தமிழகத்திலுள்ள பழங்குடிகளின் தொன்மைகளை முன் வைத்து இவர்களை மூன்று வகையினராக வகைப்படுத்தலாம்:

  1. முதலாவது பல நூற்றாண்டுகளுக்கு முன் சமவெளிகளிலிருந்து மலைப்பகுதிகளுக்குக் குடியேறிய பழங்குடிகள்.
  2. சமவெளிகளிலிருந்து குடியேறாமல் நீண்ட நெடுங்காலமாகவே தத்தம் பகுதிகளில் மண்ணின் மைந்தர்களாக வாழும் முதுகுடிகள்.
  3. வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே இத்துணைக் கண்டத்தின் இனக்கூறுகளைத் தனித்துவமாகக் கொண்டிருக்கும் தொல்குடிகள்.

இதில் முதலாவது வகையில் மலையாளிப் பழங்குடி மக்களைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் இவர்களின் வாய்மொழி வழக்காறு இவர்களின் இடப்பெயர்வு வரலாற்றை உறுதி செய்வதாக உள்ளது. அதாவது வெகு காலத்திற்கு முன்பு தாங்கள் காஞ்சிபுரத்தில் இருந்து ஜவ்வாது மலைக்குக் குடியேறியவர்கள் என்று கூறுகின்றனர். அடுத்ததாக இக்கட்டுரையானது ஜவ்வாது மலையில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியல் நிலையை குறிப்பாக பெண்களின் வாழ்க்கை முறை, சடங்கு சார்ந்த நிகழ்வுகள் மற்றும் கால மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பண்பாட்டு கலாச்சார மாற்றங்கள் பற்றி விவரிக்கிறது.

tribes 416திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டப் பகுதிகளில் அமைந்துள்ள ஜவ்வாதுமலைத் தொடர் கிராமப் பகுதிகளான கீழ்க்கணவாயூர், புளியங்குப்பம், கானமலை, செண்பகத்தோப்பு போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டும் கள ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இம்மக்களை ஆய்விற்கு உட்படுத்துவதற்கு முன் இவர்களின் குடியேற்றம் பற்றி அறிவது அவசியமாகிறது. இவர்கள் மலையாளி, காராளன், வேளாள கவுண்டர் எனப் பலவாறு தங்களை அழைத்துக் கொள்கின்றனர். இன்று தமிழகத்தின் பழங்குடி மக்களில் அதிகமான எண்ணிக்கையில் வசிக்கும் பழங்குடிகள் இவர்களே. இவர்கள் முதலில் காஞ்சிபுரத்தில் இருந்தும் ஆரணி, சூரியநாராயணன் கோவில், கடலாடி போன்ற பகுதிகளில் இருந்தும் இடம் பெயர்ந்து இறுதியாக படவேடு வந்து அடைந்தனர். இங்குள்ள ரேணுகாம்பாள் கோவிலையும் கட்டி முடித்து அதற்கு பூசாரியாக ஒரு காலத்தில் இருந்துள்ளனர். ஒரு நாள் இப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்து பல குடியிருப்புகள் நீரால் முழ்கியதில் பலர் உயிரிழந்தனர். இதனால் மீதியுள்ளவர்கள் வழி அறியாது ஜவ்வாது மலையை நோக்கி நகர்ந்து பின்னர் மலைப்பகுதியில் குடியேறினர் (முருகன், வயது: 76).

இதோடு மட்டுமல்லாமல் இவர்களின் இடப்பெயர்வோடு தொடர்புடைய மற்றொரு கதையும் வழக்கில் உள்ளது. இக்கதை காஞ்சிபுரத்தின் மீது முகலாயர் படையெடுத்ததன் விளைவாக இவர்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து இம்மலைப் பகுதிக்கு குடியேறியதாகவும் ஒரு கதை வழக்கு உள்ளது. அதன்படி வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் வாழும் மலையாளிகளின் தோற்றம் பற்றித் தெரிவிக்கும் வடஆர்க்காடு மாவட்டக் கையேட்டில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:

