பரந்த களத்தில் பாத்திரங்கள் பலவற்றை உலவ விட்டு ஒரு வாழ்க்கையை எழுத்திலக்கியமாக முன்வைத்தால், அதை நாவல் என்கிறோம். பரந்த காலங்களின் அடுக்கு வரிசைகளில் எண்ணிறந்த மனிதர்களை பலதலைமுறைகளில் இயங்கவிட்டு, அவர்களது வாழ்வுலகத்தையும் மன உலகத்தையும் பண்பாட்டு ஒளியுடன் வரலாற்றையே எழுத்திலக்கியமாக முன்வைத்தால்.. அதை என்னவென்பது? மகாநாவல் என்று சொல்லலாமா? சொல்லலாம். தனித்துவ உயரம்மிக்க, மகத்தான நாவ்வல் என்றும் சொல்லலாம். அத்தனை தனிச்சிறப்பு மிகுந்த அற்புதமான நாவலை படைத்திருப்பது, த.மு.எ.ச.க.வின் மாநில துணைப்பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன். ‘காவல்கோட்டம்’ என்ற அந்த நாவல் வெளியான சில நாட்களிலேயே புகழ்மிக்க இரு விருதுகளைப் பெற்று, பல படைப்பாளிகளின் பிரமிப்பான பாராட்டுகளைப் பெற்றுவிட்டது.
 
“பொதுவாக பொதுவுடமை இயக்கம் சார்ந்து இயங்குகிற படைப்பாளிகளுக்கு கொள்கை வைராக்கியம் இருக்கும். இலக்கியத்தை பிரச்சாரம் செய்கிற சாதனமாக மட்டுமே கருதுகிற இயல்பு இருக்கும். கலை குறித்த மதிப்போ.. இலக்கிய மாண்பு குறித்த அழகுணர்வோ இருக்காது” என்கிற இலக்கிய அறிவுஜீவிகளின் இறுகிப்போன அவதூறான மதிப்பீடுகளையெல்லாம் தகர்த்தெறிந்திருக்கிற மிகச்சிறந்த கலைப்படைப்பாக நாவல் வந்திருக்கிறது. அழகியல் பரிபூர்ணமாக கைகூடி வந்திருக்கிற மகத்தான வரலாற்று நாவல். கலைவளத்திலும், இலக்கிய அழகிலும் முதல் தரமான, அபூர்வமான காவிய நாவல்.
 
Kavalkottamபார்த்த முதல் பார்வையில் புத்தகத்தின் பருமன் மிரட்டுகிறது. உள்ளங்கையை அகல விரித்துப் பிடித்தாலும் அடங்க மறுக்கிற புத்தகமது. இதை வாசித்து விட முடியுமா, நடக்கிற வேலையா என்ற மலைப்பையும் தயக்கத்தையும் தவிர்க்க முடியவில்லை. அதே புத்தகப் பருமன் பிரம்மாண்டமே வாசிக்கும் ஆவலைத் தூண்டவும் செய்கிறது. வசீகரமான பிரம்மாண்டம். ஆரம்பத் தயக்கத்தை உடைத்துவிட்டு, ஆவல் முனைப்போடு நாவலுக்குள் பயணப்பட்டால், முதல் அத்தியாயம் மட்டும் தீப்பிடித்த மாதிரி நம்மை வாரிச்சுருட்டுகிறது.
 
மாலிக்கபூர் படையெடுப்பின் வெற்றி ஆரவாரிப்பு, சூறையாடப்படுகிற கிராமம், நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் வதைபடும் பெண்கள், குதிரைகளில் பெண்களை தூக்கிச் செல்கிற படையினர், கிராமக்காவல் பொறுப்பேற்ற கருப்பனின் வேல்கம்புப் பாய்ச்சல், தாக்குண்டு வீழ்கிற கருப்பனை உசுப்புகிற கர்ப்பிணி மனைவி சடச்சியின் வார்த்தைச் சவுக்கடிகள். “காப்பாத்து.. இல்லேன்னா சாகு”.
 
ரத்தச் சகதியில் கிடக்கிற அவனின் ஆவேசத்தில் நாலுபேரை போட்டுத்தள்ளி விட்டு, மரணத்தில் சாகிற காவல்கார கருப்பன், அவனை ரத்த அணுக்களில் குலதெய்வமாக வைத்து வணங்கி உச்சரித்து சுவாசிக்கிற சடச்சி வயிற்றுப் பிற்காலத் தலைமுறைகள், களவும், காவலும் செயல் - இந்தக் காவல் காக்கும் அதிகாரத்தை இந்தக் கள்ளர்களுக்கு யார் தந்த்து என்ற கேள்விக்கான பதிலாக.. மதுரை மாநகரை மையமாகக் கொண்டு - போரும், வெற்றியும், ஆட்சியும் பெற்ற திருமலை நாயக்கர் உள்ளிட்ட நாயக்கர் வம்ச மன்னர்கள் வரலாற்றுக்குள் பயணப்படுகிற நாவல்.
 
