01.எழுவர் கூட்டாகத் தமிழில் மொழிபெயர்த்த பேராசிரியர் Noboru Karashima அவர்கள் South Indian History and Society: Studies from the Inscriptions from C850 to 1800, (1984) என்ற தலைப்பில் எழுதிய நூலினை 1995 இல் வரலாற்றுப்போக்கில் தென்னகச்சமூகம் என்று தலைப்பிட்டு தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர் வெளியிட்டது. அவர், சோழர் காலத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்திய வரலாற்றினை கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் புள்ளியியல் முறையினை பயன்படுத்தி ஆய்ந்தார். சோழர்காலத்தினை தொடர்ந்த நூற்றாண்டுகளுக்கு ஓலைச்சுவடிகளையும் தாள் ஆவணங்களையும் பயன்படுத்தினார். அந்நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு 40 ஆண்டுகளும் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்து 30 ஆண்டுகளும் ஆகின்றன.

Noboru Karashima book 550இந்தியாவின் பிற மொழிகளில் பெயர்க்கப்பட்டனவா? தெரியவில்லை. புள்ளியியல் முறையினை ஒரு கருவியாகவும் (tool) மார்க்சிய கோட்பாட்டினை ஒரு அணுகுமுறையாகவும் (methodology) ஆய்விற்குப் பயன்படுத்தினார். இவ்விரு அணுகுமுறையும் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களை எளிதில் புரிந்து கொள்வதற்கு உதவும். வரலாற்றில் பொருளியல் அடிப்படையில் இயற்கையும், உற்பத்திக்கான தொழில்நுட்பமும் மாற்றங்களை உருவாக்கும் முதன்மைக் காரணிகள் என்பதனை தம் ஆய்வில் தெளிவாக்கினார். இப்பின்ணணியில் சோழர் காலத்தின்/ சோழரின் அரசு பற்றிய ஆய்வில் கவனம் செலுத்தினார். சோழர் அரசின் மாதிரியினை கண்டறிவதற்கு அக்காலத்தில் நிலவிய நிலவுரிமை, நிலவருவாய், நீர்ப்பாசனத் தொழில்நுட்பம், சமூகக் கட்டமைப்பு போன்ற கருத்துகள் அவருக்கு பெரிதும் உதவியுள்ளன. அரசு பற்றியும் சமூகம் பற்றியும் புரிந்து கொள்வதற்கு குடும்பம், தனிச்சொத்து, அரசு என்ற தலைப்பில் (The Origin of the Family Private Property and the State) Friedrich Engels எழுதிய நூல்தான் இவருக்கு உந்துசக்தியாக அமைந்திருக்கும்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலும் அதற்கு சற்று முன்பும் கீழைத்தேய சமூகம், குறிப்பாக இந்தியா தேக்கநிலை சமூகத்தினை கொண்டிருந்தது என்று மேலைநாட்டு அறிஞர்கள், குறிப்பாக ஓரியண்டலிஸ்ட்கள் சொல்லிவந்தனர். இதனை கீழ்த்திசை வல்லாட்சி (Oriental Despotism) என்று வகைப்படுத்தினர். இக்கருத்து காலனிய காலத்துப் பார்வை என்பர் அறிஞர். காலனியகாலத்தில் மேற்கத்திய வரலாற்றறிஞர்கள் காலனியமாக்கப்பட்ட நாடுகளையும், அம்மக்களையும் இழித்தும் பழித்தும் எழுதி வந்தனர். கீழைத்தேயத்து மக்களின் சமையங்கள், சமூகங்கள் முதல் அன்றாட வாழ்வு முறை வரைக்கும் வசவுக்கு உள்ளாயின. மேலைநாட்டு அறிஞர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் என்று வலியுறுத்தினர்.

02.கீழ்த்திசை வல்லாட்சி (Oriental Despotism) என்ற கோட்பாட்டின் கூறுகள்: ஒரு நாட்டின்நிலம் அரசருக்குமட்டும் சொந்தம், தனியார்நிலவுடைமை இல்லை, நீர்ப்பாசனஉரிமை அரசரின் பிடியில், ஊர்கள் தன்னிறைவு பெற்றவை போன்றன. இக்கோட்பாட்டினை மேல்நாட்டார் வகுத்தளித்த சூழல் புதுமையானது. அவர்கள் இந்தியாவினை ஆட்சி செய்த சுல்தானியர்கள், முகலாயர்கள் ஆட்சியினை விமர்சிக்கிறபோது மேற்சொல்லப்பட்ட கூறுகள் நிலவியிருந்ததாகவும் எனவே, இஸ்லாமியரின் ஆட்சி நலம் பெற்ற ஒன்றல்ல என்றும் அதனால் பிரிட்டிஷ் அரசும் அவர்களின் வழித்தோன்றல்களும் இந்தியரை மீட்க வந்த மீட்பர்கள் என்றும் வரித்துக் கொண்டனர்.  உண்மை அதுவல்ல. பிரிடிஷ் ஆட்சியில் இந்தியரிடமிருந்து நிலவருவாயினை வசூலிப்பதில் சிக்கல் நிலவியது. பிரிடிஷாரால் நிலவுரிமை அமைப்பினைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் நிலம் யாருக்குச்சொந்தம் யாரிடம் நிலவரியினை வசூலிக்க வேண்டும் என்பதில் தெளிவற்றிருந்தனர். அவர்களுக்கு, இந்தியரை ஆட்சி செய்வதில் தடுமாற்றம் இருந்தது. எனவேதான், நிலச் சீர்திருத்தத்தம் என்ற உத்தியினை மேற்கொண்டனர் (இக்கருத்தினை இரு கடைசி பத்திகள் விளக்குகின்றன). இந்தியாவில் ஊர்/கிராமம் என்பது ஒற்றை ஊர்/ஒற்றைக் கிராமம் என்று பொருளல்ல. ஓர்ஊர்/ஒருகிராமம் என்பது ஊர்களின்/ கிராமங்களின் தொகுப்பு (cluster of villsges). அங்கு குடியுடைமை என்பது கிராமத்திலுள்ள பலரும் என்று பொருளாகும். தனிநபர் முக்கியமல்ல; தலைகட்டுதான் (household) முக்கியம்.   ஒரு தலைகட்டில் பலகுடும்பங்கள் இருக்கலாம். ஒரு ஊரில் தனியார் ஒருவரின் பெயரில் நிலம் இருந்தாலுமே அவரை அண்டி பலகுடும்பங்கள் (families) பல தலைகட்டுக்கள் (household) இருந்தன. எனவே, இங்கு யாரிடம் வரிவசூலிப்பது என்பதில் பிரிடிஷ் அரசுக்கு சிக்கல் இருந்தது.

03.ஆனால் பிரிடிஷார், பழியினை இந்தியர்கள்மேல் திருப்பினர். இந்தியர்கள் நிர்வாகம், ஆட்சிமுறைப்பழக்கத்தினை அறியாதவர் என்று சொல்லி வந்தனர். ஆனால், பிரிட்டிஷார்தான் காட்டுத் தர்பார் நடத்திவந்தனர் என்பதனை அவர்கள் இந்தியவிடுதலைப்போராட்ட வீரர்களை பல கொடிய முறைகளில் கொன்றொழித்தனர் என்பதனை உலகறியும். விளையாத நிலத்திற்கும் வரிவசூல் செய்தனர். அப்போது அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிலவடமொழிநூல்களில் விளக்கப்பட்டிருந்த சமூகப்பிரிவுகள் என்ற கருத்து பெரிதும் கைகொடுத்தது. நிலச்சீர்திருத்தத்தினை நடைமுறைப்படுத்தும்போது பெரும்பாலும் நிலவுடைமை பற்றிய புனைவுகளையே சான்றுகளாக கணக்கில் எடுத்தனர்.