சக1055இல்(கி.பி.1132) கங்குண்டியினைச் சேர்ந்த வேடர்கள் காஞ்சிவரத்தைச் சேர்ந்த கார்காத்த வேளாளரிடம் தங்களுக்குப் பெண் தரும்படி வேண்டினர். அதற்கு அவர்கள் இந்த வேடர்களை ஏளனம் செய்து மறுப்புத் தெரிக்கவே, கோபங்கொண்ட வேடர்கள் ஏழு வேளாளர் சாதிக் கன்னியரைக் கங்குண்டிக்குத் தூக்கிச் சென்றுவிட்டனர். அவர்களை மீட்டு வர வேளாளர் எழுவர் ஏழு நாய்களுடன் புறப்பட்டனர். புறப்படும் முன் அவர்கள் தங்கள் மனைவியரிடம் நாய்கள் மட்டும் தனியே திரும்பி வருமானால் நாங்கள் இறந்துவிட்டதாகக் கருதித் தங்களுக்குச் சாவுச் சடங்குகள் நடத்தும்படி கூறிச் சென்றனர். பாலாற்றினை அடைந்த அவர்கள் அது பெருக்கெடுத்து ஓடக் கண்டனர். மிகுந்த தொல்லைக்கு உள்ளானவர்களாக அவர்கள் அதனைக் கடந்தனர். அவர்கள் உடன் சென்ற நாய்கள் ஆற்றில் பாதி வழி நீந்திய பின் காஞ்சிவரத்திற்கே திரும்பி வந்துவிட்டன.

எனினும் அந்த ஆண்கள் தொடர்ந்து தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். தங்கள் பெண்களைக் கவர்ந்து சென்ற வேடரைக் கொன்று தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிய இவர்கள், தாங்கள் இறந்துவிட்டதாகக் கருதி இவர்களின் மனைவியர் விதவைக் கோலம் பூண்டவர்களாகச் சாவுச் சடங்குகளையும் நிகழ்த்திவிட்டிருந்த காரணத்தால் தங்கள் சாதியிலிருந்து விலக்கப்பட்டவர்களாக ஆகிவிட்டதை உணர்ந்தனர். இச்சூழ்நிலையில் இவர்கள் வேடர் சாதிப் பெண்களை மணந்து கொண்டு ஜவ்வாது மலையில் குடியேறிப் பயிர்த் தொழிலில் ஈடுபட்டவர்களாக மலையாளிகளின் மூதாதையர்களாகிவிட்டனர். இந்த விவரங்கள் மலையாளிகளிடம் உள்ள ஒரு பனையோலை ஏட்டில் கூறப்பட்டுள்ளது. அதனை அந்த மலையாளிகள் பேணிக்காத்து வருகின்றனர்.

தென் ஆற்காடு மாவட்ட விவரக்குறிப்பில் பிரான்சிஸ் பின்வருமாறு கூறுகிறார். தென் ஆற்காடு மாவட்டத்தில் வழங்கும் வழக்கு வரலாறு படி இம்மலைகளில் வேடர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களை மலையாளிகள் கொன்று அவர்கள் சாதிப் பெண்களை மணந்து கொண்டனர். இவர்கள் திருமணங்களில் வேடர் சாதிக் கணவன் இறந்த பின் மணம் நிகழ்த்தப்படுகிறது என்பதைக் குறிக்க இன்றும் துப்பாக்கியினை சுடுகின்றனர் எனக் கூறுகின்றனர். கணக்கெடுப்பின் போது தங்களை மலையாளிகள், கார்காத்த வேளாளர்கள் எனப் பதிந்துள்ளனர். மேலும் தென் ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளிகள் தங்களைக் கொங்கு வேளாளர் எனக் கூறிக் கொள்வதோடு தாங்கள் காஞ்சிபுரத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் எனவும் தங்களை கரிராமன் கொண்டு வந்ததாகவும் கூறிக் கொள்கின்றனர். தென்ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்வராயன்கள் திருமணத்தினை நடத்தி வைக்கும் பூசாரி தாலி கட்டுவதற்குச் சற்று முன்பாக ஒரு பாட்டினைப் பாடுகின்றார். அதன் தொடக்கம் காஞ்சி, கரிராமன் என்ற சொற்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. செப்புப் பட்டயங்களின் வழி இந்தக் குடியேற்றம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது (தர்ஸ்டன் 2011: 499 - 501).