கிருஷ்ணதேவராயர், விஸ்வநாதநாயக்கர், விஜயரெங்க நாயக்கர், ‘ஸதி’யாக சிதையேற மறுத்து ராணியான மங்கம்மா, திருமலைநாயக்கர் உட்பட அனைத்து நாயக்கர் வம்ச மன்னர்கள்.. அவர்தம் போர்கள், படையெடுப்புகள், சாகசங்கள், வெற்றிகள், பாளையம் அமைத்தல், நிர்வாகம் செய்தல், அணைகட்டுதல், கோட்டை கட்டுதல், கோவில் எழுப்புதல், அந்தப்புர விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்து வரலாறுகளும் 280 பக்கத்துக்குள் சொல்லப்படுகிறது. அவசரகதியில் சொல்லப்படுவதாலேயே கலைத்தரமும் புனைவுத்தன்மையும் மிகவும் குறைகிறது. வாசிக்க முடியாத அயற்சியும், அலுப்பும் வருகிறது. நகரமறுக்கிற நாவல்.
 
ஆயினும்.. விஸ்வநாத நாய்க்கர், ‘தீப்பாய’ மறுத்த மங்கம்மா, கங்காதேவி கதை.. மதுராவிஜயம் போன பகுதிகள் கலைவசீகரமற்ற மொழிநடையில் இலக்கியப் பேரழகுடன் வெளிப்பட்டிருக்கின்றன. வாசித்த மனசில் வேரடித்து விடுகிற ஆற்றல்மிக்க மொழிநடை. 1048 பக்கம் மொத்தம். 280 பக்கங்களைத் தாண்டி விட்டால், அப்புறம் உள்ளதெல்லாம் ஐப்பசி மாசத்து வைகைப் பெருவெள்ளப் பாய்ச்சல்தான். ஆரம்ப அத்தியாயத்தின் தீப்பிடித்த அதே பரபரப்பு.. முழு மொத்த நாவலும் பெருவெள்ளமாக நம்மை வாரிச்சுருட்டி அள்ளிச் செல்கிறது.
 
கவித்துவமான வசீகரமொழிநடை. ஒன்றைத்தொட்டு ஒன்றாக தொடர்கிற நிகழ்வுச் சங்கிலிகளின் கதைப் பின்னல். வார்த்தைகளின் சித்திரமாக காட்சிப்படுகிற வாழ்க்கையின் உயிர்த்துடிப்பு. அசுரத்தனமான வேகத்தில் நம்மை பற்றியிழுத்துக் கொண்டு போகிற மொழிநடை. கீழே வைக்க முடியவில்லை. நம்மை உழுது பிளந்து கொண்டு, முன்னேறுகிற நாவல்மொழி குடிமக்களைப் பற்றியது. அமணமலையடிவாரத்தில் தாதனூர் கிராமத்தை குறீயீடாக முன்வைக்க முடிகிறது. முழுக்க அந்த மக்கள்.
அந்திப்பொழுதில் தான் அவர்களுக்கு விடியல் திறக்கும். சூரியன் உதிக்கும் பொழுதில் தான் துயில்முடிந்து வாழ்க்கை ஆரம்பிக்கும். இருளே தொழிற்களமாக இருப்பதால், பெரும்பகுதி நாவல் இருட்டில் பயணப்பட்டு, அந்த மக்களின் துயரார்ந்த வீரவாழ்க்கையை வெளிச்சப்படுத்துகிறது. நாவல் வாசித்து முடித்த பின்பும் இருள்குறித்த கவித்துவச் செறிவான வர்ணிப்புத் தெறிப்புகள், இரவுப்பூச்சிகளாய் கரிய இருளைப் பேசும் ஒளிச் சொற்களாக மனசுக்குள் ரீங்கரிக்கின்றன.
 
