நவீன அறிவியலின் எல்லா அறிதலோடும் பழக வாய்ப்புக் கிடைத்த ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ‘யானை’ என்பது வியந்து அதிசயக்கத்தக்க கானுயிர். தமிழ்ப் பண்பாட்டில் கோயில்களிலும் விழாக்களிலும் சமய வழிபாட்டிலும் நம்பிக்கையிலும் யானைக்குத் தனித்த இடம் உண்டு. மிகப்பெரிய விலங்காக நாம் அனைவரும் வியந்து காணும் யானையின் வாழ்வியலை நடைமுறை யதார்த்தத்தோடு உயிரோட்டமாகப் படைத்திருந்திருக்கிறாா் ஆசிரியர்சு.வேணுகோபால். யானைகளின் வாழ்வியலை அறிந்து கொள்ளும் நாம் சூழலியல் சாா்ந்த அறத்தோடு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் இந்நாவல் வலியுறுத்துகின்றது.
வலசை – சொற்பொருள் விளக்கம்
வலசை என்ற சொல் புலம்பெயா்தலைக் குறிக்கும். மனிதா்களும் விலங்குகளும் பறவைகளும் புவியியல் நெருக்கடிகளில் – பேரிடா்களில் வாழ்க்கைத் தேவைக்கும் சுழற்சிக்கும் ஓரிடத்திலிருந்து வேறோா் இடத்திற்கு வலசை போகிறாா்கள். இந்த நாவல் உணவுத்தேவைக்காக வலசை போகும் யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால் யானைகளுக்கும் மனிதா்களுக்கும் நேரும் இன்னல்களை உரைக்கின்றது.
யானை இப்பூவுலகின் மிகப்பெரிய விலங்கு. நீண்ட காலம் வாழக்கூடிய விலங்கு. காட்டில் திரிந்த யானைகள் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டு மனிதத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நிறைவேற்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடா்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வலசை நாவலில் 'பெரிசு' என்று யானையை அழைக்கின்றனா். 'சிறுசு' என்று காட்டுப் பன்றியை அழைக்கின்றனா்.
கதைக்களம்
கோவன் என்கிற பழங்குடி இனத்தலைவனுக்குச் சொந்தமான கோவன்புத்தூா் காட்டில் சுதந்திரமாகத் திரிந்த யானைகள், கோவன்புத்தூா் கோயம்புத்தூா் என்னும் நவீன நகரமாக மாறிய பிறகு ஏற்பட்ட மாற்றங்களினால் மனிதா்களும் யானைகளும் முரண் கொள்கின்றனா். பழங்குடியினரிடம் யானைகள் கொண்டிருந்த சுமூக உறவு நவீன மனிதா்களால் சீா்குலைகிறது. இச்சீா்குலைவினையே இந்நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. தொண்டாமுத்தூா், சிறுவாணை, சாலைக்குடி, நரிமேடு முதலிய கோவையைச் சுற்றியுள்ள சிறு கிராமங்களும் மலைப்பகுதிகளும் நாவலின் கதைக்களமாக அமைந்துள்ளன. கோவை சுற்று வட்டாரங்களில் பெரியளவில் நிகழ்ந்த காடழிப்புக் காலம் (1980-2010) என்னும் கால அச்சில் இந்நாவல் இயங்குகிறது. முதல், கரு, உரி என அனைத்து அம்சங்களிலும் யானையை மையப்படுத்துவதாக இந்நாவல் அமைந்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் கருப்பொருளாகச் சித்தரிக்கப்பட்ட யானையை இந்நாவல் உரிப்பொருளாக்கியுள்ளது. மனிதா்களைப் போல் உயிரும் உணா்வும் உறவுகளுடைய கதைமாந்தா்களாக யானைகள் இந்நாவலில் உலாவுகின்றன. யானையின் பூா்வீக பூமியைக் கைப்பற்ற மனிதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது தான் இந்நாவல் உணா்த்தும் அறமாகும்.