04.இப்பின்ணணியில் மேல்நாட்டு அறிஞர்களின் இந்தியா பற்றிய பிழையான பார்வையினை தக்க கல்வெட்டுச் சான்றுகளின் வழியே Noboru Karashima (hereafter NK) மறுத்தார். பத்தி ஒன்றில் குறிப்பிடப்பட்ட (South Indian History and Society: Studies from the Inscriptions from C850 to 1800) அவருடைய மொழிபெயர்க்கப்பட்ட நூல் 3 இயல்களில் 11 கட்டுரைகளை கொண்டது. 8 பின்ணிணைப்புகள், 4 நிலப்படங்கள், நோக்கீட்டு நூல்கள் (bibliography) இவரின் கருத்துகளை வலுப்படுத்துகின்றன. இந்நூலின் முகவுரை மிகவும் முக்கியமானது. குறிக்கோளும் அறிமுகவுரையும் என்ற Introductory Note அதனினும் முக்கியமானது. இந்நூலின் மையப்பிரச்சினை பண்டைய மற்றும் இடைகாலத் தென்னகத்தில் ஏற்பட்ட சமூக, பொருளியல் வளர்ச்சியினை அளந்தறிதல் ஆகும் என்றும் இதனைப் புரிந்துகொள்வதற்கு புள்ளியியல் முறை பயன்பட்டது என்றும் பதிவு செய்துள்ளார். இன்னொன்று, வரலாற்றினை குறுநில வட்டத்திலிருந்து புரிந்து கொள்ளத் தொடங்கி பெருநிலவட்டத்திற்கு நகர வேண்டும் என்பதாகும். வரலாறு எழுதுதலை (Euro-centrism) ஐரோப்பிய மையத்திலிருந்து விலக்க வேண்டும் என்றார். அதாவது, வரலாற்றை ஐரோப்பிய பாணியில் எழுதுவதனைத் தவிர்த்து ஒவ்வொரு நிலவட்டத்தின் இயற்கைக்கு ஏற்ப எழுத வேண்டும் என்றார்.

05.தரமான வரலாற்றுநூல்கள் தமிழில் இல்லையென்பதாலும் கற்போரின் ஆங்கிலஅறிவு குறைந்து வருவதாலும் இந்நூல் தமிழாக்கம் செய்யப்படுவதாகவும் மொழிபெயர்ப்பாளர்களின் குறிப்பு உள்ளது. சென்ற நூற்றாண்டின் முதல் கால்கூற்றில் இந்திய சமூகத்தையும் இந்தியவரலாற்றையும் கேலி செய்த ஐரோப்பிய அறிஞர்களுக்கு பதிலிறுக்கும் பொருட்டு S.Krishnaswamy Ayyangar, K.A.Nilakanta Sastri போன்றோர் தென்னிந்திய வரலாற்றினை எழுதினர். ஆனால், சற்று கூடுதலாக தம் உணர்வினை வெளிப்படுத்தினர். தேசியவாதக் கருத்து செழித்து தலையெடுத்திருந்ததாலும் விடுதலைப் போராட்ட உணர்வு மேலோங்கியிருந்ததாலும் இவர்கள் மிகையான கூற்றுகளை வெளிப்படுத்தியிருக்கலாம். K.A.Nilakanta Sastri சோழர்கள் பற்றிய தம் ஆய்வில் சோழர்அரசு மையப்படுத்தப்பட்ட ஒன்று எனச் சொல்லும் அதேவேளையில் ஊர்சபைகள் தனித்து செயற்பட்டன என்றும் முன்மொழிந்தார். மக்கள், அரசுடன் சமரசத்துடன் வாழ்ந்தனர் என்றும் சொல்லியிருந்தார். இவரின் ஆங்கில நூலினை பயின்று தமிழியல் புலமைத்துவத்துடன் தம் கட்டுரைகள் வழியே க.கைலாசபதி (பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966) ஓரளவிற்கு பதிலளித்தார். இருந்தாலும், க.கைலாசபதி தம் பதில்களுக்குக் கல்வெட்டுச் சான்றுகளைப் பயன்படுத்தவில்லை. ஆனால், இவருடைய விமர்சனக் கட்டுரைகளில் ஓர் ஆய்வு உத்தி பளிச்சிட்டது.

06.இங்கு NK கல்வெட்டுகளை சலித்தெடுத்து தென்னிந்தியா பற்றி ஆய்வுசெய்த பல வரலாற்று அறிஞர்களுக்கு பதிலிறுப்பதாக தம்நூலினை இயற்றினார். தம் முன்னுரையில் வரலாற்றியல் பூர்வமாக தென்னிந்திய வரலாற்றைனைப் புரிந்து கொள்வதில் உள்ள கருத்தியல் ரீதியான இடர்பாடுகளை விளக்கி அவற்றினை சரியாகப் புரிந்து கொள்வதற்கான வழிமுறைகளை முன்வைத்தார். மார்ச்சியத்தின் அடிப்படையில் பிற அறிஞர்களிடமிருந்து தாம் வேறுபடுவதனை கருத்தூண்றி நுணுக்கமாக காரண காரியத்துடன் பின்வருமாறு விளக்கினார். தம் கருத்துகளை நிறுவும் பொருட்டு கல்வெட்டுச் சான்றுகளை புள்ளியியல் முறையில் ஆய்ந்து வலுசேர்த்தார். அதற்குமுன், அடுத்த பத்தியில் சொல்லப்பட்டதுபோல் தென்னிந்தியாவின் வரலாற்று வரைவியலை சுருக்கித் தந்தார்.

07.1960கள் வரை தென்னிந்திய சமூகத்தின் வரலாறு காத்திரப்படவில்லையென்றும் Burton Stein, Kathleen Gough, M.G.S.Narayanan, Y.Subbarayalu, R.Champakalakshmi, D.N.Jha, K.Indrapala போன்றோரின் ஆய்வுகள் மரபுவழிப்பட்ட வரலாற்றுப் பார்வையிலிருந்து விலகி புதுநோக்கில் தென்னிந்திய வரலாற்றினை பார்த்தன என்றும் அவர்களில் இருவரின் ஆய்வுகளைப் பற்றிப் (Burton Stein, Kathleen Gough) பேசப் போவதாகவும் NK தம் முன்னுரையில் கூறினார். Kathleen Gough-வின் நூல் (1981) பற்றியும், Burton Stein நூல் (1980) பற்றியும் அவருடைய மறுபார்வை மிக முக்கியமானது. K.A.Nilakanta Sastri முன்வைத்த மையப்படுத்தப்பட்ட சோழர்அரசு என்ற கோட்பாட்டிற்கு மாறாக Burton Stein பங்குநிலை அரசு (segmentary state) என்ற கோட்பாட்டினை முன்வைத்தார். பல நிலைகளில் Burton Stein இன் நூல் The Colas க்கு அடுத்த நிலையில் மதிப்புடன் கருதப்பட்டாலும் அந்நூலின் கருதுகோள் (speculative) அடிப்படையில் இயற்றப்பட்டது என்றார் NK. காரணம் Burton Stein தென்னிந்தியக் கல்வெட்டுகளின் ஆங்கிலத்தில் கிடைத்த சுருக்கக்குறிப்புகளை பெரிதும் நம்பியதாகும் என்றார். Burton Stein பிரமதேயம், கோயில்களின் நிலப்பரவல் போன்றவற்றின் அடிப்படையில் அலுவல்நிலை (bureaucracy) சோழர்அரசில் இல்லை என்றார். நாடு பற்றி Burton Stein சொல்லும் கருத்து Political Geography of the Chola Country (1974) யிலிருந்து எடுக்கப்பட்டதாகும் என்றார் NK. நாடு என்றஅமைப்பு சமூக உற்பத்தியினை கொண்ட ஓர்அலகு (Social production system) என்பதனை Burton Stein கவனிக்கவில்லை. சோழராட்சியில் 3 முறை விளைநிலத்தின் அளவீடு மேற்கொள்ளப்பட்டது. ஆட்சியியல் வலைப்பின்னலின் இயக்கம் (bureaucratic network) இல்லாமல் இப்பரந்த அளவிலான நிலத்தின் அளவீடு நிகழ்ந்திராது. அதிகாரி, புரவுவரி போன்ற அலுவலர்களை குறிக்கும் சொற்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இவ்வலுவலர்கள் பெரும்பாலும் பிரம்மராயன், மூவேந்தவேளான் போன்ற மதிப்புரு பட்டம் பெற்றவர்கள். இவர்கள் நிலப்பிரபுக்களும் கூட. இவையெல்லாம் NK அவர்களின் கண்டுபிடிப்பு.

