வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு தமிழ் விழா மினசோட்டாவில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

விழாவுக்குரிய அடிப்படைப் பணிகளை மேற்கொள்ள பேரவையின் தலைவர், செயலாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவும், நிகழ்ச்சி நிரல் குழுவும் அமைக்கப்பட்டது. அக்குழுவால் சிறப்பு அழைப்பாளர்கள் முடிவுசெய்யப்பட்டு, அதன் பிறகு விழாக்குழுவால், அந்தச் சிறப்பு அழைப்பாளர்கள் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்ட பிறகுதான் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

fetna2017

இறுதி செய்யப்பட்ட சிறப்பு அழைப்பாளர்களுக்குத் தகவல் தெரிவித்து, அவர்களின் ஒப்புதலும் பெற்று, பேரவை செயலாளர் வாயிலாக அனைத்துச் சங்கங்களுக்கும், சமூக ஊடகம் வழியாக பொதுமக்களுக்கும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், சிறப்பு அழைப்பாளராக அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் நீக்கப்பட வேண்டும் என்று நிர்வாகக் குழுவினர் உத்தரவிட்டுள்ளனர்.

“மாதொருபாகன்” என்ற நூலில் தங்கள் சாதியைத் தவறாகச் சித்தரித்துத் தங்கள் சாதியை “இழிவுப்படுத்திய ‘பெருமாள் முருகன்’ இந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாதென்றும், மீறிவந்தால் அவர்மீது தனிநபர் தாக்குதல் நடத்துவோம்” என்று சில அறிவித்துள்ளனர். இதற்கு சில மூத்த உறுப்பினர்களின் அழுத்தமே காரணமாக உள்ளதாக அறிகிறோம்.

இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும். ஜாதி, மதம் கடந்து தமிழர்களாக இணைந்துள்ள நம்மிடையே ஜாதியை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஜனநாயக விரோதச் செயலைத் தொடங்கியுள்ளீர்கள். இப்படி ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்களும் இதுபோன்ற நிலையை எடுக்கலாம். அந்நிலை உருவானால், வருங்காலத்தில் தமிழ்ப் பேரவையின் ஆண்டு விழாவையே நடத்த இயலாத சூழலை அமைப்பின் நிர்வாகிகளே ஏற்படுத்தி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பேரவை ஆளாக நேரிடும்.

பகுத்தறிவாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் எதிரான தேவாரம்

எடுத்துக்காட்டாக, இதே 2017 ஆண்டுவிழாவில், முனைவர் திரு. கோ.ப.நல்லசிவம் அவர்கள் பங்கேற்கிறார்கள். அவர் ‘தேவாரம் உணர்த்தும் திருக்கோவில் வழிபாடு’ என்று ஆய்வுநூல் எழுதியவர். திருப்புகழ், திருமந்திரம் போன்றவற்றைப் பரப்புபவர், அதற்குரிய ஆய்வுகளிலும் ஈடுபட்டவர். இதே வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையில் எத்தனையோ பகுத்தறிவாளர்கள் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் உள்ளனர். அவர்கள் எவருமே தேவாரம், திருவாசம் போன்ற பக்தி இலக்கியங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்தத் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பெரிய புராணம் ஆகியவைகளைப் பற்றி, தோழர் பெரியார் பேசி, அவரது குடி அரசு, விடுதலை ஏடுகளில் வெளியான சில கருத்துக்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

“இந்து மதப்படி, மனுதர்ம சாஸ்திரப்படி நாம் எல்லாம் சூத்திரன்; அவன் பார்ப்பனன். அவன் உடம்பு மட்டும் அப்படி என்ன மணக்கிறது? நம் உடம்பில் மட்டும் நாற்றம் வீசுகிறதா? அவர்கள் சிறுநீர் பன்னீர் வாசனையும், நம் சிறுநீர் துர்நாற்றமும் வீசுகிறதா? இதைக் கேட்டால் நான் முகத்தில் பிறந்தேன்; நீங்கள் காலில் பிறந் தீர்கள்; என்று சொல்லுகிறார்கள்! புராணங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் புண்ணியம் என்றும், மறுத்தால் பாபம் என்றும் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் முதலியவைகளில் எழுதப்பட்டு இருக்கின்றன. உதாரணமாகப் பெரிய புராணத்தில் ஒரு பக்தன் தான் மோட்சம் செல்வதற்கு தன்னுடைய மனைவியை ஒரு பார்ப்பானுக்கு விட்டுக்கொடுத்து இருக்கிறான். இப்பொழுது இது மாதிரி யார் செய்வார்கள்? இம்மாதிரி எழுதிவைத்திருக்கிறாயே என்று கேட்டால் நாத்திகனா?”

