‘2009 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது இயற்றப்பட்ட ஒரு சட்டம், பட்டியலின வகுப்பினருக்கான 18%லிருந்து அருந்ததியர்களுக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கியது; இந்த உள் இடஒதுக்கீட்டால் அருந்ததியர் சமூகத்திற்கு பயனளிக்க முடிகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தி இந்துவின் கேள்விக்கு தொழில்நுட்பக் கல்வி (டிடிஇ) மற்றும் மருத்துவக் கல்வி & ஆராய்ச்சி இயக்குனரகங்கள் (டிஎம்இ) அளித்த பதில்களின் அடிப்படையிலான செய்தி இது. எம். பி. பி. எஸ் படிப்பைப் பொறுத்தவரை, பட்டியலின வகுப்பில் 2018-19 மற்றும் 2023-24க்கும் இடையில் மொத்த இடங்களின் எண்ணிக்கை சுமார் 82% அதிகரித்துள்ளது. அதாவது 3,600 இடங்களிலிருந்து 6,553ஆக உயர்ந்துள்ளது. மருத்துவம் படிக்கும் பட்டியலின வகுப்பினரில் அருந்ததியர் எண்ணிக்கை 2018-19ல் 107ஆக இருந்தது 2023-24ல் 193ஆக உயர்ந்துள்ளது’ (T. Ramakrishnan, The Hindu January 17, 2025).
இந்த நாளிதழ் செய்தியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் முன்னேற்றம் என்பது தானாக வந்துவிடவில்லை. அருந்ததியர் சமூகத்தினரின் நீண்டநெடிய அரசியல் போராட்ட முன்னெடுப்புகளின் மூலம்தான் சாத்தியமாகியுள்ளது. அதனுள்ளடங்கியதொரு செயல்பாட்டு வடிவம் இனமாட்சி உரிமை மீட்டெடுப்புக்கான நோக்கில் ஆய்வு நூல்கள் எழுதிக் கலந்துரையாடுவதாகும். வரலாறு நெடுகிலும் பார்த்தால் ஒருகாலத்தில் ஓங்கிய புகழுடன் தொல்குடிகளாய் இருந்தவை படையெடுப்பு, இடப்பெயர்வு, வணிகம், தொழில்-பொருளாதாரக் காரணங்களால் தகுதியிழந்து கையறுநிலை வகுப்பினராய் மாறுவது நடந்துகொண்டே வருகிறது. “சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஏறக்குறைய பன்னிரண்டாம் நூற்றாண்டுவாக்கில் தமிழ்நாட்டில் நிலவிய வலங்கை-இடங்கைப் போராட்டம் ஒரு மாற்று வழியில் தங்களை மேல்நிலையாக்கம் செய்து கொள்ள முயன்றதைக் காட்டுகின்றது. இது பார்ப்பனரல்லாத, வெள்ளாளர்கள் அல்லாத சமூக பிரிவுகள் ஆகும். இதில் வலங்கைப் பிரிவினர் இடங்கைப் பிரிவினரைவிட மேலானவர்களாகக் கருதப்பட்டனர். எனவே, இடங்கைப் பிரிவினர் வலங்கைப் பிரிவுக்கு மாறும் நிகழ்வுகளும் நடந்தன. இதில் வலங்கைப் பிரிவில் பறையர் உட்பட்ட 96 குலங்களும், இடங்கைப் பிரிவில் பள்ளர் உட்பட 96 குலங்களும் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வலங்கைப் பிரிவில் இருந்த சாதிகள் ஆளும் சாதிகளாகவும், இடங்கைப் பிரிவில் இருந்த சாதிகள் ஆளப்படும் சாதிகளாகவும் இருந்துள்ளன. வலங்கை இடங்கைப் போராட்டம் ஏறக்குறைய 19ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் நடந்துள்ளதற்கான சான்றுகள் கிடைக்கின்றன” (செ. கார்கி, சாதிய மேல்நிலையாக்கமும் ஆண்ட பரம்பரையும், கீற்று,09 ஆகஸ்ட் 2017). சமகாலத்தில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் கல்வியறிவுடன் பெற்ற அரசியல்வழி தமது தொல்லுரிமையை மீட்கப் போராடுகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் சங்க இலக்கியப் புறநானூற்றுப் பாடல் (335) தெளிவுபடுத்தும் தொன்மையான