சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி (CIBF) நான்காம் ஆண்டாக 2026 ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னையில் நடைபெறவுள்ளது.

தமிழை உலகிற்கும் உலகை தமிழுக்கும் எடுத்துச் செல்வதே இக்கண்காட்சியின் அடிப்படை நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இக்கண்காட்சியை முழுப்பொறுப்பெடுத்து நடத்துகிறது.

2023, 2024, 2025 ஆகிய மூன்று ஆண்டுகள் இக்கண்காட்சி நடைபெற்றுள்ளது. 2023இல் 24 நாடுகளிலுள்ள பதிப்பகங்கள் பங்கேற்றிருந்தன. அந்த ஆண்டு 365 மொழி பெயர்ப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. 2024இல் 40 நாடுகளின் பதிப்பகங்கள் பங்கேற்றன. 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேறின. 2025இல் 64 நாடுகளின் பதிப்பகங்கள் பங்கேற்றன. 1354 ஒப்பந்தங்கள் நிறைவேறின. இந்த ஒப்பந்தங்களெல்லாம் தமிழ்நாட்டுப் பதிப்பகங்கள் பிறமொழிப் பதிப்பகங்களுடன் உரிமைப் பரிமாற்றத்தின் பொருட்டு ஏற்படுத்திக் கொள்பவை.

தமிழ்நாடு அரசின் இம்முயற்சி பாராட்டத்தக்கதாகும். பல குறிப்பிட்ட பதிப்பகங்கள் தங்களின் சக்திக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ப சில தேர்வு செய்யப்பட்ட பிறமொழி நூல்களை தமிழில் மொழிபெயர்த்துப் பதிப்பித்துள்ளன.

பதிப்புத்துறையில் முக்கால் நூற்றாண்டு வரலாறு கொண்ட நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஏராளமான உலகப்பிரசித்தி பெற்ற சிறந்த பிறமொழி நூல்களை தமிழில் பல்லாண்டுகளாகப் பதிப்பித்து வருகிறது. அத்தகைய சில நூல்கள் பல மறுபதிப்புகள் கண்டுள்ளன.

வேறுசில முக்கியப் பதிப்பகங்களும் பிறமொழிகளிலிருந்து தமிழில் நூல்களைப் பதிப்பிக்கும் வரலாற்றுக் கடமையை செவ்வனே நிறைவேற்றி வந்துள்ளன.

இருப்பினும் உலகெங்கும் வெளிவரும் உன்னத நூல்களை தமிழில் கொண்டு வரும் சீரிய, மிக அவசியமான பணியை தனியார் பதிப்பகங்கள் மட்டும் முழுமையாகச் செய்துவிட முடியாது. இதற்கு அரசு முன்னெடுப்பு மிகவும் அவசியமாகிறது.

பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகளுள் உலக அளவில் முதல் இடத்தில் இருப்பது ஜெர்மன் நாட்டிலுள்ள பிராங்க்பர்ட் நகரத்தில் ஆண்டுதோறும் நடந்து வருகிற ‘பிராங்க்பர்ட் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி’ ஆகும்.

பிராங்க்பர்ட் சர்வதேச புத்தகக் கண்காட்சியைப் பார்வையிடவும், அனுபவங்களைப் பெறவும் ஆண்டுதோறும் இத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் சிலர் தமிழ்நாடு அரசால் பிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சிக்கு அனுப்பப்படுகின்றனர்.

படைப்பிலக்கியங்களுக்கு அதிக வாய்ப்பு சென்னை கண்காட்சியில் உள்ளது. அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அதே சமயத்தில் மானுடவியல், வரலாறு, பொருளாதாரம், அரசியல், தத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட வகைமைகளுக்கு இப்போது இருப்பதை விட கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

உலகெங்கும் வெளிவரும் மிக உன்னத அறிவார்ந்த நூல்கள் அனைத்தும் உடனுக்குடன் ஜப்பானிய மொழியில் வெளிவர ஜப்பான் அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஆகவேதான் ஜப்பான் மொழி மட்டுமே தெரிந்த ஜப்பானியர் பலர் பேரறிவாளர்களாக உருவெடுத்துள்ளனர்.

‘அறிவியல் பரவலாக்கம்’ என்ற ஒரு சிறப்புத்துறை உலகெங்கும் பரவி வருகிறது. கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக் கழகங்களில் அதற்கு தனித்துறையும், முன்னணி அறிவியலாளர்களைப் பேராசிரியர்களாகக் கொண்டு இயங்கும் நிலையும் இருந்து வருகிறது. அவர்கள் எண்ணற்ற மக்களுக்கான மிகவும் தரம் மிக்க அறிவியல் நூல்களை வெளியிட்டு வருகின்றனர். அத்தகைய உலக அளவிலுள்ள பிறமொழி அறிவியல் நூல்கள் தமிழில் வரவேண்டும்.

இன்று இந்திய அளவில் தமிழ்நாடு பல அம்சங்களில் தனிக்கவனம் பெற்றுள்ளது. கல்வி வளர்ச்சி, தொழில்வளர்ச்சி, சமூக நீதிக் கோட்பாடு, மதச்சார்பின்மை, சமநீதி, சமத்துவம் போன்ற மனிதம் சார்ந்த இலக்கியங்களும், வரலாறும், சிந்தனையும் இந்தியாவின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. தமிழ்நாடு அடிப்படையில் சில அம்சங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாகவும் முன்னுதாரணமாகவும் உள்ளதை பலரும் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் ‘தமிழிலிருந்து உலகிற்கு’ என்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டிய காலம் இது.

மொத்தத்தில் ‘சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி’ அறிவுப் பயணத்தின் ஒரு மைல்கல். ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்ற பாரதியின் வைரவரிக்கு உயிர் கொடுக்கும் முயற்சி.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.