-       பெரியார், விடுதலை 2.6.1956

“நம் தேவலாயங்களை அழிக்க வேண்டும், நம் கோவில்களில் ஒரு பைசாகூடச் செலவு செய்யக் கூடாது, இராமாயணம், மகாபாரதம், தேவாரம், திருவாசகம் முதலிய நூல்களை ஒழிக்கவேண்டும்.”

-பெரியார், குடி அரசு -17.08.1930

தேவாரம், திருவாசங்கள் எல்லாமே பகுத்தறிவாளர்களையும், இஸ்லாமியர்களையும் கேவலமாகச் சித்தரித்திருப்பதால், தோழர் பெரியார் இந்த பக்தி இலக்கியங்களை அழிக்கச் சொல்கிறார். ஆனால், அவற்றைப் பரப்புவதையே வாழ்க்கையாகக் கொண்ட முனைவர் நல்லசிவம் அவர்கள் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் பங்கேற்கக் கூடாது. அப்படிப் பங்கேற்றால் எதிர்வினை ஆற்றுவோம் என பகுத்தறிவாளர்கள் சார்பில் அறிவித்தால் அவரையும் சிறப்பு அழைப்பாளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டி வரும்.

ஆபாசக்களஞ்சியம் சிலப்பதிகாரம்

கடந்த சில ஆண்டுகளாக ஃபெட்னா நடத்திய சில நிகழ்வுகளும் முழுக்க முழுக்க பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டையும், கவுண்டர் ஜாதியின் புகழ் பரப்பும் நிகழ்வுகளாகவே இருந்தன.

2014 ஆம் ஆண்டு செயின்ட் லூயிஸில் “சிலம்பின் கதை - தெருக்கூத்து” நடத்தப்பட்டது. அந்தச் சிலப்பதிகாரத்தைப் பற்றித் தோழர் பெரியார் ஏராளமாக எழுதியுள்ளார். அவற்றில் சில வரிகளை மட்டும் பாருங்கள்.

“இன்று ஒரு சில புலவர்கள் சிலப்பதிகாரம் மிகப் பெரிய இலக்கியம் என்று அதைப் பிரசாரம் செய்து, அதனாலேயே தங்கள் வாழ்க்கையை வளர்த்து வருகின்றனர். அதில் என்ன இருக்கிறது? விபச்சாரத்தில் ஆரம்பித்து முட்டாள்தனத்தில் முடிவது தானே சிலப்பதிகாரம்? இதை எவரும் மறுக்க முடியாதே!”

– பெரியார், விடுதலை 29.8.1964

இப்படி பெரியாரால் கடுமையாக எதிர்க்கப்பட்ட, சிலப்பதிகாரத்தைத் தெருக்கூத்தாக நடத்தினீர்கள். ஃபெட்னாவில் பல பெரியார் தொண்டர்கள் நிர்வாகிகளாக இருந்தாலும் மற்றவர்களின் கருத்துரிமைக்காக அக்கூத்துக்களுக்கு எதிராக எதிர்வினை ஆற்றவில்லை.