நான்கு குடிகளில் ஒன்றான பறையர் சமுதாயத்தினர், முக்கூடற்பள்ளு வரை பாட்டுடைத் தலைவர்களான தேவேந்திரகுல வேளாள சமூகத்தினர், தீண்டாமைக்கு எதிராகவும் தோள்சீலைக்காகவும் போராட்டம் நடத்தி வணிகரீதியாக எழுச்சிபெற்று, தாங்களும் நாடாண்ட பரம்பரையினர் என்றிடும் நாடார் சமுதாயத்தினர், தாங்கள்தாம் பாண்டிய, சோழப் பரம்பரையினர் என்றிடும் முக்குலத்தோர் மற்றும் படையாட்சி-வன்னியர் போன்றோர் தத்தம் இனவரலாற்று மாட்சிமைக்கான உரிமைக் கோரல்களை முன்னெடுத்துள்ளமை போன்று அருந்ததியர் வரலாறு தொடர்பாகவும் நூல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
எழுத்தாளர் ஜெயமோகன் தனக்கே உரிய மொழிநடையில் இத்தகைய மாட்சிமை உரிமைக் கோரல்களுக்கு எதிர்வினையாற்றியுள்ளார். “…வரலாற்றுப் பின்னணியில் நவீன இந்தியாவில் ஒரு பொதுப்போக்கு காணப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் கிடைத்த பொருளியல் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடையும் ஒவ்வொரு சாதியும் தன்னை சாதிப் படிநிலையிலும் மேலே கொண்டு செல்ல முயல்கிறது. அதற்கு அது இரண்டு அடையாளங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று ஒரு புராண அடையாளம். இன்னொன்று ஆட்சியதிகாரம் சார்ந்த அடையாளம். புராண அடையாளம் என்பது இந்தியாவின் புராணமரபில் ஒரு இடத்தை, ஒரு தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்வதாகும். இந்திரன், விஸ்வகர்மா போன்ற தேவர்கள் அல்லது காஸ்யபர் போன்ற ரிஷிகளின் மரபில் வந்தவர்கள் என்ற அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுதல். இதன்மூலம் இந்தியாவின் பிரம்மாண்டமான இறந்தகாலத்துடன் அவர்களால் தங்களை பிணைக்க முடிகிறது. அந்த அடையாளம் அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. அடுத்தபடியே ஆண்ட வம்சம் என்னும் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுதல். ஒருகாலத்தில் ஆட்சிசெய்த வம்சமாக இருந்தோம் என்பது பெருமிதத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது. உண்மையில் இந்தியாவில் உள்ள மிகச்சில சாதிகளைத் தவிர அனைத்துச்சாதியினரும் எங்கோ, எப்போதோ சிறிய அளவிலேனும் ஆட்சியாளர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் அந்த அடையாளத்தைப் பெரிதாக ஆக்கிக்கொள்ளமுடியும். இதன் விளைவாகவே இன்று ‘ஆண்ட பரம்பரை’ என்ற சுயவரலாற்று உருவாக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது சாதிய அரசியலின் ஒரு பகுதியே ஒழிய இதற்கு வரலாற்று அடிப்படை என ஏதும் இல்லை. இன்று அதிகமும் பொருளியல் முன்னேற்றமும் ஆட்சியதிகாரமும் பெற்று வருபவர்கள் இடைநிலைச்சாதிகள். அவர்களுக்கு இந்த இரு அடையாளங்களும் பெரிதும் தேவைப்படுகின்றன” (மன்னர்களின் சாதி, ஜெயமோகன், February 10, 2017). இவரிடம் வந்தேறிகளான பல உயர்சாதியினர் இடைநிலைச் சாதியினரை, மேலதிகமாக ஒடுக்கப்பட்ட சாதியினரை, வருண அடிப்படையில் அடக்கி அழுத்தியுள்ளமை குறித்த கருத்து வெளிப்படாத நிலையில், எல்லோரும் மேல்நிலையாக்கம் அடைய விரும்புவது குறித்து மட்டும் ஆதங்கப்படுவது தெரிகிறது.