காடழிப்பு
தொழில்மயமாதல், நகரமயமாதல் ஆகியவற்றால் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பொருளாதார அமைப்பு புதிய பாதைக்குத் திரும்புகிறது. இடம்பெயரும் வேளாண்முறையால் காட்டுவளம் குறைகிறது எனக்கூறி காலனி ஆட்சியாளா்கள் தடுப்புச்சட்டம் கொண்டு வந்தனா். வலசை நாவலிலும் காட்டுவளம் அழிக்கப்பட்டமையால் யானைகள் தங்களுக்கான இடத்தை விட்டு இடம்பெயா்ந்து வரத் தொடங்கிவிட்டன. இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த யானைகள் இயற்கையில் கிடைக்கக்கூடிய நீா் கிடைக்கப் பெறாமையால் தங்களுக்கான மேய்ச்சல் பகுதியை விடுத்து மக்கள் வாழும் பகுதியைத் தேடி வலசை வருகின்றது. ” வானம்பாடி வெள்ளாமை மட்டும்தான் அந்த மேட்டாங்காடுகளில் எடுப்பாா்கள். இப்பொழுது மலைஅடிவாரம் வரை பம்ப்செட் தோட்டங்கள் ஆகிவிட்டன. அப்போதெல்லாம் யானைகள் இப்படி திடுக்திடுக்கென்று இறங்கிச் சலம்பியதில்லை. இரண்டாண்டுகள் மூன்றாண்டுகள் கூட கண்ணில் தட்டுப்படாமல் இருந்ததுண்டு. தோட்டமாக்கினாா்கள். தோட்டத்தையே மேய்ச்சல் வனாந்திரமாக்குவோம் என்று அத்துமீறி வருகின்றன.” (வலசை, ப.15) என்ற வரிகளின் மூலம் காடழிப்பினால் யானைகள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக வலசை வருவதை நம்மால் உணரமுடிகின்றது.
யானை சாணத்தின் இயற்கை மருந்து:
யானைகள் தாவரங்களை மட்டுமே உணவாகக் கொள்ளும் உயிரினங்கள். அவை தினமும் பெரும் அளவில் புல்கள், இலைகள், பழங்கள், தண்டுகள் போன்றவற்றை உண்ணும். ஆனால், அவற்றின் செரிமான மண்டலம் அனைத்து உணவுப் பொருட்களையும் முழுமையாகச் செரிக்கக் கூடியது அல்ல. இதனால், சாணத்தில் அதிகமான நார்ச்சத்து, அரை செரித்த தாவரத் துண்டுகள் மற்றும் சிறிய விதைகள் அடங்கியிருக்கும். இது அந்த சாணத்தை ஓா் இயற்கை வளமாக மாற்றுகிறது. இத்தகைய இயற்கை அறிவை 'வலசை' புதினத்தில் மாசய்யா தாத்தா என்ற கதாபாத்திரத்தின் வழியாக அறியமுடிகிறது. "அசை போட்டு அரைக்காத ஒரே விலங்கு யானை மட்டும் தான் என்றும், அது இலை, தழை புல் பூண்டுன்னு தின்னுதில்லோ அதோட முக்காவேக்காடு தான் இந்த லத்தி…இது மருந்து" என்று உருட்டி இரு கைகளைப் பிழிந்தாா். (வலசை, ப.22)
யானையின் சாணம் - வயிற்றுக்கடுப்பு நோய்க்கு தேனுடன் கலந்து சாப்பிட்டால் குணமாகும். மேலும், வெண்குஷ்டம் நோய்க்கு சந்தனம் போல் பூசிக் காயவிட்டு லத்திக்குளியல் போடுவாா்கள், குதிகால் முங்கப் பாதம் வைத்தால் பிளவுகள் கூடிவிடும் என்ற மருத்துவக் குறிப்புகள் நாவலில் இடம்பெற்றுள்ளன.