ஊர்ப் பெரியாம்பளை ஆலமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, விசாரிப்புகளாலும், கண்காணிப்புகளாலும் நிர்வகிக்கிறார். கொத்து கொத்தாக களவுக்குப் போகிற குழுக்கள்; கைக்கம்போடு காவலுக்குப் போகிறவர்கள்; களவுக்காக உடம்பையும், உயிரையும் துச்சமென மதித்து, வயிற்றுக்காக உயிரைப் பயணம் வைத்து ஓடிப் போகிற அதே மூர்க்கம்.. களவு நடக்காமல் காவல்காக்கிற போதும் உயிரை, உடம்பை, ரணத்தை எதையும் பொருட்படுத்தாமல் விரட்டிப் பாய்கிற அதே உக்கிரம்; இந்த இரண்டின் சமநிலைப் பண்பே இந்த மக்களின் பொதுச்சுபாவமாக சுடர் வீசுவதை உணர முடிகிறது. இந்த மக்களின் வாழ்க்கைப் பண்புகளின் மீது பரிவுணர்வும் மரியாதையுணர்வும் சுரப்பதை தவிர்க்கவே முடியவில்லை.
 
கூட்டாக சென்று இருட்டுக்குள் குறிவைத்து நடத்துகிற களவுகள் - களவுத்தொழிலின் அத்தனை நுட்பங்களும், தந்திரங்களும், உத்திகளும், சூட்சுமங்களும் இந்த நாவல் நெடுகிலும் மிகுந்த நம்பகத்தன்மையுடன் உணர்த்தப்பட்டிருக்கின்றன. மாடு களவும், கதிர் கசக்குதல், கன்னம் வைத்து களவாடுதல், ஆடுகளைக் களவாடுதல் என்று அத்தனை வகையான களவுகளும் நாவலுக்குள் வருகின்றன. சும்மா வரவில்லை, களவிலேயே ஊறித்திளைத்த அனுபவசாலிகள் விவரிப்பதைப் போல் அத்தனை நுணுக்கமான சித்தரிப்புகள். அந்த முரட்டு மனிதர்களின் மூர்க்கமும் உக்கிரமுமான அத்தனை சாகசங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருகின்றன.
 
தாதனூரில் யாராவது ஒருத்தருக்கு சரடுபோடுகிற கல்யாணம் என்றால், அந்த விழாவுக்குத் தேவையான அத்தனை பொருட்களும், அரிசி மூடைகளும், ஆடுகளும் கூட்டுக்களவுகள் மூலமாகவே சேகரிக்கப்படுகின்றன. ‘களவு ஒரு குற்றம்’ என்ற உணர்வு ஒருதுளிக்கூட இல்லாத மனப்புரிதலே அவர்களது சமூக சுபாவமாக, பொதுப்பண்பாக இருக்கிறது. யாரிடமும் எந்த சேமிப்புமில்லை. தனியுடைமையாக யாரிடமும் எந்தக் களவுப் பொருளுமில்லை. வனத்தின் இருட்புதருக்குள் ஊடுருவி, உயிரை பணயம் வைத்து, வேட்டையாடுகிற மிருகங்கள், கனிகள், தேன் அடைகளை சகலருக்கும் பகர்ந்துண்கிற ஆதிகாலப் பொதுவுடைமைச் சமூகத்தின் வேட்டைக்குண நீட்சியாக இந்தக் களவுகளும் கருதப்படுகின்றன. இயல்பான உணவுத்தேடலாக, நியாயமிக்கதாக நினைக்கப்படுகிறது.
 
தில்லைவனம்பிள்ளை வீட்டில் பழிவாங்குவதற்காக களவாடப்படுகிற ஏகப்பட்ட தங்கநகைகள் கூட யாரிடமும் ‘சொத்தாக’ ஒதுங்கவில்லை. ஒரு பஞ்சத்துக்கான சமூக உணவாக மட்டுமே அது உருமாறுகிறது. மதுரையை தெருக்காவல் காக்கிற உரிமையை பிரிட்டிஷ் அரசு தடைசெய்து விட்டபோதிலும் கூட, நகரைக் காவல் காக்கிற அந்த நேர்மையும், கண்ணியமும் அந்த மக்களின் உயர்பண்புக்கான சாட்சியங்கள். எத்தனை வகையான களவுகள் வாசிக்க வாசிக்க பிரமிப்பூட்டுகின்றன. கன்னம் வைத்து களவுக்குப் போன இடத்தில் தூக்கில் தொங்குகிற பிரேதம் கண்டு மனப்புலம்பலோடு திரும்பி வருகிற ஈரக்குணம்; கன்னம் வைத்து, உயிரைப் பணயம் வைத்து, பங்களாவுக்குள் இருட்டுக்குள் நுழைந்து விட்டபிறகு இரு இளம் உயிர்களின் உடல் கலப்பைப் பார்த்து, அதை இடைஞ்சல் செய்யாமல் அலுங்காமல் திரும்பி விடுகிற மானுடப்பண்பு; களவு சார்ந்த அத்தனை நுட்பங்கள், நெளிவு சுளிவுகள், பழக்கவழக்கங்கள்; ‘கருப்பா’ என்ற குலதெய்வப் பெயரையே அனைவரின் பெயராகவும் அமைத்தல்’ தடயம் விடாமல் தப்பித்து வருதல், துப்பு சரியில்லாமல் தடுமாற்றம் ஏற்பட்டு விட்டால் உயிர்த்தப்பி மீண்டு வருகிற போராட்டம்.. அதில் அடிபட்டு சாய்கிறவனையும் தூக்கித் தோளில் போட்டு வருகிற சாகசம்; பாம்பு கவ்வி விட்டால் கால்கட்டை விரலையே வெட்டியெறிந்து விட்டு தப்பிக்கிற துணிச்சல்.. இப்படி வாசிக்க வாசிக்க ஆச்சர்யப்பரப்பில் நம்மை வீசியேறிகிற களவு வகைகள்; களவுப்பண்புகள்.
 