சேலம் மாவட்டக் கையேட்டில் மலையாளிகள் எவ்வாறு காஞ்சிபுரத்தில் இருந்து பல பகுதிகளுக்கு குடியேறினர் என்பதைப் பற்றிய குறிப்புகளை தருகின்றனர். அவை,

மலையாளிகள் என்ற சொல் மலைகளில் வாழ்பவர்கள் எனப் பொருள்படும். நீலகிரி மலையில் வாழும் தோடரைப் போல மலையாளிகள் தங்களை இந்த மலைப்பகுதிக்கு உரிமையுடையவர்கள் எனக் கூறிக் கொள்வதில்லை. அண்மையில் சமவெளிப் பகுதிகளிலிருந்து மலைப்பகுதிகளில் குடியேறிய தமிழ் பேசும் மக்கள் இவர்கள். மலையாளிகள் முதலில் பயிர்த் தொழில் செய்யும் வேளாளர் சாதியினைச் சேர்ந்தவராக இருந்தவர்கள் என்ற வழக்கு நிலவி வருகிறது. இவர்கள் புனித நகரமான காஞ்சிபுரத்திலிருந்து தென்னிந்தியாவில் முகமதியர் ஆட்சி மேலோங்கிய போது பத்துத் தலைமுறைகளுக்கு முன் மலைப்பகுதிகளில் குடியேறியவர்கள்.

காஞ்சியினை விட்டுப் புறப்பட்ட இவர்கள் முன்னோர்கள் மூன்று உடன் பிறந்தவர்களைத் தங்களுடன் அழைத்து வந்தனரென ஒரு கதை வழங்குகிறது. அம்மூவருள் மூத்தவன் சேரவராயன் மலையிலும், இரண்டாமவன் கொல்லி மலையிலும், இளையவன் பச்சை மலையிலும் தங்கினர். சேரவராயன் மலையினைச் சேர்ந்த மலையாளிகள் பெரிய மலையாளிகள் எனவும், கொல்லி மலையைச் சேர்ந்தவர்கள் சின்ன மலையாளிகள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

மலையாளிகளின் தெய்வமான கரிராமன் காஞ்சியில் இருக்கப் பிடிக்காதவனாகப் புதியதொரு இடத்திற்குக் குடி பெயர்ந்தான். அவனைப் பின் தொடர்ந்து வந்த பெரியண்ணன், நடுவண்ணன், சின்னண்ணன் ஆகிய மூவரும் காஞ்சியிலிருந்து தங்கள் குடும்பத்தோடு புறப்பட்டுச் சேலம் மாவட்டத்திற்கு வந்து வேறு வேறுபாதைகளில் பிரிந்து சென்றனர். பெரியண்ணன் சேர்வராயன் மலைக்கும், நடுவண்ணன் பச்சை மலைக்கும், அஞ்சூர் மலைக்கும், சின்னண்ணன் மஞ்சவாடிக்கும் சென்று சேர்ந்தனர் என்கிறது மற்றொரு கதை வழக்கு (தர்ஸ்டன் 2011: 497-498). இவ்வாறாக மலையாளிகள் காஞ்சிபுரத்தில் இருந்து பல பகுதிகளில் குடியேறினர் என்பது வாய்மொழி வழக்காறு மூலம் தெளிவாகியுள்ளது.

ஆரம்ப காலங்களில் குடியேற்றம் குறைவாக இருந்தாலும் காலப்போக்கில் மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஒவ்வொரு பகுதியும் பல நாடுகளாக பிரிந்து உள்ளன. இதனால் இம்மக்கள் வாழும் பகுதி நாடு எனப்பட்டது. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மூப்பன், ஊராளி கவுண்டன், கொங்கன், நாடான் போன்றவர்களை மக்களே நியமித்து இவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் திருமணம், வாழ்வியல் சடங்குகள், வாழ்க்கைச் சிக்கல்கள், சாவு சடங்குகள் போன்ற நிகழ்வுகளில் இவர்களுடைய பங்கு மிக முக்கியமானது. இவர்கள் இல்லாமல் எந்த நிகழ்வும் நிகழ்வதில்லை. இனி மலையாளி பழங்குடிப் பெண்களின் வாழ்வியல் சாந்த நிகழ்வுகளைக் காண்போம்.

பூப்படைதல் வாழ்வியல் சார்ந்த சடங்குகள்

பெண் ஒருத்தி முதல்முறையாக பூப்படையும் பொழுது தனி குடிசையில் தங்க வைத்து ஒன்பது நாள்கள் தீட்டு கடைப்பிடிக்கின்றனர். அவள் முதலில் பூப்படையும் பொழுது முதல் சடங்கு செய்யும் உரிமை தாய் மாமனுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மற்ற மாதங்களில் பூப்படைந்த நாளில் ஐந்து நாள்கள் தீட்டுச் சடங்காக கடைபிடிக்கப்படுகின்றன. அதன் பின் ஆறு மாதத்திற்குள் பெண்களுக்கு திருமணமும் நிச்சயம் செய்கின்றனர் (பச்சையம்மாள். வயது: 63).