“அருந்ததியரின் விடுதலைப் போராட்ட மற்றும் பாளையக்கார வரலாற்றை இராசையாவும், அரசியல் வரலாற்றை பாதிரியார் மாற்கு (2001) அவர்களும், வீர மற்றும் இயக்க வரலாற்றை எழில். இளங்கோவனும் (2008), ஆன்மீக வரலாற்றை சதுர்வேதியும் (2019) பதிவு செய்திருப்பதன் மூலம் ஒட்டுமொத்த அருந்ததியர் சமூக வரலாறு மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ச. சீனிவாசன்(அறியப்படாத அருந்ததியர் வரலாறு, கீற்று 31 மே 2024). மேற்சுட்டியவற்றின் தொடர்ச்சியாக 2021இல் வெளியான ச. சீனிவாசனின் ‘தமிழக அருந்ததியர் வரலாறும் வாழ்வும்’, 2023இல் வெளியான ம. மதிவண்ணனின் நூல் ‘சக்கிலியர் வரலாறு’ என்றும் நூல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
‘சக்கிலியர் வரலாறு’ நூலாசிரியரை எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் வலைத்தளத்தில் பின்வருமாறு அறிமுகப்படுத்துகிறார்: “தலித் சாதியினரில் அருந்ததியர் மீது பல்திசைத் தாக்குதல் நிகழும் காலமாக இது இருக்கிறது. தமிழக மேற்கு மாவட்டங்களில் அடர்த்தியாகவும் பிறபகுதிகளில் பரவியும் வாழும் அருந்ததியரை ஏற்கெனவே பல நூற்றாண்டுகளாக ஆதிக்க சாதியினர் சுரண்டி வருகின்றனர். தமிழ்நாட்டின் பணப்புழக்கம் மிகுந்த, தொழில் சிறந்த கொங்குப் பகுதியின் முன்னேற்றத்திற்கு அவர்கள் உழைப்பு முக்கியமானது. உழைப்பின் அளவில் சிறிதுகூடப் பலன் பெறவில்லை. பழங்குடி இயல்புகளைப் பெரிதும் கொண்ட அருந்ததியர் தமிழ்நாட்டின் பிற சாதியினரால் அரசியல் ரீதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். அவர்கள் வீட்டு மொழியாகத் தெலுங்கு இருப்பதால் தமிழ்த் தேசியர்கள் தங்கள் எதிரியாகப் பார்க்கின்றனர். ‘வந்தேறிகள்’ என்று இழிவுபடுத்துகின்றனர். வட இந்தியர்கள் தமிழ்நாட்டு வணிகத்தைப் பெருமளவு கைப்பற்றிக் கொண்டிருக்கும் நிலையில் சொத்துடைமையோ அதிகாரமோ அற்ற அருந்ததியர்களை எதிரிகளாகப் பாவிப்பது என்ன வகை அரசியல் என்று புரியவில்லை. இவற்றை எல்லாம் எதிர்த்துக் களமாட அருந்ததியரில் மிகச் சிலரே இருந்தனர். இவர்களில் முக்கியமானவர் கவிஞர் மதிவண்ணன்.
