சமூகத்தில் மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களைச் சார்ந்த பிரச்சனைகளும் உருவெடுத்தன. வாழ்வியல் சூழலுக்கேற்ப அதிலிருந்து தன்னை காத்துக் கொள்ள மனிதன் பல்வேறு அடக்குமுறைகளையும், சமூகக் கட்டுப்பாடுகளையும் வகுத்துக்கொண்டான். நாகரிகத்தின் வளர்ச்சியினால் சமூக ஒழுக்கங்களிலும், கட்டுப்பாடுகளிலும் மாற்றங்களும் தேவைப்பட்டது. தனது சமூகத்திற்காக வகுத்து வைத்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து மாற்றத்தை நோக்கி அவன் பயணிக்கத் துவங்கினான்.  

அவனது பயணத்தின் துவக்கமாகத்தான் தனக்கான வாழ்விடம், உணவு, உடை, தொழில் உள்ளிட்ட கட்டுப்பாடுகள். அவற்றில் இருந்து மெல்ல மெல்ல விலகத்துவங்கினான். இந்த இடைவெளி அவனது பல்வேறு பண்பாட்டு விழுமியங்களை சிதைக்க தொடங்கிவிட்டது என்று கூறலாம். இயற்கைக்கும் அவனுக்குமான தொடர்பு சிதைந்து போய்க்கொண் டிருக்கிறது. எதை நாகரிகம் என்று கருதினானோ அந்த நாகரிகம் அவனது வாழ்வியல் கட்டமைப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கச் செய்து வருகிறது.

இந்தப் பின்புலத்தில் தான் பளியர் இனக்குழு மக்களின் சமூக வாழ்வியலை பார்க்கும் போது இயற்கை யோடு பின்னிப்பிணைந்த அவர்களது வாழ்வியல் சிதைக்கப்படுவதையும் அதனால் அம்மக்கள் இயற்கை சூழலை தொலைத்த வாழ்க்கையை நோக்கிப் பயணப் படுவதையும் களஆய்வின் வழியாக நேரடியாகப் பார்க்க முடிகிறது. நடைமுறை வாழ்வில் தவறுகள் என்பது எதிர்பாரமல் நிகழ்வது. சில தவறுகள் திட்ட மிட்டு அரங்கேற்றுவது. இதில் எந்த வடிவத்திலான தவறுகளாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாகும். ஆனால் திட்டமிட்டு செய்யும் தவறுகளுக்கு தண்டனையும் அதிகப்படியாக தண்டிக்கப்படவேண்டும். அதே நேரத்தில் இயற்கை சூழலோடு வாழும் மக்களின் வாழ்வியலையும் பாதுகாக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலைத் தொடர் பகுதியில் உள்ள பாச்சலூர் அருகே உள்ள கடைசிக்காட்டிற்கு மற்றும் ஒட்டியுள்ள மலை கிராமங் களுக்குச் செல்வதற்காக ஒட்டன் சத்திரத்தில் இருந்து 14 கொண்ட ஊசி வளைவுகளை கடந்து சென்றோம்.

இந்த களஆய்வில் பல இடங்களில் பலரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கடைசிக்காட்டில் ஆண்டியப்பன் (வயது-60) என்பவரையும், பூதமலையில் இறந்துபோன கருப்பன் என்பவரது மனைவி முத்தம்மாளையும் (வயது-65) அவரது மகன் வெள்ளைச்சாமியையும் (வயது-20) மகள் ராணி (வயது-28) ஆகியோரையும், செம்பிரான் குளத்தில் நாகராஜன் என்வரையும் (வயது-50) இவரது மனைவி கருப்பாயியையும் (வயது-45), ராஜகாளியம்மன் கோயில் பூசாரி பாலன் (வயது-70) அம்மக்களின் தலைவர் தோப்படியான் (வயது-60) உள்ளிட் டோரையும், பட்டியக்காட்டில் தலைவர் ஜோதிமணி (வயது-55) மற்றும் கரியமாள் (வயது-57), லட்சுமி (வயது-53) ஆகியோரையும் சந்தித்து பெறப்பட்ட பல்வேறு தகவல்களின் பின்புலத்தோடு இந்த ஆய்வுக்கட்டுரை அமைகிறது.

பாய்ச்சலூர், கடைசிக்காடு, பூதமலை, செம்பிரான் குளம், பட்டியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பளியர் சமுகத்தினரை நேரடியாக பார்த்த போது தான் அவர்களின் சமூகம் சார்ந்த கட்டுப்பாடுகளை பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. குறிப்பாக அம்மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எப்படி பஞ்சாயத்து மூலம் தீர்வு கண்டார்கள். ஒருவர் கூறும் தீர்ப்பை எப்படி அனைவரும் ஏற்று செயல்பட்டு வருகின்றனர் என்பது பாராட்டுதலுக்குரியதே.