நிச்சயதார்த்தம்

திருமணமும் பெண்ணின் தாய்மாமன் அனுமதி பெற்ற பிறகே நிகழும். திருமணத்திற்கு முன் நிச்சயதார்த்த நிகழ்வுகள் நடைபெற்ற பின் பெண் தன் விரும்பம் போல எதிர் காலக் கணவன் வீட்டில் வாழும் உரிமை உடையவளாக இருக்கிறாள். திருமணம் முதலில் பெண் வீட்டில்தான் நடைபெற்றது. ஆனால் காலப்போக்கில் இந்நிகழ்வு ஆண்கள் வீட்டில் நிகழ்கிறது. அதேபோல திருமணச் சடங்கு பத்து நாட்கள் பிறகு, ஐந்து நாட்கள் என குறைந்து இப்பொழுது இரண்டு நாளாகக் குறைந்துவிட்டது. பெண் வீட்டார் ஆண் வீட்டாருக்கு பத்து மரக்கால் சாமை அல்லது வேறு சிறுதானியம் தருகின்றனர். இன்று சாமைக்கு பதில் அரிசியும் தரப்படுகிறது. அதேபோல் ஆண் வீட்டார் திருமணம் முடிந்த பிறகு பெண் வீட்டாருக்கு நாற்பது கிலோ பன்றிக் கறியை சமைத்து விருந்து தருவது கட்டாயம். இது மலையாளி பழங்குடியினருக்கே உரித்த பண்பாட்டு மரபாக இன்றும் காணப்படுகிறது.

திருமணம்

அடுத்ததாக திருமணமான பெண் ஒருத்தி தன்னுடைய கணவரோடு வாழ விருப்பம் இல்லையெனில், தன் சமூகத்தைச் சேர்ந்த வேறு ஒரு ஆண் மகனை திருமணம் செய்து கொண்டு வாழலாம். ஆனால் இவ்விருவருக்கும் பிறக்கும் குழந்தை முதல் கணவரிடமே ஒப்படைக்கப்படும். இங்கு விதவை மறுமணம், மறு மணத்திற்கும் அனுமதி உண்டு. பெண் ஒருத்தி தன் விருப்பம் போல் வேறு ஒரு சாதியைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்து கொண்டால் கட்டாயம் சாதி விலக்கம் செய்யப்படுவாள். இதற்கு மாறாக ஆண் மகன் வேறு சாதியோடு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் காலப்போக்கில் ஆண்களை ஏற்றுக் கொள்கின்றனர்.

கருவுறுதல் நிகழ்ச்சி

ஒரு பெண் கருவுற்ற நாளில் இருந்து எந்த விதமான சடங்குகளையும் செய்வதில்லை. குறிப்பாக ஐந்தாவது மாதம், ஏழாவது மாதம், சீமந்தம் போன்ற நிகழ்வுகள் எதையும் நிகழ்த்துவதில்லை. ஆனால் பெண்ணின் முதல் பிரசவம் கட்டாயம் தாய் வீட்டில் தான் நடைபெறும். குழந்தை பேற்றின்போது வலி ஏற்படாமல் இருக்கவும் சுகப் பிரசவம் நடக்கவும் இச்சமூகத்திலே உள்ள வயது முதிர்ந்த பெண் ஒருத்தி மந்திரம் கூறி ஒருவகையான எண்ணையைத் தடவுகின்றனர். குழந்தை பிறந்த பின்பு ஐந்து நாள்கள் தீட்டாக கருதுகின்றனர். தீட்டுக் கழித்து விட்ட பின் குழந்தைக்குப் பெயர் சூட்டுகின்றனர். முதலில் பெண் குழந்தையாக இருந்தால் பெரும்பாலும் ‘ரேணுகா’ என்று குலத்தெய்வ பெயரும், ஆண் குழந்தையாக இருந்தால் ‘ராமன்’ என்றும் பெயர் வைக்கின்றனர். மற்றபடி எந்த விதமான சடங்குகளும் நிகழ்த்துவது இல்லை. பெண் விருப்பப்பட்டால் இரண்டாவது குழந்தை பிறப்பையும் தாய் வீட்டில் பெற்றுக் கொள்ளலாம்.

