அம்மாசத்திரம் சரவணனுக்கு அஞ்சலி!

கவிதைகளில் விக்ரமாதித்யன் அண்ணாச்சி அவர்களையும் சிறுகதைகளில் வண்ணதாசன் அவர்களையும் தனது ஆதர்சனமான குருக்களாய்க் கருதி படைப்பிலக்கியத்தில் ஈடுபட்ட நண்பர் அம்மாசத்திரம் சரவணன் அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்தார். அவருக்கு எனது அஞ்சலி. அம்மாசத்திரம் சரவணன் முதலில் ஒரு படைப்பாளி. அதனைத் ‘தெற்குப் பார்த்த வீடு’ என்ற தனது சிறுகதைத் தொகுதி மூலமாக நிரூபித்தவர். அடுத்ததாக, ஒரு நல்ல விமர்சகர். உங்கள் நூலகம் இதழ்களில் அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகளே அதற்கு உதாரணம். மூன்றாவதாக, ஒரு தேர்ந்த ரசனை உள்ளம் கொண்ட வாசகர்.

எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல நண்பர். சிறந்த கணவர். அன்பான தகப்பன். மனுஷபட்சம் மிகுந்த ஒரு மனிதனால்தான் இத்தனை அந்தஸ்துகளை அடைய முடியும்.

இன்னொரு முகமும் சரவணனுக்கு இருக்கிறது. காலத்தோடும், கற்பனைகளோடும் சொற்களோடும் படிமங்களோடும் விளையாடத் தெரிந்த கவிஞன் என்ற அடையாளம்.

பொழுதுகளைக் கவிதையாக்கத் தெரிந்த அற்புதமான கலாமனம் சரவணனிடமிருந்தது.

இந்நேரம் மழை உரத்துப் பெய்து கொண்டிருக்கிறது. ஒரு குவளை காபியை அருந்தியபடி வேடிக்கை பார்க்க இயல்கிறது - இப்போது.

“சின்னசின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ…” ரஹ்மான் இசைப் பாடல் நினைவுக்கு வருகிறது.

“விண்ணிலிருந்து இழையறாத மழை ஊசிகள் தரையிறங்குகின்றன. தாழம்பூக் குடைப்பிடித்து அதோ உன் அபிதா போகிறாள்” என்ற வண்ணநிலவனின் கவிதையை அசைபோடுகிறது மனசு. “இடிஇடிக்கும் போது அருகிலிருந்து தம்பி ‘அர்ஜுனா அர்ஜுனா…’ என்கிறான். காபிக் குவளையை மழைநீரில் கழுவிக் கொண்டிருக்கிறேன் நான். உடலைத் தொடும் லேசான சாரல். என்ன இதமாயிருக்கிறது!”

இது சரவணனுடைய கவிதை. இதில் கவிதையையும் சிறுகதையையும் மனித மனதின் தேர்ந்த ரசனையையும் காட்சிப்படுத்தியிருப்பார்.

இப்படி நல்ல எழுத்துக்களைத் தந்து கொண்டிருந்த அன்பு நண்பர் சரவணனிடம் சிறுபத்திரிகை மீதும் சிறுபத்திரிகையில் இயங்கிக் கொண்டிருந்த படைப்பாளர்களிடமும் நல்ல நட்பு இருந்தது.

திருவண்ணாமலையிலிருந்து பவா.செல்லத்துரையும் கருப்பு கருணாவும் இணைந்து நடத்திய நம் தினமதி நாளிதழின் சென்னைப் பதிப்பின் ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர். நல்ல புதினங்களைத் தேர்ந்து வெளியிடுகிற தமிழினி பதிப்பகத்தின் முக்கிய புதினங்களை மெய்ப்புப் பார்த்தவர். யூமா.வாசுகி, ஜெயமோகன், பிரான்ஸிஸ் கிருபா போன்ற படைப்பாளிகளின் நூலுருவாக்கத்திற்குத் துணைநின்றவர்.

கும்பகோணத்தில் இயங்கிவரும் காவேரி கலை இலக்கிய அமைப்பு, தாழ்வாரம் இலக்கிய அமைப்பு போன்ற அமைப்புகளில் சரவணனின் செயல்பாடு என்றைக்கும் நிலைக்கத்தக்கது.

கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், விக்ரமாதித்யன் போன்ற படைப்பாளிகளின் அன்பையும் பிரான்ஸிஸ் கிருபா, கண்ணகன், T.கண்ணன், யூமாவாசுகி ஆகிய படைப்பாளிகளின் நட்பையும் பெற்றவர்.

ஒரு படைப்பாளிக்கு சிலரோடு வாய்க்கும் பொழுதுகள் தனது படைப்பாற்றலைத் தூண்டுகிற உன்னதத்தைக் கொடுக்கும். அப்படியொரு உன்னதம் அம்மாசத்திரம் சரவணன்.

ஒரு பத்திரிகையாளராக உங்கள் நூலகம் இதழில் அம்மாசத்திரம் சரவணன் எடுத்த நேர்காணல்கள் உங்கள் நூலகம் இதழுக்கு ஒரு அழகைக் கொடுத்தன.

சி.எம்.முத்து, கண்மணி குணசேகரன், ஆ.சிவசுப்பிரமணியன், சு.தமிழ்ச்செல்வி, பாமா,  அ.மார்க்ஸ், சு.நரேந்திரன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன், மார்கு இப்படி நிறைய ஆளுமைகளை நேர்காணல் செய்தவர். அந்த நேர்காணல்களின் கேள்விகளை இப்போது நினைத்துப் பார்க்கும் போது, என்.சி.பி.எச். நிறுவனம் “ஜி.சரவணன் நேர்காணல்கள்” என்ற ஒரு நூலையே கொண்டு வரலாம். இனி வரவிருக்கும் இளைஞர்களுக்கு அந்த நேர்காணல்கள் வேறொரு வடிவத்தைக் கொடுக்கும். என்.சி.பி.எச். வெளியீடுகளில் அவர் செலுத்திய அக்கறையும் உழைப்பும் அலாதியானவை.

தோழர் தா.பாண்டியன் அவர்களின் நூலுருவாக்கத்தில் சரவணனின் உழைப்பைக் கண்டு தோழர் தா.பாண்டியன் அவர்கள் தனது ஆறாவது விரல் என்று சரவணனின் உழைப்பின் பெருமிதத்தைச் சொல்லியிருந்தார்.

அ.மார்க்ஸ், கலை விமர்சகர் தேனுகா, சி.எம்.முத்து, பேரா.இரா.காமராசு போன்ற ஆளுமைகளின் அன்பை நேரடியாகப் பெற்றவர்.

படைப்பாளிகளையும், கருத்தியலாளர்களையும் விமர்சிக்கும் பாங்கும் அவரிடமிருந்தது. விமர்சனக் கோட்பாடுகளுக்குட்பட்டு தனது கருத்துக்களை ஆழமாக, பிடிவாதமாக முன்வைத்த விமர்சகர் சரவணன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, 1996இல் விளிம்பு என்ற சிற்றிதழை தனது நண்பர்கள் ஜி.பி.இளங்கோவன், கார்ல் மார்க்ஸ் ஆகிய நண்பர்களோடு இணைந்து நடத்தி சிற்றிதழ் இயக்கத்திற்கு வலுசேர்த்தவர்.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பான தனது இளமைக்காலத்தில் படைப்புகளின் மீதும் சிற்றிதழ்ச் செயல்பாடுகளின் மீதும் தெளிவானதொரு நம்பிக்கையை வைத்து தனது கண்களின் தீட்சண்யத்துக்குள் அவற்றை ஒளிர வைத்தே தனது வாழ்நாளை ரசனையோடு கடந்து சென்ற கலைஞன் அம்மாசத்திரம் சரவணன்.

இப்போது யாரிடமேனும் அந்த விளிம்பு என்ற சிறுபத்திரிகை இருந்தால் ஒரு முறை காட்டுங்கள்! பார்க்க ஆசையாக இருக்கிறது. அதனைப் பார்ப்பதும் அம்மாசத்திரம் சரவணனைப் பார்ப்பதும் ஒன்றுதான்.

- வியாகுலன்

More articles by வியாகுலன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.