பழங்குடித் தமிழகம் - ஓர் அறிமுகம்

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 36 பழங்குடி இனக்குழுக்கள் இனங் கண்டறியப்பட்டு, அவை அட்டவணைப் பழங்குடிகளாகவும் அறிந்தேற்பு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள், குடித்தொகை எண்ணிக்கை அடிப்படை யில் மலையாளி என்னும் பழங்குடி முதலிடம் பெறுகிறது. கல்வராயன் மலையாளிகள், பச்சை மலையாளிகள் என முறையே அவர்கள் சார்ந்துள்ள மலைகளான கல்வராயன் மலை, சவ்வாது மலை, ஏலகிரி மலை, சித்தேரி மலை, கொல்லி மலை, பச்சை மலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பல்வேறு உள் பிரிவினராக இம் மலையாளிப் பழங்குடியினர் பிரித்து அறியப்பட்டாலும் மலையாளிகள் எனும் பொதுப் பெயராலேயே ஆட்சி யாளர்களால் இம்மக்கள் அறியப்படுகின்றனர்.

இருப்பினும், ஒரே மாவட்டத்திற்குள் 10க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடி வகையினர் காணப்படுவதைக் கருத்தில் கொண்டு, பழங்குடியினர் மாவட்டம் என நீலகிரி மாவட்டமே குறிக்கப்படுகிறது. தமிழகத்தின் தொன்மைப் பழங்குடிகளாக அறியப்படும் தொதவர், கோத்தர், குறும்பர், பணியர், இருளர் மற்றும் காட்டுநாயக்கர் என்னும் 6 இனக்குழுக்களும் ஒட்டுமொத்தமாக நீலகிரி மாவட்டத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பதிலிருந்து பழங்குடித் தமிழகத்தில் இம் மாவட்டம் பெறும் சிறப்பிடத்தை நாம் உணரலாம்.

பழங்குடித் தமிழகமும் சமுதாய அசைவியக்கமும்

பழங்குடித் தமிழகத்தில் அனைத்துப் பழங்குடியினரும் தங்களுக்கான பழங் குடி நிலையிலேயே உள்ளனரா? சமுதாயப்-பொருளியல்- பண்பாட்டுத் தளங்களில் ஒரே சமன்பாடாகக் காணப்படுகின்றனரா? எனும் இன்ன பிற கேள்விகள் எழுப்பப்படும்போதுதான் எளிதில் விடையளிக்க இயலாத நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.

ஏன் என்றால், திட்டவட்டப் பழங்குடி நிலையில் (Ideal Tribal Pole) எந்தப் பழங்குடியினரும் இல்லை என்கிற உண்மைநிலையே இன்று நிலவக் காண்கிறோம். சிற்சிலப் பழங்குடியினர் திட்டவட்டப் பழங்குடியினர் நிலை என்ற நிலைபாட்டிலிருந்து சற்று நகர்ந்து, திட்டவட்ட நாட்டுப் புற நிலை (Ideal Folk Pole) என்கிற நிலைபாட்டை நோக்கிச் சற்று நகரத் தொடங்கியுள்ளமையும் மாறாகச் சில பழங்குடியினர் திட்டவட்டப் பழங்குடியினர் நிலையிலி ருந்து வெகுவாக நகர்ந்து திட்டவட்ட நாட்டுப்புற நிலை என்ற நிலைப்பாட்டை நெருங்க வருவதையும் இன்னும் சில பழங்குடியினர் சற்றேறக் குறைய திட்டவட்ட நாட்டுப் புற நிலை என்கிற நிலைபாட்டை நெருங்கிவிட்டமையும் கூர்ந்தாய்வின்போது புலப்படக் காண்கிறோம்.1 இத்தகைய சமுதாய அசைவியக்கத்திற்குத் (Social Mobility) தொழில் மயமாதல் (Industrialization), புலப்பெயர்ச்சி (Displacement) நகர்புறமயமாக்கல் (Urbanization) பன்முகப் பண் பாட்டுச் சமுதாயத்தை (Pluricultural Society) ஒற்றைப் பண்பாட்டுச் சமுதாயமாக (Monocultural Society) ஆக்க முற்படும் சமுதாயச் சமய - அரசியல் அணுகுமுறை (Socio-Religious-Political Society) என்னும் பல்வேறு சமுதாயப் பண்பாட்டுக் காரணிகளைக் கூறலாம்.

