muslim artதமிழ் இலக்கிய வரலாறு தொன்மை மிக்கது. அதனைச் சங்க காலம் (கி.பி.300-கி.பி.100) என்றும், சங்கம் மருவிய காலம் (கி.பி.100-கி.பி.600) என்றும் வரலாற்றாசிரியர் கூறுவர். சங்க காலமே தமிழர்களின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது.

சங்கம் மருவிய காலத்தில் சமயம் வந்தது. சமய இலக்கியங்களும் வளர்ந்தன; சைவம், வைணவம் முதலிடம் பெறுகின்றன. அடுத்து சமண, பௌத்த இலக்கியங்கள் தமிழை வளர்த்தன. அதனைத் தொடர்ந்து கிறித்தவர் மற்றும் இஸ்லாமியர் தமிழ்ப்பணியும், தமிழ்த் தொண்டும் குறிப்பிடப்பட வேண்டும்.

ஆயினும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டு விரிவாக எழுதப்படவில்லை. இந்தக் குறைபாடு இன்னும் களையப்படவில்லை. இனியாவது இஸ்லாமிய இலக்கிய ஆய்வு முறையாகவும், விரைவாகவும் எழுதப்பட வேண்டும்.

இஸ்லாமிய எழுச்சி

“கி.பி. ஏழாம் நூற்றாண்டு தொடங்கிய தமிழகத்தில் இஸ்லாமிய சமய உறவு ஏற்பட்டு விட்டது. வணிகத் தொடர்பு இங்கு நிலைபெற்றுள்ளது. பாரசீகம், அறபு, உருது மொழித் தொடர்புகள் குறிப்பிடற்பாலன...” என்கிறார் முனைவர் தமிழண்ணல்.

தொடக்கக் காலத்தில் தமிழை அறபு எழுத்துகளில் எழுதினர். பேச்சுத் தமிழ் நடைக்கு ஒப்பான ஒரு நடையில் எழுத முற்பட்டனர். இவ்வாறு தொடங்கிய இஸ்லாமிய இலக்கியத் தமிழ் இறுதியில் சீரியத் தமிழாகியது.

“இஸ்லாம் தமிழ் நாட்டில் பரவிய பிறகு, அந்தச் சமயத்தைச் சார்ந்த பலர் தமிழ் கற்று தமிழராகவே வாழ்ந்தனர். பழைய தமிழ் இலக்கியங்களைக் கற்று வல்லவய்த் தமிழ்ப் புலவர்களாய்ப் புகழ் பெற்றனர். அவர்களில் ஒருசிலர் புதிய நூல்கள் பலவற்றைப் படைத்துத் தரவும் முற்பட்டார்கள்...” என்று டாக்டர் மு.வ தம் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் + தமிழ் + இலக்கியம்

“இஸ்லாம், தமிழ், இலக்கியம் என்னும் மூன்று சொற்களையும் கொண்ட சொற்றொடரே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம். இஸ்லாம் எங்கள் வழி; தமிழ் எங்கள் மொழி; இலக்கியம் எங்கள் விழி என்பதற்கேற்ப வழி, மொழி, விழிகளாய் அமைந்துள்ளது இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்...” என்று கூறுகிறது மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு.

எனவே இஸ்லாமியர்கள் தமிழர்களாகவே வாழ்ந்தனர்; தமிழுக்காகவும் வாழ்ந்தனர்; தமிழ் இலக்கியம் வளரவும் பாடுபட்டனர்; அவர்கள் தமிழ் இலக்கியம், கலை, வரலாறு இவற்றோடு இணைந்தவர்கள். அவர்களைப் பிரித்தாலும் பிரிக்க முடியாது என்பதைக் காலம் சொல்லும்.

“இஸ்லாம் என்றால் அமைதி. தமிழ் என்றால் இனிமை. இரண்டும் சேர்ந்து அமைதியில் இனிமை, அமைதியில் இன்பமான இனிமை. இதனையே எவரும் விரும்புவர். அமைதியில் இன்பமான இனிமை தருவது இஸ்லாமும் இன்பத் தமிழும் எனின் அது மிகையாகாது...” என்றார் இஸ்லாமிய இலக்கிய ஆய்வாளர் முகமது உவைஸ்.