இடதுசாரி இயக்கப் பின்புலத்தில் வந்து கவிஞராக அறிமுகமானவர். 2000ஆம் ஆண்டு வெளியான அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘நெரிந்து. ’ அதற்கு நான்தான் முன்னுரை எழுதினேன். செயல்திறமும் துடிப்பும் மிக்கவரான மதிவண்ணனை சூழல்தான் அரசியல் செயற்பாட்டாளர் ஆக்கியது. சமீபத்தில் தமிழ் இந்து இதழில் வெளியான நேர்காணலில் (04-01-25) ‘அவசியம் செய்து முடிக்க வேண்டிய ஒரு முக்கியமான வேலையை யாரும் செய்யாத போது நான் செய்கிறேன்’ என்று சொல்லியிருந்தார். அது முற்றிலும் உண்மை. மதிவண்ணனின் இலக்கியச் செயல்பாடும் தொடர்ந்து வருகிறது. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகளையும் (நெரிந்து, நமக்கிடையிலான தொலைவு, ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா, நவகண்டம்) ஆறு கட்டுரை நூல்களையும் வெளியிட்டுள்ளார். மராத்தி எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலே எழுதிய ‘தலித் பார்ப்பனன்’ என்னும் சிறுகதை நூலையும் ‘ஓலம்’ நாவலையும் மொழிபெயர்த்துள்ளார். இப்போது லிம்பாலேவின் ‘கும்பல்’ நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். அவரது அரசியல் பணிகளில் இரண்டு மிகவும் முக்கியமானவை. அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக் கோரிக்கை மேலெழுந்து வந்தபோது அவர் எழுதிய ‘உள் ஒதுக்கீடு: சில பார்வைகள்’ நூலும் அதைத் தொடர்ந்து அவர் எடுத்த முயற்சிகளும் முதல் பணி. அருந்ததியர் உள் ஒதுக்கீடு கிடைத்ததில் மதியின் பங்கு கணிசமானது. 2010ஆம் ஆண்டு தொடங்கிப் பதின்மூன்று ஆண்டுகளாகக் கல்வெட்டு, செப்பேடு முதலிய ஆவணங்களை எல்லாம் தேடிப் படித்து ஆய்ந்து அவர் எழுதிய ‘சக்கிலியர் வரலாறு’ என்னும் நூல் இரண்டாம் பணி. ”
இந்நூலை நூலாசிரியர் ‘பகடை வீரத்தையும் பெருமையையும் போற்றி ஊரைப் பேச வைத்த மாதிகன் மதுரை வீரனுக்கு’ என்று அர்ப்பணித்துள்ளார். பின்னிணைப்புகள் உட்பட 14 தலைப்புகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.
முதல் மூன்று தலைப்புகளின் பொருண்மை என்பது சக்கிலியர்கள் ஆந்திராவிலிருந்து விஜயநகரப் படைகளோடு வந்தவர்கள், தோல் தொழில் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டவர்கள் என்று கருத்துரைத்தோரைக் கண்டித்து மறுப்பதாக அமைந்துள்ளது. சக்கிலியரை முதன்முதலில் கழிவகற்றும் தொழில் செய்வோராக ஆவணப்படுத்தியவர் அபேதுபே; காலனியக் காலத்தில் அவரைப் பின்பற்றி மாவட்ட கெஜட்டியர்கள் எழுதிய ஆங்கிலேயர் அனைவரும் அவரையே பின்பற்றி ஆவணப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தையும் ரங்காச்சாரி துணையுடன் பரிசீலித்த தர்ஸ்டன் அவர்களைக் குற்றேவல் புரிவோராக ஆவணப்படுத்தியுள்ளார்.
எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் நூலில்(ப. 2) “தெலுங்கு பேசப்படும் பகுதிகளுக்குரிய மாதிகர்களுக்கு ஒப்பானவர்கள் தமிழ்நாட்டில் தோல் தொழில் பணிபுரியும் சக்கிலியர். இவர்கள் தெலுங்கு, கன்னடம் வழங்கும் மாவட்டங்களிலிருந்து வந்து குடியேறி இருத்தல் வேண்டும். தொன்மையான தமிழ்க் கல்வெட்டுகளிலோ இலக்கியங்களிலோ இவர்களைப் பற்றிய குறிப்பேதும் இல்லை” என்பதை அடியொற்றி நா. வானமாமலை முத்துப்பட்டன் கதை நூலுக்கான முன்னுரையில் மேற்படி கருத்தையொப்ப எழுதியுள்ளார். அருந்ததியர் வரலாறு எழுதிய பாதிரியார் மாற்கும் மூவேந்தர் யார்? என்ற நூல் எழுதிய இரா. தேவ ஆசீர்வாதமும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதாய்ப் பதிவிட்டுள்ளனர். கதைப்பாடல்களில் ஆய்வு செய்வோரும் இதே கருத்தை வழிமொழிந்துள்ளனர். இவர்களை மதிவண்ணன் சக்கிலியர் இருப்பு பற்றிச் சுட்டும் செங்கம்(1258), திருவண்ணாமலை (1202) கல்வெட்டுகளைச் சான்றுகாட்டி மறுக்கிறார்.
கிருஷ்ணதேவராயர் ஆண்ட காலம் 1509 – 1529 என்றும் அவர் வருகைக்கு முன்னரே பூர்வகுடிகளாய் வாழ்ந்துள்ளனர் என்கிறார். சிறுவாலை ஜமீனின் 1323ஆம் ஆண்டு செப்பேடு பல்வேறு சக்கிலியர் பிரிவுகளையும், புலவர் செ,ராசுவின் கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள் சுட்டும் 1499ஆம் ஆண்டு பட்டயம் பல்வேறு பகடைப் பிரிவுகளையும் அவர்கள் உரிமையுடன் வாழ்ந்தது பற்றியும் தரவுகள் காட்டுகிறார். தர்ஸ்டன் ஆந்திர மாதிகர்களின் வாழ்வியலும் தமிழக சக்கிலியர் வாழ்வியலும் வேறுபட்டவை என்றுள்ளதையும் காட்டுகிறார். கட்டபொம்மு கதைப்பாடலில் உள்ள சக்கிலியர் படை, பகடையர் படை வீரர்கள் பற்றி நா. வானமாமலை இருட்டடிப்பு செய்வதைக் கடுமையாகக் கண்டிக்கிறார். இதேபோல் கல்வெட்டு, செப்பேடு உள்ளிட்டவை கொண்டு தென்னிந்திய வரலாறு எழுதிய கே. கே. பிள்ளை மற்றும் கொங்குநாடு நூல் எழுதிய வீ. மாணிக்கம் போன்றோரும் சக்கிலியர், பகடை, அருந்ததியர் பற்றி இருட்டடிப்பு செய்துள்ளதைச் சுட்டிக் கண்டிக்கிறார்.
நூலில் அடுத்து அமைந்துள்ள ஏழு தலைப்புகளின் பொருண்மை சக்கிலியரின் தொல் இன மாட்சிமை பற்றியதாய் உள்ளது. கல்வெட்டுகள் தென் – வட ஆர்க்காட்டுப் பகுதிகளில் சக்கிலி துர்க்கம், சக்கிலிக்கோட்டை பற்றியும் அவர்கள் அரசாண்டதையும் ராபர்ட் சிவல் எனபவர் தொகுத்த The Antiquarian Remains இலிருந்து தரவு காட்டியுள்ளார். “சக்கிலியர், பகடை எனப் பெயர் குறிப்பிடும் கல்வெட்டுகளில் காலத்தில் முந்தியவை மூன்று. அவற்றுள் முதலாவது கல்வெட்டு பிரம்மதேசத்தில் காணப்படும் கி. பி. 963ஆம் ஆண்டின் கல்வெட்டாகும். அதைத் தொடர்ந்து கி. பி. 973ஆம் ஆண்டைச் சேர்ந்த திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயக் கல்வெட்டு காணப்படுகிறது. மூன்றாவது திருவண்ணாமலையில் உள்ள கி. பி. 1030ஆம் ஆண்டைச் சேர்ந்த ராஜேந்திரச் சோழன் காலக் கல்வெட்டு. அக்கல்வெட்டு சக்கிலியன் குண்டில் என குறிப்பிடுகிறது. ஆயினும் பல்லவப் பகடையின் பெயரைக் குறிப்பிடும் கல்வெட்டு பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. கி. பி. 973ஆம் ஆண்டிலும் சக்கிலியர்கள் அரசர்களாக இருந்திருக்கின்றனர்”(ப. 80) என்கிறார். இச்சாதியைச் சேர்ந்த அரசர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்துகிறார்.