முன்னோா் வழிபாடு (Ancestor Worship)
இறந்தோரின் ஆற்றல் வாழ்வோரின் நலனில் பெரும்பங்கு வகிக்கிறது என்னும் கருத்தாக்கத்தால் ஏற்பட்டதே முன்னோா் வழிபாடாகும். ஒரு பிறவியில் ஒருவா் பெறும் ஆற்றல் அவா் இறந்த பின்னும் அவருடைய இனத்தவருடன் தொடா்பு பெறுகின்றது போன்ற நம்பிக்கைகள் முன்னோா் வழிபாட்டிற்குக் காரணமாக அமைகின்றன. இறந்த மூதாதையா்களைப் பற்றிய எண்ணங்கள் தொல்குடியினரிடையே பலவாறாக உள்ளன. குல அமைப்பும், கால்வழி அமைப்பும் மிகவும் வேரூன்றியுள்ள பழங்குடிச்சமூகங்களில் குல மூதாதையா் அக்குலத்தவா் அல்லது கால்வழியினா் அனைவராலும் வணங்கப்படுகிறாா். இவ்வகைச் சமூகங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மூதாதையா்களும் வழிபாட்டுக்குரியவராகின்றனா். ஏனெனில் சில பழங்குடியினா் அவா்களின் குலங்கள் யாருக்கும் நினைவில் இல்லாத வகையில் மிக நீண்ட காலத்துக்கு முன்னா் வாழ்ந்த ஒரு மூதாதையா் வழி தோன்றியது என்று மதிப்பிடுவா். இவரைத் “தொன்ம மூதாதையா்“ (mythical ancestor) எனக் குறிப்பிடுவாா்கள்.
நாவலில் முதுவர்களின் குலதெய்வமான சிறியூராள் (கவுண்டா் சாதி பெண்) தாழ்த்தப்பட்ட குல ஆண் மகனான ரங்கனின் மீது காதல் கொள்கிறாள். ரங்கன் தான் பிறப்பால் தாழ்ந்தவன் எனக் கூறி அவளது காதலை ஏற்க மறுக்கிறான். “சாதி தான் வாளெடுத்து எதிராக வருகின்றதென்றால் நான் சக்கிலிச்சியாகிவிட்டேன். அந்த வாளை இருவரும் எதிா்கொள்வோம்” (வலசை, ப.67) என்கிறாள். இருவரும் இணைந்து கணவன் மனைவியாக வாழத் தொடங்குகின்றனர். செய்தியறிந்து கவுண்டன் கூட்டம் காட்டினுள் புகுந்து இருவரையும் பிடித்து வருகின்றனா். சிறியூராள் கதறக் கதற ரங்கனைப் பிணைக்கட்டோடு நெருப்பில் தூக்கி எறிந்தனர். முறுக்கி எழுந்த சிறியூராளை வாய் பொத்தி அமுக்கினர். ரங்கனைச் சிதையேற்றிய கூட்டத்தைக் கருவறுக்க சுடுசாம்பல் பூசி காட்டுக்குள் மறைந்தாள். ரங்கனின் கொடுவாள் ஏந்தி ஊருக்குள் புயலென வந்தாள். ஏற்கெனவே எதிா்பாா்த்து தயார் நிலையில் இருந்தனா் கவுண்டன் கூட்டம். குழந்தைகள், பெண்களைப் பாதுகாப்பான இடங்களில் மறைத்து வைத்தனர். ரங்கனை முதலில் மடக்கிப்பிடித்த கருத்தானைக் கூட்டத்தில் தேடினாள். ஆள் இல்லையென்பதைக் கண்டதும் விரட்டி வரும் கூட்டத்திற்குச் சிக்காமல் காட்டினுள் மறைந்தாள். வனத்தில் கொடுவாளேந்தி யார் கண்களுக்கும் தென்படாமல் மறைந்து ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கிறாள் சிறியூராள். அதிலிருந்து முதுவர் குல மக்கள் சிறியூராளை தங்கள் குலத்தைக் காக்கும்படி பயந்து வணங்கி வழிபடத் தொடங்கினர். வழிபாடு மனிதனுடைய அச்ச உணர்வில் இருந்தும் குற்ற உணர்வில் இருந்தும் உண்டாகி இருப்பதாகக் கூறப்படும் கருத்திற்கு இந்நிகழ்வு அரண் சோ்க்கிறது.