இஸ்லாமிய தமிழ் இலக்கியம் இருவகைப்படும். இஸ்லாமிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை ஒருவகை; இஸ்லாமியப் புலவர்களால் எழுதப்பட்ட சமயத் தொடர்பற்றவை மற்றொரு வகை. இவை தமிழுக்கு அணி செய்தன; அவர்களுடைய சமயப் பிரச்சாரத்துக்கும் கருவிகளாக அமைந்தன; ஒன்றுக்கொன்று உதவின என்றுதான் கூறவேண்டும்.

பேரிலக்கியமும், சிற்றிலக்கியங்களும்

“சீறாப் புராணம் போன்ற சில நூல்களே தமிழ் உலகிற்கு அறிமுகப்பட்டிருந்தனவேயழிய, தமிழ்த் தொண்டிலே ஊறித் திளைத்த பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் படைப்புகள் அறிமுகப்படுத்தப்படவில்லை. தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய எழுத்தாளர்களும், இஸ்லாமியத் தமிழ்த் தொண்டு பற்றி ஓரிரு நூல்களைக் குறிப்பிட்டிருந்தனரேயழிய, இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பரப்பை ஆராயவில்லை. இஸ்லாமியரே தமது இலக்கிய வளம் பற்றி அறியாதிருந்தனர்...” என்றார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு.வித்தியானந்தன்.

இன்றும் இதுதான் உண்மை. இஸ்லாமியப் புலவர்களிள் இணையற்ற தமிழ்த் தொண்டை ஏனைய தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய பணியை இஸ்லாமியரே செய்யவில்லை. காரணம் அவர்களில் பலரே அவற்றை அறியவில்லை; இது எவ்வளவு பெரிய வேதனையாகும்.

சைவம், வைணவம், சமணம் முதலிய சமயங்கட்கு இணையாக இஸ்லாமிய இலக்கியங்களும் படைக்கப்பட்டன. தாயுமானவர் போல தத்துவப் பாடல்களும், அருணகிரிநாதரைப் போல அழகிய சந்தப்பாடல்களும் பாடப்பட்டன. இவற்றுக்கும் மேலாக தமிழ்க்காப்பியங்களும், பிரபந்தங்கள் எனப்படும் சிற்றிலக்கியங்களும் இயற்றப்பட்டன.

இஸ்லாமியத் தமிழ் நூல்களுள் தலை சிறந்தது சீறாப்புராணம் என்னும் காப்பியமே என்பதைத் தமிழுலகம் தடையின்றி ஏற்றுக் கொண்டது. சிற்றிலக்கிய வகைகளுள் ஆற்றுப்படை, அந்தாதி, உலா, பரணி, கலம்பகம், கோவை, தூது, பிள்ளைத்தமிழ், சதகம், வண்ணம் ஆகியவற்றையும் முஸ்லிம் புலவர்கள் பாடியுள்ளனர்.

புலவர்களும், படைப்புகளும்

குலாம் காதிறு நாவலர் இயற்றிய மதுரைத் தமிழ்ச் சங்கத்து புலவராற்றுப்படை, ஆ.கா.பிச்சை இபுராகீம் புலவர் படைத்த திரு மதீனத்தந்தாதி, நாகூர் வித்துவான் வா.குலாம் காதிறு நாவலரின் திருமக்காத் திரிபந்தாதி, செய்கு அப்துல் காதிறு நாயனார் ஆலிம் இயற்றிய நாகையந்தாதி ஆகியவை கிடைத்துள்ளன.

நபிநாயகம் பிள்ளைத்தமிழ் செய்யிது அனபியா சாகிபு என்பவரால் எழுதப்பட்டது. மக்காக் கலம்பகம் காயல்பட்டினம் செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் இயற்றியது. கோவை நூல்களுள் திருமக்காக் கோவையின் ஆசிரியர் செவத்த மரைக்காய சீரியர்.

