தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடக்கத்தில் செயல்பட்ட கவி கா.மு. ஷெரீப் 1942 ஆம் ஆண்டு இந்திய தேசியக் காங்கிரஸில் இணைந்தார். இந்திய விடுதலைப் போரில் பங்குபெற்றார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். சுதந்திர தாகம் கொண்ட கவிஞர் பின்னாளில் 21.11.1946 இல் தொடங்கப்பட்ட தமிழரசுக் கழகத்தில் இணைந்தார். ம.பொ.சியைத் தலைவராகக் கொண்டு இயங்கிய தமிழரசுக் கழகம் புதிய தமிழக அமைப்பையும் தமிழக எல்லை மீட்பையும் முழுமூச்சாகக் கொண்டு செயல்பட்டது. ம.பொ.சிக்கு அடுத்த நிலையில் கழகத்தின் பொதுச் செயலாளராகவும் தமிழரசுக் கழகத்தின் போர்ப்படைத் தளபதியாகவும் தமிழரசுக் கழகத்தின் கவிஞராகவும் தமிழக எல்லை மீட்புப் போராளியாகவும் கவி கா.மு. ஷெரீப் செயல்பட்டார்.

தமிழரசுக்கழகம் நடத்திய தமிழக எல்லை மீட்புப் போராட்டங்களில் கலந்துக் கொண்ட தொண்டர்களுக்கு உற்சாக மூட்டிப் போராட்டத்தில் தீவிரமாகக் ஈடுபட வைப்பதற்காகப் பாடப்பட்ட பாடல்களைத் தொகுத்துக் கவிஞர் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘களப்பாட்டு' எனும் நூலை வெளியிட்டுள்ளார். இந்நூலில் எல்லை மீட்புப் போராட்டக் களங்கள் பலவற்றில் பாடப்பெற்ற பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ka mu sheriffஇந்த நூலின் முன்னுரையிலேயே தமிழக எல்லை மீட்புப் போராட்டங்களையும் இந்நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் தோன்றிய பின்னணியினையும் கவிஞர் குறிப்பிடுகிறார்.

சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவில் எந்த மாநிலமும் தனி ஒரு மொழியினைக் கொண்டதாயில்லை. எல்லா மாநிலங்களிலுமே ஆங்கிலம்தான் ஆட்சிமொழி, பயிற்சி மொழி, நீதிமொழி, நிர்வாக மொழி!

இன்றைய இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலமொழியே ஆட்சிமொழி. மாநிலங்களின் பெயர்களும்கூட மாநில மொழிகளின் பெயராலேயே உள்ளன. இவ்வாறாக அமைந்திட வேண்டும் என்பதே பழைய காங்கிரஸ் கொள்கை. காந்திஜி வகுத்தளித்த திட்டம். ஏனைய தேசியத் தலைவர்களெல்லாம் ஏற்றுக்கொண்டதுமாகும்.

சுதந்திரம் கிட்டியவுடன் மாநிலங்களின் புனரமைப்பிற்கான செயற்பாடுகளைத் தொடங்கினர்.

தமிழகத்தின் நிலைமட்டும் வேறுவிதமாயிருந்தது. இங்கேயுள்ள கட்சிகள் எது ஒன்றும் இப்பிரச்சினையில் அக்கறை காட்டிடவில்லை!

‘மதராஸ் மனதே’ என்றனர் ஆந்திரர். “காசர்க் கோடு முதல் கன்னியாகுமரி வரை தமதென்றனர் கேரளியர். ‘நீலகிரி மட்டுமின்றி கோயமுத்தூரும் தங்கட்கே” என்றார்கள் கன்னட நாட்டினர்.

தமிழர்க்குரிய பகுதிகளைக் காத்திடவோ கேட்டிடவோ எவரும் முன்வரவில்லை. “மதராஸ் மனதே” எனச் சென்னை நகரின் தெருக்களில் பேரணி நடத்தினர் ஆந்திரர். ‘தஞ்சை மாவட்டமும் மதுரை மாவட்டமும் எங்களவையே, அவை தெலுங்கர் ஆண்ட பகுதிகள் எனவும் பேசத் தொடங்கினர்.

ஆந்திர - கேரள - கன்னடக்காரர்களிடமிருந்து தமிழ் நாட்டை, தமிழ் நிலத்தைக் காத்திடவும், பறிபோய்விட்ட எல்லைகளை மீட்டிடவும் தமிழர்கட்கு ஓர் அமைப்பு தேவைப்பட்டது. தமிழர்க் கழகம் துவக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் இணைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கு நூறெனத் தமிழர்கள் வாழுகின்ற அப்பகுதியைத் தமிழகத்துடன் இணைத்திட வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் கொதித்தெழுந்து கூறினர். அதற்கென அவர்கள் கண்ட அமைப்பு, ‘திருவிதாங்கூர் தமிழ் நாடு காங்கிரஸ்!’. அதன் செயற்பாட்டினர் “தாய்த் தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தை இணைத்திட வேண்டும்” என இயக்கம் கண்டனர்.

