mahati book 450 copyகாலச்சூழலுக்குப் பொருத்தமான வகையில் அடிப்படைக் கண்ணோட்டத்தின் போக்குகளி லிருந்து விழிப்புணர்வு பெரும் நோக்கத்தில் ‘மஹத்’ என்ற இந்த வரலாறு தகுந்த ஆவணங்களின் ஒருங்கிணைந்த ஒரு தொகுப்பாகக் கடந்த 2015ஆம் ஆண்டில் நூல்வடிவம் பெற்று வெளிவந்தது.  மராத்தி மொழியில் எழுதப்பட்ட இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.  தற்போது இந்த வரலாறு கமலாலயன் அவர்களின் கடுமையான முயற்சியால் தமிழில் வெளிவந்துள்ளது.  இந்த வரலாற்றில் அடங்கியுள்ள ஆவணங்கள், அடிப் படையில் இயங்கியல் கண்ணோட்டத்துடன் விருப்பு வெறுப்பு இல்லாமல் தொகுக்கப்பட்டு ஒருங்கிணைந்த வகையில் வடிவம் பெற்றுள்ளது.

சாதி, மதம், இனம், மொழி, நிலம், நிறம் போன்ற வேறுபாடுகள் நிறைந்த இந்திய வாழ்க் கையை அறிவியல் கண்ணோட்டத்தில் விளக்கும் இந்த அரிய முயற்சி அடிப்படைக் கண்ணோட்டத்திற்கு எதிராக இருப்பதால் இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.

தனது முன்னுரையில், ‘மஹத்’ என்ற இந்த நூலின் தோற்றத்திற்கான காரணத்தை ஆனந்த் டெல்டும்ப்டே தெளிவுபடுத்துகிறார்: “தோழர். ஆர்.பி. மோரா அவர்களால் முதலாவது மஹத் மாநாட்டைப் பற்றி எழுதப்பட்ட விவரணையில் இந்த நூல் முதன்மையாக உத்வேகம் பெற்றது.  அந்த மாநாட்டின் முதன்மை அமைப்பாளர் அவரே.  அந்த மாநாடு தலித் மக்கள் தங்களுடைய குடிமை உரிமைகளுக்காக ஒரு

காவியப் புகழ்வாய்ந்த போராட்டத்தை நடத்துவதற்கு இட்டுச் சென்றது.  தோழர் மோரே, மஹத் மாநாட்டை நடத்துவதற்குத் தான் எப்படித் திட்டம் வகுக்க நேர்ந்தது என்பதை நினைவு கூர்ந்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகட்குப் பின்னால் ஒரு நீண்ட கட்டுரையினை மராத்தி மொழியில் எழுதியிருந்தார்.  அக்கட்டுரை மஹத்தில் உள்ள பாபாசாஹேப் அம்பேத்கர் கல்லூரியின் ஆண்டு மலரில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.  பிற்பாடு அக்கட்டுரை ஒரு குறுநூல் வடிவத்தில் பதிப்பிக்கப்பட்டு, வரையறைக்கு உட்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்பட்டது.  மராத்தி மொழி வாசகர்கள் கூட, அதைப்பற்றி அறிந்துகொள்ளாமல் தான் இருந்தார்கள்.  தலித் மக்களின் இந்த முதலாவது போராட்டத்தின் உருவாக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் கொண்டிருக்கக் கூடிய ஒரு விரிந்த வாசகப் பரப்புக்கு மேற்கண்ட இந்த வரலாற்றைப் பூர்வமான ஆவணம் கிடைக்குமாறு செய்ய வேண்டுமென்ற தேவை உணரப்பட்டது.  அதன் காரணமாகவே அந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.”