மதம் மற்றும் பண்பாடு சார்ந்த நிகழ்வுகள்

தாய்த் தெய்வம்

பெரும்பாலும் இவர்களிடம் தாய்த் தெய்வ வழிபாட்டு முறையே காண முடிகிறது. தாய்த் தெய்வம் ரேணுகாம்பாள். இவை செதுக்கப்பட்ட உருவமாக இல்லாமல் வெறும் கற்சின்னங்களின் அமைப்பாகவே இருக்கிறது. சிறு தெய்வ வழிபாட்டு முறையையும் காணமுடிகிறது. இவையும் கற்சின்னமாகவே உள்ளது. கோயிலில் திருவிழா நடைபெற வேண்டுமானால் ‘கணியன்’ என்பவர் குறி பார்த்து நாளைக் கணித்து தருகிறார். அதன் பிறகே கோயில் திருவிழாக்களுக்கு ஏற்பாடு நடக்கிறது. இதில் பெண்களின் பங்கே அதிகம்.

விழா என்கின்ற பெயரில் பரவலாக பொங்கலையே பிரதானமாகக் கொண்டாடுகின்றனர். குறிப்பாக இம்மக்களிடம் புராணங்களின் தாக்கம் பரவலாக உள்ளது. உதாரணமாக இம்மலையில் பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்ததாகவும், மகாபாரதப் போர் ஏற்பட்டதாகவும் சில இடங்களைக் குறிப்பிடுகின்றனர்.

சொத்துரிமை

ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து வேலைகள் செய்தாலும் பெண்களுக்கு நிலத்தின் மீதான எந்த விதமான உரிமையும் கிடையாது. எடுத்துக்காட்டாக ஒரு பெண்ணுக்கு திருமணத்தின் பொழுது பெற்றோர்கள் அவளுக்கு கொடுக்கும் சீர்வரிசையே அவளுடைய பிரதான சொத்து. மற்றபடி எதுவும் இல்லை. ஆகவே ஆண்களே நிலத்தின் முழு உரிமையை அனுபவிக்கின்றனர்.

பெண் மருத்துவம்

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் முதல் முதியோர் அனைவருக்கும் நோய்களுக்குத் தேவையான மருந்துகளை இயற்கை மூலிகையின் மூலமே பெற்றுக் கொள்கின்றனர். மருத்துவத்தைப் பொருத்த வரை ஆண்களை விட பெண்களே திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் பெண்களின் மாதவிடாய் காலங்களிலும் பெண்களின் பிரசவ காலங்களிலும் பெண்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள வயதான பெண் மூதாட்டியே பிரசவத்தைப் பார்க்கின்றார்.

விவசாயம்

ஆதிப்பொதுவுடமை சமூகத்தில் வேட்டையாடுதல் பிரதான தொழிலாக இருந்தது. அதே போல் இவர்களும் குறிப்பிட்ட காலம் வரை வேட்டைச் சமூகமாக இருந்தனர். ஒருபுறம் இவை நிகழ்ந்தாலும் மறுபுறம் வேளாண்மை செய்யும் சமூகமாகவும் இன்று வாழ்ந்து வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு வருவதை காணமுடிந்தது. உதாரணமாக பெண்கள் ஏர் உழுதல், விதை விதைத்தல், நாற்று நடுதல், பயிரிடுதல், அறுவடை வரை என அனைத்து காலங்களிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உடல் உழைப்பில் ஈடுபடுகின்றனர். உழவுகளில் பசு மாடுகளையும் பயன்படுத்துகின்றனர்.

இறப்பு நிகழ்ச்சி

இறந்தவர்கள் அனைவரும் புதைக்கும் பழக்கத்தையே கொண்டுள்ளனர். இவர்கள் இறந்தவர்களின் நினைவாக ‘அமாவாசை’ போன்றவற்றை வணங்குவதில்லை. ஆவி, ஆன்மாவில் முழு நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றனர். சில ஆவி நன்மையும், சில ஆவி கெட்டதையும் செய்யும் என்று நம்புகின்றனர். உதாரணமாக வெளியில் ஒரு நபர் இறந்து விட்டால் அவர்களின் வீட்டில் துக்க சோறு உணவு அருந்தினால் கூட இவர்களின் மூதாதையர் ஆவி இவர்களை கொடுமைப்படுத்தும் எனவும், மேலும் இவர்களுக்கும் இவர்கள் வீடுகளில் உள்ள விலங்குகளுக்கும் நோய் உண்டாகும் என்றும் நம்புகின்றனர் (தேவி. வயது: 34).