2013ல் டொரண்டோவில் “தீரன் சின்னமலை வில்லுப்பாட்டு” நடத்தினீர்கள். அந்தத் தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போராட்ட வீர்ர் மட்டுமல்ல, இன்று கவுண்டர் என்ற ஜாதியினரின் ஜாதி வெறிக்கு அடையாளமாகவும் இருப்பவர். தீரன் சின்னமலையின் பெயரால், பல தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். மாவீரன் தீரன் சின்னமலைக் கவுண்டர்கள் பேரவை என்று ஒரு ஜாதி அமைப்பே தமிழ்நாட்டில் இயங்குகிறது. அதன் தலைவர் யுவராஜ் என்பவர், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல்ராஜைக் கொலை செய்து சிறையில் இருக்கிறார். அப்படிப்பட்ட ஜாதி வெறியர்களின் தலைவராகத் திகழும் தீரன் சின்னமலை அவர்களின் வரலாறு வில்லுப்பாட்டாக நடத்தப்பட்டது.

எல்லா வகையான ஜாதி வெறிகளுக்கும் எதிரானவர்கள் பேரவையில் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். அவர்கள் 2013ல் இந்த வில்லுப்பாட்டை எதிர்க்கவில்லை. பக்குவத்துடன் இருந்தார்கள்.

பெண்களை இழிவுபடுத்தும் இந்து மத சாஸ்திரங்களை என்ன செய்யலாம்?

perumal muruganதோழர் பெருமாள்முருகன் பெண்களைக் கொச்சைப்படுத்தி எழுதிவிட்டார் என அவரை அனுமதிக்க மறுக்கிறீர்கள். அப்படியானால், உண்மையாகவே இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதிப் பெண்களையும் கொச்சைப்படுத்தும், இந்து மத சாஸ்திரங்கள், புராணங்களை என்ன செய்யப் போகிறீர்கள்? எடுத்துக்காட்டாக மனுசாஸ்திரத்தில் இருந்து சில வரிகள்.

பிள்ளை இல்லாமல் ஒரு குலம் அழியுமானால், ஒரு பெண் தனது கணவனின் உடன் பிறந்த சகோதரர்கள் அல்லது தனது கணவனின் ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளிகள் யாருடன் வேண்டுமானாலும் கூடி பிள்ளைபெற்றுக் கொள்ளலாம்.  - மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 59.

கணவன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால் மனைவி வேறு ஒரு ஆணிடத்தில், தனது கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்து, பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாம். - மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 190.

மனைவியில்லாத ஒருவன், பிள்ளையில்லாத ஒருவன், தனக்கு வாரிசு தேவைப்படுமானால், மற்றொருவனுடைய மனைவியிடம் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். - மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 52.

பெண்களை இழிவுபடுத்தும் மகாபாரதத்தை என்ன செய்யலாம்? 

மகாபாரதக்கதைப்படி, பரசுராமன் தொடர்ச்சியாக 21 அஸ்திரங்களை எய்து, பூமியில் க்ஷத்திரியர்களே இல்லாமல் அழித்து விட்டார். அப்போது எல்லாத் தேசங்களிலிலும் உள்ள க்ஷத்திரியப் பெண்கள் அனைவரும், வேதங்களில் கரைகண்ட பிராமணர்களைக்கூடி, அவர்களோடு உறவுகொண்டு பிள்ளை களை உற்பத்தி செய்தார்கள். பரசுராமன் காலத்திற்குப் பிறகு வாழ்ந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் பிராமணனுக்குப் பிறந்தவர்களே என்றும், எல்லா தேசங்களிலும் இருந்த க்ஷத்திரிய ஜாதிப்பெண்கள் அனைவரும் பிராமணர்களுடன் உறவுகொண்டு தான் வாரிசுகளைப் பெற்றார்கள் என்றும் மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. - மகாபாரதம்: ஆதிபர்வம், அத்தியாயம் 113.

பெண்கள் ஆபத்துக்காலத்தில், தனது கணவன் அல்லாத மேல்ஜாதி ஆணிடத்திலோ, மைத்துனனிடத்திலோ பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். - மகாபாரதம்: ஆதிபர்வம், அத்தியாயம் 126 