07.சோழர்அரசில் சமூகம் மாறி வந்துள்ளது என்பதற்கு NK தரும் சரியான சான்று: முதலாம் இராஜராஜன் நாடுஅமைப்புகளை ஒருங்கிணைத்து வளநாடுகளாக மாற்றியமை. இதனால், நாடு அளவிலான மரபான இனக்குடித் தலைவர்களின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டது. அவர்களில் பலர் வட்டாரத் தலைவர்கள் என்ற நிலையிலிருந்து அலுவலர்கள் என்றநிலைக்கு மாற்றப்பட்டனர். வளநாடு உருவாக்கத்தில் கோட்டம் என்ற நில அலகினுடைய கோட்பாடு மறைந்தது. இவரது காலத்திலிருந்து முதல் குலோத்துங்கன் காலம்வரை சோழ ர்அரசு மையப்படுத்தப்பட்ட அரசாக இயங்கியது. இதன் உச்ச அடையாளம்தான் தஞ்சாவூர் பெரிய கோயிலும் அதற்கான வருவாய் கடல்தாண்டிய ஈழமண்டலத்திலிருந்து வந்ததும். நாடு அளவில் Buron Stein சொல்வதுபோல் நாட்டாரின் அதிகாரம் இருந்தாலும் அவர்கள் அரசரின் கட்டுக்குள் இருந்தனர்.

08.காத்லின் கோ, ஒரு மார்க்க்சியராக இருந்தாலும் ஆசியஉற்பத்திமுறை (Asiatic Mode of Production = AMP) என்ற கோட்பாட்டின் பின்ணணியில் ஆய்வுசெய்தாலும் மார்ச்சிய சிந்தனையின் அடிப்படையில் சமூக வளர்ச்சியினைப் புரிந்துகொள்ளவில்லை. Darcy Rebeiro முன்மொழிந்த அரசு பற்றிய கோட்பாட்டினையே பயன்படுத்தினார். இவர் ஆய்விற்கு தேர்வு செய்த காலம் மிக நீண்டது (சோழர் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை). Darcy Rebeiro முன்மொழிந்த சோழர் அரசு சமையம்சார் நீர்ப்பாசன அரசு என்ற கருத்தினை Kathleen Gough ஏற்றார். இவர் வகுத்த சோழர் அரசு ஆசிய உற்பத்தி முறையினைக் (AMP) கொண்டது என்றும், அதில் வேளாண்குடிகளான வெள்ளாளர்கள் அரசின் அடிமைகளாக இருந்தனர் என்றும் இவர்களின்கீழ் பறையடிமைகள் இருந்தனர் என்றும் கூறினார். ஆனால், இவ்விருகுடிகளுக்கும் இடையிலான உறவினை சரியாக வாதிக்கவில்லை என்றார் NK. மேலும், மார்க்ஸ் ஆசியஉற்பத்திமுறை பற்றிப் போதிய அளவிற்கு வாதிக்கவில்லை என்பதாலும் இக்கோட்பாடு கீழைத்தேய வல்லாட்சி என்ற கோட்பாட்டிற்கு நெருக்கமானது என்பதாலும் இதன் மையக்கரு தேக்கநிலை இந்தியச்சமூகம் என்பதாலும் இக்கோட்பாட்டினை வரலாற்றாய்விற்குப் பயன்படுத்த அறிஞர்கள் தயங்குகின்றனர் என்றும் கூறினார்.

தொடர்ந்து D.D.Kosambi மார்க்சியத்தினை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர அங்கலாய்ப்பிற்காகப் பயன்படுத்தக்கூடாது என்றார் என்றும் எடுத்துச் சொன்னார். அடுத்துவந்த D.N.Jha-வும் குப்தர்காலத்தின் இறுதிக்கட்டத்தில் நிலவிய நிலவுடைமை ஐரோப்பிய நிலவுடைமையினை ஒத்தது என்றும் அந்நிலை அடுத்த ஓராயிரமாண்டு தொடர்ந்தது என்றும் கூறினார். ஆனால், NK-வின் கருத்து தென்னகத்தில் சோழர்காலத்தின் முடிவிற்குப் பின்னரே நிலமானியமுறை தோன்றியது என்பதாகும். இது, அப்போது நிலவிய சமூகச் சிக்கலால் (social disorder) எழவில்லை. அப்போதுநிலவிய வெவ்வேறுவிதமான உற்பத்தி முறையினால் உருவானது (two-different modes of production) என்றார். Kathleen Gough சோழர் சமூகத்தினை (Chola society) ஆய்வதற்கு ஆசிய உற்பத்தி முறை கோட்பாட்டினை பயன்படுத்தத் தயங்கினார் என்றார். D.N.Jha-வும் Kathleen Gough-வும் கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் நிலக்கொடைகள் வழங்கப்பட்டதாலேயே இந்திய நிலமானிய முறையும், நிலப்பரபுத்துவமும், அடிமைமுறையும் தோன்றின (landlords and sefdom) என்றனர். தென்னிந்தியாபொறுத்து இவ்விரண்டும் வேறுவேறானவை. பார்ப்பனர்களுக்குக் கொடையளிக்கப்பட்ட நிலப்பகுதி பிரமதேயம் எனப்பட்டது. இது காணியாட்சிஊர்கள். அதாவது அந்நிலத்தின்மேல் உரிமை கொண்டவர்கள் அதன்மேல் உழும் உரிமையினையும் கொண்டவர் என்று பொருள். இரண்டாவதுகொடை, நிலமல்ல; நிலத்தின்மீதான வரிகள். வரிவிதிக்கப்பட்ட இந்நிலங்கள் தேவதானம் எனப்படும். ஆனால், இவற்றை தானமளித்தது அரசர்கள். இவ்வகைக் கொடைகளும் நிலங்களும் சொற்பமே என்றார் NK. நிலமானிய முறை பற்றி ஆய்வதற்கு கொடையளிக்கப்படாத (non-granted villages) ஊர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றார். இங்கு, தம் கருத்துகளை நிறுவுவதற்கு NK கூட்டுநிலவுடைமை, தனியார்நிலவுடைமை என்ற கோட்பாட்டினை தளமாகப் பயன்படுத்தினார்.

09.தொடக்கத்தில் வேளாண்ஊர்களில் கூட்டுநிலவுடைமையும் பார்ப்பனர் ஊர்களில் தனியார்நிலவுடைமையும் நிலவின என்றும் தொடர்ந்துவந்த காலங்களில் இவ்விரு ஊர்களிலும் தனியார் நிலவுடைமை நிலவின என்றும் NK உறுதிப்படுத்தினார். தம் ஆய்விற்காக ஒரு பார்ப்பன ஊரினையும் (ஈசானமங்கலம்) வேளாண்ஊரினையும் (அல்லூர்) தேர்வு செய்தார். இவ்விரு ஊர்களும் காவிரியின் தென்கரையில் ஒரேசூழலில் இருந்தவை. ஈசானமங்கலத்தில் சபையுறுப்பினர்கள் தனியார் நிலவுடைமை கொண்டவராக இருந்தனர். சிலநிலங்கள் கோயில் நிர்வாகிகளான பருடையார்களிடத்தும் சிலநிலங்கள் சபைக்குப் பொதுவான கூட்டுடமையாகவும் இருந்தன. அல்லூரிலும் தனியுடைமை இருந்தது. அதனைப் பெற்றவர்கள்: கணி, நடனகலைஞர், இசைக்கலைஞர், மத்தியஸ்தன் போன்றோர். அக்கொடை பெற்றவர்களின் நிலத்தில் வந்த விளைச்சல் மூன்றுபங்குகளாகப் பிரிக்கப்பட்டது. ஸ்வாமிபோகம் தானம் பெற்ற கோயிலுக்கானது. ஆனால், இது அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரியாகும். இதுதான் கோயிலுக்குக் கொடையானது. இப்பங்கு தானமாகாளிக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய்குறைந்தது. மற்றொன்று நிலவுடைமையாளரின் பங்கு. இப்பங்கு பார்ப்பனர்களுக்குச்சென்றது. மூன்றாவது பங்கு உழுபவருக்கானது. ஆனால், இங்கு இவர்கள் அரசுக்கும் கோயிலுக்கும் சேர்த்து உழ வேண்டும். வேறொரு வகையில் சொல்வதானால், இவர்கள் அரசுக்கும் கோயிலுக்கும் பார்ப்பனர்க்கும் சேர்த்து உழைக்கவேண்டும். இவர்கள் குடிகள் எனப்பட்டனர். இப்படி அரசுருவாக்கத்தில் வேளாண்தொழில்நுட்பமும் நீர்ப்பாசனத் தொழில்நுட்பமும் தெரிந்த வேளாண்குடியினரின் உழைப்புச் சுமை கூடியது. ஆனால், விளைச்சல் பங்கிடப்பட்டது.

