மு.இராமசுவாமி எழுதியுள்ள ‘கலகக்காரர் தோழர் பெரியார்’, ‘தோழர்கள்’, ‘ஏகன் - அநேகன்’, ‘விடாது கருப்பு’, ‘வகுப்பறை’ ஆகிய ஐந்து நாடகங்களின் தொகுப்பை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் ‘விடாது கருப்பு: பெரியாரியல் நாடகங்கள்-5’ என்ற தலைப்பில் வெளிக்கொணர்ந்துள்ளது. இவ்வய்ந்து நாடகங்களும் தமிழில் மாற்றுச் சிந்தனையை மையப்படுத்திய நவீன நாடகங்களாகும். சமூகத்தில் நிலவுகின்ற பிற்போக்குக் கருத்தியலுக்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில் இத்தொகுப்பு அமைந்திருக்கிறது.

பேராசிரியர் மு.இராமசுவாமி அவர்களின் ‘கலிலியோ’, ஸ்பார்ட்டகஸ்’, ‘கலகக்காரர் தோழர் பெரியார்’, ‘தோழர்கள்’ எனும் நாடகச்செயல்பாடுகள் தத்துவ அறவியலையும், மாந்த இன விடுதலைப் போராளிகளையும் அரங்கக்கலையோடு இணைத்து நிகழ்த்தப்பட்ட நாடகங்களாகும். இதனைத் தொடர்ந்து, ‘ஏகன் அநேகன்’ நாடகம்,  இந்தியத் தத்துவத்தின் மேல் உரையாடலை நிகழ்த்துவதோடு வைதிக அதிகாரக் கட்டுமானத்தைக் கட்டுடைக்கும் வகையில் தத்துவ அரங்கியலை நோக்கி நகர்கிறது.

ஓர்மை சார்ந்த ஏகத்துவப் பண்பாட்டில்  ஆரியர் எனும் இனக்குழுக்கள்  உலக இயங்கியலை ஏற்காதவர்களாக, அலைகுடிகளாக இருந்த காலத்திலிருந்தே ஆரியப் பண்பாட்டு உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஏனைய அலைகுடிப் பண்பாட்டு மரபுகளைப் பின்னுக்குத்தள்ளி, வேதங்களும், உபநிடதங்களும், இதிகாசங்களும், மைய நீரோட்டமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். இந்த மைய நீரோட்டத்தில் பூர்வீக இனக்குழுப் பண்பாட்டுத் தகவமைப்புகள் யாவம் மேனிலையாக்கம் செய்ததோடு, வைதிக மரபிற்கு எதிரானவற்றை, கீழானவையாகவும் காட்டுமிராண்டித்தனமானவையாகவும் உருவாக்கியுள்ளதை மு.இராமசுவாமியின் ‘ஏகன் அநேகன்’ நாடகம் வைதிக அரசியலின் மேல் விசாரணை எழுப்புகின்றது.

‘ஏகன் அநேகன்’ நாடகத்தின் தொடக்கம் பின் குரலாய் ஒலிக்கிறது. “அநாதி காலத்தில் ஒரு நாள்!...” என்று தொடங்குகிறது. சனாதன தர்மம் எனும் ஒற்றை அதிகார பாரம் தாங்காமல் அமுக்கப்பட்ட, தொல்குடியினர் சனநாயகத்திற்கான மார்க்கத்தைத் தேடி வருகிறார்கள். “தொல்குடியினர்,  அலமரல் கொண்டு தவித்தபோது, தாகம் தணிக்கும் சுனையாய், அவர்களின் மூப்பன் - ஆதிக் குடும்பன், ஆதன் சாத்தனைத் தேடி வருகிறது அவர்களின் பெரும்படை!”

ஆதன், சாத்தன், மூப்பன், ஆதிக் குடும்பன் என்போர் பூர்வீக இனக்குழுக்களின் தலைவர்கள் ஆவார்கள். பூர்வீக இனக்குழுச் சமூக  உரிமைக்காக தம் தடம் தேடி வருகிறார்கள் என்பதை நாடகம் காட்டுகிறது.

 தொல்குடி எனும் பாத்திர உரையாடல்கள் தர்க்கத்தின் வழியாக வைதிக மரபின் சூட்சுமங்களை அவிழ்த்துப் போடுவனவாக அமைந்துள்ளன.  சனாதனத்தைக் காப்பாற்றுவதற்கு மனுசாத்திரத்தின் வழி வேத உருவாக்கப் பின்னணி நாடகத்தில் பல இடங்களில் கட்டுடைக்கப்படுகிறது.