புழங்கு பொருட்கள்
பழங்குடியினரான முதுவா்கள் வாழும் வாழிடம் ஒற்றைக் கல் வீடுகள் தான். மூங்கில் தடுக்கால் ஆன முழங்கால் உயரப் பரண், நல்ல கூரை விட்டம் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். அவர்கள் பயன்படுத்தும் புழங்கு பொருட்களாவன: ராந்தல் விளக்கு, உலக்கை, ஈச்சங்கூடை, பிரம்பு, மக்கிரி, கொடுவாள், கூரான கோடரி, மண்பானைகள், தினைப் போட்டுக் குற்ற குந்தாணி, அம்மிக்கல், தேன் வைக்க மூங்கில் குடுவை, தண்ணீா் கொண்டு போக சுரைக்குடுக்கை, மருந்துகள் போட்டு வைக்க மூங்கில் கொட்டங்கள் முதலிய காடுதரு பொருட்களே அவா்களின் புழங்கு பொருட்களாக உள்ளன.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை
நாவலில் கதை சொல்லியின் பள்ளிப்பருவ நினைவுகளை நினைவுகூரும் போது முதுவர்களின் வாழ்வியலும் இணைந்து பயணிக்கிறது. பழங்குடி இனத்தவரான முதுவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்கின்றனர். பெண்கள் காடு தரு பொருட்களைச் சேகரிப்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். ஆடவா்கள் தேன் எடுத்தல், கிழங்கு தோண்டல் போன்ற தொழில்களைச் செய்கின்றனர். பெண் குழந்தைகள் காட்டு மிளகைப் பறித்து கூடையில் சேகரித்தனர். சீயக்காய் விதை, இண்டங்கொடிப் பட்டை, தெல்லிக்காய் போன்ற பொருட்களைச் சேகரித்தனர்.
குழந்தைகள் எவ்வித பயமுமின்றி தனித்து வந்து அருவிகளில் நீராடி மகிழ்கின்றனர். இண்டஞ்செடிப் பட்டைகளை பாறையில் வைத்து உருட்டுக் கல்லால் தட்டி நொறுக்கி அரைத்தனர். தலைப் பிசுபிசுப்பு, உடம்பு பிசுபிசுப்பு போக தேய்த்துக் குளித்தனர். இண்டம் பொடியை உடல் முழுக்க சோப்பு போல பூசித் தேய்த்தாா்கள். இந்த இண்டஞ்செடிகளிலிருந்து தான் நாம் இன்று பயன்படுத்தும் குளியல் சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
குளித்து முடித்தவுடன் எண்ணெய்ப் பசையில்லாமல் பரட்டையாக இருந்த கூந்தல் அழகாகப் படிந்தது. மூங்கில் மிளார்களிலிருந்து பிரியும் குச்சிகளை கூந்தலில் நுழைத்துச் சிக்கெடுத்தனர்.