தினமும் பயணம் வாகனங்களில் அல்ல தங்களது கால்களால் தான். சுமைகளை கொண்டு சேர்க்கும் காவல் தெய்வங்களாக இவர்களது பொதி குதிரைகள் விளங்கு கின்றன. மலையின் எற்றங்களை கடந்து சென்றால் தான் வாழ்க்கைக்கான தேடல்கள். இல்லை என்றால் வெறுமையே. அதிகார மையமும் அரசாங்கமும் இவர் களுக்கான முழுமையான தேவைகளை இன்னும் தொடக்க நிலையில் கூட நிறைவு செய்யவில்லை என்பதை நேரடியாக காணமுடிந்தது. காலம் காலமாக செய்துவரும் தொழிலைக்கூட தொடரமுடியாத நிலை தான் வாழ்க்கை உள்ளது. தொழிலை கைவிட்டாலும் அடுத்த ஒரு அடியை எடுத்து வைத்து வளர்ச்சிக்கான பாதையில் பயணிக்கவும் இவர்களால் முடியவில்லை.

முழுமையான வளர்ச்சி காணமுடியாத சூழ்லில் மலைத்தோட்டங்களில் தினக்கூலிகளாகவும், வாரக்கூலி களாகவும், மாதக்கூலிகளாகவும் தங்களுக்கான தற் போதைய வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டு உள்ளனர். வாழ்க்கைச் சூழல் மலையின் ஏற்றத்தைப் போல கடுமையானதாக இருந்தாலும் அவர்களின் பண்பு மட்டும் மலையின் உயரத்தைப்போன்று உயரமாக இருக்கின்றது. எளிமையான அன்றாட தேடல்களை மட்டும் நிறைவு செய்துகொள்வதாக உள்ளது.

அடர்ந்த மலைப்பகுதியில் இயற்கையோடு வாழும் பளியர் சமூகத்திலும் சமூக கட்டுப்பாடுகள் ஏராளமாக உள்ளன. இதனை தலைமை வழிநடத்திச் செல்கிறது. இந்தப் பின்புலத்தோடு பளியர்களின் வாழ்க்கையையும் சமூக கட்டுப்பாடுகளையும் விரிவாக காணலாம். பளியர் சமுதாயத்தைக் கட்டுப்படுத்தும் தலைமைகளுக்கு என்ன பெயர்? மொத்த சமூகத்தில் பளியர்களை எப்படி அழைக்கிறார்கள்? அவர்களின் பங்களிப்பு என்ன? என்ற வினாக்களுக்கு முதலில் விடைகாண வேண்டியது அவசியம்.

மலை கிராமங்களில் வாழும் பளியர்கள் முழுமை யாக மண்ணாடி சமூகத்தில் தேர்வு செய்யப்படும் தலைவரான பட்டக்காரான் (அப்பச்சி) என்பவருக்கு கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். பட்டக்காரர் (தலைவர்), மந்திரியார் (ஆலோசகர்), செட்டுமை (பொருளாளர்), தேராடியார் (பூசாரி) ஆகியோரின் கீழ் செயல்படுபவர்களாக முன்னோடும் பிள்ளைகள் (தலைமைகளின் கட்டளைகளை ஏற்று செயல்படும் புலையர்கள்) உள்ளனர்.

கோயில் நிகழ்வுகளில் குழு நடனம், இசை நிகழ்ச்சிகள்  போன்ற நிகழ்வுகளில் மட்டும் ஊர் தலை மைகள் அழைத்தால் பளியர்கள் வந்து பங்கேற்பார்கள். பட்டக்காரர்களின் காலில் விழுந்து ஆசிவாங்கும் வழக்கம் பளியர்களிடம் உண்டு. தற்போதைய தலை முறையினர் இதை மறுப்பதால் மண்ணாடியாரின் சாபத்தால் பளியர் இனம் அழிந்து வருவதாக சொல்லப் படுகிறது. பளியர் தங்களை மலசர் என்றும் தெய்வப் பளியர் என்றும் அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

பளியர் சமூகத்தில் தலைமைகளை மூப்பன், தோப்படியான் என அழைக்கப்படுகின்றனர். தற்போது மூப்பன் என்ற பெயர் வழக்கத்தில் இல்லை. இந்த பெயர் சுமார் 15 ஆண்டு காலமாக அழைக்கப் படுவதில்லை என்று கூறுகின்றனர். இவர்களுக்குள் தலைவரை தோப்படியான் என்று அழைக்கும் வழக்கம் தற்போது உள்ளது. பொருளாளர், செயலாளர் போன்ற பொறுப்புகளும் தற்போது உள்ளது. கோயில் பணிகள் மற்றும் பூசைகள் செய்பவரை பூசாரி என்றே அழைக்கின்றனர்.