விளிம்புநிலையாக்கம்

வனம், மலை, பள்ளத்தாக்கு என எளிதில் நெருங்கமுடியாத சூழல்களில் காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மண்ணின் மைந்தர்கள் தங்களுடைய மரபார்ந்த வாழ்விடங்கள் மற்றும் பண்பாட்டுத் தளங்களை விட்டு வலிந்து புலப்பெயர்ச்சி செய்யப்பட்டு, மேல்தட்டு மற்றும் அதிகார வர்க்கத்தினரால் வாழ்வியல் நிலையின் விளிம்பு நிலைக்கு விரட்டியடிக்கப்படுவது விளிம்புநிலையாக்கம் (Marginalization) எனச் சமுதாய அறிவியலாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. சமுதாய அசைவியக்கத்திற்கான (மேலே பட்டியலிட்டுள்ள) சமுதாயப் - பண்பாட்டுக் காரணிகளின் செயல்பாட்டை இனி விரிவாகக் காணலாம்.

தொழில்மயமாதல்

பழங்குடியினர் மரபார்ந்த வாழ்விடங்களை ஒட்டிய பகுதி களில் ஏற்படுத்தப்படும் தொழில்துறை மற்றும் மேம்பாட் டால் பழங்குடியினர் பண்பாட்டின் இருவேறு நிலைகளி லும்2 மாற்றங்கள் ஏற்பட்டுப் பழங்குடி நிலையிலிருந்து சமு தாய அசைவியக்கம் ஏற்படுகிறது. சான்றாக, நீலகிரி மாவட்ட உதகமண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்துஸ் தான் ஃபோட்டோ ஃபிலிம் தொழிற்சாலையில் பணியமர்த் தப்பட்டுள்ள நீலகிரியின் தொன்மைப் பழங்குடியினரான தொதவர், கோத்தார், குறும்பர் உள்ளிட்டோர் நகர்ப்புற மயமாக்கத்தின் தாக்கத்திற்குள்ளாகித் தம் மரபார்ந்த பழங் குடிநிலையை விட்டு விலகி நிற்பதைக் குறிப்பிடலாம்.

மேலும், நீலகிரி மாவட்டம் முழுதும் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலைகளும் இதுபோன்றதொரு சமுதாய அசைவியக்கத்தையே பல்வேறு பழங்குடிக் குழுக் களிடையே ஏற்படுத்தி உள்ளன.

புலப்பெயர்ச்சி

தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், சுரங்கங்கள், பாது காவல் திட்டப்பணிகள், வன உயிரி உய்விடங்கள், மின் னுற்பத்தி நிலையங்கள், ஆராய்ச்சி மையங்கள், ஆன்மிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளுக் காகப் பழங்குடியினர் தங்கள் வாழிடங்களிலிருந்து வெகு வாகப் புலப்பெயர்ச்சி செய்யப்படுகின்றனர். பழங்குடித் தமிழகமும் இது போன்ற சமுதாயப் பண்பாட்டு அழுத்தங் களுக்கு உள்ளாகிறது என்பதைப் பல்வேறு களப் பணித் தரவுகள் மெய்ப்பிக்கின்றன.3