பெண்களையும் ஆண்களையும் கொச்சைப்படுத்தும் பார்ப்பனப் பூணூல்

ஃபெட்னாவில் உள்ள சில பார்ப்பனர்கள் பூணூல் அணிந்திருக்கிறார்கள். அப்படிப் பூணூல் அணிவது, பூணூல் அணியாத மற்ற அனைத்து ஜாதியினரையும் ‘சூத்திரன்’ (பார்ப்பனரின் வைப்பாட்டி மக்கள்) என்று அறிவிப்பது ஆகும். இந்திய அரசியல் சட்டத்தின் 372வது பிரிவின்படியும், இந்து மத சாஸ்திரங்களின்படியும் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சூத்திரன் என்றால் ஏழுவகைப்படும். 1. போரில் புறங்காட்டி ஓடியவன், 2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன், 4.விபச்சாரி மகன், 5. விலைக்கு வாங்கப்பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7. தலைமுறைதலைமுறையாக ஊழியம் செய்பவன்.

ஆதாரம்: மனுசாஸ்திரம், அத்தியாயம் 8, ஸ்லோகம் 415

சட்டப்படியும் மேற்கண்ட சாஸ்திரப்படியும், பார்ப்பனர்கள் பூணூல் அணிவது என்பது, பார்ப்பனர் அல்லாத மற்ற ஜாதியினர் அனைவரையும், அனைத்து சமுதாயப் பெண்களையும் கொச்சைப்படுத்துவது ஆகும்.

கவுண்டர் என்ற ஒரு ஜாதியினரைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி, பெருமாள் முருகன் புறக்கணிக்கப்பட்டால், அனைத்து ஜாதியினரையும் கொச்சைப்படுத்தும் பூணூல்களும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று முழக்கம் எழுவதும் நியாயம் தானே?

பெண்களைக் கொச்சைப்படுத்தும் இந்து மத அடையாளங்களைத் தவிர்ப்போம்! 

ஃபெட்னா சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு விழாவிலும் இந்து மத அடையாளங்களான குத்துவிளக்கு ஏற்றுதல், பட்டு வேட்டி, பட்டுச்சேலை, பூ, பொட்டு, திருநீறு, குங்குமம், பூணூல் போன்றவை தவறாமல் இடம்பெறுகின்றன. காவடி ஆட்டம், கும்மி அடித்தல், போன்றவையும் இடம்பெறுகின்றன.

கவுண்டர் ஜாதிப் பெண்களைக் கொச்சைப்படுத்தியதாகக் கூறி பெருமாள் முருகன் வரக்கூடாது என்றால், அனைத்து ஜாதிப்பெண்களையும் கொச்சைப்படுத்தியுள்ள மனுசாஸ்திரத்தையும், மகாபாரதத்தையும் ஃபெட்னா கொளுத்துமா?

அவ்வளவு தூரம் போக வேண்டாம். பெண்களைக் கொச்சைப்படுத்தும் இந்து மதத்தின் அடையாளங்கள் இனி எந்த ஃபெட்னா விழாவிலும் இடம் பெறக்கூடாது. அந்த அடையாளத்தோடு எவரும் விழா அரங்கிற்குள் நுழையக்கூடாது என்று அறிவிப்பு செய்யுமா?

எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியினரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று ஃபெட்னா முடிவு செய்து, எழுத்தாளர் பெருமாள் முருகனைப் பங்கேற்க விடாமல் செய்தால், பகுத்தறிவாளர்களும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களும், ஜாதி-மத வெறிக்கு எதிரானவர்களும் ஒன்றிணைந்து 2017 பெட்னா விழா நாளில், விழா நடைபெறும் இடத்திலேயே ஜனநாயக வழியில் கடும் எதிர்வினையாற்றுவோம் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறோம்.

எனவே, ஃபெட்னா விழாவுக்கு பூணூலை எவரும் அணிந்து கொண்டு வரக்கூடாது. பூணூல் அணிந்தவர்கள் விழா அரங்கிற்குள் நுழையக்கூடாது, இந்து மத அடையாளங்களோடு எவரும் விழா அரங்கிற்கு வரக்கூடாது என்பவை போன்ற முழக்கங்களையும், அமைதிவழிப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு எங்களைத் தள்ள வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். தோழர் பெருமாள்முருகனின் மீதான ஜாதிய அடக்குமுறையை எதிர்ப்போம்.

- செ.கேசவன்

Pin It