தோழர் காந்தியவர்கள் 8-ந் தேதி சோமவாரம் முதல் 21-நாள் பட்டினி விரத மிருக்கப்போவதாக ஒரு விளம்பரம் வெளியிட்டிருக்கிறார். இது பத்திரிகைகளுக்கு ஒரு பெரிய விருந்தாகும். காங்கிரஸ்காரர்களுக்கும் ஒரு பெரிய திருவிழாவாகும்.
தோழர் காந்திக்கு இந்தப்பட்டினி விரதம் புதியதல்ல. அவருக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் அதிகமான கவலை இருக்கிறது என்பதை உலகத் திற்கு அறிவிக்க இந்த பட்டினி விரதம் என்பதைத்தான் தக்க ஆயுதமாகக் கொண்டிருக்கிறார். தோழர் காந்தி அவர்கள் ஒத்துழையாமை கிளர்ச்சி நடத்தியகாலத்தில் சுயராஜ்ஜியம் பெற இந்து முஸ்லீம் ஒற்றுமையை மிகவும் முக்கியமானது என்று தான் கருதி இருப்பதாக தெரிவிக்க வேண்டிய சந்தர்ப் பம் வந்த காலத்தில் இந்தமாதிரியாக ஒரு 21 நாள் பட்டினி விரதத்தை வெளிப் படுத்தினார். கடைசியாக அது என்ன பயன் விளைவித்தது என்பதும். இந்து-முஸ்லிம்கள் அந்தப் பட்டினியை எவ்வளவு தூரம் லட்சியம் செய்தார்கள் என்பதும் யாவருக்கும் வெட்ட வெளிபோல் தெரிந்த காரிய மேயாகும்.
பிறகு ஒரு தடவை தனது ஆஸ்ரமத்தில் ஏதோ சில ஒழுக்க ஈனங்கள் நடந்து விட்டதாகக் கருதி அவ்வொழுக்க ஈனங்களை வெறுப்பதற்கு அறிகுறியாக 6 நாள் பட்டினி விரதமிருப்பதாக விளம்பரம் செய்தார். அதன் பயனாய் என்ன ஏற்பட்டது என்பதும் ஒரு அளவுக்கு பொதுஜனங்கள் தெரிந் திருப்பார்கள்.
அதற்குப் பிறகு சென்ற வருஷக் கடைசில் தீண்டாதார் என்பவர்களுடைய தனித்தொகுதியை ஒழிப்பதற்கு என்று ஒரு காலம் குறிப்பிடாத பட்டினி விரதத்தை வெளிப்படுத்தினார், அதில் பூரணவெற்றி பெற்றார். ஏனெனில் தீண்டப்படாத மக்கள் என்பவர்கள் திக்கற்றவர்களாகவும், போதிய முற்போக்கு ஞானமில்லாதவர்களாகவும் இருந்ததால் அவர்களை சுலபத்தில் ஏமாற்றி விடவோ, அல்லது நிர்ப்பந்தித்து அடக்கியாளவோ சாதாரணத்தில் முடித்து விட்டது.அதற்குப் பிறகு குருவாயூர் ஆலயப் பிரவேச விஷயமாய் ஒரு கால வரையரையற்ற பட்டினி விரதத்தை வெளிப்படுத்தினார். அது சனாதன தர்மிகள் அதாவது நல்ல தெட்டுப்பட்ட பார்ப்பனர்களைப் பொருத்ததாகையால் அவர்கள் எல்லாத் துறையிலும் முன்னேற்றமடைந்த கூட்டத்தாரா னதால் அவர்கள் காந்தியின் பட்டினியை ஒரு சாதாரண ஜீவஜெந்து பட்டினி போலக்கூட மதியாமல் அலட்சியம் செய்துவிட்டார்கள். பிறகு அது எப்படி எப்படியோ மெழுகப்பட்டுவிட்டது. அன்றியும் “நீ ஏன் பட்டினிகிடந்து சாகவில்லை” என்று கேட்க யாருக்குத்தான் மனம் வரும்?