பளியர் சமூகத்தில் தோப்படியான் (தலைவர்) எப்படி தேர்வு செய்யப்படுகிறார்? அதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? வாரிசு தேர்வுமுறை உண்டா? என்ற வினாக்களும் எழுகின்றன. இதனைப்பற்றி அம் மக்களிடம் கேட்ட போது தலைவர் என்று நாங்கள் அழைக்க மாட்டோம் எனவும் தோப்படியான் என்று தான் அழைப்போம் எனறும் கூறுகின்றனர். நாற்பத்தி எட்டு மலை கிராமத்தின் பிரதிநிதிகளாக சுமார்  56 பேர் சேர்ந்துதான் தலைவரை தேர்வு செய்வோம். போட்டியிடும் நபர்களில் எந்த நபரின் பெயரை அதிகமான எண்ணிக்கையில் அழைக்கப்படுபவரோ அவரே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். தகுதி என்று ஒன்றும் இல்லை. நேர்மைதான் முதல் தகுதி. வாரிசுகள் நேர்மையாக இருந்தால் அவர்களே தொடந்து வருவதற்கும் வாய்ப்புள்ளது. இல்லை என்றால் பதவி பறிக்கப்படும் என்று கூறுகின்றனர்.

தோப்படியானுக்கு (தலைவர்) சமுதாயத்தில் அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ன அவரது அதிகாரங்கள் எப்படி உள்ளது என்று பார்த்தால் குலதெய்வமான பூதநாச்சி, பளிச்சியம்மன் இவர்களுக்கு அடுத்த நிலை தோப்படியானைப் பார்க்கின்றனர். ஏன் இவர்களை வாழும் கடவுளாக மதிக்கின்றனர். இவர்கள் கூறும் முடிவுகளே இறுதியானதாக உள்ளது. கிராமத்தில் நடைபெறும் எந்த நிகழ்வானாலும் இவர்தான் பேசும் அதிகாரம் பெற்றவராக இருந்து வருகிறார். தலைவர் தேர்வு செய்யப்பட்டபின் கொண்டாட்டங்கள் நிகழ்த்துவதில்லை. தலைமையை பார்க்கும் போது வணக்கம் செலுத்தும் வழக்கம் உண்டு.

தேர்வு செய்யப்படும் தலைவர் பிடித்தவராக தேர்வு செய்யப்பட்டால் கைகளை தட்டி இசைக்கருவிகளோடு குழு நடனம் மட்டும் நிகழ்த்தும் வழக்கம் உண்டு. இது போன்ற நிகழ்வுகள் மகிழ்ச்சியின் உச்ச வெளிப் பாடாகும். தலைமை சரியாக செயல்படவில்லை என்றால் நீக்கி விட்டு மாற்று தலைவரையும் தேர்வு செய்யும் அதிகாரம் பெற்றவர்களாக பளியர்கள் உள்ளனர். பிடிக்காத தலைமை தேர்வு செய்வது கடினம். அப்படி தேர்வானால் நீண்ட நாள் பதவியில் இருக்க விடமாட்டார்கள்.

பஞ்சாயத்து அறிவிப்பு முறை, நடைபெறும் நேரம், எந்த இடங்களில் அமர்ந்து பேசுவார்கள், தற்காலத்தில் பஞ்சாயத்து முறைக்கு  முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்று பார்த்தால் பளியர்கள் வாழும் பகுதி பெரியதாக இருந்தால் தண்டோரா மூலம் அறிவிப்பது. இல்லை சிறிய பகுதியாக இருந்தால் வாய்வழியாக அறிவிப்பது, நிகழ்வுகளை அறிவிப்பாளர் களை இரண்டு விதமாக அழைக்கின்றனர். தண்டல் என்பவர் ஊர் பொது நிகழ்வுகளை மக்களுக்கு அறிவிப் பவர், முதல் தண்டல் இவர் இறப்பு செய்திகளை கூறுவர்.

காலை நேரங்களில் அதிகமாக பஞ்சாயத்து நடை பெறும் நேரமாகும். குறிப்பாக காலை நேரமான 7 மணி முதல் 8 மணிக்குள் நடைபெறும். ஊரில் பொது இடங்களில் பஞ்சாயத்து பேசுவர். உதாரணத்திற்கு பூதமலையில் கூட்டாம் பாறை என்ற ஒரு இடம் உள்ளது. அதே போல செம்பிரான்குளத்தில் உள்ளவர்கள் ராஜகாளியம்மன் கோயில் அருகேவும், பட்டியக்கட்டு மக்கள் பளிச்சியம்மன் கோயில் அருகே உள்ள கருமாரியம்மன் கோயில் அருகேவும் பேசுவர். பஞ்சாயத்தின் முடிவிற்கு அனைவரும் கட்டுப்பட்டு செயல்படுவர். தற்காலத்திலும் பஞ்சாயத்து கட்டுப் பாட்டோடு நடைபெறுகிறது.