“இந்த நூலின் தொகுதிகளுடைய முக்கியத் துவம் எதுவெனில், டாக்டர் அம்பேத்கரின் வாழ்க் கையில் முக்கியமான நிகழ்வுகள் பற்றிய ஏராளமான தரவுகளை அவை உண்மையில் கொண்டுள்ளன என்பதே.  ஆனால் பதிப்பாசிரியரின் மெருகேற்றலோ, ஆசிரியரின் மறு விளக்கமோ இல்லாமல் அப்படியே தரவுகளாக உள்ளன.  இவையன்றி மராத்தியில் அங்கங்கே சிதறிக்கிடக்கின்ற பல குறிப்புக்களும் கிடைக்கின்றன.  மஹத் மாநாட்டையும், அதேபோல சத்தியாக்கிரகத்தையும் அமைத்து நடத்திய பிரதான அமைப்பாளர்களுள் ஒருவரான ஏ.வி. சித்ரேவினுடைய வாழ்க்கை வரலாற்று நூல் அவற்றுள் ஒன்று. 

இந்த நூல் ஏனைய ஆவணங்களில் காணக்கிடைக்காத, தவறிப்போன அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது, இவற்றோடு கூட, அரசாங்க ஆவணக் காப்பகமும், இந்தப் போராட்டம் பற்றிய ஆவணங் களைக் கொண்டிருக்கிறது என அறிய முடிந்தது.  எமது, தேடல், ஆவணக் காப்பகத்தில் மிகப் பெரும் எண்ணிக்கை அளவுடைய ஆவணங்கள் இடம் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது.  குறிப்பாக முதல் மாநாட்டுக்குப் பிறகு, ‘சத்தியாக்கிரக மாநாடு’ என்றழைக்கப்படும் இரண்டாவது மாநாட்டை நடத்து வதைப் பற்றியவையாக இருந்த பல ஆவணங்கள் அங்கிருந்தன. காலனிய அரசு நிர்வாகம், இந்தப் போராட்டங்களை எப்படிப் பார்த்தது என்ற முக்கியத் துவம் வாய்ந்த அம்சத்தை அவை பிரதிபலித்தன.  போராட்டங்களைப் பற்றிய நிர்வாகத் தரப்பிலான கண்ணோட்டத்தை இந்த ஆவணங்கள் வழங்கு பவையாக இருப்பதால் முக்கியமானவை ஆகும்.  முதலாவது, இரண்டாவது மஹத் மாநாடுகளின் வரலாறுகளைக் கட்டமைப்பதில் இந்த எல்லா வகையான தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.”

இந்தியாவின் சாதிய அமைப்பு என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் மஹத் மாநாடுகளின் முழுமையான முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதென்பது சாத்தியமில்லை. மகத் போராட்டத்திற்கு முன்னர், சாதிய முறைக்கு எதிரான வரலாற்றுப் பூர்வமான எதிர்ப்பு இலக்கியங்களைப் புரிந்து கொள்வது என்பதும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்ததே.  அவைகளையும் இனம் கண்டு அறிவியல் கண்ணோட்டத்துடன் தலித் இயக்கங்களின் தோற்றம், வளர்ச்சி, ஒருங்கிணைவு, நடைமுறைப் போராட்டங்கள் ஆகியவை தொகுக்கப் பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹத் மாநாடுகள் தலித் மக்களின் முதலாவது புரட்சியின் தொடக்க நிலைகள் என்று மதிப்பீடு செய்யப்படுகின்றன.  முதலாவது மாநாடு 1927இல் மார்ச் 19-20களில் மஹத் நகரில் நிகழ்ந்தது.  இதனை புறக்கணிக்கப்பட்டோர் மாநாடு என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகிறார்கள். அடுத்து, 1927, டிசம்பர் 25-27களில் அங்கேயே நடந்த சத்தியாக்கிரக மாநாட்டை மௌனமாக்கப்பட்ட ஏவுகணைகள் என்று அவர்கள் கருதுகிறார்கள்.  இரண்டு மாநாடுகளின் பின்னணிகளில் போராட்டங்கள் கருக்கொண்டிருந்தன.

“வரலாற்றிலிருந்து நாம் எந்தக் காலத்திலும் எந்த ஒன்றையும் கற்றுக் கொள்வதே இல்லை என்பதை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்” என்ற அறிஞர் ஹெகலின் கருத்துக்களை முன்வைத்து இந்த வரலாற்று நூலை அறிமுகப்படுத்துகிறார்.