இப்போது மறுபடியும் ஒரு காலவரையுள்ள அதாவது 21 நாள் வாய்தா பட்னி விரதமொன்று ஏற்கப்போவதாக விளம்பரப்படுத்திவிட்டார். நாளை திங்கள் கிழமை முதல் இந்தப் பட்டினிவிரதம் அமுலுக்கு வரக்கூடும்; இதற்குள் பத்திரிகைகள் இந்தப் பட்டினியை எவ்வளவு பிரமாதப்படுத்தக் கூடுமோ அவ்வளவு விளம்பரப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஏறக்குறைய 100-க்கு 90 பத்திராதிபர்கள் தங்கள் சொந்த நிலையில் தோழர் காந்தியின் பட்டினியைப் பற்றி கூட்டம் சேர்த்துக் கொண்டு பரிகாசம் பண்ணி பேசிக் கொண்டிருந்தாலும் பத்திரிகையில் எழுதும்போது இதை பிரமாதப் படுத்தி ஆத்ம சக்தி என்றும், தெய்வீக சக்தி என்றும், ஏதேதோ சில முட்டாள் தனமானதும், சூழ்ச்சிகளானதுமான வார்த்தைகளைப் போட்டு நிரப்பி விளம்பரப்படுத்துவதில் சிறிதும் தயங்குவதில்லை. ஏனெனில் இந்தியாவில் இந்திய மக்களால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைகள் அவ்வளவும் அனேக மாய் ஒன்று இரண்டு தவிர மற்றவை எல்லாம் காந்தியையும், காந்தியவர்கள் செய்கை, குணம் முதலியவைகளையும் புகழ்ந்து கவிபாடி வாழவேண்டிய தன்மையிலேயே இருந்து வருகின்றது. ஆரம்பத்தில் அதே பிரசாரம் செய்து பாமர மக்களுக்கு முன்னிலும் அதிகமாக காந்தி “மகத்துவம்” உண்டாக்கி விட்டார்கள். ஆனால் இப்போது அது எவ்வளவு பரிகசிக் கத்தக்கதானாலும் இன்று யாராவது உண்மையை எழுதினால் தங்கள் பத்திரிகை வாழ்வுக்கே ஆபத்து வந்துவிடுமே என்ற பயம். ஆகையால் பொய் வேஷம் போட்டு ஆட வேண்டியதாய் போய் விட்டது.
நிற்க பட்டினி விரதத்தின் தத்துவம் என்ன என்பதைப் பற்றி சற்று ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.
பட்டினியில் ‘ஒரு ஆத்மசக்தி’ இருப்பதாகச் சொல்லப் படுகிறது.
ஆத்ம சக்தி என்பது மனித சக்திக்கு மீறின ஒரு சக்தி என்றும் கருதப் படுகிறது.
இந்த ஆத்ம சக்தி என்பது ஒரு காரியத்திற்கு பிரயோகிப்பது என்பது மனித சக்தியில் செய்ய வேண்டிய காரியம் எல்லாம் செய்து பார்த்து முடியா மல் போன காலத்தில் உபயோகிக்கப்படும் ஆயுதமாகவே கொள்ளப் படுகிறது. அல்லது மனித சக்தியால் செய்ய முடியாது என்று கருதிய ஒரு காரியம் யாராலாவது செய்யப்பட்டுவிட்டால் அது ஆத்ம சக்தியால் செய்யப் பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆனால் பிரஸ்தாப பட்டினி விஷயத்தில் உள்ள ஆத்ம சக்திக்கு இரண்டுவித அவசியம் காட்டப்படுகிறது. ஒன்று ஏதோ ஒரு காரியம் சாதிப்பதற்கு என்றும் மற்றொன்று ஆத்மசுத்தி செய்து கொள்வதற்கு என்றும் சொல்லப்படுகின்றது. இவ்வளவோடு மாத்திரம் நிற்கவில்லை. “இந்த பட்டினிக்கு எவ்வித நிபந்தனையும் இல்லை”என்று ஒரு இடத்திலும், “இதற்கு எவ்வித நோக்கமும் இல்லை”என்று ஒரு இடத்திலும் “இந்த பட்டினியை எப்போது வேண்டுமானாலும் துவக்கி கொள்ளலாம்” என்றும், மற்றும் “ஒரு மகத்தான சீர்திருத்தம் நடை பெறும் போது ஒழுக்க மற்றதும், ஆபாசமான காரியங்களும் ஏற்படாமல் இருப்பதற்கும் காரியம் துரிதப் படுத்தப்படவும் பட்டினி ஏற்கப்பட வேண்டியது அவசிய” மென்றும் கூடியவரை பட்டினியை ஏற்க வேண்டாம் என்றும் தனக்குள்ளாகவே எதிர்த்துப்போராடி பார்த்தும் தன் மனச்சாட்சி ஏற்றுக் கொள்ளும்படி செய்தது என்றும் “பட்டினி ஒரு மத சம்மந்தமானது” என்றும் இந்த “மத சம்பந்தமான இயக்கம் அதன் கர்த்தாக்களின் புத்தி சாதுர்யத்தால் வெற்றி பெற்று விடா” தென்றும் “ஆத்மார்த்த வலிவே வெற்றிக்குக் காரணம்” என்றும் தோழர் காந்தியே சொல்லி இருக்கிறார். இவற்றையெல்லம் அறிவோடு யோசித்துப் பார்த்தால் இந்த பட்டினி விரதத்தில் உள்ள உண்மை பொருள் அற்ற தன்மை நன்று விளங்கும். எப்படி இருந்த போதிலும் தோழர் காந்தி அவர்கள் இந்த பட்டினி விரதம் முட்டாள் தனமாக ஆரம்பித்து விட்டது என்று யாரும் கருதி விடக் கூடாது.
பூனா ஒப்பந்தத்தை திருத்த வேண்டுமென்று தோழர் அம்பேத்கார் கூறிய விஷயமொன்று, சில மாகாணம் அதை ஆட்சேபிப்ப தொன்று, இதற்கு முன் கூறிய குருவாயூர் கோவில் பட்டினி ஆரம்பிக்க முடியாமல் போனதால் பொது ஜனங்களிடை ஏற்பட்ட பழிப்பு ஒன்று சனாதனதர்மிகள் தோழர் காந்தியை பரிகாசம் செய்ய ஆரம்பித்ததென்று, சட்ட மறுப்பு இயக்கம் ஸ்தம்பித்தும் காந்தியாரை வெளியில் விட சர்க்கார் நிபந்தனை கேட்ட தென்று, காங்கிரசுக் காரருக்கு வேலையில்லாமல் போனதின் பயனாய் சற்று உணர்ச்சி உள்ள வாலிபர்கள் எல்லாம் காங்கிரசையும், காந்தியாரையும் எதிர்த்து வைது கொண்டும், பொதுவுடைமையிலும், சமதர்மத்திலும் பற்றுக் கொண்டு அதில் போய் சேருவதென்று முடிவு செய்து பலர் அந்தப்படியே செய்து வரவதொன்று, ஹரிஜன சேவை என்பதன் இரகசியம் வெளியாகி ஹரிஜனங்களில் பெரும்பாலோர்களே அதை லட்சியம் செய்யாமல் போன தென்று, காங்கிரசில் இருந்து வரும் தென்னாட்டு பார்ப்பனத் தலைவர்கள் என்பவர்களின் நடத்தையில் பொது ஜனங்களுக்கு நம்பிக்கையில்லாமல் போனதுடன் அவர்கள் சூட்சிகள் சிலவற்றை காந்தியார் அறிந்து வெட்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டதென்று, மற்றும் ஏழை தொழிலாள மக்கள் காந்தியை தங்கள் எதிரிகளாக கருதி இருப்பதையும் அவர்கள் மத உணர்ச்சி களை வெறுப்பதையும் காந்தியாருக்கு நன்றாக விளங்கிவிட்ட தொன்று, காந்தியையோ, காங்கிரசையோ சிறிதும் லட்சியம் செய்யாமல் லண்டன் மகாநாடு நடப்பதொன்று, இப்படியாக இன்னும் பல காரியங்கள் காந்தியா ருக்கு பட்டினி விரதமனுஷ்டிப்பதன் மூலம் ஏதோ ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி தீர வேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்து விட்டது.
எது எப்படியிருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை சத்தியாக்கிரகத்தையும், பட்டினி விரதத்தையும் ஒன்று போலவேதான் கருதுகிறோம்.
சத்தியாக்கிரகம் எப்படி சண்டித்தனமானது என்று சொல்லுகின் றோமோ அப்படியேதான் அதைவிட மேலாகவே பட்டினியையும் சண்டித் தனம் என்று தான் சொல்லுகின்றோம். அனுபவத்தில் பார்த்தாலே இதன் உண்மை விளங்கும். ஜனங்களில் சிலரும், குழந்தைகளில் பலரும் பட்டினி இருப்பதாக அதாவது வீட்டில் குடும்பத்தில் சாப்பிடமால் கோபித்துக் கொண்டிருப்பதாகக் காட்டுவதின் கருத்து என்ன என்பதைக் கவனித்தால் இதன் உண்மை விளங்கும். நியாயம் சொல்லி மெய்ப்பிக்க முடியாமலோ, கை பலத்தால் சக்தியை காட்ட முடியாமலோ போன சமயத்தில் சாப்பிடுவ தில்லை, மண்டையை உடைத்துக் கொள்ளுகிறேன், தற்கொலை செய்து கொள்ளுகிறேன், எங்கேயாவது ஓடிப்போய் விடுகிறேன் என்பது போன்ற காரியங்களால் காரியத்தை சாதிக்க முற்படுவது இயற்கையாக இருப்பதைப் பார்க்கின்றோம்.
தவிரவும் ஏதாவதொரு காரியத்தில் ஒருவருக்கு இருக்கும் உண்மை யான ஆர்வத்தைக் காட்டிக் கொள்ளவேண்டுமானால் இதுதான் (பட்டினி தான்) கடைசி வழியாகும்.
ஏனெனில் முதலில் ஒத்துழையாமை என்று சொன்னார். அதற்கு பிணக்கு என்று பேர் வைத்து நடத்திப் பார்க்கப்பட்டாய் விட்டது. பிறகு சத்தியாக்கிரகம் என்று சொன்னார். அதனால் சிறிது கஷ்டங்கள் அனுபவிப் பது என்று சொல்லி அந்தப்படியும் பார்த்தாய் விட்டது. இரண்டும் உத்தேசித்த வெற்றியைகொடுக்க வில்லை என்றாய் விட்டதால் மூன்றாவது காரியம் தனது உயிரை கொடுப்பதாக சொல்ல வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டது. தவறான மார்க்கத்தில் இழுத்துச் செல்லப் பட்டவர்களுடைய கதியெல்லாம் இப்படித்தான் நடந்து வந்திருக்கிறது என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் பார்க்கலாம். ஒரு காலத்தில் இந்தக் காரியங்களுக்கு மதிப்பு இருந்தது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் இன்று மக்கள் அடைந்திருக்கும் முன்னேற்ற அளவுக்கு இந்த மாதிரி பழய கால தந்திரங்கள் பயனளிக்கு மென்று நம்மால் கருத முடியவில்லை.
எப்படி இருந்தபோதிலும் தோழர் காந்தியாரின் இந்தக்காரியங்கள் எல்லாம் வெற்றிபெற்றாலும், தோல்வி அடைந்தாலும் உண்மையானதாய் இருந்தாலும் தந்திரமானதாய் இருந்தாலும், பொதுவாக இவை மனித சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு கேட்டை விளைவிப்பதேயாகும். காந்தியென்றாலே இப்போது ஒரு மனிதத் தன்மைக்கு மீறின சக்தியுடையவர் என்கின்ற எண்ணத்தைப் பார்ப்பனர்களும், வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகைகளும், சில சுயநலமிகளும் (இது சுலபமான காரியமா யிருந்ததால் பாமர மக்களுக்குள் இந்த மாதிரி ஒரு அக்கிரமமான காரியத்தைச் செய்து விட்டார்கள். தோழர் காந்திக்கு செல்வாக்கு உண்டாக்கியதன் பயன் எல்லாம் இப்போது மத புரட்டுகளையும் மத சூட்சிகளையும், நிலை நிறுத்தப் படும் தன்மைகளை பலப்படுத்தவே பயன்பட்டு வருகிறது.
உதாரணமாக தோழர் காந்தி ஒவ்வொரு வார்த்தைக்கும் “கடவுள் கட்டளை இடுகிறார்” “கடவுள் சொல்லுகிறார்” “கடவுள் தன்னோடு பேசு கிறார்” என்று மக்கள் நம்பும்படியாகவே பேசியும் சூசனை காட்டியும் வரு கிறார். இதன்பயன் என்னமாய் முடியும் என்று பார்த்தால் ஏசுநாதர், முகமது நபி, என்பவர் போன்றவர்களின் கூட்டத்தில் தோழர் காந்தியும் சேர்க்கப்பட வேண்டும் என்கின்ற ஒரு உணர்ச்சி மூட மக்களுக்கு ஏற்படக்கூடும் என்பதைத் தவிர வேறில்லை. அவர் எப்படியோ முதலாளிமார்கள் இடம் இருந்து பணம் வசூல் செய்து பார்ப்பனர்கள் கையில் கொடுத்து விடுகிறார். பார்ப்பனர்களோ இந்தப் பணங்களைக் கொண்டு மகாத்மா தன்மையை பலப்படுத்தும் வேலைக்கும் நிலை நிறுத்தும் வேலைக்கும் பிரசாரத்திற்கும் பல தலைப்பின் கீழ் செலவு செய்கின்றார்கள். தற்காலம் வேலையில்லா திண்டாட்டமும் சோம்பேறி வாழ்க்கைப் பிரியமும் சேர்ந்து பல வாலிபர்களை புராண காலnக்ஷபம் மதப்பிரசாரம் முதலியவைகளில் இழுத்து விட்டு விடுகிறது. இதற்கு நாம் என்ன செய்வது என்பது நமக்கு விளங்கவில்லை.
சாதாரண ஆத்மா விஷயமே சந்தி சிரிக்கும் போது மகாத்மா விஷயம் எப்படி பட்டதாய் இருக்க முடியும் என்பதை வாசகர்கள் தான் முடிவு கட்டி கொள்ள வேண்டும். ஆகையால் சுயமரியாதை இயக்க தோழர்களுக்கு இந்த சமயம் நாம் ஒன்று சொல்லுகின்றோம். அதாவது இந்த பட்டினி விபரத்தைப் பற்றி அவர்கள் பேசாமலிருப்பதே நல்லது என்பதுதான்.
(குடி அரசு - தலையங்கம் - 07.05.1933)
தோழர் காந்தி
தோழர் காந்தி அவர்கள் இப்போது இருந்துவரும் பட்டினி விரதத்தில் தீண்டப்படாத கிறிஸ்தவர்கள் விஷயமாயும் பாடுபடுவாராம், “போகட்டும் பாவம்”. இத்தனை நாளைக்குப் பிறகாவது கிறிஸ்தவ தீண்டாதார் விஷயம் அவருடைய ஞாபகத்துக்கு வந்தது பற்றி ஒரு விதத்தில் மகிழ்ச்சியே. ஆனால் இவையெல்லாம் சுயமரியாதை இயக்கத்துடன் போட்டி போடத் தென்னிந்தியப் பார்ப்பனர்களின் சூத்திரக்கயரின் சக்த்தியேயாகும் என்பதில் மாத்திரம் சிறிதும் ஐயமில்லை.
(குடி அரசு - செய்திக் குறிப்பு - 07.05.1933)