களவுகள் மாத்திரமல்ல.. காவலிலும் எத்தனையெத்தனை வகைகள். தெருக்காவல், நகரக்காவல், காட்டுக்காவல், கிராமக்காவல் என்று எத்தனை வகையான காவல்கள். காவல்பணம் தரமறுக்கிற செல்வந்தர் வீட்டில் களவு செய்கிற துணிகரச் சம்பவங்கள்.
 
களவும் காவலும் மட்டும்தானா? கல்யாணம், பஞ்சாயத்துகள், விவாகரத்துகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், காதுவளர்ப்பு வகைகள் என்று அகவாழ்க்கை, புறவாழ்க்கையின் அத்தனை பண்பாட்டுக் கூறுகளையும் மனசுக்குள் நிகழ்த்திக் காட்டுகிற வார்த்தைச் சித்திரங்கள். அந்தக்காலத்து மனிதர்களின் வெள்ளைக் குணத்தின் வீரத்துடிப்பு, அதன் முழு உன்னத்தன்மையுடன் நம்முன் விரிந்து படர்கின்றது.
 
தாசிக்குலத்தில் பிறந்து தமது சமூகச் செயல்பாட்டு மனப்பண்பால் குலதெய்வங்களாக மக்களால் பாட்டுகளாலும், கதைகளாலும் காலம் நெடுகிலும் கொண்டாடப்படுகிற குஞ்சிதம்மாள், ராஜம்மாளை நம்மால் மறக்கவே முடியாது. மாயாண்டிப் பெரியம்மாள், கழுவன்பெரியாம்பளையிலிருந்து தாதனூர் கிராமத்து அத்தனை மனிதர்களின் அகத்தையும் புறத்தையும் செயல்பாட்டு பண்புத்தீரத்தையும் மனசால் தொட்டுணர்கிற அனுபவத்தைத் தருகிறது நாவலின் மொழிநடை.
 
சின்னாள் பாத்திரம் ஓர் ஆச்சர்யப்புதிர். பொன்னாங்கனாக இருந்து டேவிட் ஃபாதரான பாத்திரமும் வினோதத்தின் முடிச்சு. வீரத்துக்காகவே துணிவுடன் உயிரை விட்ட வெள்ளை உயிர்கள். இப்படியான எண்ணிறந்த மனிதர்கள் வாழும் வாழ்க்கையின் காரணமாக, இறந்த பின்பும் நம் நெஞ்சுக்குள் மரணமற்று வாழ்கிற அமரத்துவம்.
 
‘கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா’ என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. இந்தச் சொலவடைக்குள் இத்தனை பெரிய நீள்வரலாறுகளும், ரத்தபயங்கரச் சாகசங்களும், ஈரநெஞ்சத்துக் கருணைப் பண்புகளும் பொங்கிப் பெருகுவதை நாவல் சொல்கிறது.
 
கோட்டையை எழுப்புகிற விஸ்வநாத நாயக்கரைப் போலவே, இடிக்கிற கலெக்டர் துரையும் நம்முன் நிலைக்கிறார். காவல்துறை எனும் அதிகார நிறுவனம் முளைத்து, பயிராகி, செடியாகி, மரமாக வளர்ந்து சமூகத்தையே தம் கட்டுக்குள் வைக்கிற அதிகாரக் கோட்டையாக வளர்கிற வளர்ச்சி நாவலில் அணுஅணுவாக சித்தரிக்கப்படுகிறது.
 