விருதுநகர் மாவட்டத்தில் அரிய வகை அணில்களுக்கான (Grizzled Squirrels) வனஉயிரி உய்விடம் அமைப்பதற் கென அங்குத் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த பழியர் பழங்குடியினர் தங்களுடைய மரபார்ந்த வாழ்விடங் களிலிருந்து - வனத்துறை முன்மொழிவின்படி - மாவட்ட நிர்வாகத்தினரால் அருகிலிருந்த சமவெளிப் பகுதிக்கு வலிந்து புலப்பெயர்ச்சி செய்யப்பட்டனர். இதனால் அடிப் படையில் வேட்டையாடி உணவு திரட்டுவதைத் தங்கள் முதன்மைப் பொருளியல் வாழ்வாகக் கொண்ட பழியர் பழங்குடியினர் மாவட்ட நிருவாகம் ஏற்படுத்திக் கொடுத்த புதிய குடியிருப்புகளில் அதற்கான வாய்ப்பு வசதிகள் இன்றித் தம் மரபார்ந்த பண்பாட்டை மறக்க நேர்ந்து, அதன் விளைவாகத் தங்கள் புறப்பண்பாட்டிலும் அகப் பண்பாட்டி லும் வேட்டையாடி உணவு திரட்டுதல் குறித்த அறிவுசார் சொத்துக்களை (Intellactual Properties) இழந்து, பண்பாட்டு வறிஞர் ஆயினர்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆனைக்கட்டிப் பகுதியில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம், தயானந்த சரசுவதி ஆசிரமம், செருமானியத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் உள்ளிட்டவை பல்வேறு இடங் களைப் பிடித்துக்கொள்ள, அங்கு பன்னெடுங்காலாமாக வாழ்ந்து வரும் இருளர் பழங்குடியினர் வலிந்து புலப் பெயர்ச்சி செய்யப்பட்டனர். போதாதென்று Zoo Outreach என்ற தனியார் விலங்குக் காட்சியக ஆராய்ச்சியாளர்களின் தவளை ஆராய்ச்சி மையத்திற்கு (Centre for Amphibian Research) பழங்குடி குடியிருப்புகளின் இதயப் பகுதியில் 99 ஆண்டுக்கால வாடகை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நிருவாகம் இடம் ஒதுக்கித் தர, மேலும் நெருக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர் இங்குள்ள இருளர் பழங்குடியினர்.

சந்தனக் கடத்தல்காரர்கள் தேடுதல் வேட்டை என்ற பெய ரில் ஈரோடு மாவட்ட பர்கூர் மலைப்பகுதிகளில் அதிரடிப் படையினர் அங்கு நெடுங்காலமாகத் தொடர்ந்து வாழ்ந்து வரும் சோளகர் பழங்குடியினர் மீது நடத்திய தாக்குதல் களால் அப்பழங்குடியினர் புலப்பெயர்ச்சி செய்யப்பட் டமை அண்மைக் காலப் பதிவுகள்.

ஒற்றைப் பண்பாட்டுச் சமுதாயம் படைக்க முனைந்திடும் சமுதாயச் - சமய - அரசியல் அணுகுமுறை

பன்முகப் பண்பாட்டுச் சமுதாயமாகத் திகழும் இந்தியச் சமூகத்தை ஒற்றைப் பண்பாட்டுச் சமுதாயமாக ஆக்கும் முயற்சியானது ஆதிக்கச் சக்திகளால் ஆண்டாண்டு கால மாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அது தனியொரு சமு தாயச்-சமய-அரசியல் அணுகுமுறையாகப் படிமலர்ச்சி பெற்றதையும் இந்துத்துவம் என்ற பெயரில் அது 1990களில் தொடங்கி 2000 வரை வீறுகொண்டு செயல் பட்டதையும் பழங்குடித் தமிழகமும் பட்டுணர்ந்துள்ளது.

பழங்குடிகளுக்கெனச் சமயமுறைமைகள் தனித்தனியாக இருப்பினும் முதன்மைச் சமுதாய நீரோட்டத்தில் தங்களுக் கெனத் தனித்தன்மையுள்ள பழங்குடிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற நெருக்குதல்களை இந்துத்துவ அணுகு முறை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

பழங்குடியினர் அனைவரும் இந்து சமயத்தினர் என்று அவர்களிடையே கருத்து பரப்புதல், ஏற்கனவே பிற சமயங் களுக்கு மாறியுள்ள பழங்குடியினரை இந்த சமயத்திற்கு மாற்றுதல் உள்ளிட்ட இன்ன பிற பணிகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. இவ்வாறாக மரபார்ந்த பழங்குடிக்கெனத் தனித்தனிச் சமய முறைமைகள் இருப் பதை முற்றாக மறந்தும் மறைத்தும் பலவகைப் பணிகள் நாளும் அரங்கேற்றப்படுகின்றன.