“நாட்டுப்புற வரலாற்றில், மஹத் என்பது சாவதார் குளத்து சத்தியாக்கிரகத்துடனே இணைந்திருக்கிறது.  உண்மையில் அந்தப் போராட்டம் ஒரு போதும் நடைபெறவேயில்லை. முதல் மாநாட்டின்போது குளத்தை நோக்கிய தலித் நடைப்பயணமும், தங்களுடைய குடிமையியல் உரிமைகளை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக அவர்கள், மார்ச் 20, 1927 அன்று நடைபெற்ற நிகழ்வுகள். அது ஒரு சத்தியாக்கிரகமல்ல.  ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய மாநாடு அது.  அங்கு, மாநாட்டிற்கு முந்தின நாள் இரவு, திடுதிப் பென்று தங்களின் சிவில் உரிமையைப் பயன்படுத்தி யாக வேண்டுமென்று அந்த மாநாடு தன்னெழுச்சி யாக முடிவு செய்தது. 

இந்த முதலாவது மாநாட்டின் தொடர்ச்சியாக இரண்டாவது மாநாடு அமைந்தது, சாதி இந்துக்களின் தீவிரமான, மூர்க்கம் நிறைந்த எதிர்ப்புக்கு இது ஓர் எதிர்வினையாக அமைந்தது இந்தமுறை ஒரு சத்தியாக்கிரக மாநாடாக உணர்வு பூர்வமான விழிப்புணர்வுடன் திட்டமிடப்பட்டிருந்தது.  எவ்வாறாயினும் மாநாடு தொடங்குவதற்குச் சற்றே மோசடியான தந்திரங்கள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றம் மூலம் இந்தப் போராட்டத்திற்குத் தடையுத்தரவு பெறப்பட்டது. அதன் காரணமாக பிந்தைய போராட்டத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுமாறு நேர்ந்தது. இந்த இருமாநாடு களையுமே சத்தியாக்கிரக மாநாடுகள் என்று சேர்த்துக் கூறப்பட்டு வருவது இந்த விதத்தில் தவறான கூற்றாகும். பின் மஹத் என்பது என்ன? மஹத்தில் உண்மையில் துல்லியமாக நடந்தது என்ன? தலித் உணர்வு உலகில் அது இந்த அளவுக்கு அதிகபட்ச முக்கியத்துவத்தை ஏன் பெற்றிருக்கிறது? சமகால தலித் இயக்கத்திற்கு, அதனுடைய பாரம்பரியம் என்ன? எதிர்கால சந்ததிக்கு அதன் படிப்பினைகள் எவை? இதுவே தொடர்ந்து வரவிருக்கும் பக்கங்களில் ஆராயப்படும் கேள்விகளாகி உள்ளன.

தலித் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கிடையில் ஒரு கூட்டுணர்வு மனநிலையை மஹத் உருவாக்கி அதைத் தொடர்ந்து நிலைபெறச் செய்தது.  மஹத் நிகழ்வுக்கு முன்பு அங்கும் இங்கும் எங்கேயாவது எப்போதாவது சாதிய ரீதியான கட்டுப்பாட்டை மீறும் நிகழ்வுகள் நடைபெற்றன.  அவற்றில் ஒரு முக்கியமான நிகழ்வைக் குறிப்பிட வேண்டும்.  மகாத்மா ஐயன் காளி (1863 - 1941) என்ற இணையற்ற மாபெரும் தலைவரால் முன்னெடுக்கப் பட்டுப் பரவிய ராணுவக் கட்டுப்பாட்டுப் பண்புடன் நடைபெற்ற புலையர்களின் (கேரளாவிலுள்ள தலித்துக்கள்) திருவாங்கூரின் தலித் மக்களுக்குப் பொதுச்சாலைகளில் நடந்து செல்வதற்கான உரிமையை 1900-வது ஆண்டில் பெற்றுத் தந்தது.  அந்த மக்களுடைய குழந்தைகளைப் பொதுப் பள்ளிகளில் அனுமதிப்பதற்கான உரிமையை 1907ஆம் ஆண்டில் வென்றது.  மஹத் நிகழ்வுக்கு இரண்டு தலைமுறைக் காலத்துக்கும் முன்னரே நடைபெற்ற நிகழ்வு அது.  தென் கேரளப் பகுதியைத் தாண்டி அந்த இயக்கம் பற்றி அறியப்படாமல் தான் இருந்தது. எந்த அளவுக்கு அறியப்படாமல் இருந்தது என்றால் டாக்டர் அம்பேத்கரே அதைப் பற்றி அறியாதவராய் இருந்தார்.