உணர்ந்த்தை உணர்த்துவதில் அடைகிற வெற்றிதான், அழகியலின் இலக்கணம். இந்த நாவல் நீண்டநெடுங்காலப்பரப்புகளின் வாழ்க்கை நிகழ்வுகளின் வரலாற்றை ஒட்டுமொத்தமாக கட்டமைத்து முன்வைத்து பகிர்ந்திருப்பதில் அழகியல் பரிபூர்ணமாக மிகப்பெரிய வெற்றியை நாவல் பெற்றிருப்பது ஓர் ஆச்சர்யப்புதிர். இது எப்படி சாத்தியமாயிற்று என்பது புதிர்மயமான கேள்வி. பார்த்தறியாத, பட்டறியாத ஒரு பாடுபொருளை எப்படி அழகியல்பூர்வமாக வெளிப்படுத்துவதில் வெற்றிபெற முடிந்தது என்பது யாவரையும் திணறடிக்கிற பிரமிப்பு.
 
‘ஸ்பார்ட்டகஸ்’ என்ற நாவல், மனித அடிமைகளைப் பற்றியது. அடிமைகளின் கண்ணீர் வெதுவெதுப்பையும், கனன்றெறிகிற அடிமை மனங்களின் தகிப்பையும், காதல்பூக்களின் மென் வருடலையும் வாசக அனுபவமாக இடம் மாற்றி வைத்தது. அதிசயமான முறையில் அழகியல் கைகூடி வந்திருந்தது. அந்த நாவலை எழுதியவர், அடிமை வாழ்க்கையை யூகிப்பில் கூட உணரமுடியாத ஆங்கிலேயர். அவர் கொண்டிருந்த சித்தாந்தம் அடிமைகளை உயிரின் ஆழத்திலிருந்து நேசித்து, கசிந்துருகிய இதயம் ஒன்றை அவரிடம் உருவாக்கியிருந்தது. அந்த நேச நெகிழ்வின் அசல்தன்மையின் உயிர்ப்பான வெளிப்பாடுதான், அந்த நாவலின் அழகியலை வெற்றி பெற வைத்திருந்தது.
 
இந்தக் ‘காவல்கோட்டம்’ நாவலாசிரியரும், இந்த மக்களை உள்ளன்போடு, உயிரின் ஆழத்திலிருந்து பீறிடுகிற நேசிப்போடு கவலைப்பட்டு யோசித்திருக்கிறார். அதுதான் நாவலை கலாபூர்வமான அழகியல் வெற்றிபெறச் செய்திருக்கிறது.
 
16, 17, 18, 19 ம் நூற்றாண்டுகளின் நிகழ்வுகள் குறித்த கடிதங்கள், ஆவணங்கள், நாவல்குறிப்புகள், ஆதாரக் காகிதங்கள் யாவும் அப்படியப்படியே அதனதன் மொழி வடிவத்திலேயே நாவலுக்குள் இணைத்திருப்பது, புத்திசாலித்தனமான உத்தி. படைப்பாளியின் பத்தாண்டு காலத்தேடல் தீவிரத்தையும் அவற்றுக்கான சிரமத்தையும் உணர்த்துவதைப் போலவே.. பாடுபொருளின் நம்பகத்தன்மைக்கும் சாட்சியமாக நிற்கிறது.
 
ஆசிரியரின் கவித்துவ விவரணை மொழிநடையும், பாத்திர மக்களின் பேச்சு மொழியின் மண்வாசமும் முரண்படாமல், ஓர் இயல்புத்தன்மை பெற்றிருப்பது ஓர் ஆச்சர்யம். தமிழில் வந்திருக்கிற எந்த நாவலுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு, இந்த நாவல் தனித்துவ உயரத்தில் சூரியனாக ஒளிர்கிறது.
 
நோபல் பரிசு பெற்ற மைக்கேல் ஷோலக்கோவின் ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’ (தமிழில் ‘ஆற்றங்கரைதனிலே’, நிலம் என்னும் நல்லாள்’ என்ற தலைப்புகளில் இருநூல்களாக வெளிவந்துள்ளது.) எனும் ருஷ்ய நாவல் இலக்கியப் படைப்புக்குச் சமதையான உயரத்தில் நிற்கிறது ‘காவல்கோட்டம்’.
 
நாவலின் உயரத்தை அண்ணாந்து பார்த்து கழுத்தொடிந்து போனவர்களின் மனப்பிறழ்வான புலம்பல்களையும், வசைகளையும், அபத்த அவதூறுகளையும் இந்த மக்களின் ஈரநெஞ்சத்துடன் நாமும் மன்னித்து விடலாம்.
 
