இந்தியப் பகுதிகள் குறிப்பிட்ட காலகட்டங்களில் பல்வேறு ஐரோப்பிய அரசுகளின் ஆளுமைக்கு உட்பட்டும் மீண்டும் பிற அரசுகளால் மறுகையகப்படுத்தமும் செய்யப்பட்டன. இது தொடர் நிகழ்வாக நடந்தேறியதை இந்திய வரலாற்று வரிசைகள் பல நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. வணிகம் சார்ந்த அவர்களின் வருகையில் இடைப்பிறவரலாக, இந்திய நிலப்பகுதிகளின் ஆட்சியில் பங்குகொண்டு அவர்கள் நிகழ்த்திய குறுக்கீடுகள் கீழைத்தேய மக்களின் மதம், கல்வி, தத்துவம், வாழ்வியலின் பிற அம்சங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. அவற்றை ஏற்கத்தக்கதாக விதந்து கொண்டாடுவோரும் இந்திய அறிவு மரபையும் அதன் பண்பாட்டு வேர்களையும் முற்றும் முழுவதுமாக அழித்தொழித்ததாக வெறுத்துத் தூற்றுவோரும் உண்டு.

jayaseela stephen book on educationஉண்மையில் பிரித்தானிய வருகைக்கு முன்பே இந்தியாவில் அறிவுசார் செயல்பாடுகளின் தொடர்ச்சியைக் காணமுடிகின்றது. ஆவணமாக்கம் பற்றிய முழுமையான புரிதல் இல்லாவிடினும் இந்திய இலக்கியங்கள், அகழ்வாய்வு உள்ளிட்ட பிற ஆய்வு மூலங்களின் வழியும் பிறமொழி ஆய்வாளர்களின் குறிப்புகளின் வழியாகவும் இந்திய அறிவு மரபின் பரிமாணங்களையும் பரிணாமத்தையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. மருத்துவம், வானியல், கட்டிடக்கலை, கணிதம் உள்ளிட்ட அவர்களின் அறிவு மரபின் வெளிப்பாடுகளை மொழியின்வழி படைக்கப்பட்ட இலக்கியங்களின் துணைகொண்டே நாம் விரிவாகப் புரிந்து கொள்கிறோம். இலக்கியப் படைப்பாக்கத்தின் அடிப்படையாக அமையும் மொழி ஆளுமையை ஒரு படைப்பாளனுக்கு உறுதிப்படுத்துவதாக அமைவது அவனது கல்விப் பின்புலம். அது மட்டுமல்ல, ஒரு மனிதன் தனது வாழ்புலத்தில் பிற சமூகப் பிரக்ஞையுடன் தொய்வின்றி இயங்குவதற்கும் பிற சமூகப் பிராணிகளுடன் தொடர்பு கொள்வதற்கும் தேவைப்படுகின்ற அடிப்படைப் புரிதலையும் அறிவையும் கற்றல் என்ற செயல்பாட்டின் மூலமே பெறுகிறான். எனவே, பிரதிகளை வாசித்துத் தெளிதல் என்ற ஒற்றைப் பொருண்மையைத் தாண்டிய வெளியில் கற்றல் என்ற சொல்லை நாம் கையாளுவது அவசியம்.