1. வீரகம்பண உடையார் பகடை - கி. பி. 1368ஆம் ஆண்டை ஒட்டிய காலப்பகுதி
2. பயிண்டி அரசர் (அய்யலுப் பகடையின் தகப்பன்) - கி. பி. 1406க்கு முந்திய காலப்பகுதி
3. அய்யலுப் பகடை - கி. பி. 1406ஆம் ஆண்டை ஒட்டிய காலப்பகுதி
4. கொப்பரசர் மாதி அரசர் - கி. பி. 1412ஆம் ஆண்டை ஒட்டிய காலப்பகுதி
5. சக்கரசர் பற்றி கி. பி. 1432, 1435, 1436 கால கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன.
இவ்வரசர்களின் கல்வெட்டுகள் திருப்புக்குழி, திருவாலங்காடு, திருமுல்லைவாயில், ராமகிரி, திருப்பதி, காலஹஸ்தி ஆகிய ஊர்களில் கிடைக்கின்றன. ஆகையால் இவர்களது ஆட்சிப் பகுதி காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, சித்தூர் ஆகிய மாவட்டப் பகுதிகளில் பரவியிருந்தது என்று தெரிகிறது”(ப. 70) என்கிறார். மதுரை வீரன் 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவன்; மதுரைவீரன் அம்மானை மற்றும் கதைப்பாடல் ஆய்வுகளைச் சுட்டி நாயக்கர் காலத்தில் அரசகாவல் பணி செய்தவன் என்கிறார். 18-19ஆம் நூற்றாண்டுகளிலும் வீரபாண்டிய செக்கிலியர், சின்னத்தம்பி, ஒண்டிவீரன் போன்ற நெல்லைப் பகுதியில் ஆண்டவர்களையும், கொங்குப் பகுதியில், நடுநாட்டில் சக்கிலி ஏரி, சக்கிலி அணை, சக்கிலி மலை இருந்துள்ளதையும் ஆவணங்கள் மூலம் எடுத்துக்காட்டுகிறார்.
தொடர்ந்து பல்லவ அரசன் சக்திவிடங்கனின் மாமன் பல்லவ பகடை என்பதைக் கொண்டு பல்லவர்களோடு தொடர்புபடுத்தியும், புல்லி, கலிக்குலம் என்று புறநானூறு, அகநானூறு பாடல்கள் சுட்டுவதைக் காட்டி அவர்களது வாகனம் ஆண் யானை என்றும் இம்மக்களைக் களப்பிரர்களோடும் பவுத்தர்களோடும் தொடர்புபடுத்திக் காட்டுகிறார். “புல்லியின் வாரிசுகளான கலிக் குலத்தைச் சேர்ந்த களப்பிரர்களுக்கும், சக்கிலியர்களுக்கும் என்ன தொடர்பு? யானையைக் குலமரபுச் சின்னமாய், அடையாளமாய் உடைய களபர்கள் என்பதன் தமிழாக்கமாகப் பகடை என்கிற பெயர் திகழுகிறது”(ப. 126) என்கிறார். சக்கிலி என்பதை ச+கலி=சக்கலி என்றும், சாவினை உடைமையாகக் கொண்ட கூற்றுவன் என்றும் பொருள் தருகிறார். “சக்கிலியர்கள் என்ற பெயரால் இன்று அறியப்படுபவர்களே வாணர்கள், வாணகோவரையர்கள், வாணாதிராயர்கள் என்று அறியப்பட்டார்கள். அவர்களின் பூர்வீக தாயகம் என்பது தமிழ்நாட்டின் வட எல்லையாய் உள்ள அருவா வடதலை நாடும், அருவா நாடும் என்பதை இலக்கியமும், வரலாறும் கூறுகின்றன.