10.ஈசான மங்கலத்தின் நிலை இப்படியென்றால், அல்லூரின்நிலை வேறானது. அங்கு, ஊராரே உழும் வேலையினை செய்ய வேண்டும். அங்கு நிலபரிவர்த்தனை பற்றிப் பேசும் கல்வெட்டுகள் நிலவுடைமை பற்றித் தெளிவான செய்திகளை தருகின்றன. அவற்றில் கண்டறிந்த தெளிவுகள்: கீழ்க்காவேரிப்பள்ளத்தாக்கில் தனியாரிடையே நிலப்பரிவர்த்தனை நடந்தன. சில பரிவர்த்தனைகளை ஊரார் கூட்டாகச்செய்தனர். சிலநிலங்கள் தனியாரால் கோயில்களுக்கு அளிக்கப்பட்டன. நிலத்தினை விற்றவர்களில் சிலர் பலஊர்களில் நிலம் வைத்திருந்தனர். அவர்கள், வட்டாரஅளவில் செல்வாக்கு பெற்றவர்கள். சுருக்கமாக நிலக்கிழார்கள் எனலாம். இவர்கள் உடையான், ஊருடையான், அரையன், பேரரையன், சோழப்பெரையன், சோழபாண்டியன் என்ற பட்டங்களைக் கொண்டவர். இப்பட்டங்கள் இவர்கள் அரசருக்கு நெருக்கமானர்வர்கள் என்பதனைக் காட்டுகின்றன. இவர்கள் அரசின் இயக்கத்தில் முக்கியமானவர் என்பதும் NK அவர்களின் கண்டுபிடிப்பு.

11.விஜயாலயன் வழிவந்த சோழர்காலத்தில் வேளாண்குடிகளின் ஊர்களில் நிலவுடைமையுள்ளோர் அவர்களின் நிலத்தில் பயிரிடுவோர், உழுவோர் என்ற ஈரடுக்கு சமூகநிலை உருவானது. நிலவுடைமை என்பது காணியுரிமையாகும். அதாவது நிலத்தின் மீதான தலைமுறை தலைமுறையான உரிமை. இக்காணியுரிமை நிலப்பரிவர்த்தனை பெரும்பாலும் உயர்நிலை சமுகத்தினரிடையே நிகழ்ந்தது. காட்டாக, பிரம்மாதராய முத்தரையன் என்பவர் அதிகஅளவில் நிலத்தினை விற்றார்; நாயன்சோறன் இருங்கோவேள் என்பவர் பெருமளவில் நிலம் வாங்கினார். 40 வேலி 60 வேலி பரப்புள்ள நிலவுடைமை கொண்ட நிழக்கிழார்களும் இருந்தனர். ஒருவர் ஒரு ஊரினை உருவாக்கி அதனை ஜன்மக்காணி என்ற உரிமையோடு அரசரின் அனுமதியினைப் பெற்றார். ஆனால், இது மேற்சொல்லப்பட்ட தலைமுறை தலைமுறையான நிலவுடைமை என்ற கருத்துக்கு மாறாக உள்ளது. சோழராட்சியின் இடைக்காலத்தில் உருவான பொருளாதாரவளர்ச்சி, அலுவலர்கள் பெருமளவில் மான்யம்பெற்றமை போன்றகாரணங்களால் நிலக்கிழார்களின் எண்ணிக்கை கூடியது. அப்போது மலைக்குடிகள் சமவெளிக்குவந்து படையணியில் சேர்ந்தனர். அவர்கள் படைபலத்தினால் நிலவுடையாளராயினர். இராஜகுலத்தார் எனப்பட்டோர் காணிநிலத்தினை தமதாக்கினர். அவர்கள் காவிரியின் வளமையான தென்பகுதியிலும் வடபகுதியிலும் நிலங்களை வாங்கினர்.

12.அரசுக்கும் பார்ப்பனர்களுக்குமான உறவு:பார்ப்பனர்கள் வசித்த பிரமதேயங்கள் அரசால் உருவாக்கப்பட்டன. ஆனால், பார்ப்பனர் ஊர்களின் ஆட்சி மன்றத்துக்கான தேர்தல் அரசுஅலுவலரின் கண்காணிப்பில் நடந்தது. தஞ்சாவூர் பெரியகோயிலில் பணிசெய்வதற்கான நபர்களை பொறுப்பில் அமர்த்துவதற்கு பிரமதேயத்துச்சபைகள் தெரிவுசெய்து அனுப்பும்படி பிரமதேயங்களின் சபைகளுக்கு அரசர் ஆணையனுப்பினார். சோழமண்டலத்தின் ஒவ்வொரு நாட்டுப் பிரிவிலும் மூன்றுமுதல் நான்கு பிரமதேயங்கள்வரை இருந்தன. வரண்டபகுதியில் உள்ள நாடுகளில் பிரமதேயங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. அதாவது நீர்வளமும் நிலவளமும் கொண்ட சோழராட்சியின் மையப்பகுதியான காவிரிச்சமவெளியில் நாடுகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால், அவை அளவில் சிறியன. அங்கு, நாடுகள் பரப்பளவில் சிறியனவாக இருந்தாலும் பிரமதேயங்களின் எண்ணிக்கை அதிகம். வறண்ட பகுதிகளில் நாடுகளின் எண்ணிக்கை குறைவு;பரப்பளவு பெரிது. பிரமதேயங்களின் எண்ணிக்கையும் குறைவு. எனவே, வெவ்வேறுவகையான வட்டாரத்தில் வெவ்வேறு வகையான உற்பத்திமுறையும் சமூகத்தின் அமைப்பும் நிலவியதற்கு வாய்ப்பு உண்டு. சோழர் காலத்தின் சமூகக் கட்டமைப்பினை எல்லா வட்டாரத்திற்கும் பொதுமைப்படுத்த முடியாது.