மஹத்தில்தான் தலித்துக்கள் தங்களுடைய குடிமை உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள் வதற்குத் தாமாகவே முதல் தடவையாக உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டனர்.

சாதிய அமைப்பு இடம்பெயரும் சுதந்திரத்தை முற்றிலுமாக மறுத்தது. ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்து விட்ட ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்கான வாய்ப்புக்கள் அவனுடைய சாதியினால் உறைநிலை யடைந்து விடுவதைக் கண்டறிகிறான். டாக்டர். அம்பேத்கர் ரத்தினச் சுருக்கமான, தெளிவான ஒரு வரையறையை சாதிக்குக் கொடுத்திருக்கிறார்; “ஒரு சாதி என்பது சுற்றி வேலியிடப்பட்ட வர்க்கம்.” வர்க்கத்திற்கும், சாதிக்கும் இடையே நிலவும் குறிப்பிடத்தக்க முரண்பாட்டை இந்த வரையறை தெளிவுபடுத்துகிறது.

இந்திய சமூகவியலின் மதிப்புயர்ந்த முன்னோடிப் பிரமுகரான ஜி.எஸ். குரியே உட்பட பல அறிஞர்கள் முன்வைக்கும் வாதம் என்னவெனில், சாதிய அமைப்பு முறை என்பது இந்தியாவுக்கு மட்டுமே உரிய ஒரு தனித்துவப் பண்பு அல்ல.

சமூக அந்தஸ்து சார்ந்த படிவரிசைப்படி முக்கிய மான சாதிகள் பின்வருவன: பிரபு குடும்பத்தினர், வர்த்தக - தொழிலதிபர்கள், தொழிற்பணியாளர்கள் அடிமைகளின் வழி வந்தவர்கள்.  வடகிழக்கு கென்யாவிலும் தெற்கு எத்தியோப்பியாவிலும் வாழ்கிற போரானா மக்களிடையே வர்ணாசிரம முறையைப் போன்ற ஒரு நடைமுறை நிலவி வருகிறது.  இது போல உலகின் பலவகையான சமுதாயங்களிலும் இது போன்ற பாகுபாடுகள் இருந்து வருகின்றன.  அவை பல வகையான வேறுபாடுகளுக்கிடையில் கலந்தும் மோதியும் தொடர்ந்து வரலாற்றில் மாறிக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கின்றன.

மஹத் என்பது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல.  அது, ஒரு சகாப்த காலத்திற்குத் தொடர் விளைவு களை உட்பொதிந்து வைத்திருப்பதாகும். நவீன காலங்களில் குடிமை உரிமைகளுக்காக நடைபெற்ற முதல் போராட்டங்களுள் ஒன்று.  சுதந்திரமான தலித் இயக்கமொன்றின் தொடக்கத்தைக் குறிப்பதற்கான ஓர் அடையாளச் சின்னம் மஹத்.  அது நிரந்தரமாக பாபா சாஹேப் அம்பேத்கருடன் இணைந்திருப்பது.  ஆகவே, தலித் உலகில் ஓர் உணர்வு மயமான ஒரு வெளியை அது எடுத்துக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக இஸ்லாம், கிறிஸ்துவ சமயங்களின் வருகைகளும், தாக்கங்களும் தலித் மக்களுக்கிடையில் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து இந்தியாவில் நிலவுடைமை வாழ்க்கை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. காலனியாதிக்கங்கள் புதிய தொழில் முறைகளை அங்கங்கே நாடு முழுவதுமாக நிறுவி வேகமாக வளர்த்தன. அதன் விளைவாக சாதிக்குள் ஒடுங்கி அதற்குரிய வேலையைச் செய்து வந்த தலித் மக்கள் புதிய தொழில்களில் இறங்கித் தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக் கொண்டனர். கல்வியறிவு பெற்றனர். பொருளாதார மேம்பாட்டை அடைந்தனர் - அரசுப் பதவிகளில் அமர்ந்தனர்.

