தொன்மத்தைக் கதைக் கருவாகக் கொண்டு நவீன இலக்கியங்கள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. மரபிலக்கியங்கள் பேசாத இடங்களையும் அவ்விலக்கியங்கள் கற்பிக்கும் புனிதங்களையும் நவீன இலக்கியங்கள்தாம் மீள்வாசிப்புக்குள்ளாக்கி பல கேள்விகளுக்கு உட்படுத்தியிருக்கின்றன. இவ்வாறு தொன்மக் கதைமாந்தர்களை மையமிட்டு மீள்வாசிப்பு அணுகுமுறையில் ஆராயப்பட்டு எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பு நூல்தான் எழுத்தாளர் சுப்பிரமணி இரமேஷ் அவர்களுடைய ‘தொன்மம் தொட்ட கதைகள்’. அகலிகை, தேவந்தி, சுபத்திரை, இராவணனுக்காக அழுத சீதை, கர்ணனின் காதலி பானுமதி, சூதாடத் தெரியாத தருமன், மகனைக் காதலிக்கும் திஷ்யரக்க்ஷை போன்ற ஒவ்வொரு தொன்மக் கதைமாந்தரின் மீதும் நவீன ஒளியைப்பாய்ச்சி இந்நூலின் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

subramani ramesh bookதொன்மக் கதைமாந்தர்கள் தவ வலிமையால் பெற்றுக்கொண்ட வரங்கள் ஆரம்பத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பிற்காலத்தில் அதுவே அவர்களுக்குச் சாபமாக மாறுகின்ற போக்கினை எடுத்துக் காட்டும் விதமாக இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள அகலிகை குறித்த தொன்மக் கதையைக் கூறலாம். அகலிகையை நவீன வாசிப்பிற்கு உட்படுத்தித் தன்னுடைய சாபமே மேல் என்றும் சாப விமோசனம் வேண்டாம் என்றும், மறுத்திருக்கும் நுட்பத்தை எடுத்துக்காட்டியிருக்கிறார். நவீன இலக்கியத்தின் மையத்தில் பிரதிபலிப்பவை மரபிலக்கியத்தில் மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட கதைமாந்தர்களின் மன உணர்வே. இந்நவீனயுக காலத்திலும் தொன்மக் கதைமாந்தர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும் இருப்புநிலையைக் காட்சிப்படுத்தவும் நவீன இலக்கியங்கள் தவறவில்லை. குறிப்பாகப் பலராலும் கவனத்திற்குட்படுத்தப்படும் தொன்ம கதைமாந்தர்களைவிடவும் கவனம் பெறாத மாந்தர்களுக்கே நவீன இலக்கிய எழுத்தாளர்கள் இடமளித்திருக்கும் தன்மையின் நுணுக்கத்தையும் இந்நூலை வாசிப்பதன் மூலம் உணரமுடிகிறது.