13.வேளாண்ஊர்களின் கூறுகள்பற்றி ஊரிருக்கைப்பகுதி என்ற தலைப்பில் NK தரும் குறிப்புகள் சோழர்காலச்சமூகத்தின் தலைப்படமாக (blue-print) விளங்குகின்றன. ஓர் ஊரின் பகுதிகள்: ஊர்நத்தம், ஊர்இருக்கை, பறைச்சேரி, கம்மணாச்சேரி, ஈழச்சேரி, குளம், கரை, கால்வாய், கோயில், சுடுகாடு, ஊர்க்குளம், கொட்டகாரம் போன்றவை. தஞ்சாவூர் வட்டாரத்தில் மொத்தமுள்ள 33 ஊர்களில் 19 ஊர்களில் மட்டுமே பறைசேரிகள் இருந்தன என்று NK அறியத்தந்தார். என்றால், பிற ஊர்களில் அவர்களுக்கு இணையான பிறஉழைக்கும் சமூகத்தினர் இருந்தனர் என்று பொருளாகிறது. கங்கைகொண்டசோழபுரத்தின் வட்டாரத்தில் மொத்தமுள்ள 7ஊர்களில் ஒரு ஊரில்மட்டுமே பறைச்சேரி இருந்தது. என்றால், பிற 6 ஊர்களில் அவர்களுக்கு இணையான உழைக்கும் சமூகத்தினர் இருந்தனர் என்று பொருளாகிறது. ஊரின்கூறுகளில் சுடுகாடு மிக முக்கியமானது. கல்வெட்டுகளின்படி எல்லாவூர்களிலும் ஒவ்வொரு இனத்திற்கென்றும் தனித்தனி சுடுகாடுகள் இல்லை. சுடுகாடுகளைக் கொண்ட மொத்தமுள்ள 24 ஊர்களில் 8 ஊர்களில் வேளாளருக்கும் பறையருக்கும் தனித்தனியே சுடுகாடுகள் இருந்துள்ளன. என்றால், மீதமுள்ள 16 ஊர்களில் பொதுச்சுடுகாடு இருந்தன என்று பொருளாகிறது. சிலஊர்களில் தானியம் அடிக்கும் களம், தானியக் களஞ்சியம் இருந்துள்ளன. இந்தியாவின்ஊர்கள் தன்னிறைவு பெற்றவையன்று என்பதனை அனைத்து ஊர்களிலும் சுடுகாடுஇருக்கவில்லை, சிலஊர்களில் மட்டுமேஇருந்தன என்பதன் அடிப்படையில் உறுதிப்படுத்தலாம் என்பது இவரின்கூற்று. தன்னிறைவற்ற இந்தியஊர்கள் என்பதனை D.D.Kosambi வேறுவிதமாக விளக்கினார். இந்தியாவின் உள்நிலையிருந்த ஊர்கள் உப்புவிற்கு கடற்கரை ஊர்களையும், இரும்புவிற்கு உள்நிலப்பகுதி ஊர்களை நம்பி கடற்கரைஊர்களும் இருந்தன என்பார். இங்கு, NK வேறுவிதமான உண்மைகளைக் கண்டறிந்தார். அவருக்கு கல்வெட்டுகளின் சிலதொடர்கள் பெரிதும் துணைநிற்பன. ஊடறுத்துபோன வாய்க்கால்கள், இவ்வூர்நிலத்தை ஊடறுத்து புறவூர்களுக்கு நீர்பாயப்போன வாய்க்கால், கீழ்நாட்டுக்கு நீர்பாயப்போன போன்ற தொடர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்கள் ஒரேநீர்ப்பாசனவாய்க்காலினை சார்ந்து இருந்தன என்பதனை விளக்குகின்றன என்றார். இங்கு, தண்ணீர் நாடுகளையும் ஊர்களையும் பிணைத்தது. இச்சான்றுகளினால், தன்னிறைவு ஊர்கள் என்ற கருத்தியலை முறியடித்தார்.

14.பெயர்கள்: ஆள்பெயர்களின், பதவிகளின் அடிப்படையில் சோழர்நிர்வாகத்தினை NK விளக்கினார். இதற்கான ஆய்விற்காக வெளியிடப்பட்ட 3,543 கோயில்கல்வெட்டுகளில் இருந்து பட்டப்பெயர்களை தெரிவுசெய்தார். உடையான், மூவேந்தவேளான், நக்கன், மத்தியஸ்தன், நாடாழ்வான் போன்றவை இவற்றுள் முக்கியமானவை. இவற்றில் குரிசில் தலைவர்களின் (local chieftains) பட்டப்பெயர்களும் சேர்க்கப்பட்டன. இவற்றுள் உடையான்பட்டம் பெரும்பாலும் ஊர்ப்பெயரோடு சேர்ந்தே அமைந்துள்ளது. அதாவது இப்பட்டம் கொண்டவர் அவ்வூரில் நிலவுரிமைகொண்டவர் என்று பொருளாகிறது. இப்பெயர்களின் எண்ணிக்கை சோழமண்டலத்தில் அதிகரிக்க ஜெயங்கொண்டசோழமண்டலப்பகுதியில் (அதாவது தென்னாற்காடு, வடாற்காடு செங்கல்பட்டு வட்டாரங்களில்) காலம் செல்ல செல்ல குறைகிறது. இப்போக்கு காவிரிபகுதியில் தனியார் நிலவுடைமை அதிகரித்ததனை சுட்டும். பிரம்மராயன் பட்டத்தினைவிட மூவேந்தவேளான்பட்டம் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

மூவேந்தவேளான் பட்டத்துடன் மதுராந்தகன், இராஜேந்திரசோழன் என்ற அரசர்களின் பெயர்கள் பெரிதும்இணைந்துள்ளன. இது நிலக்கிழார்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான உறவினை வெளிப்படுத்துகின்றன. மூவேந்தவேளான் பட்டப்பெயர் கொண்டவர்களில் மூன்றில் ஒருபங்கினர் உடையான்பட்டமும் கொண்டவர். மொத்தமாக மூவேந்தவேளான் பட்டம் கொண்டவர் 307பேர்; பிரம்மராயன் பட்டம் கொண்டவர் 94பேர். மூவேந்தவேளான்கள் பிரம்மராயர்களைவிட மூன்றுமடங்கு அதிகம். அதாவது 288%. இதில் அரசருக்கு நெருக்கமான மூவேந்தவேளான்கள் 288 பேர்; 83 பேர் பிரம்மராயர்கள். மூவேந்தவேளான்கள் அதிக எண்ணிக்கையில் அலுவலர்களாக இருந்தனர். மொத்தம் 230 பேர். இதில் 78 பேர் அதிகாரிகள், 39 பேர் ஓலை அலுவலர்கள், 32 பிரம்மராயர்கள் அலுவலராக இருந்துள்ளனர். பார்ப்பனர்களைவிட மூவேந்தவேளான்கள் 7 மடங்கு அலுவலராக இருந்துள்ளனர். 28 வகையான குரிசில்தலைவர்களின் பட்டப்பெயர்கள் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் அந்தந்த இனக்குழுவின் பெயர்கள்போன்று தெரிகின்றன. இவற்றுள் இளங்கோவேள், இலாட, காடவ, களப்பாள, கேரள, மலையகுல, நுளம்ப, வாணக்கோ, விழுப்ப, வாண போன்றவை குறிப்பிடத்தக்கன. இவ்வினக்குழுக்களின் பெயர்கள் பெரும்பாலும் அரையன், மாராயன் போன்ற பின்னொட்டுக்களை கொண்டவை. மேற்சொல்லப்பட்ட குடிப்பெயர்களான பிரம்ம, பல்லவ, விழுப்ப என்பவை ஒரே மாதிரியானவை. பிரம்ம என்பது அரசர்பெயரோடும் அதிகாரி, ஓலை, சேனாபதி போன்றவற்றோடும் இணைந்துவரும். இது அவர்கள் நிர்வாகத்தில் பெற்றிருந்த சிறப்பான நிலையினைக் காட்டும். இதுபோன்று, விழுப்பரையன், பல்லவரையன் பட்டம் கொண்டவர்கள் வருமானவரித்துறையுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள். இளங்கோவேள் பட்டம்கொண்டவரும் இதில் அடங்குவர். சோழராட்சியின் இரண்டாம் காலகட்டத்தில் (985-1020) சம்பு, மலயகுல என்ற பட்டப்பெயர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியில் கிடைத்தவை. ஆனால், இவர்களுக்கு நிர்வாகத்தில் தொடர்பில்லை. நாடாழ்வான், மத்தியஸ்தன் என்ற இரு அலுவல்பெயர்களில் முதலாவது காலம் செல்ல செல்ல அதிகரித்தும் இரண்டாவது குறைந்தும் இடத்தினைப் பெற்றன. நாடாழ்வான்பட்டம் சோழரின் இரண்டாம் காலகட்டத்தில் இடம்பெற்று நாடுஅளவிலான வட்டாராத்தலைவரை (local chiefs or lords) சுட்டுகிறது. இவர் மத்தியஅரசோடு தொடர்புடையவராக இருக்கலாம். இங்கு, வளநாடு அமைப்பு உருவாக்கப்பட்டபோது நாடுஅளவிலான முக்கியத்துவம் குறைந்தது என்ற கருத்து கேள்விக்குள்ளாகிறது. நாடாழ்வான்பட்டம் அதிகரிப்பது ஊர்ச்சபைகளின் முக்கியத்துவத்தினை குறைத்து நிலமானியமுறை எழுவதற்கு வழிவிட்டது என்று NK கேள்வி கேட்டார்.