இவற்றிற்கெல்லாம் ஒரு தூண்டுதலாக அமைந்தவை இரண்டு மஹத் மாநாடுகளே என்பதை வரலாற்று ஆசிரியர் உணர்வு பூர்வமாகத் தெளிவு படுத்துகிறார்.

இரண்டாவது நாள் மாநாட்டில் தலைவர் தன்னுடைய நிறைவுரையை ஆற்றிய பின் ஷிவ்ராம் கோபால் ஜாதவ் நன்றியுரை வழங்கினார்.  அதை வழிமொழிந்து பாய் சித்ரே பேசினார்.  மரபு ரீதியான இந்த நிகழ்வுகளை நிறைவு செய்த பின், சித்ரே மாநாட்டில் உரையாற்றினார்: “ஒரு முக்கியமான பொறுப்பை மேற்கொண்டு அதைச் சாதிக்காமல் இந்த மாநாடு முடிவடையக் கூடாதென்று நான் கருதுகிறேன்.  மஹத்தில் வாழும் மக்கள் குடிநீரைப் பொறுத்தவரை ஏராளமான சிரமங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பானைக்கு ஒரு பைசா வீதம் மொத்தம் ரூபாய் நாற்பது மதிப்புக்கு குடிநீரை இந்த மாநாட்டுக்காக நாமே விலை கொடுத்து வாங்கி யிருக்கிறோம். இந்தச் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக மஹத் நகராட்சியின் அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லாக் குளங்களையும், எல்லாச் சாதிகளையும் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் திறந்து விட வேண்டு மென்று ஒரு தீர்மானத்தை ஏற்று நிறைவேற்றியதன் மூலம் ஏற்கெனவே, பிரகடனப்படுத்தியுள்ளது.  எப்படியாயினும் இத்தகைய குளங்களிலிருந்து குடிநீரைக் கோரி எடுக்கும் நடைமுறை தீண்டத்தகாத மக்களால் இன்னமும் நிறுவப்படவில்லை.  இன்றைய தினம் அதைச் செய்வதற்கு இந்த மாநாடு அவர் களுக்கு உதவி செய்யுமானால் ஒரு மிக முக்கியத் துவம் வாய்ந்த பொறுப்பைச் சிரமேற்கொண்டு அது சாதித்துவிட்டது என்று நம்மால் சொல்ல முடியும்.  ஆகவே, நாம் எல்லாருமாக தலைவருடன் சேர்ந்து சாவதார் குளத்திற்குப் பேரணியாக நடைபோட்டுச் சென்று அதன் குடிதண்ணீரை அருந்த வேண்டுமென முன்மொழிகிறேன்.”