தமிழ், தமிழர் வரலாற்றைப் பற்றிய புரிதலை விரிவாக்கிக் கொள்வதற்கான ஆய்வுகள் பல அண்மைக் காலங்களில் போற்றத்தகும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நியூ செஞ்சுரி புத்தகத்தின் தமிழ் மக்கள் வரலாறு வரிசையில் அத்தகைய கவனம் பெறத்தக்க நூலாகத் 'தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும்' என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் ஜெயசீல ஸ்டீபன் காலனிய ஆவணங்களை மையத் தரவாகக் கொண்டு அச்சுக் கலையின் மூலம் தமிழ் வளர்ச்சியின் புதுவாழ்வு, காலனியத் தொடக்க காலம், சிப்பாய்களும் போர்களும், அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகமும் காலனிய அடிச்சுவடுகளும், தண்டனையடைந்த தமிழ்க் குற்றவாளிகள், தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல், தமிழ் வளர்ச்சி தரங்கம்பாடியில் மொழிபெயர்ப்பு, உரைநடை நூல்கள் அச்சிடுதல் வாயிலாக முதலான பிற முக்கியமான நூல்களையும் எழுதி உள்ளார். இந்நூல் இன்றைய தமிழகம் புதுச்சேரி பகுதிகளில் இயங்கிய கத்தோலிக்க, லூத்தரன், புராட்டஸ்டண்ட் ஆகிய பல்வேறு கிறித்தவ மதப் பரப்பாளர்களின் வழியும் பிரெஞ்சு, ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனங்கள் வழியும் தொடங்கப்பட்ட பல்வேறு பல மொழி வழிப் பள்ளிகள் பற்றியும் அங்கு தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கத்திய கல்வி முறைகள் என 1567 தொடங்கி 1887 வரையிலான தமிழகத்தின் கல்வி நிலை குறித்த நுட்பமான பதிவை இப்புத்தகத்தின் வழி ஆய்வாளர் ஸ்டீபன் செய்து உள்ளார். ஆங்கில மூலத்திலிருந்து கி. இளங்கோவன் தமிழுக்கு இந்த நூலை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

இன்றைய சூழலில் கல்வி பற்றியும் மொழி பற்றியும் பேசுதல் அவை சார்ந்த உரையாடல்களை நிகழ்த்துதல் சமகாலப் போக்குகள் பற்றிய நமது அவதானிப்புகளைச் செய்தல் என்பதுகூட பல்வேறு கேள்விகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடமளிக்கும் களமாக மாறிவிட்டதை வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். அறிவு சார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் முடக்கப்படுகின்ற சூழல் எந்த இனத்தின் வளர்ச்சிக்கும் உகந்தது அல்ல. இந்தியர்களின் கல்வி வளர்ச்சியில் பிரித்தானிய ஆட்சியாளர்களின் பங்கு பற்றிய மாற்றுக்கருத்தினை அழகிய மரம் நூல் மையப்படுத்துகிறது. இந்தியாவின் மரபான கல்வி முறை பிரத்தானியர்களால் அப்புறப்படுத்தப்பட்டது பற்றியும் இடைநிலை, விளிம்புநிலைச் சாதியினர் கல்வியின் மைய நீரோட்டத்தில் கலக்காமல் விலக்கப்பட்டதற்கான காரண கர்த்தாக்களாக பிரித்தானிய ஆட்சியைக் குறிப்பிட்டுச் சொல்கிறது. இது ஏற்கத் தகுந்ததா? அது குறித்து நமது தமிழியல் ஆய்வு புலத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எத்தகைய கருத்துநிலையை முன்வைத்தார்கள் என்பதெல்லாம் இங்கு நினைத்துப் பார்த்தற்கு உரியது. காலனிய கால ஆவணங்களைத் தந்திரமான ஆவணப்படுத்தல் என்று குற்றம்சாட்டி மறுதலிக்கிற தரம் பால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி இந்தியாவின் மரபான கல்வியின் வேர்களைப் பிடுங்கிப் பரிசோதித்து அது மேலும் வளர முடியாத நிலைக்குக் கொண்டு சென்றார்கள் என்கின்றார். காலனிய காலக் கல்விமுறை பற்றிய வன்மை மென்மைகளை ஆய்வாளர் ஸ்டீபன் இந்த நூலில் எடுத்துக்காட்டவில்லை; தவிர வரலாற்றை உள்ளது உள்ளபடிப் பதிவு செய்கிறார். தமிழரின் கல்வி பற்றிய பல மொழி ஆவணங்களை ஒரு புள்ளியில் குவித்து உண்மை வரலாற்றை நமக்கு அறியத்தருகிறார். பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் மதப் பரப்பாளர்களின் பதிவுகள் இரண்டையும் ஒருங்கிணைத்துத் தமிழகத்தில் நிலவிய கல்வி வரலாறு இந்நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நூலின் முதல் பகுதி தமிழகப் பாரம்பரியக் கல்வி பற்றிய ஐரோப்பியப் பார்வையை எடுத்துக் காட்டுகிறது.

Ø     காலனியர்களின் கல்விப்புல ஆளுகையில், தமிழ்நாடு புதுச்சேரிப் பகுதிகளில் கல்விசார்ந்து பின்பற்றப்பட்ட முறைமைகள்,

Ø     பல்வேறு கல்விச் செயல்பாடுகள் வழியாக அவர்கள் சுதேசிகளுடன் ஊடாடிய முறைமை,

Ø     கல்வி என்கிற கருத்துநிலையை மதம் எத்தகைய புரிதலுடன் கைக்கொண்டது,

Ø     கிறித்தவ மதப் பரப்பாளர்களின் கல்வி முயற்சிகள்

ஆகியனவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை இந்நூலில் தருகின்றார் ஆய்வாளர் ஸ்டீபன். ஆங்கிலக் கல்விமுறையின் உள்ளடக்கத்தைத் தமிழக வைதீகச் சமயவாதிகள் மறுதலித்தமை, பாடநூல் தேர்வு முறை குறித்தும் சில இடங்கள் பேசுகின்றன. இடைக்காலத்தில் தமிழகத்தில் இயங்கிய பள்ளிகள் பற்றிய குறிப்புகளையும் எடுத்துக்காட்டுகிறார். தமிழகத்தைப் பொறுத்தவரைப் பள்ளிகள் குறிப்பாக வேத பாடங்களைக் கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் கோவில்களுடன் இணைக்கப்பட்டு ஆட்சியாளர்களின் ஆதரவுடன் ஒரு புறம் இயங்கியது. வைதீக மடங்களில் வேதம் தவிர்த்து சரகா, பாகாடா ஆகிய மருத்துவப் பாடங்களும் கற்பிக்கப்பட்டதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இங்கு கற்றவர்கள் யார்? அதன் மருத்துவப் பாடப்பகுதிகள் என்னவாக இருந்தன என்பது பற்றி மேலாய்வு செய்ய வேண்டிய தேவை நமக்கு உள்ளது. மற்றொருபுறம் பொதுமக்களின் ஊக்கத்துடன் செயல்பட்ட அவைதீகம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் இருந்தன; சமண, பௌத்தப் பள்ளிகள் வர்ணப் பாகுபாடற்ற கல்விப் பயிற்சிக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. அதற்கு மக்களின் பங்களிப்பு நிலம், பொன், ஆடு, மாடுகள் ஆகியனவற்றை நன்கொடைகளாகத் தருதல் என்ற வகையில் அமைந்திருந்தது. கல்வி கற்றல் கற்பித்தலில் முன்னரே இருந்த பிராமணர்கள் பிராமணர்கள் அல்லாதார் என்ற பாகுபாடோடு சேர்ந்து மதம் மாறியவர்களுக்கான பள்ளிகள் என்ற பிரிவும் காலனிய காலத்தில் உருவானது என்பது குறிக்கத்தக்கது. மதப்பின்னணியுள்ள கல்வி நிறுவனங்களில் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதேசியர்கள் தனித்த கல்வி நிறுவனங்களை உருவாக்கியமையும் நமது தமிழாய்வுப் புலம் அறிந்ததே.

குருகுலக் கல்வியும் திண்ணைப் பள்ளியும் நமது தொன்மையான கல்வி மரபின் அடையாளங்களாக இருக்கின்றன. இவை அன்றைய தமிழ் மக்கள் குழுக்களின் அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்துப் பொருளாதார வகுப்பினருக்கும் பொதுவானதாகவும் எட்டத்தக்க நிலையிலும் இல்லை. இத்தகைய சமூக இடைவெளிகளை இட்டு நிரப்பும் முயற்சியில் தொடக்க காலக் கல்வியியலாளர்களாக இருந்த பல்வேறு கிறித்தவ மதப்பரப்புச் சங்கங்களைச் சார்ந்தவர்கள் செயல்படவில்லை. மதப் பரவலாக்க நோக்கத்திற்காக அவர்கள் வந்து இறங்கிய கடற்கரையைச் சார்ந்த பகுதியிலுள்ள மக்களிடையே தங்கள் நோக்கத்தைச் செயல்படுத்துவதற்குக் கல்வி என்ற கருவியை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். காலனிய நிறுவனங்களும் மக்களை மூடநம்பிக்கையிலிருந்து விலக்கிப் பகுத்தறிவை வளர்க்கும் நோக்கில் ஆரம்பத்தில் செயல்படவில்லை. தங்கள் காலனிய அலுவலர்களின் நலனுக்காகவே முதலில் கல்வி நிறுவனங்களை அவர்கள் உருவாக்கினார். ஆனால் படிப்படியாக அவர்கள் கல்வித் திட்டத்தில் உள்ளூர் மக்களையும் இணைத்துக் கொண்டமை பற்றி நூல் பகுதிகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

மேலும் அவர்களது இத்தகைய செயல்பாடுகள் மூலம் பிற்காலங்களில் தமிழகத்தில் வெகுமக்கள் கல்வி சார்ந்து குறிப்பிட்டுச் சொல்லும்படியான நன்மைகளை அறுவடை செய்ய முடிந்ததையும் கவனப்படுத்தியுள்ளார். மதப்பரப்பாளர் சங்கங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பள்ளிகள், குருத்துவப் பள்ளிகள், ஆண்பால், பெண்பால், இருபாலர் பள்ளிகளிலும் இறைத்தத்துவம் சார்ந்த கிறித்தவக் கோட்பாடுகளும் மதநெறிகளும் ஒழுக்க நெறிமுறைகளும் அவர்களது நாட்பாடவேளைகளில் முக்கிய இடம் பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றார் (2024:61). என்றாலும் கூட எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்களாக மக்களை உருவாக்கியவர்கள் இவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கவே முடியாது. அதுபோலவே கல்விக்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்றென்றும் கவனத்தில் கொள்ளத்தக்கவையே. சான்றாக,

“11. 09. 1846 அன்று நாகப்பட்டினத்தில் இருந்த புனித ஜோசப் கல்லூரி ஓலைக் கொட்டகையை பேராசை மற்றும் பகை உணர்ச்சி காரணமாக சில எதிரிகள் தீ வைத்தனர். சில மாதங்களில் பாதிரியார் லூயி செயிண்ட்-சியர் கல்லூரியை சீரமைத்தார். 1852ஆம் ஆண்டு பெரும் புயல்காற்று கட்டிடங்களை முற்றிலும் சேதமடையச் செய்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மான்ட்கோமேரி கல்லூரியைக் கட்ட 500 ரூபாய் நிதியுதவி அளித்தார்” (2024:53).

1848ஆம் ஆண்டைச் சேர்ந்த மயிலாப்பூர் மறைமாவட்டப் பகுதியின் காப்பகச் சேமிப்பிலிருந்து பெறப்பட்ட முதன்மை ஆவணத்தை (Archives of the Arch-diocese of Madras Mylapore, Santhome, 1848) மூலமாகக் கொண்டு ஆய்வாளர் எடுத்துக் காட்டியிருக்கும் இந்தச் செய்தியை மேற்குறிப்பிட்ட கருத்துக்கு ஒரு சான்று.