15.சோழர்காலத்தின் பாண்டியர்காலத்தின் வருவாய்பற்றிய NK வின் ஆய்வு நுணுக்கமானது. சோழர்காலத்தின் வருவாய்பற்றிய ஆய்விற்கு கல்வெட்டுகளில் பதியப்பட்ட அனைத்து வரிகளின் பெயர்களையும் அவை இடம்பெற்ற சூழலையும் கருத்தில்கொண்டு பகுப்பாய்வு செய்தார். படியெடுக்கப்பட்ட சோழர் கல்வெட்டுகள் சுமார் 9000. என்றாலும், வெளியிடப்படாதவற்றின் தொகைஅதிகம். எனவே, இவ்வாய்வு ஓர் எல்லைக்குட்பட்டது. பொதுவாக வரிகளின் பெயர்கள் சோழமண்டலத்திலும் ஜெயங்கொண்டசோழமண்டலத்திலும் அதிகஅளவில் இடம்பெற்றன. வசூலிக்கப்பட்ட வரிகளின் பெயர்கள், விலக்கப்பட்ட வரிகளின் பெயர்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. இப்பகுப்பாய்வில் 10 தடவைகளுக்குமேல் இடம்பெற்ற 27 வரிகள் ஆண்டுவாரியாகவும் வட்டாரவாரியாகவும் (Chronological and topographical) பகுக்கப்பட்டன. இவ்வரிகள் சோழமண்டலத்திலும் தொண்டைமண்டலத்திலும் இடம்பெற்றவை. அவற்றுள் 7வரிகள் இருமண்டலங்களிலும் 20 தடவைக்கு மேல் இடம் பெற்றவை. அனால், இவற்றின் காலப்பரவல் (chronological distribution) பொதுவாக இல்லை. சோழர் அரசின் வருவாயினைப் பிரிந்து கொள்வதற்கு ஒளியூட்டும் வரிகள்: அந்தராயம், எச்சோறு, கடமை, குடிமை, முட்டயாள், தட்டார்பாட்டம், வெட்டி போன்றவை. கால வரையரைப்படி 895-1070 காலகட்டத்தில் வரிகளின் எண்ணிக்கை அதிகமாக, 1070-1179 காலகட்டத்திலும் 1179-1279 காலகட்டத்திலும் கூடிச் செல்கிறது. வருவாய்துறையில் நிகழ்ந்த நில அளவீடும் இதற்கு காரணமாகலாம்.

400 க்கு மேற்பட்ட வருவாய் சொற்களில் கடமை என்ற வரிச்சொல் 32 வெவ்வேறு வரிகளுக்கு பின்னொட்டாக உள்ளது; 16 முறை குடிமை பின்னொட்டாக உள்ளது; கூலி என்ற வரிச்சொல் 6 முறை பதியப்பட்டுள்ளது; பொன் என்ற சொல் 10 முறை வந்துள்ளது. 29 முறை காசு என்றசொல் பின்னொட்டாக வந்துள்ளது. ஏரிஆயம், ஏரிநீர்க்கோவை, ஏரிஅமஞ்சி, ஏரிமீன், ஏரிமீன்காசு, ஏரிமின்பாட்டம், ஏரிவரி, ஏரிவாய், குரப்புவெட்டி, குலைவெட்டி, குலை, நீர்க்கூலி, நீர்நிலங்காசு, நீர்வாயில் நீர்விலை, நீர்விலைக்காசு, நீர்விலைக்கூலி, நீராறு போன்ற வரிச்சொற்கள் சோழர்காலத்தின் நீர்ப்பாசனவளர்ச்சியினை நன்கு புலப்படுத்துவன.

நாட்டுவிநியோகம், நாடாட்சி, நாடென்றவரி, நாடுகாவல், நாடென்றஎலவை போன்றவரிகள் நாட்டுமன்றத்தின் ஆளுமையினை உறுதிப்படுத்துகின்றன. இது வட்டாரஅளவில் நிலக்கிழார்களின் மேலாண்மையினை வெளிப்படுத்தும். ஊர்வினியோகம், ஊர்படுகுடிமை, ஊர்குடிமை, ஊர்தனிசு, ஊரிடுவரி, ஊரிடுவரிப்பாடு போன்றவை வேளாணூர்களின் தனித்துவத்துனை விளக்குவதாக அறியலாம். தெண்டம், தண்டகுற்றம், குற்றத்தெண்டம், தண்டலில்கடமை, விளக்குஆள்தண்டம், தண்டநாயகப் பேறு, தண்டனை முதல் போன்ற சொற்கள் அரசின் வலுத்தன்மையினை உறுதிப்படுத்துகின்றன. இவ்வலுவான அரசு 33 வகையான நிலங்களிலிருந்து வரிகளை பெற்றது. வரி கொடுத்த நிலங்கள் நீர்நிலம், ஒருபூவிளையும்நிலம் (ஒருமுறைச்சாகுபடி), இருபூவிளையும்நிலம் (இருமுறைச்சாகுபடி) என்று வகைப்படுத்தப்பட்டிருந்தன. நிலத்தின்வரி அரசரால் கோயிலுக்கு கொடையளிக்கப்பட்டால் அது காணிக்கடன் எனப்படும். ஒருவேலி நிலத்திற்கு 95 முதல் 100 கலம்வரை வரி நெல்லாக வசூலிக்கப்பட்டது.

 இதுமட்டுமின்றி சாதிகளும் வரிகளை செலுத்தின. சோழர்கல்வெட்டில் 61 சாதிப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வள்ளூவன், பாணர், பிடாரர், நக்கன், நட்டுவன் போன்ற சொற்கள் ஒருமுறை மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை குடிப்பெயராகவும் தொழில்பெயராகவும் தோன்றுகின்றன. 28 சாதிப் பெயர்களில் வரிகள் வழக்கில் இருந்துள்ளன. இதில் பெரும்பாலானவை தொழில்வரிகள். கல்வெட்டுகளில் வணிகர்கள் அதிகமுறை குறிக்கப்பட்டுள்ளனர். அடுத்தநிலையில் பார்ப்பனரும் மன்றாடியாரும். மூன்றாம்நிலையில் வெள்ளாளரும் கைக்கோளரும். இது சமூகப்போக்கில் யாருடைய இயக்கம் வலுப்பெற்று இருந்தது என்பதனைக்காட்டும். பொதுமக்கள்பேரால் வந்தகடமை, பெருங்குடிகள்பேரால் வந்தகடமை என்ற வரிகள் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியன.

16.NK தம் ஆய்வில் காவிரிச் சமவெளியினை மட்டும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளாமல் புதுக்கோட்டை போன்ற வரண்டபகுதியினையும் எடுத்துக்கொண்டார். புதுக்கோட்டை வட்டாரத்தின் மொத்தமுள்ள 381 சோழர் கல்வெட்டுகளில் 197 கல்வெட்டுகளில் வரிகளின்பெயர்கள் பதியப்பட்டுள்ளன. சோழர்கல்வெட்டுகளில் இல்லாத பலவரிகளின் பெயர்கள் புதுக்கோட்டை வட்டாரத்தின் பாண்டியர்கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன. அங்கு அச்சுவரி, அந்தராயம், இறை, கடமை, குடிமை என்ற வரிகள் பலமுறை கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் கடமையும் அந்தராயமும் அதிகமுறை இடம்பெற்றவை. இவ்விரண்டும் நிர்வாகத்தில் மிக முக்கியமானவை. புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி வட்டாரங்களில் கிடைக்கின்ற 250 பாண்டியர்கல்வெட்டுகளில் மொத்த்ம் 140 வரிகள் பதிவாகியுள்ளன. சோழர் காலத்தில் வழக்கில் இல்லாத 85 புதிய வரிகள் பாண்டியர் காலத்தில் அறிமுகமாயினை, 43%. தஞ்சாவூர் வட்டாரக்கல்வெட்டுக்களில் அடிக்கடி குறிக்கப்படும் வாய்க்கால் என்றசொல் நீர்ப்பாசனவளார்ச்சியினை நன்கு விளக்கும். வயக்கல், மயக்கல், மயக்கி, திருத்தி போன்ற சொற்கள் வேளாண்நிலத்தின் விரிவாக்கத்தினை குறிக்கின்றன.