“பாய் சித்ரேவிடமிருந்து வெளிப்பட்ட இந்த சில வார்த்தைகள் கூட்டத்தினர் அனைவரையும் மின் தாக்குதலுக்கு ஆளாக்கின. இந்த ஒற்றை அடிவைப்பு அவர்களுடைய வாழ்க்கைக்கு ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்துவதாயிருந்தது.  ஒட்டுமொத்த அரங்கமே உத்வேகம் நிரம்பிய பேராரவார முழக்கங் களால் நிரம்பிக் கொந்தளித்தது.  தலைவர்களின்வழி காட்டுதல்களின் கீழ் விரைவாகப் பிரதிநிதிகள் டாக்டர் அம்பேத்கருக்குப் பின்னால் அணிவகுத்தனர்.  மஹத் நகரின் சந்தைத் திடல் வழியாக மிக உச்ச பட்சக் கட்டுப்பாட்டுடன் ஒரு நீண்ட ஊர்வலமாக அவர்கள் வீரநடை போட்டுச் சென்றனர்.”  சமத்துவமே வெல்லும்.  மகாத்மா காந்திக்கு ஜே, சிவாஜி மகராஜுக்கு ஜே போன்ற முழக்கங்களுடன் பேரணி சென்றது.  அனைவரும் சாவதார் குளத்துக் கரையில் நின்றனர்.  டாக்டர் அம்பேத்கர் குளத்தில் இறங்கித் தன் குவித்த கரங்களில் குளத்து நீரை அள்ளிப் பருகினார்.  அவரைப் பின்தொடர்ந்து மற்றவர்களும் ‘ஹரஹர மகாதேவா’ முழக்கத்துடன் அவ்வாறே நீர் பருகினர்.  இந்த நிகழ்வுக்குப் பின் மாநாடு நிறைவடைந்தது என முறைப்படி அறிவிக்கப்பட்டது.

காவல்துறைக் கண்காணிப்பாளர் அங்கிருந்து சென்றபின் மாநாட்டு உணவுக் கூடத்திற்கு டாக்டர் அம்பேத்கர் சிலரை அனுப்பி இந்தப் பிரச்சினை குறித்து அவர்களை எச்சரிக்குமாறு செய்தார்.  அங்கிருந்தவர்கள் தங்களின் மதிய உணவை முடித்த பின் அவரவர் வீடுகளுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர்.  சந்தை வழியே அவர்களுள் சிலர் தங்களின் வீடுகளுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருக் கையில் குண்டர்களால் அவர்கள் திடீரெனத் தாக்கப் பட்டனர்.  குண்டர்களுள் சிலர் மாநாட்டு உணவுக் கூடத்துக்குப் போய் அங்கு இன்னும் மதிய உணவருந்திக் கொண்டிருந்தவர்களைத் தாக்கினார்கள். அவர்கள் குடிதண்ணீர்ப் பானைகளை உடைத்தெறிந்தவுடன் உணவையும் நாசமாக்கினர்.  ஒட்டுமொத்தமாக 20 பேர் படுகாயமடைந்தனர். மூன்று நான்கு பெண்கள் உட்பட 60-70 பேர் காயமடைந்தனர்.  பூனாவிலிருந்து வந்திருந்த முக்கியமான தீண்டத்தகாதார் தலைவர் களான பி.என்.ராஜ்போஜ் மற்றும் பானுதாஸ் குண்டோஜி ராவ், காம்ப்ளே ஆகியோர் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டதுடன் பிரதான சாலையிலேயே  படுமோசமாகத் திரும்பத் திரும்ப அடிக்கப்பட்டனர்.  காம்ப்ளேயின் மனைவி தனது கைக்குழந்தையுடன் சென்று கணவரைக் காப்பாற்ற முயன்றார்.  தாக்குதல் நடத்தியவர்கள் அவரையும், குழந்தையையும் கூட விட்டு வைக்கவில்லை.  அந்தத் தருணத்தில் சில முஸ்லிம்கள் அவர்களுடைய உதவிக்கு வந்திருக் காமற் போயிருந்தால் அங்குச் சில உயிர்ப்பலிகளும் கூட நேர்ந்திருக்கக்கூடும்.

எதிர்காலத்தில் சாவதார் குளத்துப் பக்கம் வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்கே அஞ்ச வேண்டியிருக்கும் நிலைக்கு தீண்டத்தகாத மக்கள் ஆளாகும் விதத்தில் அந்த ஒட்டுமொத்த உறவு திட்ட மிட்டு அரங்கேற்றப்பட்டது.  அங்கிருந்த விஷ்ணு கோயிலில் எல்லாப் பிராமணப் பூசாரிகளும் பங்கேற்ற ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.  ‘தீட்டுப் பட்டுவிட்ட குளத்து நீர்’ புனிதமறை நூற் செயல் முறையின்படி ஓராயிரம் பானைகளில் இறைத்து நிறைக்கப்பட்டு சுத்தி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, சத்தியாக்கிரக மாநாட்டின்போது இவ்வாறு குறிப்பிட்டார்: “இன்றைய தினம் நாம் நடத்தும் இந்தக் கூட்டத்துக்கும், பிரான்சிலுள்ள வெர்சைல்ஸில் 1789, மே 5 தேதியன்று நடைபெற்ற புரட்சிகரமான தேசியப் பேரவைக் கூட்டத்துக்கும் இடையே ஒரு மாபெரும் ஒற்றுமை நிலவுகிறது.”

இது தொடர்பாக, மஹத்தின் சாதி இந்துக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள் அவர்கள் அதன் செயல்முறைகளில் தீவிரமான தொடர் பங்கேற்புச் செய்யவில்லை. அந்த நிலையில் நீதி மன்றத் தீர்ப்பு தீண்டப்படாத மக்களுக்குச் சாதகமாக, சாவதார் குளத்தைத் தீண்டப்படாத மக்களுக்குத் திறந்து விட வேண்டுமென்று ஜூன் 13, 1929 அன்று வந்தது.

சாதி இந்துக்கள் அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.  அந்த நீதிமன்றமும் அதே தீர்ப்பை வழங்கியது.

அதே சமயத்தில் கொலாபா மாவட்ட ஆட்சியர் திரு. ஹாட் மிகவும் சாமர்த்தியமான முறையால் நிலைமைக் கட்டுப்படுத்தியிருந்ததால் பெருமளவு பாராட்டுப் பெற்றார்.

சத்தியாக்கிரகம் கைவிடப்பட்ட செயலானது தீண்டத் தக்கோர் நடுவே ஒரு மாபெரும் நிம்மதி உணர்வை அளிப்பதாகக் கட்டாயம் அமைந்திருக்க வேண்டும்.  சாவதார் குளத்தில் நடத்தப்பட வேண்டு மென்று திட்டமிடப்பட்டிருந்த சத்தியாக்கிரகம் நிகழாமல் போன அதே வேளையில் ‘மனுஸ்மிருதி’யை எரிப்பதில் மாநாடு வெற்றியடைந்திருந்தது.  சாதிய அமைப்பு முறையின் அடிப்படையான தத்துவார்த்த அடித்தளத்தையே நிராகரிப்பதற்கான அடையாள பூர்வ நடவடிக்கையாக அது அமைந்தது.

மஹத் என்ற இந்த வரலாறு இந்திய சமுதாயத்தில் தீண்டப்படாதவர்களாகக் கருதப்பட்டுவரும் மக்களுக்குப் புதுவகையான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும்.  முதல் தலித் புரட்சியின் தோற்றம், வளர்ச்சி, சாதனை போன்றவற்றைத் தகுந்த ஆவணங் களுடனும், தகவல்களுடனும் இந்த வரலாற்று நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹத் என்பது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. 

அது, ஒரு சகாப்த காலத்திற்குத்

தொடர் விளைவுகளை உட்பொதிந்து வைத்திருப்பதாகும்.

நவீன காலங்களில் குடிமை உரிமைகளுக்காக

நடைபெற்ற முதல் போராட்டங்களுள் ஒன்று. 

சுதந்திரமான தலித் இயக்கமொன்றின் தொடக்கத்தைக்

குறிப்பதற்கான ஓர் அடையாளச் சின்னம் மஹத். 

அது நிரந்தரமாக பாபா சாஹேப் அம்பேத்கருடன் இணைந்திருப்பது.

மஹத்

ஆனந்த் டெல்டும்ப்டே

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098

தொலைபேசி எண் : 044-26359906

` 550/-