திருப்பதி முதல் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைத்திட வேண்டும் என்பதற்கு அங்குள்ள தமிழர்கள் இயக்கம் துவக்கினர். அந்த இயக்கத்தின் பெயர், ‘வடக்கெல்லைப் பாதுகாப்புக் கமிட்டி’. தெற்கிலும் வடக்கிலும் உள்ள இந்த இரு அமைப்புகளுடனும் தொடர்புகொண்டு தமிழரசுக் கழகம் செயல்படத் தொடங்கிற்று. விளக்கக் கூட்டங்கள் வேகமாக நடந்தன. பல இளைஞர்கள் தமிழ் மாநிலம் அமைத்திடத் தங்களின் உயிரையும் பொருட்டாக மதிக்காமல் உழைத்திட முன் வந்தனர். நாடு முற்றிலும் தமிழரசுக் கிளைக்கழகங்கள் ஆரம்பமாயின. பல ஆயிரம் தொண்டர்கள் சேர்ந்தனர். பலமான அமைப்பாகத் தமிழரசுக் கழகம் வளர்ந்தது.

பத்திரிகைகளின் ஆதரவில்லை. கட்சிகளின் ஒத்துழைப்பில்லை. பணபலமும் இல்லை. ஆனால் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிற்று. மும்முனைகளிலும் போராட்டம் வலுவாக திருவிதாங்கூர் கொச்சி ராஜ்ஜியம் (கேரளத்திற்கு அன்றுள்ள பெயர்) மட்டுமல்ல, மதராஸ் ராஜ்ஜிய அரசும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. பல்லாயிரம் பேர் சிறைப்பட்டனர். இருவர் துப்பாக்கிச் சூட்டினால் இறந்தனர். இருவர் சிறைச்சாலையில் உயிர்துறந்தார்கள்.

சென்னை நகரை ஆந்திரர்கட்கும் தமிழர்கட்கும் சரிபாதியாகப் பிரித்தளிப்பதென்ற மத்திய அரசின் திட்டம் முறியடிக்கப்பட்டது.

சென்னையை சி.ஸ்டேட்டாக டில்லியின் கீழ் வைப்பதென்கின்ற திட்டம் உடைத்தெறியப்பட்டது. சென்னை தமிழர்கட்கே என ஆக்கப்பட்டது.

கன்னியாகுமாரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது; 1957 நவம்பர் முதல் நாளன்று.

சித்தூர் மாவட்டம் முழுமையுமாக ஆந்திர்கட்கென ஆக்கப்பட்டதை எதிர்த்துப் போராடி, திருத்தணி தாலுகா மீட்கப்பட்டது; 1960 ஏப்ரல் முதல் நாள்.

திருத்தணி மீட்சியில் வடக்கெல்லைப் பாதுகாப்புக் கமிட்டியின் செயற்பாடு மிக அதிகம். இதற்கெனவே உழைத்து உயிர் துறந்தவர் மங்களம் கிழார் எனும் மாமனிதர். மற்றும் திருத்தணி சுப்பிரமணியம், விநாயம் எம்.எல்.ஏ. போன்றோரும் குறிப்பிடத்தக்கவராவர்.

கன்னியாகுமரி மாவட்ட மீட்சியின் பெரும் பங்கு தி.த.நா. காங்கிரஸ் அமைப்பினரையே சாரும். அதில் அங்கம் வகித்த பெரிய மனிதர்கள் பலர். செல்வாக்கு மிகுந்த அவர்களைச் செயற்படச் செய்த செயலாளர் தெற்கெல்லைத் தளபதி எனப் பெயர் பெற்ற திரு. 'பி.எஸ்.மணி. இவர் சுதந்திரப் போராட்டத் தியாகியுமாவார்.

“இப்போராட்டங்களில் என் பங்கும் குறைந்ததன்று. திங்கள் இரு முறை ஏடுகள் இரண்டும் கிழமை ஏடு ஒன்றுமாக மூன்று ஏடுகளை நடத்தினேன். தமிழகமெங்கும் சுற்றி சொற்பொழிவுகள் ஆற்றினேன். பொதுச் செயலாளனாகப் பொறுப் பேற்றுச் செயல்பட்டது மட்டுமின்றி, பல போராட்டங்களையும் முன்னின்று நடத்தினேன்; சிறைப்பறவையுமானேன்.

