முன்குறிப்பு: இக்கட்டுரையின் அடிப்படைத் தரவு பெக்கி மோகன் என்பவர் எழுதிய Wanderers Kings Merchants ( The Story of India through its Languages) என்ற நூலின் மூலநூலாசிரியர் பயன்படுத்திய மரபுத் தொடர்கள். அந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைச் செம்மையாக்கம் செய்து பதிப்பிக்கும் போது பெயர்ப்பாளர் நோக்கில் அடையும் சிக்கல்களாக இக்கட்டுரை அமைகிறது. ஒரு தொடக்கநிலை மொழிபெயர்ப்பாளர் அதுவும் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகக் கொள்ளாத, அதேசமயம் ஆங்கிலம் அறிந்த தமிழ்க் கல்வியாளர் தன்னார்வத்தில் மொழிபெயர்க்கையில், சில இடங்களில் கணினிவழியும் மொழிபெயர்த்துள்ளதில், இம்மரபுத் தொடர்களை எதிர்கொண்ட முறைமையில் அடைந்துள்ள சிக்கல்களே இக்கட்டுரையின் பொருண்மையாகும். கூடவே மூல நூலாசிரியரின் ஆங்கிலப் புலமையும் வெளிப்படுகிறது.
ஒரு சொல் மற்றொரு சொல்லையும் இணைத்துக் கொண்டு தொடராகி, அதன் வெளிப்படையான பொருளை உணர்த்தாமல், தொடர்ந்த புழக்கப் பயன்பாட்டில் மற்றொரு குறிப்புப் பொருளினை உள்ளடக்கி, ஒரு குறியீடாய் நிற்கும்போது அது மரபுத்தொடர் என்றாகிறது. இலக்கணிகள் இதனை மொழி மரபு அல்லது மொழி வழக்கு அல்லது இலக்கணைத் தொடர் அல்லது சொலவடை என்கின்றனர். அது ஒரு குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட நிகழ்வு, பாத்திரம், அறக்கருத்து, முரண் சொல்லிணை முதலியன தனிக்கவனம் பெற்று, அதே இடத்திலும் ஏனைய இடங்களிலும் தொடர் வழக்காற்றில் அடுத்தடுத்த தலைமுறையினரிடம் வழக்காறும்போது குறியீட்டுத்தன்மை பெற்றுவிடுகிறது.
காட்டாக, ‘ஊர் கூடித் தேர் இழுத்தல்’, அவன் அவளுக்கு ‘அல்வா கொடுத்துட்டான்’, ‘பொருள வச்சிருக்கியா?’, ‘மதுரைக்கு வழி வாயில(கூகுள்ல?)’ என்பவை மரபுத்தொடர் என்றறியாதவர்களுக்கு நேர்பொருளே கிடைக்கும். மரபுத்தொடராகக் கொண்டவர்கள் முறையே ‘மக்கள் எந்த ஒரு சமூகச்செயலையும் ஒன்றுகூடிச் செய்தல்’, ‘ஏமாற்றுதல்’, ‘கொலை செய்தலுக்கான கருவியைக் கேட்டல்’, ‘எதையும் கேட்டுத் தெளிதல்’ என்று இடம் சுட்டிப் பொருண்மை (Contextual Semantic) கொள்வர்.