நபியவதார அம்மானை கி.பி.1713இல் இயற்றப்பட்டது. இதன் ஆசிரியர் சீறா எழுதிய உமறுப்புலவரின் புதல்வர் கவிக்களஞ்சியப் புலவர். முதுமொழி மாலை உமறுப்புலவரால் பாடப்பட்டது. நபியுல்லா மாலை என்னும் இரசூல் மாலை சாமு நெயினார் லெப்பை என்பவரால் இயற்றப்பட்டது. இவ்வாறு எராளமான மாலை வகைகள்.

இவை தவிர, நபிகள் நாயகத்தைப் போற்றிப் பாடப்பட்ட திருப்புகழ் (காசீம் புலவர்), அப்துல் காதிறு லெப்பை கலீபாப் புலவரால் இயற்றப்பட்ட சுகிர்த மெய்ஞ்ஞானச் சங்கீர்த்தனம், தொண்டி நகரைச் சேர்ந்த சீனி காதிறு முகியித்தீன் அவர்களால் பாடப்பட்ட நவநீத ரத்நாலங்காரச் சிந்து, பூவடிச் சிந்து (காளை ஹசனலிப் புலவர் இயற்றியது) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இன்னும் கும்மி, தாலாட்டுப் பாடல்களும், உரைநடை நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. காரைக்காலைச் சேர்ந்த காதிறு கனிப் புலவரால் எழுதப்பட்ட பஞ்சா வரலாற்று விளக்கம் சிறந்த உரைநடை நூலுக்கு உதாரணமாகக் கூறலாம்.

புதிய இலக்கிய வரவு

தமிழ் நாட்டில் முஸ்லிம் நாயன்மார்களும் சிறந்து விளங்கினார். குணங்குடி மஸ்தான் சாயபு (என்னும் சுல்தான் அப்துல் காதிறு லெப்பை ஆலிம்), காலங்குடி மச்சரேகைச் சித்தன் (என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும் செய்யிது அப்துல் வாரிது ஆலிம் மவ்லானா ஐதுரூஸ்), தற்கலை பீர்முகமது சாகிபு ஆகியோரின் பாடல்கள் இஸ்லாமுக்கும், தமிழுக்கும் அணி சேர்ப்பன.

முகமது புலவர்கள் தமிழ் மொழிக்கு புத்தம் புதிய இலக்கிய வகைகளையும் வழங்கியுள்ளார். போரைச் சித்திரிக்கும் ‘படைப்போர்’ அல்லாவைத் தொழும் ‘முனஜத்’ வரலாறு கூறும் ‘கீசா’ வினா விடையாக அமையும் ‘மசலா’ மற்றும் ‘நாமா’ இவற்றைக் கூறலாம்.

காலம் இடும் கட்டளை

“உலகிலே வேறெந்த மொழிகளுக்குமில்லாத தனிப்பெரு... சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. எல்லாச் சமயத்தவரும் தமிழைப் பேணி வளர்த்திருக்கின்றனர். சைவர்கள், வைணவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோர் இலக்கியங்கள் தமிழை வளப்படுத்தியுள்ளன.

இவர்கள் போலவே எண்ணிறந்த இஸ்லாமியப் புலவர்கள் மிகச் சிறந்த நூல்கள் பலவற்றைத் தமிழிலே படைத்திருக்கின்றனர். பொருளமைப்பிலும், உருவத்திலும் இவ்விலக்கியங்களினாலே தமிழ் இலக்கியம் பெரும் பயன் அடைந்திருக்கின்றன. ஆனால் இவ்விலக்கியங்கள் பற்றிப் பலருக்குத் தெரியாமல் இருந்தது...” என்று யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி சு.வித்தியானந்தன் குறிப்பிடுகிறார்.

இதனை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, தமிழ் இலக்கிய உலகமே கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாதவற்றை உருவாக்க வேண்டிய தருணத்தில் இருப்பதையே அறியாமலும், அறிமுகப்படுத்தாமலும் இருந்து விட்டோம்; இனியாகிலும் விழித்தெழுவோம். இதுவே காலம் நமக்கு இடும் கட்டளை.

- உதயை மு.வீரையன்