நானும் தலைவர் ம.பொ.சி. அவர்களும் இணைந்து செயல்பட்டது. சமயம் கடந்த இனவழி ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு.

தமிழக எல்லைப் போராட்டத்தையும் அதன் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் நான் எழுதிய பாடல்கள் அனைத்தும் அச்சிடற்கெனத் தேடியபோது இந்நூலில் உள்ள அளவே; கிட்டியதும் முழுவதுமாக வெளிவரும்.

இந்திய மாநிலங்களின் சீரமைப்பு பற்றியும், அந்த அடிப்படையில் புதிய தமிழகம் அமைந்தது பற்றியும் ஒரு நூல் வருமானால் ஆய்வாளர்கட்கு மிகவும் பயன்தரும். எழுதிட எண்ணம், இறையருள் துணை நிற்குமாக!

இந்நூல் அளவில் சிறியதேயாயினும் வரலாற்றுச் சிறப்புடையது. 1947க்குப் பின்னர் 1960 வரையிலுமான சில நல்ல தகவல்களை இந்நூல் தருகின்றது” என்று கவிஞரே குறிப்பிடுகிறார்.

தமிழக எல்லைகள் பறிபோய்க் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு கவிஞரால் பொறுத்துக்கொண்டு இருக்க முடியவில்லை. சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பகுதிகளை அமையவுள்ள ஆந்திரத்துடன் இணைத்திடுவதென இந்திய அரசு முடிவெடுத்தது. முடிவை மாற்றிடற்கு எழுகவெனத் தமிழர்கட்கு அழைப்பு விடுத்து கவிஞர் 1.4.1953 அன்று தமிழ் முழக்கம் ஏட்டில், ‘தமிழனே துள்ளி எழு!’ என்று தலைப்பிட்டு எழுதினார். அதில்,

“தமிழகத்தின் எல்லைதன்னை வெட்டி யெடுத்துத்

தருவதுவாம் ஆந்திரருக்(கு) என்ன நியதி!

அமிழ்தென்னும் தமிழ்மொழிதான் தோன்றி நாளாய்

யாரும்இது போல்கொடுமை செய்திட வில்லை

தெற்குமுனை முற்றும் மலையாளி யிடத்தில்

சேர்ந்திருகப் பதைத்திருக்கும் தமிழர் உடைய

வெற்புயர்ந்த வேங்கடத்தை ஆந்திரத் தார்க்கு

விட்டுவிட டில்லிசொன்னால் ஏற்க வேண்டுமோ?

என்று கவிஞர் வினாத் தொடுக்கிறார். தொடர்ந்து,

கடல்வந்து கொண்டதுண்டு தமிழர் பூமியைக்

காத்திடற்(கு) அன்றுநாம் இருந்திட வில்லை!

மடல்விரிந்த பாளையென மீசை இருக்க

வேங்கடத்தைக் காத்திடாமல் சும்மா இருந்தால்

சிலைநாட்டிக் காரிஉமிழ்ந்(து) ஏழனம் செய்வார்

சிந்தனைசெய் வாய்தமிழா வேங்கடம் மீட்க

அலைஅலையாய் எழுந்தார்தமிழ் நாட்டவர் என்ற

அரியவர லாறெழுதத் துள்ளி யெழுவாய்!

என்று உணர்வூட்டி அழைப்பு விடுக்கிறார்.

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸின் செயற்பாடு குறைந்தபோது அதை ஊக்குவிக்கத் தமிழரசுக் கழக மாநாட்டை நாகர்கோவிலில் கூட்டவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த மாநாட்டிற்கு வருவதற்குத் தமிழரசுக் கழகத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து தமிழ் முழக்கம் இதழில் கவிஞர் ‘கூப்பாடு கேக்குது!’ எனத் தலைப்பிட்டு,

வளமார் தமிழக வாழ்வைப் புதுக்க

களம்புகத் துடிக்கும் கன்னித் தமிழனே

நலஞ்சேர் நாஞ்சில் தமிழகந் தன்னில்

நடக்குது மாநாடு புறப்படு நீயே!”

என்று எழுதினார்.

காங்கிரஸ் அமைச்சர்கள் தமிழ் மாநில அமைப்பில் அக்கறை காட்டிடாததைக் கண்டித்து கவிஞர் தமிழ் முழக்கம் ஏட்டில் ‘தமிழ்த்தாய் ஓலம்!’ எனத் தலைப்பிட்டு எழுதுகிறார். அதில் கவிஞர் மலையாவிலும் சிங்களத்திலும் பிற இடங்களிலும் தோட்டத் தொழிலாளிகள் வெளியேற்றம் நடந்ததையும் சுட்டிக்காட்டி டில்லி அரசை,

“அனியாயக் காரர்களா, ஆளுகின்ற பாவிகளா!