மதச்சார்பற்ற கல்வி என்பது ஆரம்ப காலத்தில் சாத்தியமற்றதாக இருந்தாலும் பிற்காலத்தில் பிரித்தானிய காலனிய ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுக்கல்வி பகுத்தறிவையும் அறிவுப்பூர்வமாக மதிப்பீட்டுச் செயலாற்றும் தன்மையையும் கற்றுத் தந்தது. 1835இல் முன்மொழியப்பட்டு 1842களில் வில்லியம் பெண்டிங்கால் சீர்திருத்தம் செய்யப்பட்ட மெக்காலேயின் பொதுக் கல்விக்கான எழுத்துருக்கள் மதச்சார்பற்ற பொதுக் கல்வியையே மையப்படுத்தியது. கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அவர்கள் கைக்கொண்ட அச்சு ஊடகமும் அதன் துணை கொண்டு உருவாக்கப்பட்ட அடிப்படைப் பாடநூல்களும் தாய்மொழிவழிக் கல்வியை உறுதிப்படுத்தும் காரணிகளாக அமைந்தன. விளிம்புநிலைச் சாதியினருக்கான பிரித்தானிய அரசின் கல்வி சார்ந்த முன்னெடுப்புகளை நூலின் பல பகுதிகள் வெளிச்சப்படுத்துகின்றன. தமிழகத்தின் கல்வி வரலாற்றில் குறிக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திக் குலக்கல்வியைத் தகர்த்தெறிந்து உண்டு உறைவிடப் பள்ளி முதலான பல்வேறு பள்ளிகளை உருவாக்கி வட்டார மொழிகளிலும் மேலைத்தேய மொழிகளிலும் எழுத்தறிவு பெற்றவர்களாகப் பிற சமூகத்தினரும் உருவாவதற்கு வழிவகை செய்தது. இருமொழி மொழிபெயர்ப்பாளர்கள், மத போதனை உதவியாளர்கள், எழுத்தர்கள், ஆசிரியர்கள் என இப்புலம் சார்ந்து வேறுபட்ட தொழில்களும் தோற்றம் பெற்றமையையும் குறித்துச் செல்கிறார் ஆசிரியர்.

ஒரு சிறந்த ஆய்வு நூல் அது தொடர்பாக அதன் திசைவழிகளை நோக்கி அதன் வாசகனைச் செயல்படுத்தும். அதனை இந்நூல் செய்கிறது.

Ø     1741இல் புதுச்சேரியில் அடிமைகளுக்குக் கல்வி கற்பிக்க ஆளுநர் பிறப்பித்த ஆணை,

Ø     குளுனி- பெண் துறவிகளின் கல்விப் பணிகள் எத்தகையது?

Ø     1827 முதல் 1839 காலகட்டத்தில் செயல்பட்ட அரசுப் பணிக்கான பயிற்சி பள்ளியின் போக்கு,

Ø     சமண, பௌத்தப் பள்ளிகளின் ஒடுங்குதிசைக்கான காரணங்களை விளங்கிக்கொள்ளுதல்,

என மேலாய்வை நோக்கி வாசகனை நகர்த்தும் களங்களும் பல உள்ளன.

கல்வி பற்றிய ஓர்மையுடன் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகம் இருந்ததையும் பல குறிப்புகள் அறியத் தருகின்றன. சான்றாக, “சேலம் மாவட்டத்தில் குறிப்பாக எந்தவொரு இளம்பெண்ணிற்கும் எழுதப் படிக்கத் தெரியாது இருந்தபோது, ஒரு இளம் விதவை இரண்டு சிறுமிகளை புதுச்சேரிக்கு துறவியர் மடத்தில் கல்வி கற்க அழைத்து வந்தார் என்பதையும் சேலம் நகரத்திலிருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள அக்கிரவாரம் என்ற கிராமத்தில் இருந்து உறவினர்கள் 18 பேர் சேர்ந்து கூண்டுவண்டியில் வந்தனர்…” (2024:46) என்ற பகுதியைக் கூறலாம்.