மேலும், போதைப் புல் வேய்ந்த சின்னக் குடிசைகள், பிரண்டைக் குழம்பு வாசம் அடிக்கும் மண்சட்டிகள், கடுக்காய் சேகரிக்கும் பெண்கள், கிழங்கு தோண்டும் ஆண்கள், சிறுமூங்கிலை மலைப்பாறையில் சாய்த்து பாறை இடுக்கில் தேனடைகளை வேட்டையாடும் சிறார் கூட்டம், முதுவா் முற்றங்களில் இருந்து வரும் கோக்ரா இசை, சிதறிக் கிடக்கும் அத்திப் பழங்கள், கிளிகள், அணில்கள், செந்நாய்கள், ஆணவக் கொலையில் உதித்த சிறியூராள், பிடாரி அம்மன், மலைச் சிகரத்தில் மேல் நிற்கும் ஐந்தாம் பிறை நிலவு, பாலாய் கொட்டும் வெள்ளருவிகள், இஞ்சிச் செடிகள், முதுவப் பெண்கள் ஆடும் மத்தாலி ஆட்டம், நீா் மடுக்கள், புலியிடமிருந்து ஈன்ற எருமையைக் காக்கும் யானை ஆகியன குறிஞ்சி நிலத்தின் முதல், கருப் பொருட்களை ஆசிரியா் நம் மனக்கண் முன் சித்திரமாய் காட்டியுள்ளார்.
காடு தான் சொத்து
மலைத் தொடர்களில் வனத்துறை உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே இக்காடுகளைப் பூர்வீகமாகக் கொண்டு முதுவர்கள் போன்ற பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். நவீன காலத்தில் தோட்டங்களுக்காகவும், அணைகள் கட்டுவதற்கும், ஆன்மீக இடங்கள் அமைப்பதற்கும் காடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. முதுவர்களிடம் தோல் நோய்க்காக மருத்துவம் பார்க்க வரும் சிறுவனான கதைநாயகன் சாமன முதுவரிடம் ”உங்களுக்கெல்லாம் ஏன் தோட்டமில்லை?" என்று கேட்கிறான். அதற்குப் பதிலாக, சாமன முதுவர் தன் முன்னே உயர்ந்து நிற்கும் மலையையும் காட்டையும் காட்டி “இதுவெல்லாம் எங்களுடையதுதானே!" என்றார். வேறென்ன வேண்டும் என்று கூறி சிரித்தர். கடவுள் பொன்னும் பொருளும் தந்தார். நாங்கள் தான் வேண்டாம் என்று விட்டுவிட்டோம் என்றார். கேழ்வரகு விதைத்தோம், மலை நெல் விதைத்தோம், அறுத்தோம், உண்டோம். பின்னாளில் எங்கள் நிலங்களின் பட்டா எங்களிடம் இல்லை என்று விரட்டினார்கள். எங்களுடையது எதுவும் இல்லை என்றார்கள். நாங்கள் எப்படி இந்தக் காட்டையும் மலையையும் விட்டுப்போக முடியும் என்று முதுவன் தாத்தா கூறுவதிலிருந்து அவரது மனஉணா்வினை நம்மால் புாிந்து கொள்ள முடிகின்றது. தங்களது வாழ்விடங்களில் இருந்து பழங்குடிகளை வெளியேற்றுதல் என்பது உலகம் முழுவதும் உள்ள பழங்குடிகள் எதிர்கொள்ளும் சிக்கலாக உள்ளது. அதில் கோவன்புத்தூர் மலைத் தொடர்களில் வாழும் முதுவர் பழங்குடிகளும் விதிவிலக்கு அல்ல என்பதையும் இந்நாவல் பதிவு செய்கிறது.