17.மேலே பத்திகளில் சொல்லப்பட்டவை பேராசிரியர் NK அவர்களின் ஆய்வு முடிவுகள். அவர் காலந்தோறும் வேளாண்வளர்ச்சியும் நீர்ப் பாசன வளர்ச்சியும் நிகழ்ந்ததன் அடிப்படையில் இந்திய சமூகம் தேக்கநிலை சமூகம் என்ற கருதுகோளினை உடைத்தார். பலவேளாண் ஊர்கள் ஒரு குறிப்பிட்ட நீர்ப்பாசன வாய்க்காலை சார்ந்து இருந்தன என்பதன் அடிப்படையில் இந்திய வேளாண்ஊர்கள் தன்னிறைவு பெற்றவை என்ற கருத்தினையும் முறியடித்தார். அனைத்து ஊர்களிலும் சுடுகாடு இல்லை என்ற கருத்தினையும் இதற்காக சேர்த்துக் கொண்டார். ஆனால், சுடுகாடுகள் இல்லாதஊர்களில் இடுகாடுகள் இருந்திருக்கலாம். வளநாடுகள் உருவாக்கத்தால் நாடு அளவிலான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டது என்ற கருத்தினையும் முன்வைத்தார். ஆனால், மேலே வரிசைப்படுத்தப்பட்ட நாடு தொடர்பானவரிகள் நாடுகளின் உயிர்ப்புநிலை தொடர்ந்து இயங்கியது என்று கருதவைக்கிறது. அதேபோன்று ஊர்தொடர்பானவரிகள் ஊர்களின் தொடர்ந்த இருப்பினை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. இக்கருத்து K.A.Nilakanta Sastri முன்மொழிந்த ஊர்கள் அதிகாரத்தில் சற்றுவளம் பெற்றிருந்தன என்ற கருத்துக்கு துணை போவதாக உள்ளது. NK நூல் வெளிவந்ததற்குப் பிறகு தென்னிந்தியா பற்றி குறிப்பாக தமிழ்நாட்டின் வரலாறுபற்றிய அறிஞர்களின்பார்வை புத்தொளிபெற்றது எனலாம். சோழர்காலம் பற்றிய பொதுநிலைபேச்சு (public speech) சூடுபிடித்த்து எனலாம்.

18.இந்நூலில் NK தம் ஆய்வினை சோழர்காலத்திலிருந்து அடுத்தகட்டத்திற்குத் தொடர்ந்தார். வரலாற்றுப்போக்கினை அறிவதற்கு இவர் நிலவுரிமையினை ஒரு தளமாகக் கொண்டார் என்று முன்னர்பார்த்தோம். எனவே, சோழர்காலத்திய நிலவுரிமை அடுத்தகட்டமான விஜயநகராட்சியில் எவ்வாறு மாறியது (transformed) என்பதனையும் தனித்தலைப்பில் ஆய்ந்தார். விஜய நகர ஆட்சிக் காலத்தில் புதுவகை நிலவுரிமை எழுந்தது. அக்காலத்தில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தினை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது ஒரு வழக்கமாக இருந்தது. தமிழ்நாட்டின் வடக்கில் தேவிகாகாபுரம் எனுமிடத்திலுள்ள கோயில்கல்வெட்டுகள் இந்நிலவுரிமை மாற்றம் பற்றிப் பேசுகின்றன. அவ்விடத்தில் கிடைக்கும் 13 கல்வெட்டுக்கள் அடிப்படையில் மத்திய அதிகாரத்திற்கும் மாநில அதிகாரத்திற்கும் இடையிலான சிக்கல் பற்றிப் பேசினார். கோயில் நிலத்தினை குத்தகைக்கு மாற்றியவர்கள் தானத்தார், மகேஸ்வரர், குருக்கள், கைக்கோலர் முதலிகள் போன்றோர். இவர்கள் குழுக்களாக இயங்கினர்’ தனித்தும் செயற்பட்டவர்கள் ஈசான சிவாச்சாரியார்கள், விஸ்வேஸ்வர சிவாச்சாரியா போன்றோர். இவர்கள் தேவிகாபுரத்திலிருந்து இயங்கிய பிக்‌ஷாடனம் என்ற சமைய நிறுவனத்தினைச் சேர்ந்தவர்கள். இவர்கள்தான் தேவிகாபுரத்தின் சிவன்கோயிலின் சொத்தினை பரிபாலனம் செய்தோர். தானத்தார், மகேஸ்வரர், தானமகேஸ்வரர் என்ற 3 குழுவினரும் சேர்ந்தே இயங்கினர். கோயிலின் நிலத்தினை குத்தகைக்குப் பெற்றவர்கள் 5 நாயக்கர்கள்: திருமலை நாயக்கார், சதாசிவ நாயக்கர், கோனியப்ப நாயக்கர்,…சிவாநாயக்கார், நமசிவாய நாயக்கர்.

19. தேவிகாபுரம் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்ட பலநாயக்கர்கள் கன்னடநாயக்கர்களின் படையணியில் இருந்தோராவர். அவர்கள் மருதராசர் படைவீட்டினை சார்ந்தவர். படைவீடு என்பது நிலைப்படையாகும். அப்படைவீடு மருதராசர் என்ற உயர்அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்தது. திருமலைநாயக்கர் துளுவ அரச வம்சத்தின் நரசநாயக்கருக்கான தமிழ்நாட்டின் முகவர். துளுவஅரசவம்சம், சளுவஅரசவம்சத்தின்பேரில் ஆண்டது. திருமலைநாயக்கரின் சகோதரர் ஈஸ்வர நாயக்கர் நரசநாயக்கரின் பிரிதொரு முகவர். ஆனால், இவர்கள் கர்நாடகத்தில் இருந்த அரசோடு நேரடியான தொடர்பில் இல்லை. காட்டாக, சேத்துப்பட்டு நாயக்கரின் மகனான கொண்டமநாயக்கர், படைவீட்டுசீர்மையின் காலாட்டிசூர்யநாயக்கரின் அனுமதியோடு தேவிகாபுரம்கோயிலின் ஆயர்குடும்பத்திற்கு கொடையளித்தார்.

20.நாயக்கர்கள் மத்திய அதிகாரிகளுடன் பல அடுக்குநிலைகளில் அரசியல் உறவு கொண்டிருந்தனர். இவ்வுறவினை உள்ளடுக்குநிலமானியமுறை (sub-ifeudation) என்றார் NK. கோயில் நிலங்கள் சிலநேரங்களில் நாயக்கர் அல்லாதாருக்கும் குத்தகைக்கு விடப்பட்டன. அவர்கள் மன்றாடி (shepherd) வித்வான் (scholar) போன்றோர். சிலநேரங்களில் குளத்தினையும் அதனைசுற்றியுள்ள நிலங்களையும் சேர்த்து குத்தகைக்கு விட்டனர். அவை, பொதுவாக தாங்கல் எனப்பட்டன. இதுபோன்ற நிலங்கள் 500 குழியிலிருந்து 700 குழிகள்வரை இருந்தன. சிலநேரங்களில் 1500 குழிகள். இக்குத்தகை நிலங்கள் காணியாட்சி, காணிப்பற்று, உழவுகாணியாட்சி உரிமைகளுடன் விடப்பட்டன. சிலவற்றில் உழவு உரிமை தரப்படவில்லை. சிலநிலங்கள் அஷ்டபோக உரிமையுடன் வழங்கப்பட்டன. இது, பரம்பரை உரிமையினை உறுதிப்படுத்தின. குத்தகைதாரர்கள் உழவர்களை குடியமர்த்திக் கொள்ளும் உரிமையினையும் பெற்றனர். அவர்கள் குடியேற்றப்படுவது குடியேற்றி என்ற கல்வெட்டுத் தொடரால் பதியப்பட்டுள்ளது. இவ்வுழவர்கள் பொதுவாக குடிகள் எனப்பட்டனர்.

