கவிஞர் ஈரோடு தமிழன்பன் 1950களில் கவிதைத் துறையில் அடியெடுத்து வைத்தவர். 1960களில் முழுமூச்சாய் கவிதை உலகில் வலம் வந்தவர். 1970ஆம் ஆண்டு தனது முதல் கவிதைத் தொகுப்பான ‘தமிழன்பன் கவிதைகள்’ நூலை வெளியிட்டவர். இறுதி மூச்சு வரை எழுத்துத் துறையில் இடையறாது இயங்கிக் கொண்டிருந்தவர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 28.09.1933ஆம் தேதி பிறந்தவர் தமிழன்பன். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ஜெகதீசன். பிற்காலத்தில் இவர் தமிழ்மீது கொண்ட ஆழமான பற்றினால் ‘தமிழன்பன்’ என்ற புனைபெயரை வைத்துக் கொண்டார். கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியில் முறைப்படி தமிழ் பயின்ற இவர் பிற்காலத்தில் முனைவர் பட்டம் வரை பயின்று தனது ஆய்வறிவை வளர்த்துக் கொண்டார்.

erode tamizhanban 424ஆங்கில மொழியறிவையும் வளர்த்துக் கொண்டதன் பயனாக அனைத்துலக இலக்கியங்களை ஆழப்பயிலும் வாய்ப்பினையும் பெற்றார். ஈரோடு மதரசா உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றிய தமிழன்பன் சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார். ஈடுபாட்டுடன் கூடிய பல்லாண்டு காலத் தமிழாசிரியர் பணி இவரின் தமிழ்ப்புலமை ஆழம்காண அடித்தளமிட்டது.

‘தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை, கார்ல் மார்க்சின் பொதுவுடைமைச் சிந்தனை, பாப்லோ நெருடாவின் மனிதநேயம், வால்ட்விட்மனின் புதுமை வேட்கை, பாரதியாரின் கவிதா ஆவேசம், பாரதிதாசனின் தமிழ் உணர்வு ஆகியவற்றின் குறியீடாக அமைந்து தன் பிறந்தகமான சென்னிமலையின் நெசவுத் தறிகளின் ஓசைகளிலிருந்து சந்தங்களைச் சேகரம் செய்து கொண்டு தனக்கெனத் தனித்துவமான கவிதைப் பாட்டையை அமைத்துக் கொண்டு அதில் நடைபோட்டு வருபவர் தமிழன்பன்’ என்று 2005இல் வரையறுத்துக் கூறியுள்ளார் பேராசிரியர் வ.ஜெயதேவன்.

‘வானம்பாடி’ கவிதா இயக்கத்தில் கானம் பாடியவர் இவர். சமூக நீதிக் கருத்துகளையும் சமூக மாற்றச் சிந்தனைகளையும் தனது இரு கண்களாகக் கருதி இயங்கி வந்தவர். பாரதி, பாரதிதாசன் வழிவந்தவர். ‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’ என்ற இவரது நூல் இவருக்கும் பாவேந்தருக்குமான கருத்து நெருக்கத்தைப் பறைசாற்றுகிறது.

இவரின் இரண்டு மகன்களின் பெயர்களே இவரை இனம் காட்டுகிறது. ஒருவரது பெயர் ‘பாப்லோ நெருடா’ இன்னொருவர் பெயர் ‘பாரதிதாசன்’.

'நமது சிறகசைப்பில் ஞால நரம்பதிரும்! இமயப் பறவைகள் நாம்! எரிமலையின் உள்மனம் நாம்! அக்கினிக் காற்றில் இதழ்விரிக்கும் அரும்புகள் நாம்! திக்குகளின் புதல்வர்கள்! தேசவரம் பற்றவர்கள்!'

என்பது போன்ற இளைஞர்களைத் தட்டியெழுப்பும் வைர வரிக் கவிதைகள் இவரின் தனித்துவம். வெறும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உவமைகளல்ல. புரட்சியைத் தூண்டும் சொற்பூக்கள் அவையென்று தமிழன்பனின் முழுக்கவிதைகளைப் படித்த எவரும் எளிதில் உணரமுடியும்.

பள்ளி ஆசிரியர், கல்லூரிப் பேராசிரியர், மரபுக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், கவிதை ஆக்கங்களில் பல்வேறு புதுமைகளைப் புகுத்திய புதுமைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, சொற்பொழிவாளர், திரைப்படப் பாடலாசிரியர் என்ற பன்முகப் படைப்பாளுமையுடன் வீறுநடை போட்ட வித்தகர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

‘பழந்தமிழிலக்கியப் புலமை மற்றும் யாப்பியல் ஆளுமை என்பவற்றோடு கவிதையுலகில் அடிபதித்து, நவீன காலச் சூழலின் தேவைகளுக்கேற்ப புதுமைகளை உள்வாங்கிக் கொண்டு, தமிழ்க் கவிதை வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் ஒரு வரலாற்று மனிதராகவே-வரலாற்றை இயக்கி நிற்கும் சக்தியாகவே அவர் கணிக்கப்பட வேண்டியவராகிறார்’ என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன் வரையறை செய்துள்ளார்.

ஈரோடு தமிழன்பன் அவர்களது மறைவு தமிழ் உலகிற்கு குறிப்பாக, தமிழ்க் கவிதை உலகிற்கு-பேரிழப்பாகும். அவரின் வழித்தோன்றல்களாக இளம் தமிழ்க் கவிஞர்கள் சிலர் உருவாவதும், அத்தகைய உருவாக்கத்திற்குத் துணை நிற்பதும், அவர் எண்ணி எண்ணிச் செதுக்கிய கவிதைகளின் உள்ளடக்கமான புதியதோர் சமூக அமைப்பை ஏற்படுத்த முயலுவதுமே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.