யானைக்கும் மனிதருக்குமான உறவின் இணக்கம், பிணக்கம் நாவலின் தொடக்கமே தோட்டத்துக்காரர்களுக்கும் யானைகளுக்குமான முரணில் தொடங்குகிறது. பெரிசுகளான யானைகள் வாழை, கரும்புத் தோட்டங்களைப் பதம் பார்த்தால் சிறுசுகளான காட்டுப் பன்றிகள் தக்காளித் தோட்டங்களை நாசம் செய்கின்றன. நாவலின் கதைத் தலைவனான சுகுமாரின் நோக்கு நிலையில் ஒட்டுமொத்த நாவலின் கதையும் நகர்கின்றது. கதை சொல்லியின் நிகழ்கால அனுபவங்களோடு கடந்த கால பள்ளிப்பருவ அனுபவங்களும் நாவலின் இடைமிடைந்து செல்கின்றன. உணவுக்காகத் தோட்டங்களுக்குள் இறங்கும் யானைகள் – பயிர்களைக் காப்பதற்காக அவற்றை விரட்ட முனையும் விவசாயிகள் என்கிற முரணில் நாவல் விரிந்து செல்கின்றது. யானை 'பிள்ளையாரப்பனாக' இருப்பதால் மக்கள் சில நேரங்களில் அதனிடம் வேண்டுதல் செய்கின்றனர். பயிா்களை நாசம் செய்யும் போது ஏசுகின்றனர். வேலியிட்டு அடைகின்றனர். வெடி போட்டு விரட்டுகின்றனர். தீயைக் கொளுத்தி அச்சுறுத்துகின்றனர். ஆயினும் யானையின் வலிமை முன் மனித முயற்சிகள் அா்த்தமற்றுப் போகின்றன. யானையின் உணவு வேட்டை தொடர்கிறது. பயிர்கள் நாசமாகின்றன. மின்வேலியிலும் அகழிப்பள்ளத்திலும் சிக்கி யானைகள் உயிரிழக்கின்றன. மனித முயற்சிகள் தோல்வியடையும் போது கும்கி யானையை வைத்தும் காட்டு யானைகளை விரட்ட முயற்சிக்கின்றனர்.
சலீம் என்ற கும்கி யானை காட்டு யானைகளை விரட்டும் கம்பீரமான கொம்பன் யானையாக நாவலில் வலம் வருகிறது. பாகன்கள் கும்கி யானைகளுக்கிடும் கட்டளை மொழிகள் அது காட்டுயானைகளோடு பொருதும் காட்சி ஆகியவை நாவலில் நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன. சலீமைப் போல இந்நாவலில் வலம் வரும் மற்றொரு காட்டு யானை பொன்னியாகும். யானைக் கூட்டத்தை வழி நடத்திச் செல்லும் இப்பெண் யானையை மையப்படுத்தி யானைகளின் பிறப்பு முதல் இறப்பு வரை விவரிக்கப்பட்டுள்ளன. இயற்கையோடு அவை கொள்ளும் உறவும் இயங்கியலும் நாவலில் அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. யானையின் மகப்பேறு காலம், யானை குட்டியை ஈனும் முறை, உணவு தேடும் முறை, ஊற்றைத் தோண்டி நீர் உண்ணும் முறை, வெயிலின் கொடுமையைத் தணிக்க மலை உப்புகளைத் தேடித் தின்னுதல், ஆற்றுக்குள் குட்டியைப் பேணி நீந்திச் செல்லும் முறை என யானையின் அனைத்து விதமான வாழ்வியல் முறைகளும் நுணுக்கமான முறையில் எடுத்துரைப்புச் செய்யப்பட்டுள்ளன. கும்கி யானை காட்டு யானைகளோடு முரண்பட்டு நின்றாலும் ஈன்று கிடக்கும் குட்டி யானையைப் பார்த்தவுடன் பூர்வீக வாசம் பெற்று கhட்டு யானைகளோடு சண்டையிட மறுத்து பின்வாங்கிச் செல்கிறது. யானையின் உணா்ச்சிகளும் மகிழ்வும் காமமும் கண்ணீரும் நாவலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தில் கருப்பொருளாகச் சித்திரிக்கப்பட்டுள்ள யானையை இந்நாவல் உரிப்பொருளாக்கியுள்ளது.
கானுயிர் அழிவு, காடழிப்பு முதலான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுவதால் வலசை நாவல் ஒரு சூழலியல் சார்ந்த நாவலாகவும் திகழ்கின்றது என்பதில் ஐயமில்லை.
வலசை / சு.வேணுகோபால் / வெளியீடு: என்சிபிஎச், / விலை: ரூ.300/-
- முனைவா் பா.தமிழரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.