கட்டையன், கழுவன், மாயக்காள், கழுவாயி, சின்னான், மாயாண்டி, ஜேம்ஸ் ஃபாதர், பசுமலை ஃபாதர் இப்படி இன்னும் பலப்பல எண்ணிறந்த மனிதர்களின் வாழ்க்கை இன்றும் நமக்குள் உஷ்ண உயிர்ப்போடு உலவுகிறது. சடச்சியின் கூந்தலைப்போல ஆலமர விழுதுகளின் வெக்கையை மனசு தொட்டுணர்கிறது. தானியம் குத்துகிற பொதுக்களத்தில் பெண்களும், கிழவிகளும் நடத்துகிற உரையாடலில் பெண்மை சக்தி ரூபமாக விசுவரூபமெடுக்கிறது. பெண்ணிடம் தோற்ற ஆண்களின் அந்தரங்க அவலம் அலசப்படுகிறது. எந்தப் பெண்ணையும் எந்த ஆணும் எப்போதும் ஜெயித்ததில்லை என்ற பேருண்மையும் கசிகிறது.
 
இன்னும் இன்னும் பாராட்டுவதற்கும், பல்வேறு தளங்களில் பல்வேறு வகையான ஆய்வு விவாதங்கள் நிகழ்த்துவதற்கும் இடம் தந்து உள்விரிவு கொள்கிற ஆழமும் செறிவும் பல்லாயிரம் மடிப்புகளாக நாவலுக்குள் இருக்கின்றது.
 
மாலிக்கபூர் பிரவேசத்தில் துவங்குகிற நாவல், பிரிட்டிஷ் காலனியம் உள் நுழைந்து, வேரடித்து, சகலருக்கும் கல்வி என்ற நிலைமை தருவதுடன் குற்றப்பரம்பரை, ரேகைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு ஒடுக்குமுறைகள் மூலம் தனது அதிகாரத்தையும் நிறுவுவதில் அடைகிற வெற்றியுடன் நாவல் முடிகிறது.
 
ஒட்டுமொத்த நாவலின் அடிநாதமாக ‘அதிகாரம்’ என்ற விஷயம் பூமிக்குள் நதியாக ஓடிக்கொண்டேயிருக்கிறது. மாலிக்காபூர் அதிகாரத்தை பறிக்கிற நாயக்கர்களாட்சி.. அதன் அதிகாரம்.. களவு தொழிலால் கிடைக்கிற காவல் அதிகாரம்.. காவல் அதிகாரத்தை பறிக்கிற காலனியப் போலீஸின் அதிகாரம்… இந்த அதிகார அடிநாதத்தின் மேல் அதிர்வது, தாதனூர் மக்களின் ரத்தமும் சதையுமான வீரப்போராட்டங்கள், கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு, கல்வி தந்தால் என்னாகும்? பொன்னாங்கன், ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதும் பேரன்பு செலுத்துகிற டேவிட் ஃபாதராக மாறுகிற அதிசயம் நிகழும்.
 
ரயிலின் வருகையையும் தாதனூர்க்காரர்கள் களவுக்கே பயன்படுத்துகிறார்கள். முல்லைப் பெரியார் அணைக்கட்டு நிகழ்வு ஒரு சமூக விஞ்ஞானத்தை கற்றுத் தருகிறது. இப்படியே.. நிறைய பாராட்டுப் பட்டியல்கள் போட்டுக் கொண்டே போகலாம்.
 
இப்படியொரு நாவல் படைப்புச் சாதனையை, அழகியல் வெற்றிமிக்க வரலாற்று நாவல் படைப்புச் சாதனையை த.மு.எ.ச.க.காரர் செய்திருக்கிறார் என்பது, முற்போக்கு இலக்கிய அமைப்புக்கே பெருமையான விஷயம். பல இலக்கிய பீடங்கள் தானாக தகர்ந்து விழுவதில் த.மு.எ.ச.க. மாவீரன் பேனா காரணமாகிறது,
 
இது வெறும் நாவல் அல்ல. சரித்திர நாவல். மதுரையை மையப்படுத்தி தமிழகத்தையே விவரிக்கிற வரலாற்று நாவல். வெறும் புனைவு நாவலல்ல. உரிய ஆவண ஆதாரங்களுடன், ஆராய்ச்சிப்பூர்வமான தகவல்களுடன் புனைவுப் பேரழகுடன் எழுதப்பட்ட நம்பகத் தன்மைமிக்க சரித்திர நாவல். அந்த அடிப்படையில் எழுகிற சில கேள்விகள்.. சில விமர்சனங்கள்..
 