பொதுவாக மொழிபெயர்ப்பில் யார் ஒருவருக்கும், அவர் மூலநூல் மொழி மற்றும் தருமொழியில் புலமைபெற்றவராய் இருந்த போதிலும் கூட, எழும் அடிப்படைச் சிக்கல் மூலநூலில் பயன்படுத்தப்பட்டுள்ள மரபுத் தொடர்களிலிருந்து தான் தொடங்குகிறது. ஏனென்றால் அவை அம்மொழியின் பண்பாட்டுத் தொடர்களாகும். மூல நூலில் பண்பாட்டுச் செறிவு மரபுத் தொடர்களை அடையாளம் காண்பதே தொடக்க நிலை பெயர்ப்பாளருக்கு கடும் சவால் விடும் பணியாகும். மற்றொரு சிக்கல் மூலநூலில் உள்ள மரபுத் தொடரைத் தருமொழியில் தரும் போது மரபுத் தொடராகவே தர இயலுமா என்பது. மொழிபெயர்ப்பு விதிகளை வரையறுத்த தியோடர் சேவரி ‘ஒரு மொழிபெயர்ப்பு மூல நூலின் சொற்களை அப்படியே தரவேண்டும்; அல்லது தரவேண்டியதில்லை. படிப்பதற்கு மூல நூலைப் போலவே இருக்க வேண்டும்; அல்லது மொழிபெயர்ப்பு போலவே இருக்க வேண்டும். மூலநூலின் மொழிநடையைப் பிரதிபலிக்க வேண்டும்; அல்லது மொழிபெயர்ப்பாளரின் நடையைப் பெற்றிருக்க வேண்டும். மூல நூலின் காலத்தைச் சேர்ந்ததைப் போல இருக்க வேண்டும்; அல்லது மொழிபெயர்ப்பாளரின் காலத்தைச் சேர்ந்ததைப் போல இருக்க வேண்டும். ஒரு மொழிபெயர்ப்பு மூல நூலைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்; அல்லது என்றுமே கூடாது. ஒரு செய்யுள் மொழிபெயர்ப்பு செய்யுளில் தான் இருக்க வேண்டும்; அல்லது உரைநடையில் தான் இருக்க வேண்டும்’ என்கிறார்(வை.சச்சிதானந்தன் 1985:179). மரபுத்தொடர்கள் விடயத்தில் மேற்படி ஆறு எதிரிடை விதிகளும் அவ்வத் தொடர்களுக்கேற்ப சார்த்திச் செயல்படும் சாத்தியப்பாடுகள் உள்ளன. மூல நூலில் உள்ள மரபுத்தொடர்கள் அம்மூல நூலுக்கு நுணுக்க அழகியலைத் (Subtle Aesthetics) தருகின்றன. தருமொழியில் மரபுத் தொடராகப் பெயர்க்க முடியாத போது மொழிபெயர்ப்பின் நுணுக்க அழகியல் சிதைகிறது. மரபுத்தொடர் என்று அறியாமல் பெயர்த்து விட்டால் மொழிபெயர்ப்பின் நம்பகத்தன்மையும் இழப்புக்குள்ளாகும்.
பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தாத மரபுத் தொடர்களை அல்லது மொழித்தொடர்களை நேரடியாக எந்திரகதியில் பெயர்த்துவிட முடியும். இன்றைய நிலையில் பலரும் கணினி வழி மொழிபெயர்ப்பில் சாத்தியப்படுத்துகின்றனர். (அச்சடித்த அகராதிகளை இப்போதெல்லாம் மொழிபெயர்ப்பில் ஈடுபடும் எவரும் எடுத்துப் புரட்டுவதில்லை.) காட்டாக பின்வரும் ஆங்கில மொழித்தொடர்களைக் கணினி வழி கூகுள் மொழிபெயர்ப்பு நொடிப்பொழுதில் பெயர்த்துவிடுகிறது. ‘in order to’ என்பதை ’ பொருட்டு, காரணமாக’ என்றும், ’as long as’ என்பதை ‘வரை’ என்றும், ‘according to’ என்பதை ‘...படி’ என்றும், ‘all of a sudden’ என்பதைத் ‘திடீரென்று’ என்றும் தந்து விடுகிறது. வாக்கியக் கட்டமைவிற்கேற்ப இவற்றை அப்படியேவாகவோ அல்லது சற்று மாற்றியோ ஏற்கின்றனர். ஆனால் பண்பாட்டுச் செறிவுள்ள மரபுத் தொடர்களைக் கணினி வழி பெயர்த்தலில் போதாமைகளைக் காணமுடிகிறது. பெக்கி மோகன் அமெரிக்க ஆங்கிலப் புலமையோடு கல்வி-பணி நிமித்தமாக கரீபியன் தீவுகள், வடகனடா, அமெரிக்கா, இந்தியா எனப் பன்னாட்டு வாழ்க்கையினூடாகப் பெற்ற பட்டறிவு அவரது மொழி வழி வெளிப்படுகிறது. அவர் பயன்படுத்தியுள்ள மரபுத்தொடர்களைக் கணினிவழி பெயர்த்தால் பெரும்பாலும் தவறாக வருகிறது.
