மூட நம்பிக்கை எந்த வகையில் வந்தாலும் எந்த ரூபத்தில் வந்தாலும் அது ஒழிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மூட நம்பிக்கை என்ற பெயரில் அனைத்தையும் பொது முத்திரை குத்துவதை ஏற்க முடியாது. மூட நம்பிக்கை குறித்து ஆராய்வதும், அதற்கான விளக்கத்தைக் கொடுப்பதும் இங்கு முக்கியமானதாகும். அப்படி நாட்டார் தெய்வ வழிபாட்டில் கிடாவெட்டு என்ற ஒரு வழிபாட்டு முறை உள்ளது. இந்த முறையில் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி மக்கள் ஆடு, கோழி, பன்றி, எருமை மாடு போன்றவற்றை பலி கொடுப்பார்கள். அதில் ஒன்று தான் ஆட்டினை பலி கொடுக்கும் கிடாவெட்டு.
இந்த கிடாவெட்டு என்ற மரபு சங்க இலக்கியத்தில் இருந்து உள்ளது. சங்க இலக்கியம் தொட்டு உடன்கட்டை ஏறுதல், பெண்ணடிமைத்தனம், சாதி, தேவதாசி முறை முதலியவையோடு கிடாவெட்டு என்ற நிகழ்வும் மூட நம்பிக்கை பட்டியிலில் இடம் பிடிக்கிறது. இந்த கிடாவெட்டு மூடநம்பிக்கையா என்பது குறித்தும், சைவ வழிபாடு அறிவியலின் வளர்ச்சியா என்பது குறித்தும் ஒரு புரிதலை அறிய முற்படுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
கிடாவெட்டின் மூலம் என்பது உயிர்பலி, நரபலி என்ற பெயரில் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளதாக 'நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளில் கிடாவெட்டு' என்ற கட்டுரையில் முனைவர் சிவசங்கரி கூறியுள்ளார். இந்தக் கூற்றை வேறு ஒரு கோணத்தில் பார்க்கலாம் என்பதும் இந்த கட்டுரையின் நோக்கம். வேதத்திற்கும், நாட்டுப்புற வழிபாட்டிற்கும் துளியளவும் சம்பந்தம் கிடையாது. ஆனால் புராணக் கதைகளின் கிளைக்கதைளை நாட்டுப்புறவியலுடன் சேர்த்து அந்த புராணக் கதைகள் வேரூன்றி நிற்க மாற்றிக் கொண்டது. உதாரணமாக விழுப்புரம் கூத்தாண்டவர் கோயில் கதையும், கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் கொண்டாடப்படும் கூத்தாண்டை திருவிழாவும் மகாபாரதத்தில் இறந்த அரவானை மையப்படுத்தியது தான். ஆனால் கூத்தாண்டவர் கோயிலை விட சிங்காநல்லூரில் வழக்காற்று முறையாக ஒரு கதை சொல்லப்பட்டு திருவிழா நடைபெறுகிறது. முன்னமொரு காலத்தில் சிங்காநல்லூர் திருவிழாவில் திருநங்கைகள் பங்கேற்றதாக செய்தி இல்லை. இப்போது மாறி இருக்கலாம். இவை ஆராயப்பட வேண்டியவை. இது போல ஏராளம்.
சரி கிடாவெட்டு நிகழ்விற்கு வருவோம். நாட்டார் வழிபாட்டின் ஆதி மூலம் என்று கூறுவது நடுகல் வழிபாடு அல்லது அந்த மண்ணையும் மக்களையும் காத்து உயிரை விட்டவர்களின் நினைவாக வழிபடுவது தான். இவை நாளடைவில் வெவ்வேறு கதைகளாக மாற்றப்பட்டது. உதாரணமாக கருப்புசாமி என்ற மனிதன் காவலாக நின்று இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றி உயிரிழந்திருக்கலாம். அந்த மனிதனை காக்கும் காவல் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். இது மூலக்கடவுள் அதே கடவுள் வெவ்வேறு கதைகள் உருவகப்படுத்திக் கொண்டு நொண்டிக் கருப்பு, சங்கிலிக் கருப்பு, சந்தனக் கருப்பு, சடையக் கருப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒரு வழிபாட்டிற்கும், வேதத்தின் படி அமைந்த கடவுள்களின் வழிபாட்டிற்கும் மாறுபாடுகள் உண்டு.