நீலகிரி தொதவப் பழங்குடியினரிடையே இந்துத்துவமாக்கப் பணிகள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. தொத வர் மந்துகளில் கூட்டு விளக்குப் பூசை முறையை அறி முகப்படுத்தியதுடன், இந்துக்கடவுளர் உருவப்படங் களைக் கொண்டு பூசை அறை ஏற்படுத்தி வழிபடும் முறை யையும் தொதுவர் வீடுகளில் கொண்டு வந்துவிட்டனர்.4

கோயம்புத்தூர் பாலமலை இருளர் பழங்குடியினர் குடியிருப்புகளுக்கிடையே அமைந்துள்ள அரங்கநாதர் கோவில் வளாகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சித் திரைப் பௌர்ணமிநாள் விழா மரபில் வலிந்து திணிக்கப் பட்டு வரும் இந்துத்துவ வழிபாட்டு மரபினை இதற்கு மற்றுமொரு சான்றாகக் கூறலாம். கோயம்புத்தூரிலிருந்து சிறுவாணி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கும், கோயம்புத்தூர் ஆனைக்கட்டியை ஒட்டி யுள்ள கேரளப்பகுதிகளுக்கும் குடியேறியுள்ள இருளர் பழங் குடியினர் பாலமலை அரங்கநாதர் கோவிலுக்குத் தற்போ தைய தங்கள் வாழ்விடங்களிலிருந்து ஆண்டுதோறும் சித் திரைப் பௌர்ணமி நாளன்று வந்து கூடியிருந்து, கருவி யிசை, குரலிசைவாயிலாகத் தங்கள் இனக்குழு வரலாற்றை நினைவுகூரும் வகையில் கூடிக் களித்திருந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

1990கள் வரை வழக்கத்தில் தொடர்ந்து வந்த இந்த முறைமையைப் பாலமலையை ஒட்டிய சமவெளிப்பகுதிகளில் வாழ்ந்து வரும் கன்னட மொழிபேசும் ஒரு சாதிக்குழுவினர் அனைத்து பழங்குடி யினரல்லாத பிறசாதியினர் கோவில் சுற்றுவெளியில் ஆடல், பாடல், கருவியிசை எனப் பல்சுவை நிகழ்த்துக் கலைகளாக மாற்றியமைத்ததுடன் நில்லாமல், மண்ணின் மைந்தரான இருளர் பழங்குடியினரையும் கோவில் சுற்று வெளியில் அவ்வாறு வழிபடுமாறு வற்புறுத்தத் தொடங்கி னர். இதற்கு இருளர் பழங்குடியினர் உடன்படாமல், தொடர்ந்து கோவில் கருவறைக்கு முன்பாக அமர்ந்து வழி படும் மரபுரிமையை வலிந்து தக்க வைத்துக் கொண்டு வரு கின்றனர். இருப்பினும், தங்கள் இனக்குழு வரலாற்றை வாய்மொழி மரபாக நினைவு கூர்வதை விடுத்துப் பஜனைப் பாடல்கள் இசைப்போராக இருளர் பழங்குடியினர் மாறி விட்டனர். பாலமலைச் சிகரத்தில் அமைந்துள்ள இருளர் பழங்குடியினர் ஆதி வழிபாட்டு இடத்திற்கு மண்ணின் மைந்தரான இருளராலேயே முதல் பூசை நிகழ்த்தப்பட்ட பிறகே பாலமலை அரங்கநாதர் கோவிலில் பூசை தொடங் கப்படும் நடைமுறை இன்றும் தொடரப்படுதல், பழங் குடியினர்க்கான முகாமை முழுதும் இங்கு மறுக்கப்பட்டு விடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கோயம்புத்தூரை அடுத்துள்ள சிறுவாணி ஆற்றின் தோற்று வாய்ப் பகுதியான முத்திக்குளம் அருகில் வாழும் முதுவர் பழங்குடியினர் ஆண்டுக்கொரு முறை பாறை மீது முத்துக் குளத்து அம்மன் முகத்தை மஞ்சள் சாந்தால் உருவாக்கி வணங்கும் வழிபாட்டு மரபினை அருகிலுள்ள சமவெளி மக்கள் கண்டுணர்ந்த நிலையில், அதனை முக்திக்குளத்து அம்மன் வழிபாடு என்ற பெயரில் மிக அண்மைக்கால மாகத் திரித்து, மாற்றி வழிபடத் தொடங்கிவிட்டனர். சபரி மலை வழிபாட்டு மரபினைப் போல நிற ஆடை உடுத்தி, மாலை அணிந்து நோன்பு கடைபிடித்து இவ்வழிபாட் டினை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் முதுவர் பழங்குடி இயல்மரபினுள் அயல் மரபின் விதிமுறைகளைப் புகுத்தியுள்ளமையும் இந்துத்துவ அணுகுமுறையே.5