கீழே வருவன முதலில் கணினி வழியும் பின்னர் இடம் சுட்டிப் பொருண்மையிலும் தருவிக்கப்படுகின்றன.
- to delve into / ஆராய வேண்டும் / கடும் முயற்சியுடன் அதன் ‘மறைபொருளைத் துருவியடைதல்’ எனல் வேண்டும்.
- icing on the cake/ அழகுக்கு அழகு சேர்ப்பது- இடம்சுட்டிப் பொருண்மையில் உள்ளது. இதே தமிழ் பெயர்ப்பை கூகுளில் இட்டு ஆங்கிலத்தில் கேட்டால் நேர்பொருளான ‘Adding beauty to beauty’ என்கிறது.
- a watershed moment / ஒரு நீர்நிலை தருணம் / ‘திருப்புமுனை தருணம்’ ஆகும்.
- slip under the radar / ரேடாரின் கீழ் நழுவும் / ‘யாருக்கும் தெரியாமல் காணாமல் போதல்’ எனக் கொள்ள வேண்டும்.
- to iron out their differences / அவர்களின் வேறுபாடுகளை களைவதற்கு- என இடம்சுட்டிப் பொருண்மையில் உள்ளது. இதே தமிழ் பெயர்ப்பை கூகுளில் இட்டு ஆங்கிலத்தில் கேட்டால் to iron out their differences என்று இடம் சுட்டிப் பொருண்மையிலேயே வருகிறது.
- It was a thought that remained on the back-burner / இது ஒரு எண்ணமாக இருந்தது / ஒரு எண்ணம் நெஞ்சத்தில் கனன்று கொண்டு இருந்தது - எனத் தமிழில் தரலாம். நெஞ்சக்கனல் எனவும் கூறலாம்.
- linguists come riding by on our white chargers / மொழியியலாளர்கள் எங்கள் வெள்ளை சார்ஜர்களில் சவாரி செய்கிறார்கள் / white chargers என்பதை மூலநூலாசிரியர் ‘வெண் குதிரைகள்’ என்று சித்திரிக்கிறார்.
- Sanskrit find its way into literary malayalam, thanks to the Namboodiri Brahmins / நம்பூதிரி பிராமணர்களுக்கு நன்றி, சமஸ்கிருதம் இலக்கிய(ம்) மலையாளத்தில் அதன் வழியைக் கண்டறிந்தது / thanks to என்பது மரபுத்தொடர். அதனை நேர்பொருளில் ஆங்கிலத்தில் பயன்படுத்துவதில்லை; ‘on account of , because of என்ற தொடர்களின் பொருளில் பயன்படுத்துகின்றனர். எனவே இங்கு ‘நம்பூதிரி பிராமணர்களால்’ என வரவேண்டும்.
- barely steering clear of angering Aurangazeb / ஔரங்கசீப்பைக் கோபப்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. இதில் ‘steering clear of‘ என்பது மரபுத்தொடர். அது ‘take care to avoid , keep away from’ என்ற தொடர்களின் பொருளில் வரவேண்டும். ‘ஆத்திரத்திலிருக்கும் ஔரங்கசீப் முற்றிலும் புறமொதுக்கப்பட்டார்’ என வரவேண்டும்.
- moving on greased wheels / தடவப்பட்ட சக்கரங்களில் நகரும் / to improve an essential part of an organization/ ‘ஒரு அமைப்பின் இன்றியமையாத பகுதியை மேம்படுத்த’ என்ற பொருளில் வரவேண்டும். பெக்கி மோகன் grease the wheels/ oil the wheels என்ற மரபுத்தொடரைச் செயப்பாட்டுவினை வடிவத்தில் சற்றே மாற்றிப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு பல இடங்களில் செய்துள்ளார். இதனால் சில மரபுத்தொடர்களை அடையாளம் காணலில் சிக்கல்கள் எழுகின்றன.