நூலின் நான்காம் பகுதியில் தரங்கம்பாடியில் லூத்தரன் மதப்பரப்பாளர்களின் தமிழ்வழிப் பள்ளிகள் பற்றியும் கல்வியின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களையும் பதிவு செய்கிறார். சீகன் பால்குக்கு நான்காம் பிரெடரிக்கின் விருப்பத்தின் பேரில் தரங்கம்பாடிக்கு மதத்தொண்டாற்ற வந்த இருவரில் ஒருவர் சீகன்பால்கு மற்றொருவர் புளூட்சா. சீகன்பால்கு 1707இல் ஒரு தமிழ்வழிப் பள்ளியைத் தொடங்கி செயல்படுத்தியது தொடங்கி அவரது தொடர் மதப்பரப்புப் பணிகள், அதில் ஏற்பட்ட தடைகள், சிக்கல்களைப் பதிவு செய்கிறார். 1709ஆம் ஆண்டின் தமிழகக் கல்விமுறை பற்றியும் நான்காம் பிரெடரிக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கிறார் சீகன் பால்கு. இச்செய்தி பற்றிக் குறிப்பிடும் போது ஆய்வாளர் ஸ்டீபன் ‘இந்துக் கடவுள்கள் முன் நடனமாடும் தேவதாசிகள் தவிர தமிழ்ப் பெண்கள் எழுதப் படிக்கவில்லை’ என்கிற குறிப்பை எடுத்துக் காட்டுகிறார். இது தொடர்பான மேலதிகத் தகவல்களுக்காக அந்த ஆவணத்தைப் பார்வையிட முயன்றார் இக்கட்டுரையாசிரியர் (அது உங்கள் பார்வைக்கு உள்ளது). Der Konigl. Danischen Missionarien aus Ost-Indien eingesandter ausfuhrlichen Berichten, Hallesche Berichte (1710:127) என்ற பெயர்கொண்ட ஹாலேயிலிருந்து வெளிவந்த புராட்டஸ்டண்ட் மதப்பரப்பாளர்களால் வெளியிடப்பட்ட ஹாலே ஆவணம் என்ற ஜெர்மனிய மொழி ஆவணம் 1204 பக்கங்களைக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் 127ஆம் பக்கத்திலிருந்து மேற்குறிப்பிட்ட செய்தியை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். இதுகுறித்து நினைத்துப்பார்க்கும்போது உண்மையில் பெருமலைப்பும் வியப்பும் ஏற்படுகிறது.

மேலும், தமிழகப் பள்ளிகளுக்கு அச்சிடப்பட்ட பாடநூல்கள் குறித்தும் சுவையான பல செய்திகளைத் தந்துள்ளார். இந்நூலின் மிக முக்கியமான தன்மை என்னவெனில் காலக்ஷேபம் போன்ற புனைவுகள் மீது கட்டப்பட்ட வரலாற்று மொழியை நூலின் எந்தப் பகுதியிலும் பார்க்க முடியாது. நூலின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தொடரும் கடின உழைப்பின் மூலமாக டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, போர்ச்சுக்கல், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெறப்பட்ட கையெழுத்துப் பிரதிகளையும் அச்சிடப்பட்ட ஆங்கில, பிரெஞ்சு, ஜெர்மானிய, போர்ச்சுகீசிய, தமிழ் மொழி ஆவணங்களைத் தரவாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இத்தகைய பிற மொழி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றைச் சொல்லும் படைப்புகள் தமிழில் மிக மிகக் குறைவே. இணையத்தின் பக்கங்களில் நமது ஆய்வுக்காகக் காத்திருக்கும் இத்தகைய ஆவணங்கள் இன்னும் எத்தனையோ உண்டு. அவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட வரலாறுகளை மீள எழுத வேண்டிய கடமை தமிழ் இனத்திற்கு உண்டு.

தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும்:
எஸ். ஜெயசீல ஸ்டீபன் | தமிழில் கி. இளங்கோவன் |
வெளியீடு:என்சிபிஎச், சென்னை | விலை: ரூ. 270/-

- சுஜா சுயம்பு, உதவிப்பேராசிரியர், டிடிஜிடி வைஷ்ணவா கல்லூரி, சென்னை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.