இந்நூல் தொன்மத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது என்று கூறிவிடுவது எளிதானது.  ஆனால் பிரதியாசிரியர் அதனை மட்டும் கைக்கொள்ளாமல் சிறுகதையில் வரும் தொன்ம மாந்தர்களின் இடம் மரபிலக்கியத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்பது குறித்தும் அதே கதைமாந்தர்கள் நவீன இலக்கியத்தில் எவ்வாறு மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தும் கூறியிருக்கிறார். இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் நாற்பது சிறுகதைகள், நாற்பது நவீன எழுத்தாளர்கள் என இருவகைகளாகப் பிரிந்து ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன. மேலும் தேர்வு செய்யப்பட்டுள்ள சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள தொன்மம் குறித்துப் பதிவு செய்துள்ள பிற நூல்கள் பற்றிய விளக்கங்களும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. தொன்ம நூல்களைக் குறித்துத் தேடும் ஆய்வாளர்களுக்கும் தொன்மத்தின் மீதும் நவீனத்தின் மீதும் ஆழ்ந்த தேடல் உள்ளவர்களுக்கும் பயன்படும் வகையிலும் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரிசாமி, க.நாசுப்ரமண்யம், எம்.வி.வெங்கட்ராம், அம்பை, தேவிபாரதி, எம்.ஏ.சுசீலா, தேன்மொழி, கல்யாணராமன், அ.வெண்ணிலா, டி.கேசீனிவாசன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜா.தீபா, அனுராதா, ஜெயமோகன், தி. ஜானகிராமன், சு.வேணுகோபால், கரிச்சான் குஞ்சு, கி.ராஜநாராயணன், தேவகாந்தன், தஞ்சைப்பிரகாஷ், கணேசகுமாரன், லாவண்யா சுந்தரராஜன், தொ.மு.சி.ரகுநாதன், அன்பாதவன், புதிய மாதவி, பாவண்ணன், சுந்தர ராமசாமி, ம.இராசேந்திரன், இமையம், ந.முத்துசாமி, தமிழவன், சா.கந்தசாமி, சுஜாதா, மதி அழகன் பழனிசாமி, அசோகமித்திரன், யுவன் சந்திரசேகர், பிரேம் ஆகியோர் தொன்மத்தை எவ்வாறு தங்களுடைய இலக்கியத்தில் சிறப்பாக அணுகியிருக்கின்றனர் என்பதனை அழகாக வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். கட்டுரைகளில் தேவையான இடங்களில் நார்த்ராப் ப்ரை, சிக்மண்ட் ஃபிராய்ட், கார்ல் யூங் போன்ற திறனாய்வாளர்கள் மற்றும் உளவியலாளர்களின் கோட்பாடுகளை மேற்கோள் காட்டியுள்ளதன் மூலம் பிரதியின் நேர்த்தியை உணர முடிகிறது. மேலும், சிறுகதைகளில் கையாளப்பட்டுள்ள தொன்மத்திற்கு ஏற்றவாறு கட்டுரைகளின் தலைப்புகள் ஈர்க்கும் வகையில் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளன.

‘அகக்காட்சியில் விரியும் நிலம்’ என்னும் கட்டுரையே தொகுப்பின் முதல் கட்டுரையாக அமைந்துள்ளது. புதுமைப்பித்தன் எழுதியுள்ள ‘கபாடபுரம்’ என்ற தொன்மத்தின் காரணத்தை இக்கட்டுரையில் மீளாய்வு செய்திருக்கிறார். ‘கபாடபுரம்’ தவிர்த்து, தொன்மத்தை மையமாகக் கொண்டு புதுமைப்பித்தனால் எழுதப்பட்ட சிறுகதைகளின் நீள்பட்டியலையும் இக்கட்டுரையில் கொடுத்துள்ளார். ‘நெருப்பை அணைத்த நீர்’ என்னும் கட்டுரையில் ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையை மையமாகக்கொண்டு எழுதியுள்ளார். இக்கட்டுரையில் சீதையை அகலிகை தொன்மத்தோடு ஒப்பீடு செய்து அதற்கான காரணங்களையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கூறியுள்ளார். நவீன இலக்கியத்தில் புதைந்துள்ள தொன்மத் திரையை இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் விலக்கிக் காட்டுகின்றது. நவீன இலக்கியத்தில் தொன்மங்களின் பெயர்களை வெளிப்படையாக எழுதுவது ஒரு புறம் இருப்பினும், அதற்கு இணையாகத் தொன்மங்களின் பெயர்களையோ அல்லது கதை நிகழும் இடத்தையோ வெளிப்படையாகக் கூறாமல் தொன்ம உணர்வுகளை வைத்து நவீன இலக்கியங்கள் படைக்கப்படுகின்ற போக்கினை எடுத்துக்காட்டக்கூடிய கதைகள் அடங்கிய கட்டுரைகளையும் சிறப்பாக இந்நூல் கொண்டிருக்கிறது.