அதேபோல் இவர்களில் யாராவது ஒருவர் வெளி இடத்தில் இறந்து விட்டால் அவருடைய ஆன்மாவை மீண்டும் அவர்கள் வாழ்ந்த பகுதிக்கு கொண்டு வர ‘பதி’ போடுதல் என்ற நிகழ்வைச் செய்கின்றனர். இதன் மூலம் இறந்தவரின் ஆன்மா மீண்டும் அதே இடத்திற்கு வந்துவிடுவதாக நம்புகின்றனர். இறந்தவர்களை அழைத்து குறி கேட்கும் மரபு மலையாளிப் பழங்குடி மக்களுக்கு உண்டு. இறந்தவர்களின் ஆன்மாவை மீண்டும் அழைக்கும் மரபு வருடம் ஒருமுறையோ, அல்லது இரு முறையோ நிகழும்.

தற்காலத்தில் ஏற்பட்டுள்ள கலாச்சார மாற்றங்கள்

ஜவ்வாதுமலைப் பகுதியில் சாலைப் போக்குவரத்து வசதி ஏற்பட்டதால் இம்மக்களிடையே பல்வேறு கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இன்றைய நவீனமயமான சூழலில் தொலைக்காட்சியின் மூலம் இம்மக்களிடம் உணவு, உடையிலும், பெயர் வைப்பதிலும் (வடமொழி கலந்த பெயர்கள்) பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவதைக் காணமுடிகிறது. தற்காலத்தில் போக்குவரத்தே இம்மக்களின் ஒட்டு மொத்த அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றுகிறது.

இதைத் தவிர விழாக்கள் என்று எடுத்துக் கொண்டால் இந்து மதத்தின் தாக்கம் காலப்போக்கில் அதிகரித்திருப்பதை உணரமுடிகிறது. உதாரணமாக தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் தற்பொழுது பரவலாக கொண்டாடப்படுகிறது. உணவுமுறையிலும் சிறுதானிய உணவில் இருந்து படிப்படியாக அரிசி உணவுக்கு மாறி உள்ளனர்.

இம்மக்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ஒருவகையில் தங்களுடைய முழுத் தேவைகளைத் தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர். தங்கள் வேலைகள் முழுமையும் மற்றவர்களிடம் எதிர்பாராமல் தாங்களே செய்து கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக வீடு கட்டிக் கொள்ளுதல், இரும்புக் கருவிகளான கத்தி, மண்வெட்டி, பயிர்களுக்குப் பயன்படும் இதர பாகங்களைத் தயாரித்தல், ஏர்கலப்பைச் செய்தல்ஞ் போன்றவையாகும். இன்று விவசாயத்தில் பல நவீன கருவிகளை பயன்படுத்துகின்றனர். ஏர் கலப்பைக்கு பதிலாக டிராக்டர்களைக் கொண்டும் சிலர் விவசாயம் செய்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்டங்களின் மூலம் பாரம்பரியமான குடிசை வீடுகளில் இருந்து அரசு தரும் கான்கிரீட் வீட்டிற்கு பலர் மாறியுள்ளனர். இது ஒருபுறம் நல்ல திட்டமாக இருந்தாலும் மறுபுறம் பண்பாட்டு இழப்பாகவும், சூழலியல் நெருக்கடியாகவும் பார்க்கமுடிகிறது.

தாய்த் தெய்வ வழிபாட்டு நிலையில் இருந்து, தற்பொழுது சைவ, வைணவத் தெய்வங்களையும் வணங்குகின்றனர். மாறிவரும் சூழலில் ஏழுமலையான் போன்ற பெருந்தெய்வ வழிபாட்டையும் ஆதரிக்கின்றனர். அதே போல திருமணத்தின் பொழுது ஆண் வீட்டார் பெண் வீட்டாருக்கு வரதட்சணைத் தந்து பெண்களை அழைத்து வரும் நிலையில் இருந்து முற்றிலுமாக மாறி இன்று சாதியச் சமூக மக்களைப் போல் பெண் வீட்டார் ஆண் வீட்டாருக்கு வரதட்சணை கொடுக்கின்ற பழக்கம் நிலவி வருகிறது. இருந்தாலும் பெண் சுதந்திரத்தை இக்காலத்திலும் ஓரளவிற்குக் காணமுடிகிறது.

ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் அனைத்துத் தொழிலிலும் ஈடுபடுகின்றனர். தாய்மாமனின் முதல் உரிமைகள் தொடர்ந்து இருப்பதைக் காணமுடிகிறது. தாய் மற்றும் தாய்த் தெய்வ வழிபாட்டிற்கு முக்கியம் இடம் தரப்பட்டுள்ளது. பிராமணர்களைப் பின்பற்றி மற்ற சாதியினர் இன்று இறந்தவரை எரிக்கும் பழக்கம் பரவலாக விரிவடைந்துள்ளது. ஆனால் ஜவ்வாதுமலைப் பழங்குடி மக்கள் இன்றும் இறந்தவரை எரிக்காமல் புதைக்கும் பழக்கத்தையே கொண்டுள்ளனர். இறந்தவர்களின் நினைவாக வழிபடும் அமாவாசை போன்ற நிகழ்வுகளை ஏற்பதில்லை. ஆனால் ஆவி வழிபாட்டில் முழு நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றனர். மேலே கூறப்பட்டுள்ளவை அனைத்தும் இன்றும் மாறாமல் நிலைத்த பண்பாடாக இருக்கின்றன. மேலும் இன்று போக்குவரத்து வசதி காரணமாக நகரப் பகுதிகளின் தொடர்பால் பலர் வெளியே வேலைகளுக்குச் சென்று வருகின்றனர். சிலர் நகரப் பகுதிகளில் குடிபெயருகின்ற காரணத்தால் அப்பகுதியில் இருப்பவர்களைப் போல தங்களுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதால் இவர்களின் பண்பாட்டு, கலாச்சாரத்தில் மெல்ல மெல்ல சிதைவு ஏற்பட்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் இவர்களின் வாய்மொழிக் கதைகளை ஆராயும் பொழுது இவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து வந்து ஜவ்வாதுமலைப் பகுதியில் குடியேறிய பொழுது முதலில் சாதியச் சமூகமாகவும் பிறகு மலையில் குடியேறிய பின்பு ஏற்கனவே இருந்த பழங்குடிகளின் தன்மைகளை உள்வாங்கி காலப்போக்கில் அவர்களின் பழக்க வழக்கங்களை படிப்படியாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது. மொத்தமாகச் சாதியச் சமூகத்தில் இருந்து பழங்குடி சமூகமாகவும், பழங்குடி சமூகத்தில் இருந்து மீண்டும் சாதியச் சமுகத்தின் தாக்கத்;தை இன்றைய நவீனமயமான சூழலில் ஏற்றுக் கொள்கின்றனர். இதற்கு முக்கியக் காரணியாக இன்றும் தங்களைக் காராளன், வேளாள கவுண்டர், கார்காத்த வேளாளர் என்று தங்களைச் சாதியின் பெயரில் அழைத்துக் கொள்வதையும் காணலாம்.

நிறைவாக, தமிழகத்தில் வட மாவட்டங்களில் பல்வேறு சமூகக் குழுக்களிடையே காலந்தோறும் நிலவும் வாய்மொழி வழக்காறுகள் மற்றும் கதைப் பாடல்கள் பலவற்றில் காஞ்சிபுரம் பெரும்பாலும் குறிப்பிடப்படுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக சாதியப் பிரச்சனையின் கூறுகளில் பிரதானமான வலங்கை மற்றும் இடங்கை தோற்றம், சாதிக் குடிப்பிள்ளை வழக்காறுகள், மலையாளிப் பழங்குடிகளின் தொன்மம் மற்றும் இடப்பெயர்வுஞ் இன்னும் இவை போன்ற பல நிகழ்வுகளும், வழக்காறுகளும் காஞ்சிபுரத்தை மையமிட்டு வருவதைக் காணலாம். மேலும் இது பற்றி பல தளங்களில் கூர்மையான ஆய்வுகள் செய்ய வேண்டியத் தேவையுள்ளது.

தகவலாளிகள்

  1. முருகன். வயது: 76.
  2. பச்சையம்மாள். வயது: 67.
  3. தேவி. வயது: 34.
  4. கண்ணையன். வயது: 56
  5. சுந்தரி. வயது. 51
  6. வள்ளியம்மாள். வயது. 76

- தி.ஹேமமாலினி

Pin It