வரலாறுகளை வாசித்துப் பழக்கமில்லாத ஒரு வாசகன், இந்த நாவலின் ஊடாக மட்டுமே பயணப்பட்டு, கற்றறிந்தால், என்ன வலாறு கற்பான்?பாண்டியர், சோழர், சேரன் என்ற மூவேந்த மன்னர்கள் வாழ்ந்ததற்கான தடயமே இல்லாதது போன்ற மாயத்தோற்றம் எழாதா?
 
மாலிக்காபூர் படையெடுப்பிலிருந்து மதுரையை மீட்டெடுத்து நாயக்க மன்னர்களே நல்ல ஆட்சியையும், வளத்தையும், வெற்றிகளையும் பெருமைகளையும், ஆலயங்களையும் மக்களுக்கான நன்மைகளையும் வழங்கியது போன்ற சித்திரம் தானே நாவல் தருகிறது? இது சரியா? இதுதான் தமிழக வரலாறா?
 
முந்தைய மன்னர்கள் ஆக்கிரமிப்புகளை விட, நாயக்கர் மன்னர்களின் படையெடுப்புகளும், வெற்றிகளும், ஆட்சிகளும் தான் தமிழ் மண்ணுக்குரிய பாரம்பரிய பண்பாட்டு முறையை வாழ்க்கை அடையாளத்தையே துடைத்து, வைணவ மதத்தை அரச மதமாகவும், ஆதிக்க அதிகாரத்தின் மூலமாக அந்த மதத்துக்கு பண்பாட்டு செல்வாக்காகவும் மாற்றியது என்பதுதானே உண்மை?
 
தமிழ்நாட்டில் நிலவிய அத்தனை தொழில் உற்பத்தி, ஆட்சி அதிகார நிர்வாக முறைமைகள், அடித்தட்டு மக்களின் உற்பத்தி வாழ்க்கை முறைமைகள் அத்தனையிலும் தெலுங்கு மக்களை குடியேற்றி திணித்தது அக்காலம் தானே! தெலுங்கு வைணவப் பிராமணர்களிலிருந்து தெலுங்கு சக்கிலியர் வரை.. உழவில், தொழிலில், ஆசாரிமார், குயவர் அத்தனை சமூகப் பிரிவுகளும் தெலுங்கர்களை நிரப்பியது அக்காலம்தானே?
 
இந்த உண்மைகளையெல்லாம் நாவல் மறைத்து விட்டு, நாயக்கர் மன்னர்கள் அத்தனை பேரையும் கொண்டாட வைக்கிறது நாவல். மரியாதைக்குரியவர்களாக்குகிறது. ‘மூவேந்தர் காலத்தை பொற்காலம்’ என்கிற பார்வைப் பிறழ்வுக்கும், நாயக்க மன்னர்களை கொண்டாட வைக்கிற இந்த நாவல் குணத்துக்கும் என்ன வித்தியாசம்?
 
மார்க்சியப் பேரறிஞர் ராகுல்ஜியின் ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலை வாசித்து முடித்தால் சகல மன்னர்களையும், மன்னர்களின் அதிகாரத்தை காப்பாற்ற தத்துவங்களும், தந்திரங்களும் கற்றுத்தந்த அறிவுசார் வேதியர்களையும் முழுசாக வெறுக்கத் தோன்றும்; ‘மக்கள் விரோதிகள்’ என்ற சிந்தனை எழும். அப்படியொரு உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, மன்னர்களை மதிக்கத் தூண்டுகிறதே, இந்த நாவல். இது சரியா? நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மனோபாவத்தை வாசகனிடம் உருவாக்க வேண்டிய கடமையிலிருந்து நாவல் நழுவவில்லையா? ஒரு முற்போக்கு சமூகப் பார்வை காணாமல் போய்விடவில்லையா?
 
மன்னர்கள் வரலாறு, மக்கள் நோக்கிலிருந்து பார்க்கப்படாமல், தெலுங்கு மன்னர்களை மட்டும் கொண்டாட வைக்கிற, மதித்துப் போற்றுகிற, காவிய நாயகர்களாக சித்தரிப்பது சரியா?
 
நாவலின் பெரும்பகுதியும் களவும் காவலுமாக சித்தரித்து அவர்களது சாகசத்தை கொண்டாடுவது போதுமானதா? ஆடு வளர்க்கிற, மாடு வளர்க்கிற, கதிர் விளைய வைக்கிற, பொருளுற்பத்தி செய்து தேசத்துக்கு சோறு போடுகிற, வீடுகள் கட்டுகிற அந்த உழைப்பாளி உழவு மக்களும் தமிழ் மக்கள் தானே. களவுகள் தருகிற அந்த மக்களின் வலிகள் ???
 