கவனிக்கப்படாத தொன்மக் கதாபாத்திரங்களுக்கு நவீன இலக்கியப் படைப்பாளர்கள்தாம் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் பெரிதும் கவனம்பெறாத தொன்மப் பாத்திரம்தான் தேவந்தி. தேவந்தியைப் பற்றி எம்.ஏ.சுசீலா ‘தேவந்தி’ என்ற சிறுகதையினை எழுதியுள்ளார். இச்சிறுகதையின் தொன்மத்தை ஆய்ந்தளிக்கும் கட்டுரை ‘கடவுளுக்கு மனைவியான தேவந்தி.’ தொன்மத்தில் கடவுள் என்ற நிலையில் உள்ள பாசாண்டச்சாத்தான், நவீன இலக்கியத்தில் மாலதி என்ற பெண்ணால் கடவுளாகக் கற்பிதம் செய்யப்பட்ட கதாபாத்திரமாக மாறுகிறது. தொன்மத்தை வாசிக்கும் பொழுது தேவந்தி என்ற கதாபாத்திரத்தின்மீது வாசகர்களுக்குப் பெரிய கவனம் ஏற்படாது. இதற்கான காரணம், “வரலாற்றில் பெரும் புகழ்பெற்றவர்களின் அருகில் இருந்தவர்கள் மிக எளிதாக மறக்கப்படுவார்கள் என்பதற்குத் தேவந்தி ஓர் உதாரணம். பிற்காலத்தில் கண்ணகி அடைந்த புகழ் தேவந்தியின் இருப்பை இல்லாமல் செய்துவிட்டது” (பக்.54) என்ற கருத்தினைப் பிரதியாசிரியர் முன்வைத்து நகர்ந்திருக்கும் போக்கினையும் உணர முடிகிறது.

‘இராமன்’ என்ற தொன்மக் கதாபாத்திரம் நவீன இலக்கியத்திலும் ஆய்வாளர்களின் பார்வையிலும் பெரும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இதற்கு விதிவிலக்காக கல்யாணராமன் எழுதிய ‘ஜல சமாதி’ என்ற சிறுகதையில் இராமனின் இயலாமையைக் காட்சிப் படுத்தியுள்ளார். மேலும் இராமன் என்ற தொன்ம பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க புனைவில் அவர் போராடும் விதத்தை “இராமனாக வாழ்வதில் உள்ள நெருக்கடிகள் இராமனுக்குத்தான் தெரியும்”. (பக்.64) என நிறைவு செய்யும் முறையைக் கட்டுரையில் நுட்பமாய் ஆராய்ந்திருக்கிறார்.

இக்கட்டுரைகளை வாசிக்கும்போதோ, அல்லது வாசித்து முடித்த பிறகோ தொன்மத் தேடலை நோக்கி வாசகனைப் பயணிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை. கட்டுரைகளில் பதிவாகியுள்ள சிறுகதைகளின் விவரங்கள் புத்தகத்தின் பின் பக்கங்களில் நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நவீன இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகக் கோக்கப்பட்டுள்ள சான்றுகளுடன் கூடிய வகையில் கட்டுரைகள் பொருந்தியிருக்கின்றன. இந்நூலின் என்னுரையில் நூலாசிரியர் “தொன்மத் திறனாய்வு என்றொரு புதிய வகைமையே திறனாய்வில் உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது” என்று கூறியுள்ளார். இதன்வழி இந்நூலையும் ஒரு ‘தொன்மத் திறனாய்வு நூல்’ என்று எடுத்துக் கொள்வதற்கு இடமிருக்கிறது. “படைப்பவனை உறிஞ்சிப் பிழைக்கிற ஒட்டுண்ணிகள்தாம் திறனாய்வாளர்கள் என்ற கருத்து படைப்பாளர்களிடையே இருக்கிறது” என்று திறனாய்வாளர் நார்த்தராப் ப்ரை குறிப்பிடுகிறார். நிதர்சனம் என்னவென்றால் படைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே திறனாய்வாளர்கள்தான். இவ்வாறு தொன்ம மாந்தர்களை நவீன படைப்பாளர்கள் எங்ஙனம் அணுகியிருக்கின்றனர் என்பதனை மீளாய்வு செய்யும் நோக்கில் ஆய்வு செய்யப்பட்டுப் புனையப்பட்டுள்ள இந்நூல் தொன்மத்திற்கும் நவீனத்திற்குமான ஓர் இணைப்பாக இருக்கிறது.

- சு.தீபிகா, உதவிப் பேராசிரியர், தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக்கல்லூரி, சென்னை - 72 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.