- game of cat and mouse / பூனை மற்றும் எலி விளையாட்டு/ இம்மரபுத்தொடர் கொடூர மனதை (cruel behaviour)க் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.
- on the cards / அட்டைகளில் / ‘நடக்க வாய்ப்புள்ளது’ என வரவேண்டும்.
- edge of the wedge / ஆப்பு விளிம்பு / ‘சிறுமாற்றம் பெரிய அளவுக்கு வித்திட்டது’ என வர வேண்டும்.
- the butt of a lot of humor / நிறைய நகைச்சுவையின் பிட்டம் / butt of a joke என்ற மரபுதொடர் அவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. ‘நகைப்பிற்கிடமாதல்’ என வரவேண்டும்.
- tide over / அலைமேல் / ’ஆத்திர அவசரத்தில் உதவுதல்’ பொருளில் வரவேண்டும்.
- tide can turn / அலை மாறலாம் / tide will turn என்பதில் துணைவினையை மாற்றியுள்ளார்; ‘தலைகீழ் திருப்பம்’ என்று பயன்படுத்த வேண்டும்.
- cheek by jowl / கன்னத்தில் கன்னங்கள் / அவர்கள் சிறிய அறையில் ‘கடும் நெருக்கத்தில்’ வாழ்ந்தார்கள் என்பதுபோல் வர வேண்டும்.
- put it under the lense / லென்ஸின் கீழ் வைக்கவும் / ‘தீவிர சோதனை’ என்பதாகும்.
- to hedge his bets / அவரது சவால்களை பாதுகாக்க / ‘தவறு/தோல்வியைத் தடுக்க’ என்பதாகும்.
- creme de la crème / இது best of the best என்பதற்கு இணையான பிரெஞ்சு வழக்காறு. தமிழில் ‘ஆகச் சிறந்த’ ‘செம செம’ எனத் தரலாம்.
- ring a bell / மணியை அடிக்கவும் / ‘நினைவூட்டல்’ ஆகும்.
- piece meal approach/ துண்டு உணவு அணுகுமுறை, துண்டு துண்டான அணுகுமுறை / ‘தனித்தனிக் கட்டமாய்ச் செய்தல்’ என்பதாகும்.
- cemented the bond / ‘பிணைப்பை உறுதிப்படுத்தினார்’ என்று இடம்சுட்டிப் பொருண்மையிலேயே தருகிறது. தமிழிலிருந்து இதையே ஆங்கிலத்தில் கேட்டால் ‘Confirmed the bond’ என்கிறது.
- relatively light / ஒப்பீட்டளவில் ஒளி / ‘ஒப்பீட்டளவில் குறைந்த’ எனல் வேண்டும்.
- snowballed into something / எதோ பனிப்பொழிவு, எதோ பனிப்பந்து / திடீரென ‘ஊதிப் பெரிதாகுதல்’ என்பதாகும்.
- a bit off the curve / வளைவிலிருந்து சற்று விலகி / Be ahead of the curve (மாற்றி சிந்தி/ மாற்றி யோசி) என்ற தொடரை மாற்றியுள்ளார். ‘மாற்றிச் சிந்திக்காமல்’ எனலாம்.
- bottom out / கீழே வெளியே / ’கடும் சரிவு’ என்று வர வேண்டும்.