சமூக உற்பத்தியின் ஈடுபடுகிற சமூக சக்திகளான தமிழர்களைத் தவிர்த்து விட்டு, களவும் காவலுமென இருந்த ஒரு சிறுபகுதியை மட்டுமே பிரதானப்படுத்தி அதுவே ‘தமிழக முழுமை’ என்ற மாயத்தோற்றம் தருவது சரிதானா?
 
களவும் காவலுமென இருந்தவர்கள் காலம் பூராவிலும் அப்படித்தான் இருந்தவர்களா? மூவேந்தர்களுக்கு ராணுவ அதிகாரமாக இருந்து, தோற்கடிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்ட பூர்வீகத் தமிழ்ப் படைகளாக ஏன் இருந்திருக்கக் கூடாது?
 
நாயக்க மன்னர்களின் ஆட்சித் திறமையும், திருமலை நாயக்கர் தந்த காவலதிகாரம், அதைச் சிதைத்து சட்டம், ஜனநாயகம், நீதிபரிபாலன ஒழுங்கு முறை, ஆலைகள், ஆலைத்தொழில் உற்பத்தி, சகலருக்கும் கல்வி என்று முதலாளித்துவ வாழ்க்கை முறைமையை உருவாக்க முயன்று வெற்றி பெறுகிற காலனிய ஆட்சியை எதிர்த்த குரலுடன் இந்த நாவல் முடிகிறது.
 
இயங்கியல் வரலாற்றுப் பொருள்வாதத்தத்துவ நோக்கில், மார்க்சிய வெளிச்சத்தில் சமுதாய வளர்ச்சிப் படிநிலைகளை பார்த்தால்.. நிலப்பிரபுத்துவத்தை விட, முதலாளித்துவ வாழ்க்கை முறைமை முற்போக்கானதல்லவா? சகலருக்கும் கல்வி தந்து, வர்ணாசிரம வேரறுத்து, ஆலைத்தொழில் உற்பத்தியை தருகிற முதலாளித்துவ முறைமை, நிலப்புரபுத்துவத்தை விடவும் முற்போக்கானதல்லவா?
 
இந்த நாவலின் காலனிய எதிர்ப்புக்குணம் என்பது, அரும்பி மலர்ந்து வருகிற முதலாளித்துவ வருகையை மூர்க்கமாக எதிர்த்தொழிக்க முனைகிற நிலப்புரபுத்துவப் பண்பாட்டு குணமாகத்தானே இருக்கிறது?
 
இப்படியான கேள்விகளும், விமர்சனச் சிந்தனைகளும் நாவல் வாசிப்பிற்குப் பிந்தைய யோசிப்புகளில் எழுகின்றன. இதற்கான பதில்கள் தேவைப்படுகின்றன. ஆயினும்.. இந்தக் கேள்விகளும், விமர்சனங்களும் எத்தனை சத்தியமோ.. அதைவிட வலிமையான உயிர்ப்பாற்றலுடன் கலைத்தரத்துடன் நாவல் ஒளிவீசுவதும் சத்தியமாகும்.
 
மொழிநடையின் கவித்துவமிக்க மயக்கமூட்டுகிற வசீகரமும், பாத்திரங்கள் வார்க்கப்பட்டு சித்தரிக்கப்பட்ட விதமும், வரிசை தப்பிய வரிசையாக.. ஒழுங்கு தவறிய ஒழுங்காக அடுக்கப்பட்ட தொடர்பற்ற சம்பவ அடுக்குப் பகுதிகள் எனும் நீள்கதைப்புனைவு விதமும்.. மிகச்சிறந்த புனைவுக்கான சாட்சியமாகும்.
 
வேல்கம்புகளும், களறிகளும், குதிரைகளும், போர்க்குணமிக்க மக்கள் வரலாற்று வாழ்க்கைக்காக உயிரைப் பணயம் வைக்கிற அன்றாட இருட்டு போராட்டங்களும் அவற்றுக்கேயுரிய வீச்சுடன் வேகத்துடன் பதிவாக. ரத்தமும் சதையுமான உயிர்த்துடிப்புமிக்க காவியமாகியிருக்கிறது நாவல்.
 
‘தமிழிலத்தியத்தில் புதுவரவு’ என்று மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது. எது மாதிரியுமில்லாத புதுமாதிரியாக.. தனித்துவ உயரம் மிக்க .. சூரிய நாவலாக… நோபல் பரிசு பெற்ற மைக்கேல் ஷோலக்கோவின் ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’ போன்ற உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாக காவியத் தகுதிமிக்க நாவலாக சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ திகழ்கிறது.
 
- மேலாண்மை பொன்னுச்சாமி