பூத நாச்சிக்கு வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறும். பளிச்சியம்மன் திருவிழா சித்திரை மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறும். மக்கள் அனைவரும் தலைவர் தலைமையில் ஒன்று கூடுவர். ஊர் பொது இடமான கோயில் அருகே அனைவரும் சமமாக அமர்ந்து பேசுவார்கள்.

jeyakumar 600ஒரு வீட்டிற்கு எவ்வளவு பணம் தருவது என முடிவு செய்வார்கள். அதன் படி பணம் வசூலிக்கப்படும். குறிப்பாக பட்டியக்கட்டில் தலைவர் ஜோதிமணி, செயலாளர் பாண்டி, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் திருவிழாக் கூட்டங்கள் தற்போது நடைபெறுகிறது. பளிச்சிக்கு அண்ணன் தம்பி நான்கு பேர் ஆகும். மண்ணாடி, ஆசாரி, பளியர், புலையர் மட்டும் (கோயிலுக்குள் வரமுடியாது என்ற கட்டுப்பாடு உள்ளது), ஆனால் புலையர் வணங்கும் கருமாரி கோயிலில் இவர்கள் மூவரும் செல்வார்கள். ஒருமுறை புலையர் ஒருவர் கோயிலுக்குள் நுழைய முயன்ற போது பளிச்சியம்மன் தூக்கி வீசியதாகவும் நம்புகிறார்கள்.

வழிபாட்டு முறையில் தெகப்பட்டி (வேப்பிலை போன்ற இலை), பொறிகடலை, வெற்றிலை பாக்கு, காதோலை, கருமணி, சூடம், பத்தி, தேங்காய், பழம் போன்ற பொருட்கள் பெண் தெய்வத்திற்கு. கருப்பண்ண சாமி போன்ற ஆண் தெய்வமாக இருந்தால் சுருட்டு, சாராயம், கஞ்சா (தற்போது இல்லை) ஆகியனவும் வைத்து வழிபாடு செய்யப்படும். வேட்டை ஆடிய காலத்தில் மான், யானை, காட்டெருமை (தெய்வமாக கருதுவோம்) இவற்றை தவிர்த்து காட்டுப்பன்றி, ஆடு, கோழி பலியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் நடை முறையில் உள்ளதால் ஆடு, கோழி மட்டும் பலி கொடுக்கும் வழக்கம் உள்ளது. முற்காலத்தில் சாராயம் அருந்திவிட்டு (பூதநாச்சி கென்று ஒரு இசை) மரபு சார்ந்த கொட்டு இசையோடு ஆடி மகிழ்வர். தற்காலத்தில் திரைப்பட பாடல்களுக்கு ஆடுகிறார்கள். மதுவிற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் இளைஞர்களை தவிர்த்து.

வழிபாட்டு முறையில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை என்னப் பாதுகாப்பு அம்சங்கள் தற்போது விழாக்காலங்களில் எப்படி மேற்கொள்கிறார்கள் என்று பார்த்தால், பளியர்கள் 61 குல தெய்வங்களை வழிபடுவதாக கூறுகின்றனர். பஞ்சாயத்திற்கு செல்லும் போது தலைவர் (தோப்படியான்) குல தெய்வத்தை வணங்கிவிட்டு தான் செல்வாராம். பளியர் சமுகத்தில் செதுக்கப்பட்ட சிற்பவழிபாடு இல்லை. தற்போது தனியார் முதலாளிகள் தோட்டங்களை வாங்கி விட்டதால் அந்தப் பகுதிகளில் குலதெய்வமான பூதநாச்சி இருப்பதால் அந்த இடங்களில் சென்று வழிபாடு செய்ய முடியவில்லை.  இதுபோன்ற நம்பிக்கை சார்ந்த சடங்குகளை தொடர்ந்து நடத்த நவீன விவசாயம் மேற்கொள்ளும் பெருமுதலாளிகளிடம் இருந்து மீட்டுத் தரவும் கோரிக்கை வைக்கிறார்கள்.

எதனால் பளியர் வழிபாட்டு முறை சிதைந்து வருகிறது என்று பார்த்தால் முதலாளித்துவ ஆதிக்கத்தின் உச்சம் தான். குறிப்பாக செப்பிரான்குளத்தில் (தனியார் பெரு முதலாளி இருவர் 1000 ஏக்கர் வாங்கி நவீன விவசாயம் செய்வதால்) வசிக்கும் பளியர்கள் இந்த சிக்களுக்கு ஆளாகியுள்ளனர். வேப்பிலை பயன்பாடு அவர்களின் வழிபாட்டு முறையில் இல்லை அதற்கு மாறாக தெகப்பட்டி என்ற இலையை (திருவிழா, காத்து கருப்பு,காட்டுப்பகுதியில் வேலை பார்க்கும் போது பருவம் எய்தும் பெண்கள் தலையில் வைப்பது) அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர்.

முற்காலத்தில் பாதுக்காப்பு என்பது நம்பிக்கையும் மக்களும் தான். மக்கள் இயற்கையோடு பின்னிப் பிணைந்திருந்ததாலும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொண்டனர். தற்காலத்தில் விழாக்காலங்களில் பாதுகாப்பிற்கு காவல்துறைக்கு அழைத்து நடத்து கின்றனர். மூன்று நாட்களும் இம்மக்களோடு தங்கி எந்த சண்டையும் இல்லாதவாறு பாதுகாப்பாக இருந்து விட்டுச் செல்வதாக கூறுகிறார்கள். காவல்துறையினர் இதுபோன்ற காலங்களில் மட்டும் வருவர். காரணம் வெளியாட்கள் வருவார்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக என்று கூறுகிறார்கள்.

தோப்படியான் கட்டுப்பாட்டில் எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. பஞ்சாயத்து முறைக்கு கட்டுப்படாத பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்கிறார்கள் இவர்கள் ஊர் திருவிழா நடத்துவது, பெண்களை கிண்டல் செய்தல், திருமணம் சார்ந்த பேச்சு வார்த்தைகள், பிரச்சனைகள், கொள்ளைச் செயல்கள் (திருடிச்செல்லுதல்), வெளியாட்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள், சிறுவர்கள் செய்யும் குற்றங்கள் இவைகள் பற்றி பஞ்சாயத்தின் மூலம் பேசி தீர்வு காணப்படும். உதாரணத்திற்கு திருவிழா காலத்தில் ராமசாமி என்பவர் சுமார் 20 லிட்டர் சாராயம் விற்பனைச் செய்வதை அறிந்த பட்டியக்காடு மக்கள் அவரை பிடித்து அடித்ததுடன் கை மற்றும் கால்களை கட்டிப்போட்ட நிலையில் மூன்று நாள் வைத்திருந்தனர். அத்துடன் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர் இது  தற்போது 5 ஆயிரத்தை தாண்டுகிறது. இதனால் தான் தற்போது காவல்துறையின் பாதுகாப்போடு திருவிழாக்கள் நடைபெறுகிறது.

பஞ்சாயத்திற்கு கட்டுப்படாத பிரச்சனைகளான வெளியாட்கள் தவறுகள் செய்தல் குறிப்பாக காதல் திருமணம், கொள்ளைச்சம்பவங்களுக்கு காவல் துறை மூலம் தீர்வு காண்கின்றார்கள். உதாரணத்திற்கு பூத மலையைச் சேர்ந்த முத்தன் என்பவரது பசுமாடு ஒன்றை தட்டக்குழி இளைஞர் திருடிச்சென்றுவிட்டார். தாண்டிக்குடி காவல் நிலையத்தில் முத்தன் கொடுத்த புகாரில் காவல் துறையினர் பளியர் சமுகத்தின் பிரதிநிதி களை வைத்துக்கொண்டு மாடு வேண்டுமா இல்லை பணம் வேண்டுமா எனக் கேட்க வேறு மாடுதான் வாங்கித்தரமுடியும் அதே மாட்டை மீட்க முடியாது என்பதால் நாற்பதாயிரம் பணம் வாங்கிக்கொண்டு உள்ளனர். இது போன்று தான் தீர்வு காணப்படுகிறது.

பஞ்சாயத்து முறையில் அபராத தொகை என்பதோ தண்டனை என்பதோ தவறு செய்பவர்கள் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பாக மட்டுமே பார்க்கப்பட்டது. சமூகத்தில் சிலர் தவறு செய்தவர்களை சில நாட்களோ அல்லது சில மாதங்களோதான் வேறுபாடு பார்த்து பழகுவர். பிறகு  அந்த குற்றச்சாட்டு நாளடைவில் மறைந்து போகும். குறிப்பாக தவறிழைத்தவர்கள் சகமனிதர்களோடு வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததோடு அவர்களின் பண்பாட்டை சிதைக்காமல் பாதுகாத்தது. மாறாக வாழ்வியலையும் சிதைக்கவில்லை.

ஆனால் தற்காலத்தில் காவல்நிலையங்களுக்கு சென்றால் காவல் துறையினர் அணுகும் முறை முற்றிலும் மாறாக உள்ளது. அவர்களின் அணுகு முறையும் எங்களது பண்பாட்டுச் சூழலை சிதைக்கும் விதமாக உள்ளது. பளியர் சமூகத்தில் தவறு செய்த வரிடம் முழு விசாரணை மேற்கொண்ட பிறகு ஆலோசித்து பலரது கருத்துக்கள் கேட்ட பின்பு தான் தீர்ப்பு வழங்கப்படும். ஆனால் காவல் நிலையத்தில் அப்படியரு சூழல் இல்லை. அதிகாரிகள் எந்த சட்டப்பிரிவை பயன்படுத்த நினைக்கிறார்களோ அதனை வழக்குகளாக பதிவு செய்கின்றனர். இதனால் வாழ்விடம், உறவுகள், சுதந்திரம் அனைத்தையும் இழக்க நேருகிறது.

தோப்படியான் 101 ரூபாய் முதல் 1001 ரூபாய் வரைமட்டுமே அபராத தொகை இருக்கும். அந்த குற்றச்சம்பவத்திற்கு ஏற்றாற்போல தொகையும் இருக்கும். அப்படி விதிக்கப்படும் அபராத தொகையை ஊர்காரர்கள் முன்னிலையில் கோயில் உண்டியலில் குற்றம் செய்தவர் செலுத்துவார். சில நேரங்களில் அபராத தொகையுடன் பொது மன்னிப்பு போன்று கோயில் முன்பு விழுந்து வணங்க வேண்டும். கோயில் பூசாரி கொடுக்கும் திருநீற்றை நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும். வழக்கம் போல அவர் உறவுகளோடு பழகலாம். வாழ்ந்த இடத்தில் வாழலாம். எனவே இந்த அமைப்பு முறையைதான் இவர்கள் விரும்புகிறார்கள்.

நீதிமன்றங்களுக்கு செல்லும் போது அவர்களின் தீர்ப்புதான் இறுதியானது. கல்வி அறிவில்லதாவர்களாக நாங்கள் இருப்பதால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே தெரியும். பணபலம் இல்லாததால் வழக்கறிஞர் களையும் இவர்கள் நாடமுடியாது. சிறைதண்டனை என்பது எங்களின் அடிப்படை வாழ்வில் இருந்து முழுமயாக மாற்றிவிடுகிறது. குடும்பம், சமூகம், சூழல் இவற்றில் இருந்து வேறுவொரு நிலைக்கு அழைத்து செல்கிறது. தனிமையில் மனரீதியிலான மாற்றங்களுக்கு நாங்கள் ஆளாக நேரிடுகிறது. சொல்வதென்றால் எங்களின் வாழ்க்கையை தொலைத்த நிலைக்கு சென்று விடுகிறோம். நேரம் என்பது சூறையாடப்படுகிறது. முடிவு என்பது கேள்விக்குறியாகிறது. அடுத்த கட்ட வாழ்க்கை என்பது முடிவுக்கு வருராத வாழ்க்கையாக உள்ளது. தற்கால சட்டங்கள் எங்களின் வாழ்வியலை பாதுகாக்கவில்லை மாறாக சிதைக்கிறது.

தொழில் பாதுகாப்பு என்பது பழைய சமூகக் கட்டுப்பாடான வாழ்க்கை முறையில் இருந்ததா இல்லை தற்கால வனபாதுகாப்புச் சட்டம், வன விலங்கு பாது காப்புச் சட்டம் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறதா என்று பார்க்கின்ற போது தொழில் என்றால் எதை சொல்வதென்றே தெரியவில்லை அந்த நிலையில் தான் இம்மக்களின் தற்போதைய வாழ்க்கை உள்ளது. காரணம் வனபாதுகாப்புச் சட்டம் மற்றும் வனவிலங்கு பதுகாப்புச் சட்டம் போன்ற நவீன சட்டமுறைகள் நாங்கள் காலம் காலமாக செய்து வந்த தொழிலை சிதைத்து விட்டது. தொழில் முறையை இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். நவீன சட்டத்திற்கு முந்தைய தொழில், பிந்தைய தொழில் என்ற முறையில் பார்க்க முடிகிறது.

முற்கால தொழில்முறை என்பது மரபு சார்நதாகவும் அதே நேரத்தில் இவர்களின் பாதுகாப்பை சிதைக்காமலும் பாதுகாத்தது. வேட்டைத் தொழில் மட்டுமே தெரிந்த இம்மக்களுக்கு தற்போது அதனால் கிடைக்கப்பெறும் உணவும் கிடைக்கவில்லை. காட்டுப்பன்றி, மலையாடு, முள்ளம் பன்றி, முயல், உடும்பு, புறா, காடை போன்றவை விருப்பிய உணவாக கிடைக்கப்பெற்றது. துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருந்தன. வேட்டைக்கும் இவர்களின் பாதுகாப்பிற்கும் பயன்பட்டது. தற்போது இல்லை, காவல் நிலையங்களில் ஒப்படைத்து விட்டனர். இயற்கையில் கிடைக்கப்பெற்ற மரங்களான மூங்கில், கருந்துவரை, கானப்புங்கலான் போன்றவற்றின் கொம்புகளை வெட்டி கூர்மையாக்கி வேட்டைக்குப் பயன்படுத்தினோம். இந்த வேட்டைத்தொழில் சுமார் பத்தாண்டுகாலமாக இவர்கள் செய்யவில்லை. இதனால் இயற்கையில் கிடைக்கப்பெற்ற உணவினை உண்டு நோயில்லாமல் வாழ்ந்து வந்த நிலை இழந்ததாக வேதனையடைகின்றனர்.

தற்காலத்தில் வளர்ப்பு கோழி மற்றும் ஆட்டுக்கறி போன்றவற்றை உண்கிறார்கள். தோட்ட வேலைகளான வாழைக்கு குழி எடுத்தல், காப்பி தோட்டம் பராமரித்தல், இளவம் பஞ்சு (வொளவங்காய்) எடுத்தல், மிளகு, ஏலக்காய், எலுமிச்சை, கடுக்காய், கொய்யா, அவரை, பீன்ஸ், நுக்கல், நெல்லிக்காய்,  சாம்பிராணி எடுத்தல், அவகோடை என்ற வெண்ணைப்பழம், பலாப்பழம் போன்றவற்றை பராமரிக்கவும் எடுக்கவும் செல்கின்றனர். கிரமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலை  சுய தொழில் என்றால் தேன் எடுத்தல், பாசை (பாசம் அவர்களின் வழக்கு) எடுத்தல் போன்றவை சுய வருவாய்க்கான தொழிலாக உள்ளது. இந்த உணவுமுறைகளால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நவீன மருத்துவத்தை நாடும் நிலையும் உள்ளது.

பளியர் சமுகத்தின் கட்டுப்பாடுகள் முற்காலத்தில் எப்படி பாதுகாக்கப்பட்டன இன்றைய நவீன வாழ்க் கையில் அந்தக்கட்டுப்பாடு எந்தெந்த வழிகளில் சிதைக்கப் படுகிறது. அதனை எப்படி எதிர்கொள் கிறார்கள் என்று பார்த்தால் மலையில் நடைபெறும் எந்த நிகழ்வுகளும் பளியர்களைத் தவிர மற்றவர்களுக்கு தெரியாது. குறிப்பாக பெண் ஒருவர் ஆணால் பாதிக்கப்பட்டால் இவர்களுக்குள்ளே பேசித்தீர்வுகண்டு திருமணத்தை முடித்து வைப்போம். அதனால் தற் கொலைகள் இன்றி உயிர்கள் பாதுகாக்கப்பட்டது. ஒரு விலங்கை வேட்டையாடினால் கிராமமே மகிழ்ச்சி யோடு உண்டு வாழ்ந்தனர். தற்போது வனத்துறைக்கு தெரிந்தால் கைதுசெய்து பேப்பர் (நாளிதழ்), டிவியில் (தொலைக்காட்சி) போட்டு குற்றவாளியைப் போல சிறையில் அடைத்து விடுகிறார்கள். சமூகத்தோடு எங்களுக்கு இருந்த நெருக்கம் சிதைக்கப்படுவதோடு குற்றவாளி என உலகறிய செய்து விடுகிறார்கள். மலைக்கு இவர்கள் ராஜாவாக இருந்தகாலம் போய் எதைப் பேசினாலும் பயந்து பார்த்து பேசவேண்டியதாக தற்போதைய சூழல் உள்ளதாக வேதனை அடை கின்றனர்.

பளியர்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்கள். இக்காலத்தில் உருவாக்கப் பட்டுள்ள நவீன சட்டங்கள் இம்மக்களை ஒரு பொருட்காட்சியாக மாற்றி விட்டதாகவும். மாறாக மக்களின் வாழ்வியலை பாதுகாக்கவில்லை என்று கூறும் இம்மக்கள் தங்களின் முன்னேற்றத்திற்காவோ அல்லது கல்வி வளர்ச்சிக்கோ உதவி புரியவில்லை என்பதையும் பதிவு செய்கின்றனர். சொத்துக்கள் சார்ந்து ஏற்படும் பிரச்சனைகள் பஞ்சாயத்து முறையில் உடனடித் தீர்வு காணப்பட்டதா இல்லை நீதிமன்றம் வாயிலாக உடனடித் தீர்வு கிட்டியதா என்று பார்க்கின்ற போது பெரிய அளவில் தற்போது சொத்துக்களை பளியர்கள் வைத்திருக்கவில்லை.

வாழும் வீடு மட்டும் தான் இம்மக்களிடம் உள்ளது. குறிப்பாக அந்த வீடும் மலைப்பகுதியிலேயே உள்ளது. முற்காலத்தில் நிலம் வைத்திருந்தவர்கள் அதனை பராமரிக்க முடியாமல் பெருமுதலாளிகளுக்கு கொடுத்து விட்டு தற்போது அவர்களிடம் வேலை செய்யக்கூடிய தினக்கூலிகளாகத்தான் உள்ளனர். வைத்திருக்கும் சொத்தில் பிள்ளைகளுக்கு தரும் வழக்கம் இந்தச் சமூகத் தினரிடம் இருந்ததுள்ளது. தற்போதும் அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கும் வழக்கம் உள்ளது. அவர்கள் வேண்டாம் என்றால் உடன்பிறந்த ஆண்கள் எடுத்துக்கொள்வார்கள். தற்போது தனிநபர் வனப்பகுதிகளில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது என்று கூறினாலும் தனியார் முதலாளிகள் மட்டும் 500 ஏக்கர், 1000 ஏக்கர் என எப்படி வாங்கி நவீன விவசாயம் செய்கின்றனர் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

பெரும்பாலும் சொத்து தொடர்பான் பிரச் சனைகள் ஏற்படுவது மிகவும் அரிது என கூறுவதைப் பார்க்க முடிகிறது.

தற்காலத்தில் பளியர் சமுகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் யாது தலைமையின் பங்களிப்பால் சமூக அமைதிக்காக மேற்கொள்ளப்படும் முக்கிய அம்சங்கள் என்ன என்று பார்த்தால் இவர்களின் வாழ்க்கைச்சூழல் இயற்கையோடு கலந்த ஒன்று. கட்டுப்பாடுகள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உறங்கும் போதுதான் வீடு களைப் பயன்படுத்துகின்றனர். வேற்று நபர்கள் யாரும் இவர்களின் சமூக கட்டுப்பாட்டில் தலையிடுவதை விருப்புவதில்லை. தற்போது சில அரசியல் ஊடாட்டம் சமூகத்தில் இடம்பெற்றுவிட்டது. இதனால் சில குழுக் களாக செயல்பட்டாலும் கூட இம்மக்களின் உன்னத உறவுமுறையை யாராலும் சிதைக்க முடியவில்லை.

அந்நிய நபர்களின் தலையீடு போன்றவற்றில் இருந்து இவர்களைப் பாதுகாக்கும் பொருப்பை அவர்களின் தலைமை ஏற்றுக்கொள்கிறது. உறங்குப் போது கூட  சிறிய வீட்டிற்குள்ளே 5,6 பேர் படுத்து உறங்குகின்றனர். இவர்கள் விரும்பும் அமைதி இதுதான். நவீன சாதனங்கள் சில வாழ்க்கை முறையில் புகுந்து விட்டது இருப்பினும் எல்லா நேரங்களிலும் இவர் களால் அவற்றைப் பயன்படுத்த முடியாது. காரணம் மின்சாரம்  எப்போது வரும் போகும் என்பது தெரியாது.

இன்றைய சூழலில் அண்டை மாநிலத்திற்கோ அல்லது வெளியூர்களுக்கோ வேலைக்காக செல்லும் போது இம்மக்கள் சில பிரச்சனைகளுக்கு தற்காலத்தில் ஆளாக நேரிடுகிறது. உதாரணத்திற்கு கர்நாடக மாநிலத்திற்கு கடைசிக்காட்டைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் வேலைக்கு சென்று திருப்பிய போது சேலத்தில் காவல் துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். பிறகு தோப்படியான் பெயரைச்சொல்லியும் அவரது கைப் பேசியில் பேசி உறுதிப் படுத்திய பிறகுதான் அந்த நபரை விடுவித்துள்ளனர், வெளிமாநில போலிசார் பிடித்தால் குடும்பத்தாரிடம் கூடச் சொல்லாமல் சிறையில் அடைக்கப்படுவதால் அவர் வேலையில் உள்ளாரா இல்லை சிறையில் உள்ளாரா என்று கூட உறவினர்கள் தெரிந்துகொள்ள முடியாத சூழலும் தற்காலத்தில் உள்ளது. உதராணத்திற்கு ஆந்திரமாநில காவல்துறை செம்மரம் வெட்டுவதாக பலரை கொன்றும் சிறையில் அடைத்தும் துன்புறுத்தி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

உறவுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூட்டு நிகழ்வுகளிலும் பாதுகாக்கப்படுகிறது. குடும்ப விழாக் களானாலும் சரி ஊர் பொது விழாக்களானாலும் சரி உறவுகளோடும் ஒற்றுமையை பேனும் விதத்திலும் கொண்டாடுவதில் பளியர்களின் கூட்டு வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது அரசு பளியர் இனமக்களுக்கான மானிடவியல் காட்சியகத்தை உருவாக்க வேண்டும். அதில் அவர்கள் இழந்த வாழ்க்கையில் பயன்படுத்திய வேட்டைக் கருவிகள், ஆடைகள், அணிகலன்கள், சடங்குசார்ந்த பொருட்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் எதிர்வரும் ஆய்வாளர்களுக்கும், சமூகத்திற்கும் அவர்களைப்பற்றி புரிந்துகொள்ளவும் ஆய்வுக்கும் பயனளிக்கும். எனவே பளியர் இனமக்களின் வாழ்வியலை சிதைப்பதை நிறுத்திக் கொள்வதே நாம் அவர்களுக்கு செய்யும் உதவியாகும்.

Pin It