இவ்வாறு பெக்கி மோகன் பயன்படுத்தியுள்ள மரபுத்தொடர்கள் பல்வகையினதாக உள்ளன. அவற்றில் இரண்டைத் தவிர அனைத்தும் கணினி வழி பெயர்க்கையில் நேர்பொருளைத் தருகின்றனவே தவிர மரபுத் தொடருக்கான குறியீட்டுப் பொருளைத் தரவில்லை. அவ்விரண்டையும் மறுதலையாகக் கூகுளில் கேட்டால் ஒன்று மட்டும் ஆங்கிலத்தில் அப்படியே வருகிறது. மொழிபெயர்ப்பவருக்கும் கூட மரபுத்தொடர் என்றறிய முடியாதபடி பல மரபுத்தொடர்களை மாற்றி அல்லது சற்றே திரித்து பயன்படுத்தியுள்ளதால் சிக்கல்கள் எழுகின்றன. ஆனால் இன்றைய நிலையில் ஆங்கிலத்தைப் பொறுத்த வரை கூகுள் திரிந்த மரபுத் தொடர்களை உள்ளீட்டால் அவற்றுக்கான வழமையான மரபுத் தொடர்களையும் இடம்சுட்டிப் பொருண்மைகளையும் தந்துவிடுகின்றன. ஆனால் பெயர்ப்பவருக்கு மரபுத்தொடர்களை இனம் காணும் அறிவு கட்டாயம் தேவைப்படுகிறது.
கணினிவழி தமிழ் மரபுத் தொடர்களை ஆங்கிலத்திற்குப் பெயர்ப்பதில் ஆரம்பக் கட்டம் கூட தாண்டவில்லை. கட்டுரையின் தொடக்கத்தில் சுட்டிய மரபுத்தொடர்களை கூகுள் நேர்பொருளில் பெயர்க்கிறது. அவை பின்வருமாறு : ‘ஊர் கூடித் தேர் இழுத்தல் - Chariot pulling by village gathering’, அவன் அவளுக்கு ‘அல்வா கொடுத்துட்டான் - He gave her Alva’, ‘பொருள வச்சிருக்கியா? - Is the material contained?’, ‘மதுரைக்கு வழி வாயில (கூகுள்ல)? - Madurai is on the way’. இவற்றிலும் இறுதியில் உள்ளதில் ‘வாயில’ என்பதன் இணைச்சொல் இல்லை. Way to Madurai is in mouth என்று வரவேண்டும்.
சங்க இலக்கியப் புறநானூறு அடிகள் பல மொழிகடந்து பலநாடுகளுக்கு தமிழ் மரபுத்தொடர்களாய்ப் பரவியுள்ளன; ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற கணியன் பூங்குன்றனார் பாடலடிகள் சான்றாகும். இதனை ஆங்கிலத்தில் கூகுள் வழி பெயர்த்தால் முறையே ‘Everybody listens’, ‘It's a good and bad week என்கிறது. நவீனத் தமிழ் நடை முன்னோடி பாரதியார் படைத்த பல மரபுத்தொடர்களில் ‘அக்னி குஞ்சு’ என்பது பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஆங்கிலத்தில் கூகுள் மொழிபெயர்ப்பு செய்தால் ‘Agni Chuju’ என்று ஒலியனில் பெயர்க்கிறது; அவரது ‘காட்சிப் பிழை’ என்ற தொடரை ‘Display error’ என்று நேரடிப் பொருளில் பெயர்க்கிறது. ‘துன்பக்கேணி’ என்பது பாரதியார் தொடங்கி புதுமைப்பித்தன், வண்ணதாசன் என்று தொடர்ந்து எழுத்தாளர்கள் புழங்கும் தொடர்; இதனை கூகுள் மொழிபெயர்ப்பு ‘suffering’ என்று ‘கேணி’க்குரிய பொருண்மையின்றி ‘துன்பம்’ மட்டும் தருகிறது; ஆனால் இது கரும்பு, தேயிலைத் தோட்ட வேலைகளுக்கு ஒப்பந்தக் கூலிகளாகப் போனவர்களின் குறிப்பாகப் பெண்களின் துயரத்தைக் குறிக்கும் தொடராக இடம்சுட்டிப் பொருண்மையில் மாறிவிட்டது. மொழிபெயர்ப்பாளர்களுக்கு மேற்படி எழுத்தாளுமைகளின் இலக்கிய அறிமுகம் இல்லாது போனால் ‘துன்பக்கேணி’ என்பது ‘துன்பம்’ என்றே வரும்.