வாணர்களின் ஆட்சி தொடங்கிய அருவா வடதலை நாடு பகுதியிலிருந்து அவர்களது ஆட்சி கடைசியில் முடிவடைந்த பாண்டியநாடு வரையிலும் அவர்களது தடயங்களையும், சான்றுகளையும் கொண்டுள்ள பகுதிகளில் எல்லாம் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே பிரிவினர் சக்கிலியர் தாம். அதோடு வாணர்களைப் போல தெலுங்கு மொழியையும், தமிழையும் கைக்கொண்ட சாதியாய் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் வாழ்ந்து வரும் ஒரே பிரிவினர் சக்கிலியர்தாம் என்பது திண்ணம்”(ப. 183) என்கிறார். உதயேந்திரம் மற்றும் குடிமல்லம் செப்பேடுகள் மூலம் சக்கிலியத்திரை(கப்பம்) கட்டிய செய்தி, அவர்கள் வீழ்த்தப்பட்டு 200 ஆண்டுகளில் கங்கர்களின் ஓம்படைக் கிளவிகளில் இழிவாக பதியப்பட்ட செய்திகளைத் தருகிறார். சுபாஷிணி மற்றும் பிறர் மேற்கொண்ட தமிழகச் சாதிகளின் மரபணு தொடர்பான ஆய்வின் மூலம், “சக்கிலியர், அகமுடையார், அம்பலக்காரர் ஆகிய சாதிகள் (தெற்காசியத்திற்கான) M வகை மரபணுவை மிகக் கூடுதலான அளவில் கொண்டுள்ள மிக மூத்த குடிகளாக இருக்க வேண்டும்” என்றும் அதன்வழி சக்கிலியர் தொடர்பாக இதுவரை கல்வெட்டுகள், இலக்கியச் சான்றுகள் கொண்டு “சக்கிலியர்கள் வந்தேறிகள் அல்லர். தமிழ்நாட்டின் மிக மூத்த குடிகளில் ஒரு குடி என்ற செய்தியை வேறொரு புள்ளியிலிருந்து நிறுவுவதாக அமைகிறது. இந்த அடிப்படையில் சக்கிலியர் என்று அழைக்கப்படும் வாணர்கள் தமிழரே என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம்”(ப. 217) என்கிறார்.
நூலின் இறுதி மூன்று தலைப்புகளின் பொருண்மை சக்கிலியரின் வீழ்ச்சி மற்றும் இன்றைய நிலை குறித்து அமைந்துள்ளது. “வாணர்களின் வரலாற்றில் மிகப் பெரும் பின்னடைவு என்பது அச்சுதராயன் காலத்தில் ஏற்பட்டது என்று சொல்ல முடியும். அச்சுதராயன் காலத்தில் நாயக்கர்களின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டு மதுரை, செஞ்சி, வேலூர் ஆகிய ஊர்களைத் தலைமை இடமாகக் கொண்டு ஆளப்பட்டது. நாயக்கர்கள் ஆட்சி ஏற்படுத்தப்பட்ட பின்பு வாணர்கள் என்ற சக்கிலியர் மெதுமெதுவாகத் தங்கள் முக்கியத்துவத்தை இழந்து சமூகத்தின் கீழ் அடுக்கிற்குத் தள்ளப்பட்டுக் கீழ்நிலை அடைந்தார்கள்”(ப. 227) என்கிறார். “திம்மச் சக்கிலி என்பவன் நீலன் பார்ப்பான் என்பவனுக்கு 30 பொன் கடன் கொடுத்த செய்தி பதிவாகி இருக்கிறது. அப்படியெனில் சக்கிலியர் அக்காலப் பகுதியில் சிறப்பான நிலையில் இருந்ததை அந்தச் செய்தி நிறுவுகிறது” (ப. 283) என்றும் “கி. பி. 1580ஆம் ஆண்டுக்குப் பிறகு வீரப்ப நாயக்கர் சக்கிலியர் என்ற வாணரை முழுமையாக வென்று பதவியிலிருந்து விலக்கியதற்குப் பிறகு, சக்கிலியர்கள் பிழைப்பிற்காக தோல் தொழிலுக்குப் போக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சக்கிலியரின் சமூக வீழ்ச்சி தொடங்கியது என்று சொல்லலாம். அங்ஙனம் வீழ்ச்சியடையத் தொடங்கிய சக்கிலியர்கள் அதைத் தொடர்ந்து வந்த காலனிய ஆட்சிக் காலத்தில் அத்தொழிலிலிருந்தும் ஓரம் கட்டப்பட்டு மலம் அள்ளிகளாக, துப்புரவுப் பணியாளர்களாக மாற்றப்பட்டு தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், இந்தியாவின் அண்டை நாடுகளிலும் சிதறடிக்கப்பட்டார்கள்” பக். 283-284) என்றும் கூறி முடிக்கிறார்.
