண்டாக  அதிகரித்துள்ளது.

இறுதியாக, பாட்டாளி வர்க்கக் கட்சி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி தக்க வைத்துக் கொள்வது மாபெரும் பாய்ச்சலாகும். அதிலிருந்து ஓரடி பின்னுக்கு எடுத்து வைத்து, முதலாளிகளுக்கு சலுகை வழங்குவது என்ற முறையைப் பயன்படுத்தி சமூக உற்பத்தியை ஊக்குவித்து, சோசலிசத்தை நோக்கிய பயணத்தை வலுப்படுத்துவது அறிவியல் சோசலிசக் கொள்கைகளுக்கு இணக்கமானதே என்று லெனின் கூறியதையும் இத்துடன் இணைத்துக் கொள்ளலாம்.

இது தொடர்பாக, சோவியத் ரசியாவில் சோசலிசத்தைக் கட்டமைப்பது தொடர்பாக லெனின் எழுதிய பண்ட வரி பற்றி என்ற கட்டுரையில் இருந்து சில பத்திகளைப் பார்க்கலாம்.

“அரசு அல்லாத தனியார் பரிவர்த்தனையை - அதாவது, வர்த்தகத்தை, அதாவது இலட்சக்கணக்கான சிறு உற்பத்தியாளர்கள் இருக்கும்போது தவிர்க்க முடியாத முதலாளித்துவ வளர்ச்சியை முற்றிலும் தடைசெய்ய முயல்வது, தாளிட்டு அடைப்பது என்பது ஒரு வழி. ஆனால், அத்தகைய கொள்கை முட்டாள்தனமாக இருக்கும்; அதைச் செயல்படுத்த முயலும் கட்சிக்குத் தற்கொலையாக இருக்கும்.”

“மாற்று வழி (இது அறிவார்ந்த சாத்தியமான ஒரே இறுதிக் கொள்கை) முதலாளித்துவ வளர்ச்சியைத் தடைசெய்ய முயல்வதோ தாளிட்டு அடைப்பதோ அல்ல; மாறாக, அதை அரசு முதலாளித்துவத்தை நோக்கிக் கொண்டு செலுத்துவதாகும். பொருளாதார முறையில் இது சாத்தியம். ஏனெனில், எங்கெல்லாம் கட்டற்ற வர்த்தகமும் பொதுவாக முதலாளித்துவத்தின் கூறுகளும் - பல்வேறு வடிவிலும் அளவிலும் - உள்ளனவோ அங்கெல்லாம் அரசு முதலாளித்துவம் நிலவுகிறது.”

“சோவியத் அரசு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இரண்டையும் அரசு முதலாளித்துவத்துடன் இணைக்க முடியுமா? இவை ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றவையா?”

“சோசலிசத்துடன் ஒப்பிடும்போது முதலாளித்துவம் ஒரு சாபக்கேடே. மத்திய கால சமுதாயம், சிறுவீத உற்பத்தி, சிறுவீத உற்பத்தியாளர் பரவி இருப்பதால் தோன்றும் அதிகார வர்க்கத் தீங்குகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது முதலாளித்துவம் ஒரு வரப்பிரசாதமாகும். சிறுவீத உற்பத்தியில் இருந்து சோசலிசத்துக்கு நேரடியாகக் கடந்துசெல்ல இன்னும் இயலாமல் இருக்கும் அளவு சிறுவீத உற்பத்தியும் பரிவர்த்தனையும் என்ற முறையின் இன்றியமையாத விளைவாக, குறிப்பிட்ட அளவு முதலாளித்துவம் தவிர்க்க முடியாதது. அதன்படி, நாம் முதலாளித்துவத்தை (குறிப்பாக, அதை அரசு முதலாளித்துவச் செல்வழிகளில் நெறியாளுகை புரிவது மூலம்) சிறு உற்பத்திக்கும் சோசலிசத்துக்கும் இடையிலான இடைநிலை இணைப்பாக, உற்பத்திச் சக்திகளை அதிகரிக்கும் ஒரு சாதனமாக, ஒரு பாதையாக, ஒரு முறையாகப் பயன்படுத்த வேண்டும்.”

“தனியார் முதலாளித்துவம் சோசலிசத்துக்கு உதவுவது என்பது முரண்மெய்யாக இல்லையா?

“இல்லவே இல்லை. உண்மையில், இது ஒரு மறுக்க முடியாத பொருளாதார மெய்ப்பாடு ஆகும்.”

“பரிவர்த்தனை என்பது வர்த்தகச் சுதந்திரம் ஆகும்; இது முதலாளித்துவம் ஆகும். சிறு உற்பத்தியாளரின் சிதறுண்ட நிலையைச் சமாளிப்பதற்கு இது நமக்கு உதவும், அதிகார வர்க்கத்தின் தீமைகளை எதிர்த்துப் போராட ஓரளவு உதவும் என்ற அளவில் இது பயனுடையது. இதை எந்த அளவுக்குச் செய்ய முடியும் என்பதை நடைமுறை அனுபவம் தீர்மானிக்கும். பாட்டாளி வர்க்கம் தனது கரங்களில் ஆட்சி அதிகாரத்தை உறுதியாக வைத்திருக்கும் வரை, போக்குவரத்தையும் பெருவீதத் தொழில்துறையையும் முழுக் கண்காணிப்பில் வைத்திருக்கும் வரை பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரத்துக்கு அபாயம் எதுவும் கிடையாது.”

***

ரோலண்ட் போயர் எழுதிய இந்நூலின் சுருக்கத்தை, “சோசலிசம் சீனப் பண்புகள் - ஜி ஜின்பிங், ரோலண்ட் போயர்” என்ற தலைப்பில் சிந்தன் புக்ஸ் தமிழில் வெளியிட்டுள்ளது.

ரோலண்ட் போயர் பற்றிய விளக்கக் குறிப்பு:

பெயர்: ரோலண்ட் போயர் (Roland Boer)

தேசியம்: ஆஸ்திரேலியர்

துறை: மதக் கோட்பாடு, மார்க்சிய தத்துவம், அரசியல் பொருளாதாரம், சீன ஆய்வுகள்.

பிறப்பு: 1961.

விருது: 2014 ஆம் ஆண்டு டாய்ச்சர் நினைவு விருது பெற்றவர்.

தற்போதைய பதவி: சீனாவில் உள்ள தாலியன் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் மார்க்சியப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

முக்கியப் பங்களிப்பு: சீனாவின் தத்துவ, அரசியல் மற்றும் பொருளாதார மாதிரியை மார்க்சியக் கோட்பாட்டின் வழியாகப் பகுப்பாய்வு செய்யும் முன்னணி அறிஞர்களில் ஒருவர். அவரது ஆக்கங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டுப் புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக உள்ள ஆழமான, முறைபாடான மார்க்சிய விளக்கங்களை முன்வைக்கின்றன

- மா.சிவகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.