இதேபோல் பெக்கி மோகன் ‘Middle Passage’ (P.6) என்றொரு தொடரைப் போகிறபோக்கில் பயன்படுத்திச் செல்கிறார். இது ராபர்ட் ஹைடன் (Robert Hyden) என்பவர் எழுதிய பாடல். (Voyage through death to life upon these shores/ கரைகளுக்கிடையில் மரணத்தினூடாக வாழப் பயணித்தல்). அது ஐரோப்பாவிலிருந்து கப்பலில் சென்ற ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பின அடிமைகளை வாங்கி மேற்கிந்திய, கரீபியன் தீவுகளுக்கு கரும்புத்தோட்ட வேலைகளுக்கு விற்றுவிட்டு, ஐரோப்பாவிற்குக் கரும்புச் சர்க்கரையை எடுத்துப்போன, கருப்பின அடிமைகளுக்கு நேர்ந்த அவலம் பற்றிச் சித்திரிக்கிறது. கருப்பின அடிமை மனிதர்களைக் கொண்டே துடுப்பசைத்து நீந்தும் பெரிய பாய்மரக்கப்பல்களில் கருப்பின அடிமை மக்களைக் கொண்டு செல்கையில் பசி, பிணியால் இறப்போரை நடுக்கடலில் தூக்கி எறிந்து செல்லும் துயரத்தைச் சித்திரிக்கும் பாடலாகும் Middle Passage. இது அவர்கள் இலக்கிய வரலாற்றில் நிலைத்த இடம் பிடித்துள்ளது. இந்த வரலாறு தெரியாமல் மொழிபெயர்த்தால் ’நடுத்தரப் பாதை’ என்று கூகுள் போலத்தான் பெயர்க்கமுடியும். ‘நடுக்கடலிடை மரணப்பாதை’ என்று சுட்டி, அடிக்குறிப்பில் அதனை ‘துன்பக்கேணி’ போல என்று விளக்கிச் சொல்ல வேண்டும். பெக்கி மோகன் இது போன்று புகழ்பெற்ற இலக்கியத் தொடர்கள், திரைப்படப்பெயர்கள், நாட்டார் வழக்குப் பாத்திரங்கள், தொன்மங்கள் முதலியவற்றை ஆய்வுப்போக்கினூடாக அவற்றை விளக்காமல் குறிப்பளவில் பயன்படுத்திச் செல்கிறார். அவை தேர்ந்த ஆங்கில வாசகருக்கு இயல்பாய்த் தோன்றும். அவை பற்றிய தெளிவு பெயர்ப்பாளருக்குத் தேவைப்படுகிறது.
பின்வரும் சான்றுகளைக் காண்க:
- ஓரிடத்தில் the strong sun begins to fade (P.182) என்ற தொடரை வாக்கியத்தில் வைத்துள்ளார். இது அல்லென் ப்ரூஸ் (Allen Bruce) எழுதி புகழ்பெற்ற பாப் இசைப்பாடகர் விட்னி ஹெளஸ்டன் (Whitny Houston) என்பவரது மேடைப்பாடல் ‘I wanna dance with sombody’ யில் இடம்பெற்ற ‘the sun begins to fade’ தொடர் ஆகும். பெயர்ப்பாளருக்கு அவற்றின் இடம்சுட்டிப் பொருண்மை தோன்றாமல் வெறும் வாக்கியத்தொடர்களாக மட்டும் தோன்றினால் பெயர்ப்புப் பிரதி மதிப்பிழக்கும்.