வேத காலத்தில் உருவ வழிபாடு என்பது கேள்விக்குறி. அதனால் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர் வேதங்களை கடவுள்களாக வழிபட்டனர். அப்போது யாகங்களில் ஆடு, கோழி, மாடு, குதிரை போன்றவை கொல்லப்பட்டு யாக குண்டங்களில் வீசப்படும். இது உயிர்ப் பலியிடுதல். அதே போல பில்லி சூனியம் போன்ற தீய செயல்கள் செய்வதற்கு நரபலி கொடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இது போன்ற உயிர்ப்பலிகளை சமணர்களும் பெளத்தர்களும் எதிர்த்துள்ளனர். ஆனால் அதன் பிறகு வந்த பக்தி இயக்க காலத்தில் இதே கொள்கைகளை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து சைவ, வைணவ பார்ப்பனர்கள் கடவுள் சைவ வழிபாடு தான் விரும்புவார் என்று பூசை புனஸ்காரங்களுக்கு மாறினார்கள். இப்போது ஓர் அளவிற்கு உயிர்ப்பலிக்கும், நரபலிக்கும் வித்தியாசம் புரிதல் ஏற்பட்டிருக்கும்.
ஏற்கனவே நாட்டுபுற வழிபாடு என்பது மக்களுடன் மக்களாக வாழ்ந்து மறைந்தவர்களுக்கு தான் நடத்தப்படுகிறது என்பது நாம் அறிந்தது. அப்படி இருக்க நம்முடன் வாழ்ந்தவர்களுக்கு நாம் உண்ணும் உணவைத் தான் படையலாகப் படைத்து உண்கின்றனர். பார்ப்பனர்கள் வேதகாலத்தில் செய்வது போல பலியிட்டு தீயில் போடுவது இல்லை. வெட்டிய மாமிசத்தை சமைத்து அதனை முதலில் கடவுளுக்குப் படைத்துவிட்டு பிறகு ஊர் மக்கள் அனைவரும் உண்கின்றனர். இதனை மூட நம்பிக்கை என்ற போது தான் நமக்கு சந்தேகம் வருகிறது. கிராம மக்கள் அனைவரும் வருடத்தில் அனைத்து நாட்களிலும் கறி உணவு என்பதை சாப்பிடுவதில்லை. ஊர் கூடி மகிழ்ச்சியாக இருக்கத் தான் திருவிழா, கொண்டாட்டங்கள். அந்தத் திருவிழாவின் ஒரு பகுதி தான் உணவு. அந்த ஒரு நாளும் கூழும் கஞ்சியும் தான் உண்ண வேண்டுமா? நிலச்சுவான்தாரர்கள், பண்ணையாட்கள் நினைத்த நேரம், அவரவர் சௌகரியத்திற்கு அசைவம் உண்பார்கள். பொருளாதாரத்திலும் சாதியிலும் பின் தங்கிய உழைக்கும் மக்கள் காய்கறிகளை உண்டால் அவர்களுக்கு சத்து கிடைக்குமா?. அப்படி இவர்கள் கிடாவெட்டு வைத்து வைத்து உண்டிருந்தால் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அப்படியே சுதந்திர இந்தியாவின் முன்னாடி இங்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள் நமது மக்களை எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கும். அதனைப் பார்த்தால் ஓரளவுக்கு உங்களுக்கு உண்மை தெரியும். எலும்பும், தோலுமாக தான் பல பல படங்களில் அவர்களைப் பார்க்க முடியும்.