குடும்பன் எனும் பாத்திர உரையாடல் புனிதமாகக் கட்டமைக்கப்பட்ட, நிறுவனப்படுத்தப்பட்ட வைதிக சமயக் கட்டுமானங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துப் போட்டு வெட்டவெளிப்படுத்துகின்றது.

“உழைப்பின் உவகை தேடும் உங்களைத் தீட்டுத் தடத்தில் புறந்தள்ளும் புனிதத்தின் வைதீக அரசியலை, உங்கள் வழியாகவே இவர்களுக்கும் வார்த்துப் போகிறேன். புனிதம் - புண்ணியம் தேடுவதற்காய், அண்ணாந்து வானம் பார்க்கும் புதுமை அரசியல் அது” என வைதீக உருவாக்கத்தில் பிராமணச் சடங்குகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறது நாடகம்.

பிரம்மம் மட்டுமே உண்மையானது. இவ்வுலகம் உண்மையானதல்ல. இவ்வுலகமும் இவ்வுலகப் பொருள்களும் உண்மையானவையல்ல. மாயையானவை என வேத மரபு உரைக்கின்றது. பிரம்மம், புனிதம், வேதம் ஆகியவற்றின் மேல் கேள்விகள் எழுப்பப்படும் போது, அவை மாயையானவை எனும் கருத்துருவாக்கமும் கட்டமைக்கப்படுகின்றது. “பிறப்புத் தீட்டு... இறப்புத் தீட்டு... தூமைத்தீட்டு... வாமைத்தீட்டு...!”

பிராமணனால் சூத்திர ஸ்திரிக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங்கில்லை / சூத்திரன் பிராமணப் பெண்னைப் புணர்ந்தால் அவனது உயிர்போகும் வரை தண்டிக்கவேண்டும் / பெண்ணையும், சூத்திரரையும் கொல்வது அவர்கள் கணக்கில் மிகக் குறைந்த பாவமாகவே வரவு வைக்கப்படும்.” என்கிற மனுதர்ம சாத்திரத்தின் பிற்போக்குத்தனத்தை நாடகம் பேசுகிறது.

பிரம்மம், பிராமணியம் யாருக்காக உருவாக்கப்படுகிறது? யாருக்கான வர்க்க நலன்களைப் பேசுகிறது? என்பதை நாடகத்தின் தர்க்க உரையாடல்களின் வழி விளக்கிப் பேசுவது சிறப்பாக இடம்பெற்றுள்ளது. வைதிகம் X அவைதிகம் எனும் எதிர் முரண்களின் கருத்தியல் பாத்திரங்களின் மொழிதலாக வளர்த்துச் செல்லும் விதம் வைதிகக் கட்டுமானங்களின் மேல் கேள்வி எழுப்புவதோடு சனநாயகம், சமத்துவத்தை நாடகம் பேசுகின்றது.

ஒட்டுமொத்த வேதமரபு கருத்தியல்கள் யாவும் பார்ப்பன வர்க்க நலன்களின் மேல் அக்கறை கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இங்கு, தொல்குடி சார்ந்த இனக்குழுச் சடங்குகளை உள்வாங்கியதோடு பார்ப்பன இனக்குழுச் சடங்குகளை வானுலக வாழ்வுக்கானவையாக உருவாக்கியதோடு வேதம்,  சடங்கு, சம்பிரதாயம் அனைத்தும் வைதீக சமய உருவாக்கத்திற்கு வழிகோலின.  இங்கு பிராமணர்கள் தனி ராஜ்ஜியம் பெறுவதே மூலகர்த்தாவாக  உபநிடதத்தின் வழியாக ஏகத்துவத்தை உருவாக்கப்பட்டுள்ளன. பிராமணர்கள் தன் வர்க்க நலனைக்காக்க வேண்டும் என்பதற்காகவே பிராமணக்கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர். இதற்காகவே தீண்டாமையைச் செயல்படுத்துவதற்காகத் தீட்டுக் கொள்கை உருவாக்கப் பின்புலத்தை இந்நாடகம் பதிவுசெய்துள்ளது.

உலகாயத நிலைப்பாடுகளை நிறுவுவதற்கு வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத்தியல் வளா்த்துச் செல்லும் பாங்கு நாடகத்தில் முழுக்க இடம்பெற்றுள்ளது. வைதிக சமயம் அதற்கு எதிர் நிலைப்பாடுகளை மாந்த நேயத்தை முன்மொழியும் வகையில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் பொதுமைச் சிந்தனை வழியாக, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலையை உரத்துப் பேசுகிறது - “ஏகன் - அநேகன்” நாடகம்.

சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கின்ற காலத்தில் வாழும் சூழலில் நாம் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது நாடகம். சமூக நீதி பேசுவதைக்கூட இன்று தீட்டுக்கு உரியதாகவே பார்க்கிறது சனாதனம்.  இந்நாடகத்தில் பிரம்மத்தின் வழி சனாதன அரசியலைத் தோலுரிப்பது, காலத்தின் தேவைக்கான  குரலாக ஒலிக்கின்றது.

பொதுவெளியில் வைதிகத்தின் பெருங்கதையாடலாக இருந்து வருகின்ற பார்ப்பனியத்தை, அநேகத்தின் வழி உடைக்கவேண்டும் என்றும் சாதியற்ற, அறிவார்ந்த சமூகம் உருவாகவேண்டும் என்றும் ஏகன் – அநேகன் முன்மொழிகிறது. “அறிவு, பகுத்தறிவு அதிகாரத்தை நோக்கி நகரவேண்டும். தொல்குடி மக்கள் அதிகாரமாய் அது மலரவேண்டும். அது தான் மக்கள் அதிகாரம்! உழைக்கும் மக்கள் அதிகாரம்! ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரம்! அதன் பேதமற்ற மாறாத் தத்துவம்... மக்கள் நலன், மாற்றம், முன்னேற்றம் என ‘ஏகன் - அநேகன்’ நாடகம் வைதிகத் தத்துவத்திற்கு எதிராக பௌத்த அறவியலை முன்வைக்கின்றது.

வைதிகம் பல்வேறு வழிபாட்டு மரபினையும், பூர்வ வழிபாட்டு வளமைச் சடங்கையும் மேனிலையாக்கம் செய்துள்ளதோடு பல்வேறு வடிவங்களில் தெய்வத்தை வழிபட்டாலும், பிரம்மம் ஒன்றே தலையாயது என்றுரைக்கும் வைதிக – பார்ப்பனிய மேனிலையாக்கத்தையும், ஒற்றைக் கலாச்சாரத்தை முன்மொழியும் பேரிறைக் கொள்கையையும்  மு.இராமசுவாமியின் ஏகன் – அநேகன் விசாரணைக்குட்படுத்துகிறது.

மூப்பனின் உரையாடலில், “அதிகாரத்தைத் துடைத்தெறிகிற யுக்திகளை வகுத்துப் புனிதத்திடமிருந்து தப்பிக்கிற அறிவையும், அதைத் தாக்கி அழிக்கிற பொறியையும் பெறவேண்டும்” என மொழிவது, ஒடுக்கப்பட்டவர்களுக்கான தத்துவார்த்தத் தளத்தில் நின்றுகொண்டு வைதிக மூலபாடத்தின் மேல் கேள்விகளை எழுப்பி, மாந்த இன விடுதலைக்கான தத்துவப் பதிலுரையாக வெளிப்பட்டுள்ளது. இதோடு மட்டும் நின்றுவிடாமல், வைதிக ஆதிக்கத்தால் பலஆயிரம் சமணமுனிவர்களைக் கழுவேற்றியது நினைவின் வடுக்களாக உறைந்திருப்பதை ‘ஏகன் - அநேகன்’ நாடகம் முன்மொழிகிறது. 

சமூகத்தில் உலாவும் சாதியாதிக்கத்தை, மதத்தின் பேரில் உருவாக்கப் படும் பிற்போக்குத்தனத்தை பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய சித்தாந்தத்தின் வழி  மக்கள் நலம் பெறவேண்டுமென்பதை நாடகம் உரைக்கின்றது. இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பவற்றை் விவரித்து, நாளைய சமூக நிமிர்வுக்கான தத்துவமாக பெரியாரிய – மார்க்சிய - அம்பேத்கரியத் தத்துவத்தை ‘ஏகன் - அநேகன்’ நாடகம் முன்வைக்கிறது மு.இராமசுவாமி, விடாது கருப்பு பெரியாரியல் நாடகங்கள் 5, வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

முனைவர் ம.கருணாநிதி, தமிழ் உதவிப் பேராசிரியர், தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.