21.நிலவுடைமையில் அடுத்தகட்ட காலமாற்றம் 17-18ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்ததனை மிராசிதார் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் NK ஆய்ந்தார். இவ்விரு நூற்றாண்டுகளில் உருவான மாற்றம் 13 ஆம் நூற்றாண்டில் உருவானதைப் போன்றது. இவ்விரு காலகட்டங்களும் போரின் துயரங்களை அனுபவித்தன. முதல்கட்டத்தில் சோழர்அரசு நழுவி விஜயநகர அரசுக்குப் போனது; இரண்டாம் கட்டத்தில் உள்ளூர் அதிகாரம் பிரிடிஷ்ஆட்சிக்குள் விழுந்தது. இன்றைக்கு தென்னிந்தியா எதிர்கொள்ளும் வேளாண்சிக்கல்கள் (agrarian problems) 19 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனி அறிமுகப்படுத்திய ரயத்தவாரிமுறையினால் ஆகும். இம்முறை முன்பிருந்த வேளாண்குடிகளை (prevailing system) மாற்றியதால் உறபத்தி முறையும் (production pattern) மாற்றியது. நிலவுடைமைமுறைப் (landholding system) போன்றவற்றைப் பாதித்தன. இதன் தாக்கம் இன்றும் நடப்பில் உள்ளது என்றார் NK. ரயத்வாரி முறை பற்றி அறிவதற்கு பிரிடிஷாரின் ஆவணங்கள், அறிக்கைகள் பயன்படும். இவற்றில் Fifth Reports, Paers on Misasi Right, The Baraamahal Records என்பன பெரிதும் பயன்படும் என்றார். 1770-1820 காலகட்டத்தின் அலுவல்சான்றுகள் ஆய்விற்கு மிகவும் பயனுள்ளவை எனப்பரிந்துரைத்தார். இவற்றில் உள்ளூர் சான்றுகளும் அடங்கும். இவை பெரும்பாலும் பனையோலைகளில் எழுதப்பட்டவை. இவற்றுடன் மெக்கன்சி தொகுத்த ஆவணங்களின் முக்கியத்துவத்தினையும் உணர்த்தினார். கிறித்தவ மிசினரிமார்களின் ஆவணங்களும் பயணியர்களின் குறிப்புகளும் பயனுள்ளவை என்பதனையும் உணர்ந்திருந்தார். காலனிய அலுவலர் எல்லிஸ் தொகுத்தவை மிராசி ஆவணங்கள் எனப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனியார் தமிழ்நாட்டின் வடக்கில் (northern circar) சமீன்தார், முட்டாதார் முறையினை நிலவுடைமையில் அறிமுகப்படுத்தினர். இம்முறை செயலிழந்தபின் 1810களில் ஊர்குத்தகைமுறையினை (village lease system) அறிமுகப்படுத்தினர். இவ்வகை ஊர்கள் ஒரு வருமான அலகு (revenue unit) எனப்பட்டன. இவ்வகை ஊர் ஓர் ஊர்த்தலைவரால் (headman) ஆளப்பட்டன. இம்முறையும் வெற்றியடையவில்லை. எனவே, அடுத்து ரயத்வாரிமுறையினை அறிமுகப்படுத்தினர். இது ஒருசோதனை முறையில்தான் (trial and error) அறிமுகமானது.

22. இந்திய நிலமுறை (land system) பற்றிய ஆய்வில் சிறந்தவரான (Baden Powell) மிராசி உரிமையின் தோற்றுவாய் பாண்டியர், சோழர்காலத்தின் அரசரும் அலுவலாரும் பார்ப்பனர்க்கு கொடையளித்த முறையிலிருந்து தொடங்குகிறது என்றார் என்பது Noboru Karashima யின் கூற்று. சோழர், விஜயநகராட்சி கல்வெட்டுச் சான்றுகளில் நிலவிற்பனை, கொடை பற்றிய செய்திகள் போன்றே மிராசிபற்றிய எல்லிஸ் தொகுத்த ஆவணங்களும் நிலவுடைமைகளை விளக்குகின்றன. மிராசி உரிமையின் கூறுகள்: (1)தலைமுறை தலைமுறையான உரிமை (hereditay right) ஆனாலும், விற்கும் உரிமை உண்டு. (2) மிராசி உரிமை வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும். (3)இது தொண்டைமண்டலத்தில் (மான்யம்) வரிவிலக்கு பெற்றவை. இதுதவிர, ஒருமிராசி பிறவகை வரிகட்டும் நிலங்களில் இருந்தும் ஒருபாதி விளைச்சலில் உரிமை கோரலாம்.(4) ஒரே ஊரின்மேல் பலமிராசிகள் உரிமை கொண்டிருந்தால் அவர்களின்பங்கு பசுங்கரை அல்லது அறுதிகரை எனப்பட்டது. இங்கு கரை எனும் சொல் பங்கு என்ற பொருளில் ஆளப்படுகிறது. கரை எனுல் சொல் ஒரு குழுவின் பகுதி/குலத்தின் பகுதி (share of clan or lineage) என்றும் பொருள்படும். பசுங்கரையின்படி மிராசிகள் ஓராண்டு விளைச்சலை பங்கிடுவர் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கான விளைச்சலை பங்கிடுவர். அறுதிகரை என்றமுறையின்படி மிராசிஊர் பகுதிகளாகப் பங்கிடப்பட்டு தனித்தனியே சாகுபடிசெய்யப்படும். மிராசிநிலத்தில் உழும் உரிமை பெற்றவர் (right to vultivation) பயறுகாரி எனப்பட்டனர். இவர்கள் உள்குடிகள், பறகுடிகள் எனப்பட்டனர். உள்குடிகள் சாகுபடிசெய்யப்படும் ஊரிலேயே வசிப்பர். அவர்களின் உழும் உரிமையினை மிராசிகளால் மாற்ற முடியாது. பறகுடிகளின் உழும் உரிமை இதற்கு மாறானது. மிராசிகள் உரிமைபெற்ற தங்கள் நிலங்களுக்கு அருநீர், முறைநீர் முறையில் பாசனம் பெற்றனர். பாசனம் தொடர்பான மேலும் சில உரிமைலையும் பெற்றனர். இவ்வுரிமைகள் பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் நிலவுரிமை பெற்றவர்களை நினைவூட்டுகிறது. இவர்கள் நிலத்திற்கு உரமிடும்உரிமையும் பெற்றனர் என்று அறிய முடிகிறது. இது போன்றதொரு கல்வெட்டு குறிப்பு சோழர் காலத்தில் உண்டு. மிராசி நிலபரிவர்த்தனை பல சாதிகளுக்கு இடையே நிகழ்ந்தது. முதலிகள், பார்ப்பனர்கள், கிராமணிகளிடையே நிகழ்ந்தது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் 800 முதல் 1800 வரையிலான ஓராயிரம் ஆண்டுகாலத்தில் நிலவுரிமை சிறு சிறு மாற்றங்களுடன் தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வந்ததனை தம் ஆய்வில் Noboru Karashima வெளிக்கொணர்ந்தார். இவரலாற்றுப் போக்குளை அறிவதற்கு கல்வெட்டு சான்றுகள், செப்புப் பட்டயச் சான்றுகள், ஓலைச்சுவடிகள், தாள்களில் கிடைத்த சான்றுகள் என அனைத்துவகை சான்றுகளையும் பயன்படுத்தியுள்ளார். சான்றுகளின் தன்மை (medium) மாறினாலும் நிலவுடைமை பொறுத்து பொருள் (contents) பெரிதாக மாறவில்லைபோல் தோன்றுகிறது. இதனை நுணுகிப் பார்த்தால் நிலவுரிமைகள் ஆட்சியதிகாரத்தினை மாற்றினாலும் ஆட்சியதிகாரம் நிலவுரிமைகளை மாற்றினாலும் கோயில்கள் எவ்வித இழப்பும் இன்றி இன்றும் நிற்கின்றன. இதற்கான காரணிகள் தென்னக மக்களின் உளவியலை ஆய்ந்தால் பிடிபடும்.

#இக்கட்டுரை Noboru Karashima அவர்களின் மொழிபெயர்க்கப்பட்ட நூல் வெளியிடப்பட்டு 30 ஆண்டுகள் ஆனதையொட்டி எழுதப்பட்ட நூலறிமுக கட்டுரை. இந்நூல் பற்றி மேலும் விரிவாகவும் பேசலாம், எழுதலாம், உரையாடலாம்.

- கி.இரா.சங்கரன்