இப்படி இருக்க வாழ்வில் ஒருமுறை அல்லது இருமுறை நல்ல நாள் அன்று தெய்வத்தின் பேரால் உண்டு மகிழ்வதை நாம் எப்படி மூட நம்பிக்கை என்று கூற முடியும். சூத்திரர்களுக்கு எதுக்கு இது போன்ற நம்பிக்கை என்று பார்ப்பனர்கள் எண்ணுவது போல , தான் இருக்கிறது கிடாவெட்டு நிகழ்வை மூட நம்பிக்கை என்று கூறுவது. அசைவத்தை சாப்பிடுவதை மூட நம்பிக்கை என்று கூறுவது அபத்தமானதோ அது போல தான் சைவ வழிபாடு என்பது அறிவியலின் வளர்ச்சி என்பது. சைவ வழிபாடும் , சைவம் சாப்பிடுவதும் அறிவியல் வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? பார்ப்பனர்கள் ஆட்டுவிப்பது போல ஆடி அவர்களுக்கு வெண்சாமரம் வீசி வாழ்வது தான் சிறப்பா? ஒருவர் தனக்குப் பிடித்த உணவை உண்பதில் எப்படி அடுத்தவர் கருத்தை திணிக்க முடியும்? ஏழை எளிய மக்கள் தங்களுக்கு என்ன கிடைத்ததோ அதை வைத்து தான் கடவுளுக்கும் படைத்து, அதனை அவர்களும் உண்டனர். கிடாவெட்டு நிகழ்வு வந்தால் அதனுடன் சேர்ந்து பெண்ணடிமைத்தனமும், உடன்கட்டை ஏறுதலும் வந்து விடும் என்கின்றனர். ஆனால் எளிய மக்கள் வழிபடும் மதுரை வீரன் உயிரிழந்த பிறகு அவரது மனைவி உடன்கட்டை ஏறினாரா? அதே போல கோவலன் கொல்லப்பட்ட போது நீதி கேட்டு கண்ணகி போராடினாளே தவிர உடன்கட்டை ஏறவில்லையே...? இன்று வரைக்கும் தமிழ்நாடு கேரள எல்லையில் தெய்வமாகத் தான் மக்களால் வணங்கப்பட்டு வருகிறாள்.
கிராமத்தில் வணங்கப்பட்டு வரும் பெண் தெய்வங்கள் ஆணாதிக்க சமூகத்தால், மூட நம்பிக்கையின் பேரால் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் உடன்கட்டை ஏறுதல் போன்று கிடையாது. ஆக மொத்தத்தில் தாய்த் தெய்வ வழிபாடும், நாட்டார் தெய்வ வழிபாடும் தான் இங்கு மக்கள் வழிபாட்டாக இருந்துள்ளது. இதற்கு இடையில் பார்ப்பனர்கள் இடையில் வந்து சில குளறுபடி செய்ததே பெருதெய்வங்கள் வருகை, மக்கள் தெய்வங்கள் கோவிலுக்கு வெளியேவும், பார்ப்பனர்கள் உருவாக்கிய தெய்வங்கள் கோவிலுக்கு உள்ளேயும் உள்ளது.
பெரியார் கூறியது போல கடவுள் மறுப்பு அவரது கொள்கை அல்ல, சாதி ஒழிப்பே அவரது கொள்கை. இந்த சாதி, மதம் என்ற பெயரில் கடவுளைத் தான் சென்று சேர்கிறது. அப்படி என்றால் அந்த கடவுள் ஒழிந்தால் சாதி ஒழியும் என்பது பெரியாரின் கருத்து. ஆனால் இங்கு பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதிலிருந்து அவர்களை மாற்ற முடியவில்லை. இரண்டாவது கடவுள் நம்பிக்கையை விட அவர்கள் கல்வி, பொருளாதாரம் , சுயமரியாதை , சமத்துவம் , மக்களின் உரிமை என அடைய வேண்டியவை அதிகம் இருக்கிறது என்று பெரியார் உணர்ந்தார். மக்களின் உரிமைக்காகப் போராடினார். கடவுள், மதம் போன்றவற்றை எல்லாம் உங்கள் வீட்டு பூஜை அறையிலும், கோயில்களும் மசூதியிலும், சர்ச்களிலும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த சமூகத்தில் நீங்கள் நுழையும் போது மனித நேயம் கொண்ட சுயமரியாதை உள்ள மனிதனாக இருங்கள்.
- சேவற்கொடி செந்தில்