- ‘linguistic Pied Piper’(P.184) இதனை கூகுள் ‘மொழியியல் பைட் பைபர்’ என்கிறது. ஆனால் Pied Piper என்பது ஜெர்மன் நாட்டு ஹேமலின் நகரில் 1284இல் மிகுந்த எலித்தொல்லைகள் இருக்க அதைப் பிடிக்க ஒருவன் பல வண்ண உடைகளுடன் தலையில் குல்லா கையில் ஊதுகுழலுடன் வந்து எலிபிடிப்பது போல் வந்து குழந்தைகளையும் கடத்த வந்ததாக அமைந்த கதைப்பாத்திரம். க்ரிம் சகோதரர்கள் (Grimm Brothers) மற்றும் ராபர்ட் ப்ரெளனிங் (Robert Browning-1842) இதனை The Pied Piper of Hamelin என்று குழந்தைகளுக்கான கதைப்பாடல் ஆக்கியுள்ளனர். ’போலி வாக்குறுதிகளை வழங்கி வஞ்சிக்கும் குறியீட்டுப் பாத்திரம்’ ஆகும்.
- மற்றோர் இடத்தில் ‘Missing in all the sound and fury of migration’(P.206) என எழுதிச் செல்கிறார். ‘sound and fury’ என்பது சேக்ஸ்பியர் தனது மாக்பெத் நாடகத்தில் பயன்படுத்தியதிலிருந்து தொடர் வழக்காற்றில் உள்ளது. வாழ்க்கை என்பது ‘வெட்டிக் கூச்சல்’ நிறைந்தது வேறெதுவுமில்லை என்ற மாக்பெத் வசனத்தை அறிந்திருக்க வேண்டியுள்ளது.
- Towers of Babel ( P. 241) என்ற பைபிள் கிளைக்கதை (ஜெனிஸிஸ் 11:9)யைப் பயன்படுத்திச் செல்கிறார். ஜெஹோவா கடவுள் தனக்குப் பிடிக்காத, பூமியிலிருந்து சொர்க்கத்தைத் தொடும் கோபுரம் ஒன்றைக் கட்டும் பல்வேறு மக்கள் பேசிய ஒரேமொழியைக் குழப்பியதில், மக்கள் மொழிக்குழப்பம் அடைந்து கட்டுமானப்பணி நின்றதாக அத்தொன்மக்கதை உள்ளது. மொழிப் பயன்பாட்டில் ‘வெற்றுக் கூச்சல், காட்டுக் கூச்சல்’ எனக் கொள்ளலாம்.
- Leprechaun Smile (P.263) என்றொரு தொடரைக் கையாளுகிறார். இது ஐரிஷ் நாட்டார் கதைப் பாத்திரம் ஆகும். ‘கோமாளிச் சிரிப்பு’ என்பதாகும்.
- Yellow Brick Road / மஞ்சள் செங்கல் சாலை / இது புது டில்லியில் உள்ள பிரபலமான உணவகங்களில் ஒன்று; அது பற்றி அறியாமல் நேரடியாக மொழிபெயர்த்தால் தவறாகிவிடும். மொழிபெயர்ப்பில் ‘நன்னம்பிக்கை வழி’ என இடம்சுட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.
- What a rainbow these steppe people had made!(P.270). ‘இந்தப் புல்வெளி மக்கள் என்ன ஒரு வானவில் செய்தார்கள்’ என்ற இந்த வியப்பு வாக்கியத்தை, ‘ஸ்டெப்பி புல்வெளி மக்கள் (இந்தியாவில்) பல மொழிகளுடனும் கலந்து மொழிக் கதம்பமாக்கிவிட்டனர்’ என்று இடம்சுட்டிப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.
மரபுத்தொடர்களின் பயன்பாடு சமூகத்திற்கு சமூகம் மாறுபடுவது போல், ஆய்வு, புதினம், கவிதை, நாடகம் என வகைமைக்கேற்பவும் மாறுபடலாம். மூலநூலின் மரபுத்தொடர் பெயர்ப்பு நூலில் இடம்சுட்டிப் பொருண்மையில் வரும்போது தான் தெளிவு கிடைக்கும். ஆனால் ஆங்கிலத்திலிருந்து இந்தியில் பின் இந்தியிலிருந்து தமிழில் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் பின்னர் ஆங்கிலத்திலிருந்து இந்தியில் பெயர்க்கப்படும் இரண்டாவது, மூன்றாவது பெயர்ப்புகள், இம் மரபுத்தொடர் விடயத்தில் எத்தகைய தன்மையை அடையும்?
கணினி தனது மொழித் தரவகத்தில் சேர்க்கப்பட்டு அதுவும் தொடர்ந்து சரியான பொருண்மையில் பயன்படுத்தப்பட்டு வரும் சொற்களை, தொடர்களை, வாக்கியங்களைக் கணினி பெயர்ப்பில் தருவிக்கிறது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் பண்பாட்டுச் செறிவு மரபுத்தொடர்கள் இடம் சுட்டிப் பொருண்மையில் கணினிவழி பயன்படுத்தும் வரை இச்சிக்கல் நீடித்துக் கொண்டுதானிருக்கும். அதுவும் பண்பாட்டுக் கூறுகள் இயங்குதன்மையன, காலத்திற்கேற்ப மாறுவன, மாறிக்கொண்டு வருவனவும் தரவேற்றம் செய்யப்படல் வேண்டும்.
மனிதன் படைத்த மரபுத்தொடர்கள் ஒருகட்டத்தில் மனிதனின் புரிதலுக்குச் சவால்விடும் பண்பாட்டுத் தொடராயுதங்களாகிவிடுகின்றன.
எம். டி. முத்துக்குமாரசாமியின் ‘மொழிபெயர்ப்பு என்பது ஈகை’ என்ற முகநூல்(ஜூன் 1, 2023, காலை 8.43) பதிவில் மறுதலையாகக் கீழ்வரும் கருத்து.
சில சமயங்களில் சின்னஞ் சிறிய வாக்கியங்கள் திகைக்கவைக்கும் சிந்தனைகளை உள்ளடக்கியதாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட வகையில் ஒரு வாக்கியம் Translation is generosity. தெரிதாவுடையது. மொழிபெயர்ப்பு என்பது ஈகை. என்னவொரு ஆச்சரியமான புரிதலை அனைத்து வகையான மொழிபெயர்ப்புகளைப் பற்றியும் இந்த வாக்கியம் உண்டாக்குகிறது. மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்லும் ஓடையாக மட்டும் இருக்க வேண்டியதில்லை; இயற்கையை நம் அகத்தோடு பேசவைக்கும் கவிஞன், சிசுவின் மழலையொலிகளை புரிந்து கொள்ளும் தாய், சப்தங்கள் வார்த்தையாகிற சமூகத் தருணங்கள், காதலில் அபூர்வ நித்தியம் கொள்ளும் கணங்கள், ஒரு பறவையின் சிறகடிப்பில் இருக்கும் சுதந்திரம், புராதனங்களில் ஒளிந்திருக்கும் ஏக்கம், மூலிகை ஒன்றின் மருத்துவ குணம், ஒலியை இசையாக்கும் கலைஞன், என மொழிபெயர்ப்பாளர்களிலும் மொழிபெயர்ப்புகளிலும்தான் எத்தனை வகை! மக்கள் கூட்டம் சமூகமாகத் திரள்வது என்பதே மொழிபெயர்ப்பாளர்களின் ஈகையால்தான் என்று கூட ஒருவர் இதை நீட்டிக்க முடியும். ஒப்பந்தங்களால் உருத்திரளும் சமூகம் என்ற ரூசோவின் கருத்தாக்கத்தைவிட மொழிபெயர்ப்புகளின் ஈகையால் இணைக்கப்படும் சமூகம் என்பது அர்த்தபரிமாற்றத்தை சமூகத்தின் மைய கண்ணியாக மாற்றிவிடுகிறது.
துணைநின்றவை:
Peggy Moohan, Wanderers Kings Merchants ( The Story of India through its Languages), Penguin / Viking, Random House India, 2021.
சச்சிதானந்தன் வை., ஒப்பிலக்கியம் (ஓர் அறிமுகம்), ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ், சென்னை, 1985.
கூகுள் மொழிபெயர்ப்புத் தளம்.
- நா.சந்திரசேகரன், பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி.