பெரியார் மண்ணின் தமிழை, தமிழர்களின் தாய் மொழியை, பல்லாயிரம் ஆண்டுகள் செழிப்புற்று வளர்ந்த ‘தமிழை’ ஒழித்துக் கட்டுவதென மோடியின் மத்திய அரசு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது.

சென்ற வாரம் அஞ்சல் துறையில் அஞ்சல் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, தமிழகத்தின் கடும் எதிர்ப்பால், திரும்பப் பெறப்பட்டது.

இதுகுறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில், தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா இருக்காதா என்று மத்திய அரசு பதிலளிக்க ஆணையிட்டுள்ளது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம், தன் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் இனிவரும் வழக்கின் தீர்ப்புகள் இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடம், ஒடியா,ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியிட இருப்பதாகச் செய்தி வெளியிட்டு இருந்தது.

இதற்கும் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள், தமிழறிஞர்களின் கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்பொழுது, இரண்டு வழக்குகளின் தீர்ப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு உச்ச நீதிமன்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நீண்டகாலக் கடும்போராட்டத்திற்குப் பிறகு நீதிமன்றத் தீர்ப்பு தமிழில் வெளியாகிறது என்பது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு புறத்தில் தமிழ் மொழிக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மத்திய அரசு செய்து கொண்டிருப்பது வருத்தம் தருகிறது.

தமிழகத்தில் இருக்கும் 3,688 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 4,040 மேல்நிலைப் பள்ளிகளில், பயோமெட்ரிக் கருவிகளின் மூலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்துவந்தனர்.

ஆனால், இப்பொழுது திடீரென எந்த முன்னறிவுப்புமின்றி, இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே பதிவு செய்யும் முறையைத் தொடங்கி இருக்கிறது.

அதாவது தமிழர்களின் தாய் மண்ணில், தமிழ் மொழி நீக்கப்பட்டு இந்தியை நுழைக்கிறது மத்திய பாஜக அரசு. 

அதுகுறித்து, பயோமெட்ரிக் கருவியில் இந்தியிலும்,ஆங்கிலத்திலும் ஆதார் அட்டை அச்சிட்டிருப்பதினால், அதை இக்கருவியில், இணைக்கும்பொழுது இந்தி வருகிறது என்று துறை சார்ந்து பதில் சொல்கிறார்கள்.

இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம் இல்லை. தமிழைப் புறக்கணித்துவிட்டு இந்தியைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மத்திய அரசு சில வேளைகளில் பின்வாங்குவது போல பாவனை காட்டினாலும், தமிழ் மொழி அழிப்பில் எண்ணமுடையதாகவே இருக்கிறது. அதற்குத் துணை போகிறது தமிழக அரசு.

 எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தமிழகம்.

Pin It