மதிவண்ணன் சக்கிலியர்-பகடையர்-அருந்ததியர் மற்ற குடிகளைப் போலவே தமிழகத்தின் பூர்வகுடிகளாகவும் ஆள்வோராகவும் வாழ்ந்துள்ளனர்; வலிந்து இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்ற பொருண்மை குறித்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதி வந்த கட்டுரைகளை ஒருங்கமைத்து இந்நூலாக்கியுள்ளார். அந்தவகையில் நூலில் கூறியது கூறல் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. இதைத் தவிர்க்க இந்நூலை கல்வெட்டுக்கள், செப்பேடுகள், நடுகற்கள், சங்க இலக்கியம் மற்றும் கதைப்பாடல் தரவுகள் என்ற போக்கில் கட்டமைத்திருந்தால் நன்றாக அமைந்திருக்கும் என்று கூறத் தோன்றுகிறது. மதுரைவீரன் மனிதனிலிருந்து தெய்வத்தன்மை அடைந்தவனாக அவதானிக்கப்படுகிறான். வாணர்கள் வழித்தோன்றலில் காட்டும் போது முன்பு அவர்கள் பாணரசர்களாகவும் புராணத் தொன்மம் கூறும் பாணாசுரன் வம்சம் என்பதும், ஏற்கெனவே இவ்வரலாறு எழுதியோர் அருந்ததி தொன்மத்தோடு பிணைத்திருப்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. பிரிட்டானிகாவின்படி தொன்மம் என்பது ஒரு குறியீட்டுக் கதையாடல், பொதுவாகத் தோற்ற வரலாறு அறியமுடியாதது, சடங்கு வழிப்பட்டது, உண்மை நிகழ்வுகளோடு வலிந்து இணைப்பது, முற்றிலும் மதநம்பிக்கை அடிப்படையிலானது என்று வரையறுக்கிறது. அந்த ஓரிடம் தவிர இந்நூல் பெரும்பாலும் சான்றாதாரம் காட்டும் கல்வெட்டு, செப்பேடு, நடுகல் உள்ளிட்டவை வரலாற்று ஆய்வாளர்களால் அறிவியல்பூர்வமான புறச்சான்றுகளாக ஏற்கப்படுபவை. இலக்கியத்தரவுகளைக் கூட அவர்கள் அகச்சான்றுகளாகப் புறந்தள்ளுவதுண்டு. எனவே, இந்நூலின் பெரும்பாலான தரவுகள் தருக்க அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் திரட்டிய தரவுகள் பல இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் மேலதிகத் தரவுகள் திரட்டி இதே பொருண்மையில் நூல் வெளியாவது அவசியமாகிறது.
ம. மதிவண்ணன், சக்கிலியர் வரலாறு,
கருப்புப் பிரதிகள், சென்னை, 2023, விலை ரூ. 350/-
- நா. சந்திரசேகரன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி.