ஒரு நூல் ஏன் எழுதப்பட வேண்டும்? என்பதைக் காட்டிலும் அது ஏன் வாசிக்கப்பட வேண்டும்? என்பதில்தான் அந்நூல் பெரிதும் கவனம் பெறுகிறது. கல்விப்புலச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் ‘மெக்காலே: பழமைவாதக் கல்வியின் பகைவன்’ என்னும் இந்நூல் பெரிதும் கவனம் பெற்றுள்ளது. சேலம், பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் பேராசிரியராகவும், முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மைய இயக்குநராகவும் பணிசெய்துவரும் முனைவர் இரா. சுப்பிரமணி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல் சாளரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் வெளியானதற்குப் பின்னர் பலராலும் பேசுபொருளாக மாறியுள்ளது. அச்சு ஊடகங்களில் எழுத்து வடிவங்களாகவும், குரல்வழிச் செய்திகளாகவும், முகநூல் பதிவுகளாகவும் இந்நூலுக்கான மதிப்பீடுகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. மெக்காலேவை நுவல்பொருளாகக் கொண்டு நூற்று அறுபது பக்கங்களைக் கொண்டமைந்த இந்நூல் இந்தியாவில் ஆங்கிலக் கல்வி, தாமஸ் பாபிங்டன் மெக்காலே, இந்தியாவில் மெக்காலே, மெக்காலே கல்விக் குறிப்பு, மெக்காலேவுக்கு ஆதரவும் எதிர்ப்பும், மெக்காலே கல்வியின் உள்ளீடுகள், மெக்காலேவின் இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகிய ஏழு உள்ளடக்கங்களைக் கொண்டு அமைந்துள்ளது. பின்னிணைப்பில் மெக்காலேவின் கல்விக் குறிப்பு குறித்து விளக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்நூலின் ஆக்கத்திற்கு உதவிய சான்று நூல்கள், கட்டுரைகள், அறிக்கைகள் ஆகியன நூலின் நிறைவாகத் தரப்பட்டுள்ளன. இவை இவ்வரலாற்று நூலாக்கத்திற்குத் தகுந்த சான்றாதாரங்களை வழங்குகின்றன. இச்சான்றுகளின் துணைகொண்டே இந்நூலாசிரியர் தன் கருத்துகளை இதுகாறும் வழங்கப்பட்டுவந்த கருத்துகளுக்கு எதிராக வாதம் செய்கின்றார். மேலும், அவர் தான் அணிந்துகொண்ட முடிந்த முடிவுகளை நூலுக்குள் புகுத்தாமல் தரவுகளின் அடிப்படையில் அவற்றை வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்தி முடிவுகளை வெளிப்படுத்துகிறார்.

subramani book on Macaulayஇந்நூல் ‘எப்போது நாம் தலைநிமிர்வோம்’ என்னும் வைகறை அவர்களது பதிப்புரையோடும், ‘வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி வாசிப்போம்’ என்ற நூலாசிரியரின் முன்னுரையோடும் தொடங்குகிறது. “மெக்காலே உருவாக்கித்தந்த கல்விமுறையானது அன்றைக்கு இந்தியாவிலிருந்த “திண்ணைப் பள்ளிக்கூட” கல்விமுறையைத் தூக்கியெறிந்தது. சமூக விழிப்புணர்வுக்கும் மறுமலர்ச்சிக்கும் அந்தக் கல்விமுறை வித்திட்டது. ஆனால் மெக்காலே வாழ்ந்தபோதும், வாழ்ந்து மறைந்து இருநூற்றாண்டுகள் ஆன பின்னரும்கூட விவாதத்திற்குரியவராகவே இருக்கிறார். ஏன் இவ்வாறு விவாதப் பொருளாக இருக்கிறார் என்ற நெடுங்கால வினாவுக்கு இந்நூல் வழிகாட்டலாம் (ப. 5) என வெளிப்படையாகவே மெக்காலேவின் மீதான விமர்சனப் பார்வையோடு தம் கருத்தைத் தொடங்கும் பதிப்பாசிரியர் தொடர்ந்து நிறைவாக, “மெக்காலே அறிமுகப்படுத்திய ஆங்கில வழிக்கல்வி இந்தியாவுக்கு நல்லதைச் செய்ததா? கெட்டதைக் கொண்டு வந்து சேர்த்ததா? என்று விவாதிக்கவும் தெளிவு ஏற்படுத்திக் கொள்ளவும் இந்நூல் ஓரளவு உதவும் என்று நம்பலாம்” (ப. 7) என்கிறார். இங்கு அவர் ‘ஓரளவு’ என்று குறிப்பிடுவது மெக்காலேவிற்கு எதிராக நிற்கும் வாதங்களை எதிர்கொண்டு அவற்றிற்கு எதிர்வினையாற்றும் இந்நூலின் தரவுகளைத்தான் என்பது திண்ணம். நூலாசிரியர் தான் திரட்டிய சான்றுகளின்வழி மெக்காலேவின் கல்வி குறித்த சிக்கலான நிலைப்பாட்டிற்கு ஒரு துருப்பை வழங்கியுள்ளார் என்றே கூறவேண்டும்.

தொடர்ந்துவரும் நூலாசிரியரின் முன்னுரை மெக்காலே குறித்த புனைவுகளுக்கும், சான்றுகளற்ற வாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது. அரசியல், பொருளாதார வலிமைமிக்கவர்களால் பல வரலாற்றுச் சுருட்டுகள் உருவாக்கப்படக்கூடிய சூழலில் இந்நூல் சான்றுகளால் நிரப்பப்பட்டுள்ளது. வேண்டிய இடங்களிலெல்லாம் சான்றுகளின் ஆங்கில மூலத்தை அப்படியே அச்சிட்டும், அதற்கான தமிழ் மொழிபெயர்ப்புகளை இணைத்தும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வு அறமும் நடுவுநிலைமையும் இந்நூலின் முன்னுரையிலேயே பளிச்சிடுகின்றன. ‘வரலாற்றை விருப்புவெறுப்பின்றி வாசிப்போம்’ என்பதிலேயே நூலாசிரியரின் சார்பின்மைத் தென்படுகிறது. மெக்காலேவைத் தன் முன்னுரையில் மிக நேரடியாக, குறிப்பாக முதல் பத்தியாகக் கொண்டுவரும் நூலாசிரியர் பின்வருமாறு அவரை அறிமுகப்படுத்துகிறார். “இந்தியாவின் கல்விமுறையில் மிக மோசமான மாற்றங்களைக் கொண்டுவந்தவர். இந்தியாவில் தழைத்திருந்த கல்வி என்னும் அழகிய மரத்தைச் சிதைத்தவர்; இந்திய நாட்டின் பாரம்பரிய அறிவு, புராண மொழிகள், புராதன கலைகள், வேதநெறிகளை எல்லாம் ஒழித்தவர்; குமாஸ்தாக்களை உருவாக்குகின்ற கல்விமுறையை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தை அழித்தவர் என இன்றைக்கும் உணர்ச்சிப்பூர்வமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருபவர் தாமஸ் பாபிங்டன் மெக்காலே எனப்படும் மெக்காலே” (ப. 8) இவ்வாறு மெக்காலேவை அடையாளப்படுத்தும் போக்கு பலரால் முன்வைக்கப்படுகிறது என்பதுதான் நாம் உற்றுநோக்க வேண்டியதாகிறது. இவ்வாறு, மெக்காலேவின் இரண்டு பக்கங்களையும் ஆராயும் நூலாசிரியர் அதற்கான சில சான்றுகளைத் தன் முன்னுரையிலேயே வழங்குகிறார்.

“நாம் ஆண்டுகொண்டிருக்கும் பலகோடி மக்களுக்கும் நமக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராக இருக்கலாகும் ஒரு வகுப்பாரை உருவாக்குவதே இப்போது நம்மால் செய்யக்கூடிய சிறந்த செயல் ஆகும். அவர்கள் இரத்தத்தாலும், நிறத்தாலும் இந்தியர்களாக இருக்கும் ஒரு வகுப்பார்; ஆனால் சுவைகளால் ஆங்கிலேயர்களாக இருக்கவேண்டும்” (ப. 9) என்பதாக அமையும் மெக்காலேவின் ஒரு மேற்கோளை எடுத்துக்காட்டி இந்தியர்களை மொழிபெயர்ப்பாளர்களாக உருவாக்கிச் சிந்தனை ரீதியான அடிமைகளாக அவர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதென முதன்மை வாதத்தினைப் பலர் முன்வைப்பர். ஆனால், இந்நூலாசிரியர் இந்த மேற்கோள் முழுமையானது அல்ல என்று மெக்காலேவின் மேற்கோளில் மீதமுள்ள பகுதியையும் சுட்டிக்காட்டி மெக்காலேவின் மறுபக்கத்தை விளக்க முற்படுகின்றார். அம்மேற்கோள் பின்வருமாறு அமையப்பெற்றுள்ளது.

“இந்த நாட்டுத் தாய்மொழிகளைச் செழுமைப்படுத்தி அவர்களுக்குக் கையளிப்போம். மேல்நாட்டுப் பெயரீட்டு முறைகளிலிருந்து அறிவியல் சொற்களைக் கடன்பெற்று நாம் இம்மக்களுக்கு வழங்கும்போது அது, அவர்களின் மொழிகளின் ஊடாக வளமான அறிவைக் கொண்டுசேர்க்கும் ஊர்தியாக மாறும். படிப்படியாக மாபெரும் மக்கள்திரளுக்கு அறிவைக் கொண்டுசெலுத்தும் பொருத்தமான வாகனமாக அதை அவர்கள் பயன்படுத்தட்டும்” (ப. 9) இவ்வாறு முழுமையான மேற்கோள்களை ஒருங்கிணைத்து அவற்றை உற்றுநோக்குமிடத்து உண்மை புலப்படுகிறது.

மெக்காலேவின் கல்விக் கொள்கையின்மீது முன்வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு இந்தியாவின் பாரம்பரிய அறிவை அது பாழாக்கிவிட்டது என்பதுதான். உண்மையில் மெக்காலேவின் கல்விக் கொள்கைக்கு முன்னதாக இந்தியாவில் நிலவிய கல்விச் சூழலை நாம் புரிந்துகொள்வோமாயின் அத்தகைய நிலைப்பாட்டை நம்மால் அடையமுடியாது. குறிப்பாக மெக்காலேவின் கல்விக் குறிப்புகளின் வழியாகவே அவற்றை நாம் கண்டுணரலாம்.

“இங்கிலாந்திலுள்ள ஒரு இலாடக்காரன்கூட ஒப்புக்கொள்ள வெட்கும்படியான மருத்துவமுறைகளும், இங்கிலாந்திலுள்ள பாடசாலைகளில் படிக்கும் சின்னஞ்சிறிய சிறுமியருக்கும் நகைப்பை உண்டாக்கும் விபரீதமான வானசாஸ்திரங்களும், முப்பதடி உயரமுள்ள அரசர்கள் அறுபதாயிரம் வருஷம் ஆண்ட வரலாறுகளைக் கொண்ட சரித்திரமும், பாற்கடலும், நெய்க்கடலும் கொண்ட பூகோளசாஸ்திரமும் இங்குக் காணப்படுகின்றன. கற்பித்தல் என்பது அரசாங்கத்தின் கடமையாகாதென்றும், ஒரு கழுதையைத் தொட்டுவிட்டால் எத்தனை தரம் குளிக்கவேண்டும். என்ன மந்திரம் சொல்லிப் புனிதப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், ஒரு ஆட்டைக் கொன்ற பாவத்திற்குப் பரிகாரமாக எந்த வேதத்தை எத்தனை பாராயணம் செய்ய வேண்டுமென்றும் இந்திய மக்கள் தெரிந்து கொள்வதற்காக, நாம் சர்க்கார் வரிப்பணத்தில் கலாசாலைகள் நடத்துவது மாணவர்களின் இளமையை வீணாக்கும் நடவடிக்கை ஆகும். இப்படிப் பலவாறான முரண்பாடுகளுடன் இந்தியாவில் நிலவிவந்த சமஸ்கிருதக் கல்விமுறை என்பது திட்டமிட்டு இந்தியாவை இருளில் வைக்க, சிறப்பாகத் திட்டமிடப்பட்ட முறையாகும்” (ப. 11) என்றவாறு அமையப்பெற்ற மெக்காலேவின் கல்விக் குறிப்பு இந்தியாவில் நிலவிவந்த கல்வி முறையினைச் சாடுவதாக அமைந்துள்ளமையைக் காண முடிகிறது. மேற்கண்ட மெக்காலேவின் நேரடி கூற்றுகளின் வழியே அவர் யாரால், எதற்கு, ஏன் விமர்சிக்கப்படுகிறார் என்பதை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு நூலாசிரியர் வாதிக்கும்முறை மெக்காலேவின் இரண்டு பக்கங்களையும் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. வாசகர்களே வாதப்பிரதிவாதங்களை கருத்தில் கொண்டு முடிவுகளைப் பெறுகிற வண்ணம் நூலாசிரியரின் எடுத்துரைப்பு முறையும், மொழிநடையும் அமையப் பெற்றுள்ளமை இந்நூலின் சிறப்பாகக் கருதத்தக்கதாகும்.

‘இந்தியாவில் ஆங்கிலக் கல்வி’ என்பது இந்நூலின் முதல் உள்ளடக்கப் பொருண்மையாகும். மெக்காலேவின் வருகைக்கு முன்னர் இந்தியாவில் நிலவிய வாரன் ஹேஸ்டிங் பிரபுவின் கல்விக் கொள்கை குறித்த மதிப்பீடுகள் மற்றும் விமர்சனப் பார்வையை அறிந்து கொள்வதற்கு இவ்வுள்ளடக்கம் பயனுள்ளதாக அமைகிறது. முன்னதாக 1750ஆம் ஆண்டுவாக்கில் கிறித்துவ மத அமைப்பினர் இந்தியர்களிடையே தம் மதக் கருத்துகளைப் பரப்ப கல்விக்கூடங்களை நிறுவினர். அறக்கொடை நிறுவனங்கள் மூலமாக உதவிகளைப் பெற்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வந்தன. பின்னர் இந்தியர்களுக்குக் கல்வி வழங்குவதன் தேவையை ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி உணரத் தொடங்கியது. வாரன் ஹேஸ்டிங் பிரபுவால் 1780ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்விக் கொள்கைதான் ஆங்கிலேய ஆட்சியர்களால் 1835வரை பின்பற்றப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியில் பணிபுரிந்த சர் சார்லஸ் கிராண்ட் ஆங்கில வழியிலான கல்வியை இந்தியர்களுக்கு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கினார். இத்தகைய நிலைப்பாட்டை 1790 முதல் 1813 வரை அவர் இங்கிலாந்து சென்ற பிறகும் ஒரு பிரச்சாரமாகவே செய்துகொண்டிருந்தார். அவர் வாரன் ஹேஸ்டிங் பிரபுவின் கல்விக் கொள்கையைப் ‘பயனற்றதும் துயரம் மிகுந்ததுமாகும்’ என்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். இங்கு மிகவும் கவனிக்கத்தக்கதாக அமைவது யாதெனின், மெக்காலேவின் வருகைக்குப் பின்னரே ஆங்கிலவழிக் கல்விமுறை பெரிதளவில் நடைமுறைப்படுத்த ஊக்குவிக்கப்பட்டதென்னும் அவர் மீதான குற்றச்சாட்டைத்தான். ஆனால், அவர் வருகைக்கு முன்பே ஆங்கிலவழிக் கல்விமுறை மற்றும் ஆங்கிலப் பாடத்திட்டங்கள் தேவை குறித்த முன்னெடுப்புகள் நிகழ்ந்திருப்பதை இவ்வுள்ளடக்கப் பொருண்மை உரிய ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றன.

‘தாமஸ் பாபிங்டன் மெக்காலே’ என்னும் தலைப்பிலான உள்ளடக்கம் மெக்காலேவின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துரைக்கின்றது. அவரது வாழ்க்கைச் சூழல், குடும்பப் பின்னணி, பொருளாதார நிலை, கல்வி மற்றும் வளர்ந்த விதம், தனித் திறன்கள், ஈடுபாடு, படைப்புத் தளம் ஆகியவற்றை இவ்வுள்ளடக்கம் வெளிப்படுத்துகிறது. மெக்காலே மிகுந்த இலக்கிய ஆர்வம் மிக்கவர். மிகச் சிறப்பாக கவிதைகளை எழுதக்கூடியவர். பின்நாளில் மெக்காலேவை அவரது தந்தையின் மரணமும், தங்கை மார்கரெட்டின் மரணமும் வெகுவாகப் பாதித்தன. அவர் எழுதிய ஒரு கவிதையொன்று பிரிவுத்துயரையும், தனிமை வாழ்வையும் காட்சிப்படுத்துவதாக அமைவதை நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.

“ஒரு கல்லின்மீது இரு பறவைகள்

அமர்ந்திருந்தன அவற்றில் ஒன்று பறந்து சென்றது;

மற்றொன்று அங்கிருந்தது

ஆனால் அதுவும் பறந்து செல்ல,

அங்கு கல் மட்டுமிருந்தது

இப்போது அந்தக் கல்லும் அநாதையாகி விட்டது”

(ப. 65)

குறியீட்டுப் படிமங்களால் மட்டுமின்றிப் பெருந்துயரத்தினாலும் இக்கவிதை நிரம்பியுள்ளதைக் காணமுடிகிறது.

வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது இந்திய அவையின் உயர்மட்டக்குழு உறுப்பினராக இந்தியா வந்தடைந்த மெக்காலே பொதுக் கற்பித்தல் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் வந்தடைந்த எட்டு மாதக்காலத்தில் தனது கல்விக் குறிப்பின் மூலமாக அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக உருவெடுத்தார். சுமார் பதின்மூன்று பக்கங்களைக் கொண்ட அவரது கல்விக் குறிப்பின் முக்கிய அம்சங்களை விளக்குவதாக ‘மெக்காலே கல்விக்குறிப்பு’ என்னும் உள்ளடக்கம் அமைந்துள்ளது. மேலும், மெக்காலேவின் கல்விக் குறிப்பின் முழுமையான மொழியாக்கத்தை இந்நூலாசிரியர் பின்னிணைப்புப் பகுதியில் தந்துள்ளார். வாசகர்களின் புரிதலுக்கு ஏற்ப கல்விக் குறிப்புகளுக்குத் துணைத்தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. தனிச்சட்டம் தேவை, மொழியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை, நிதி உதவி இல்லை, இந்திய மொழிகளுக்கு உதவியில்லை, நிதியைப் பயனுள்ள வழியில் செலவிட வேண்டும், எந்த மொழியில் கற்பிப்பது?, தாய்மொழிக் கல்வி இல்லை, கடமையைத் தட்டிக் கழிக்கிறோமா?, ஐரோப்பிய முன் உதாரணங்கள், கற்பவர்கள் கற்பிக்கப்படும் மொழியைத் தீர்மானிக்க முடியாது, விரும்பியதைக் கற்க நாங்கள் பணம் அளிக்க வேண்டுமா?, இந்தியர்களின் உண்மையான விருப்பம், மதங்களிடையே நடுநிலைமை கடைபிடிக்கப்படும், இந்தியர்கள் ஆங்கிலத்தில் சிறப்பான நிலையை அடைவார்கள் ஆகிய தலைப்புகளை அடிப்படையாகக் கொண்ட விளக்கங்கள் உள்ளடக்கப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

மெக்காலேவின் கல்விக் குறிப்புகளுக்கு எதிரான அல்லது ஆதரவான கருத்து நிலைப்பாடுகளை இந்நூல் விளக்குகிறது. இதற்குமுன் இந்தியாவில் நிலவிவந்த கல்வி முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து, ஆங்கில வழியிலான கல்விமுறையை அறிமுகப்படுத்தி இந்திய மொழிகளைப் புறக்கணித்ததாகவும், மதக் கருத்துகளின் பரவலாக்கத்திற்குக் கல்வியைப் பயன்படுத்துவதாகவும் அவரது கல்விக்குறிப்புகள்மீது எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், உண்மைநிலை அவ்வாறில்லாமல் கல்வியில் ஊடுருவியிருந்த அறியாமையை நீக்கவும், சமயங்களின் ஆதிக்கம் கல்வியில் பெருகி இருந்தமையைக் களையவும் ஆங்கிலவழிக் கல்வியை மெக்காலே ஆதரித்தார். மேலும், இம்மொழியின் மூலமாக அறியாமை மற்றும் மூடநம்பிக்கைகளை விடுத்து இந்தியர்கள் அறிவியல் ரீதியிலான அறிவைப் பெற வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். இவரது கருத்துகளுக்குப் பலர் ஆதரவுகளையும் வழங்கியமையை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது.

மெக்காலேவின் கல்விக் குறிப்புகள் இச்சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தன என்பதை ‘மெக்காலே கல்வியின் உள்ளீடுகள்’ என்னும் உள்ளடக்கப் பகுதியில் பின்வருமாறு அமையும் விளக்கத்தின் வாயிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது. “பிராமணர்களின் குருகுலக் கல்விக்கும் சமஸ்கிருதத்திற்கும் முடிவுரை எழுதியவர் மெக்காலே என்பதனால்தான் இன்றளவும் அவர் மிக கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். மெக்காலேவின் வலிமையான கல்விக்குறிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இந்தியக் கல்வியின் நிலைமையும், இந்தியாவிலுள்ள மொழிகளின் தன்னுரிமையும் என்னவாகி இருக்கும் என்பதனைச் சற்றே யோசித்தால் மெக்காலேவின் கல்விக்குறிப்பு உருவாக்கிய மாற்றங்கள் எத்தகையது என்பதனை நம்மால் புரிந்துகொள்ள முடியும்” (ப. 120).

மெக்காலேவின் மற்றொரு முன்னெடுப்பு இந்திய தண்டனைச் சட்டம் ஆகும். அது குறித்து ‘மெக்காலேவின் இந்தியத் தண்டனைச் சட்டம்’ என்னும் உள்ளடக்கப் பகுதியில் இந்நூலாசிரியர் விரிவாகப் பேசுகிறார். வழக்கறிஞரான மெக்காலே இந்தியத் தண்டனைச் சட்ட ஆணையத்தின் உறுப்பினராக 1835ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் தன் பணியை முடித்து அதன் தொகுப்பேட்டை 1837 ஆண்டே சமர்ப்பித்துவிட்டார். ஆயினும், அவற்றில் பல மாறுதல்களை உருவாக்கி அச்சட்டம் 1862ஆம் ஆண்டுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், அச்சட்டம் குறித்த வன்மை மென்மைகளை ஆராய்வதாகவும் இவ்வுள்ளடக்கப் பகுதி அமைந்துள்ளது.

“மெக்காலே தனது சட்டத்தொகுப்பேட்டில் இங்கிலாந்தின் கசையடித் தண்டனையைத் தவிர்த்துவிட்டார். கசையடி அல்லது சாட்டையடி தண்டனை என்பது மிகக்கொடுமையான தண்டனை என மெக்காலே கருதினார். அதோடு இந்தத் தண்டனை எந்த வகையிலும் குற்றவாளியின் குணங்களைச் சீர்திருத்தப் பயன்படாது எனவும் கருதினார். மெக்காலே இவ்வாறு தனது சட்டத்தொகுப்பேட்டைத் தனித்துவம் கொண்டதாக நிறுவ முயன்றாலும், மொத்தமுள்ள இருபத்து நான்கு அத்தியாயங்களில் பதினாறு அத்தியாயங்கள் இங்கிலாந்தின் சட்டத்தொகுப்பேட்டின் வடிவம் போலவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், மெக்காலே தனது மொழியிலக்கிய அறிவு காரணமாக இந்தியச் சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை அல்லது தண்டனையை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற விளக்கத்தை இணைத்திருந்தார். இத்தகைய விளக்கம் இங்கிலாந்து சட்ட விதிகளில் காணப்படாத அம்சமெனக் கூறப்படுகிறது” (ப. 132). இவ்வாறு மெக்காலேவின் கல்விக் குறிப்புகளின் வாயிலாக அவர் முன்னெடுத்த பணிகளை விளக்கும் இந்நூல், ‘இந்தியத் தண்டனைச் சட்டம்’ என்னும் உள்ளடக்கத்தின் மூலம் மெக்காலேவின் வேறொரு முகத்தைக் காட்டுகிறது. கல்விக் குறிப்புகள் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகிய இரண்டிற்குமான தொடர்பு அல்லது இவை இரண்டையும் புரிந்து கொள்வதன் மூலமாக மெக்காலேவைப் புரிந்து கொள்ளுதல் என்னும் நிலைப்பாட்டில் இவற்றைத் தொகுத்து இந்நூலாசிரியர் தந்துள்ளார்.

மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரியைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் உருவாக்கப்படவில்லை என்பது இந்நூலாசிரியர் தரும் தன்னிலை விளக்கம் ஆகும். மாறாக இந்திய தேசத்தின் கல்வி வரலாறு என்பது விருப்பு வெறுப்பற்ற நிலையில் வாசிக்கப்பட வேண்டும் என்பதுவே அவரது நிலைப்பாடு. சுதந்திர இந்தியாவிற்குப் பிறகும் மெக்காலே உருவாக்கிய கல்வியியல் குறிப்புகள் பேசுபொருளாகவும், அதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் இன்றளவும் அமையப்பெறும் அரசியல் சூழலையும் புரிந்துகொள்வதற்கு மெக்காலேவை அவரது நேரடி எழுத்துகளின் மூலமாக வாசிக்க வேண்டும் என்னும் கருதுகோளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்நூல் நிச்சயம் இந்தியக் கல்வி மற்றும் சமூகச் சூழலை ஆராய முனையும் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய அரிய ஆவணமாகும். சமகாலத்தில் கல்விக் கொள்கைகள் குறித்தும், அவற்றின் உள்ளடக்கங்கள் குறித்தும் மிக விரிவான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி வாசலைத் திறந்த மெக்காலே பற்றிய விரிவான இந்த ஆவணம் கல்வி, சமூகம் மற்றும் அரசியல் சூழலில் மிகவும் கவனம் பெறுவதோடு, இந்தியச் சமூகம் கருத்தில்கொண்டு வாசிக்கப்பட வேண்டியதாகவும் அமைந்துள்ளது. மேலும், இந்தியக் கல்வி முறையினை மெக்காலேதான் தடுத்தார் என்னும் கற்பிதங்களைத் தகர்த்து அறியாமை, மூடநம்பிக்கைகள், புராணக் கதைகள் மற்றும் சமயச் சார்பு ஆகியவற்றைக் கடந்த எளிய மக்களுக்கான கல்வி முறையினை மெக்காலேதான் உருவாக்கினார் என்பதை மெய்ப்பிப்பதாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

- ரா. சிலம்பரசன், மதிப்புறு விரிவுரையாளர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 636 011.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.