நிறைவுரை

தமக்குரிய மரபார்ந்த வாழ்விடங்களில் தங்கள் பண்பாட்டுக் கூறுகள் மாறாமல் தமிழகப் பழங்குடியினர் வாழ்ந்து வரும் நிலையில், பல்வேறு சமுதாய-பண்பாட்டு அழுத்தங்களால் தாக்குதலுக்கு உள்ளாகி வாழ்விட இழப்பு (Loss of habitat) ஏற்பட்டுப் புலப்பெயர்ச்சி செய்யப்படு கின்றனர். வாழ்விடச் சூழல் மாறும்போது, பண்பாட்டுச் சூழலும் மாறுதலுக்கு உள்ளாகிறது. அதாவது, வாழிடச் சூழல் மாற்றத்தால் முதலில் வாழ்வியல்சார் நடத்தைகள் மாற்றங்களுக்கு உள்ளாகி, அதைத் தொடர்ந்து அவர்களு டைய புழங்கு பொருள்சார் பண்பாட்டுத் தளங்களிலும் மாற் றங்கள் ஏற்படுகின்றன. இதனால், பல புழங்கு பொருள் களுக்குத் தேவையின்றி அவை மறைந்து ஒழிகின்றன.

பழங்குடிச் சமுதாயங்களை ஒட்டியுள்ள ஆதிக்கச் சமுதாயங் களின் சமுதாய-பண்பாட்டு அழுத்தங்களும் பழங்குடியினர் மீது காட்டமாகக் காட்டப்படுகின்றன. இதன் விளைவாக வாழ்க்கைத் தளத்தின் விளிம்புக்குப் பழங்குடியினர் துரத்தப் படுகின்றனர். எதிர்வினை புரிவதற்கே ஆற்றல் அற்ற நிலை யில் பழங்குடியினர் இருப்பதால், விளிம்புநிலையாக்கம் என்பது பழங்குடித் தமிழகத்தில் மெல்லமெல்லக் கால் ஊன்றத் தொடங்கிவிட்டது.

அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள் (Leave them alone)) என்ற சவகர்லால் நேருவின் அணுகுமுறைக்கு நேர் மாறாக, பழங்குடியினரை முதன்மைச் சமுதாய நீரோட்டத் திற்குக் கொணரும் இன்றைய அரசு நலத்திட்ட அணுகு முறை இவ்விளிம்புநிலையாக்கத்திற்கு செயலூக்கியாக (Catalyst) அமைந்து அதன் வேகத்தை விரிவுபடுத்தி வருகிறது எனலாம்.

தன்னாட்சி (Self Rule) என்னும் முழக்கத்துடன் மிக அண்மைக்காலமாக சில நடு இந்திய பழங்குடியினர் செயல் பாடுகள் விளிம்புநிலையாக்கத்திற்கு எதிராகச் செயல்படும் நடவடிக்கைகளாக அமைகின்றன. சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இவ்வகை நடவடிக்கைகளுக்குச் சார்பாகவும் அரணாகவும் செயல்பட்டு, விளிம்புநிலை யாக்கத்தின் வேகத்தை முடக்கிப் போட முயல்கின்றன.

பழங்குடித் தமிழகத்தில் விளிம்புநிலையாக்கம் தீவிரம் அடைவதோ, முற்றாக அற்றுப் போவதோ பழங்குடியினர் அதை எதிர்கொள்வதைப் பொறுத்தே அமையும்.

அடிக்குறிப்புகள்

1. இராபர்ட் இரைட் ஃபீல்டு என்னும் மேனாட்டு மாந்தவி யலாளரைத் தொடர்ந்து, இந்திய மாந்தவியல் அளவீட்டு நிறுவனத்தைச் (Anthropological  survey of India) சார்ந்த சுர்ஜித் சிங் 1970களில் பழங்குடி நாட்டுப்புறத் தொடர்பம் (Tribe Folk Continuom) எனும் மாந்தவியல் கோட்பாட்டை முன்னெடுத்து வைத்துப் பழங்குடி இந்தியாவில் நிலவும் தொடர்புறவை விரிவாக ஆராயத் தொடங்கினார். இத்த கைய ஆராய்ச்சி முறையால், பழங்குடியாக்க மறுதல் (De-tribalization) ‘ பழங்குடியாக்கம் (tribalization) ‘உள்ளிட்ட புதுக் கருத்தாக்கங்கள் உருவாயின. முந்தைய மாந்தவியலா ளரால் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மேநிலையாக்கம் (westernization) குறுநிலையாக்கம் (Parochialization) சமத்கிருதவாக்கம் (Sanskritization) என்பனவெல்லாம் இவற்றிற்கு இணையாக எண்ணத்தக்க மாறுபட்ட கருத்தாக்கங்களே.

2 பொருள்சார் பண்பாடு (Material Culture), பொருள் சாராப் பண்பாடு (Non-Material Culture), எனப் பொதுவாக மாந்தகுலப் பண்பாடு பகுத்து உணரப்படுகிறது. இவற்றை முறையே புறப் பண்பாடு, அகப்பண்பாடு, எனவும் வெளிப்படைப் பண்பாடு (Explicit Culture), உள்ளார்ந்த பண்பாடு (Implicit Culture), எனவும் குறிப்பிடும் மரபு களும் காணப்படுகின்றன. அண்மைக்காலத்தில், இவை முறையே தொட்டுணர் பண்பாடு (Tangible Culture) கருத்துணர் பண்பாடு (Intangible Culture)எனக் குறிக்கப்படு கின்றன.

3.விரிவான தகவல்களுக்குக் காண்க. மகேசுவரன், சி.2006. நிலம் தொடர்பாகப் பழங்குடியினர்க்கு எதிரான உரிமை மீறல்களும் பழங்குடியினர் புலப்பெயர்ச்சியும் மனித உரிமை மீறல்களில் எழும் புதுச் சூழல்கள் (மாநில அளவிலான பல்கலைக்கழக நல்கைக்குழுக் கருத்தரங்கம்) கோபி செட்டிபாளையம், கோபி கலை, அறிவியல் (தன்னாட்சி) கல்லூரி.

4. தகவல் உதவி. திருமதி. வாசமல்லி, தொதவச் சமுதாயத் தொண்டர், கார்ஸ் மந்து, உதகமண்டலம், நீலகிரி மாவட்டம்.

5. முதுவர் பழங்குடியினர் மிகத் தொன்மையானவர் என்ற பொருளில் முத்துவர் என்றும் அறியப்படுகின்றனர். முத்துவரின் தாய்த் தெய்வம் என்றும் பொருள்பட முக்திக் குளத்து அம்மன் எனப் புதுப்பெயரில் வழிபடும் முயற்சி யும் இந்துத்துவ அணுகுமுறையின்பாற்பட்டதே.

6 நிர்மல் குமார் போஸ் உள்ளிட்ட காந்தியச் சிந்தனை கொண்ட மாந்தவியலாளர் இதுபோன்ற அணுகுமுறை யையே கடைப்பிடித்தனர். சுந்தர்லால் பகுகுணாஉள்ளிட்ட இன்றைய சில மாந்தவியலாளரின் நிலைபாடும் இதுவே.

7. சரணி (Sarini), பிர்சா-ஜொகார் (Birsa-Johar) என்றும் தன்னார்வ அமைப்புகள் பழங்குடியினர்க்கான தன்னாட்சியே அனைத்துச் சிக்கல்களுக்கும் விடையளிக்க வல்லதாக அமையும் என எண்ணித் தங்கள் நடவடிக்கைகளைக் கட்டமைத்துத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றன. 

- முனைவர் சி.மகேசுவரன், காப்பாட்சியர் (மாந்தவியல் பிரிவு), அரசு அருங்காட்சியகம், சென்னை 

 

Pin It