கனியாதோ உங்கள் மனம்? கல்லோதான் சொல்லிடுவீர்

மலையாவில் சிங்களத்தில் மற்றுமுள்ள தேசங்களில்

உலையாய்ப் பெருமூச்சில் உயிர்போகும் வேதனையில்

சாகின்றார் தமிழ்மக்கள் சற்றும்நீர் காண்ப               தில்லை

வேகின்றார் வேதனையால் விழிதிறந்தும் பார்ப்பதில்லை

வெளிநாட்டின் உறவுக்காய் வேற்றுவரின் நட்புக்காய்ப்

பழியேற்றீர் எனவிருந்தேன் படுமோசம் செய்துவிட்டீர்!

அன்னியரின் நாட்டைவிட அருகிருக்கும்        இனவழியார்

கன்னித் தமிழர்களின் கருவருக்கத் துணிந்துவிட்டார்!

என்று சாடுகிறார்.

‘தமிழரசினைக் கண்டு தமிழா நீ வாழ்க வென்றே கொடி பறந்தாடுது பார்’ என்று தமிழனை உற்சாகப்படுத்தப் பாடும் கவிஞர், தமிழ் மாநிலம் அமைவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுகிறார். மாநிலங்களின் சுயாட்சி என்றால் என்ன என்பதை விளக்குகிறார். ‘எல்லை திருடியே தொல்லை தருகின்ற எத்தரை வெல்வோம் வா!’ என எல்லைப் போருக்கு அழைப்பு விடுக்கிறார். ‘தட்சிண மென்னுமோர் ராஜ்ஜியம் அமைக்கச் சதி பல புரிகின்றார் சிலபேர், ஏமாற மாட்டோம்’ எனப் பாடுகிறார்.

ஆந்திரம், கன்னடம், கேரளம் அகன்று 11.11.1956 அன்று தமிழகம் தனி மாநிலம் ஆனபோது, ‘தமிழகம் தனியாட்சி ஏற்றதுபார் நமது சங்கடம் யாவுமே ஓடுதுபார்’ என்கிறார். ‘எந்தாய் நாடு செந்தமிழ் நாடு என்றென்றும் வாழியவே! எல்லைகள் மீண்டு தொல்லைகள் தீர்ந்து இன்பமாய் வாழியவே!’ என்று திருத்தணி மீட்சிக்காகப் போராடிச் சிறைப்பட்டு சென்னைச் சிறைச்சாலைக்குள் தமிழரசுக் கழகப் போராட்ட வீரர்கள் இருந்தபோது, அவர்கள் காலையிலும் மாலையிலும் ஒன்றுகூடி நாட்டு வாழ்த்துப் பாடலாகப் பாடுவதற்காக இப்பாடலை இயற்றத்தூண்டிக் கவிஞர் இயற்றினார்.

ஆந்திரத்தில் இணைக்கப்பட்ட திருத்தணி தாலுகாவைத் திரும்பப் பெற்று தமிழகத்துடன் இணைத்திடும் வெற்றி விழா 1.4.1960 அன்று திருத்தணியில் நடந்தது. அவ்விழாவின் வரலாற்று விளக்கமாகவும் கவிஞர் ஒரு பாடலை இயற்றியுள்ளார்.

இப்படிக் கவிஞர் களப்பாட்டு நெடுகிலும் தொட்ட இடமெல்லாம் தமிழக வரலாறும் இந்திய வரலாறும் கொட்டிக் கிடக்கும் வகையில் பாடியுள்ளார். அந்த வகையில் இந்த நூல் ஓர் அரிய வரலாற்று ஆவணமாகவும் தமிழக வரலாற்றின் காலக் கண்ணாடியாகவும் திகழ்கிறது. இத்தகைய அரிய பணிகளைச் செய்த கவிஞரையும் அவருடைய படைப்புகளையும் காலம் மறந்துவிட்டது. குறிப்பாகத் தமிழகமும் தமிழர்களும் மறந்துவிட்டார்கள். இத்தகைய களப்போராளிகளை நாளும் எண்ணி எண்ணிப் போற்றுவது நம் கடன் என்பதையும் உணராத சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருக்கிறது என்பது வேதனைக்குரியது.

- பேராசிரியர் உ. அலிபாவா, தமிழியல்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

Pin It