மாற்றம் ஒன்றே மாறாதது, அந்த மாற்றத்தைத் தருவது போராட்டம். சமுதாய முரண்பாடு களுக்கு இடையிலான போராட்டமே மானுட வாழ்வை முன்னேற்றிச் செல்கிறது. நம் நாட்டில் பல்வேறு முரண்பாடுகள், அவற்றில் ஒன்று அரசுக்கும், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசின் ஊழியர்களுக்கும் உள்ள முரண்பாடு, 1980களில் நடந்த ஆசிரியர், அரசு ஊழியர்களின் போராட்டமே பூமிபாலகன் புதினத்தின் பின்புலம். போராட்டத்தில் அவர் நேரடியாகப் பங்கேற்றவர். அதனால் போராட்ட வாழ்க்கை புதினத்தில் தீப் பொறி தெறிக்கிறது.

குற்றவாளிகளுக்குச் சிறை என்பது பொதுப்புத்தி, விடுதலைக்கும் சமூக நீதிக்கும் வாழ்வுரிமைக்கும் போராடுவோருக்கும் சிறை என்பது வரலாறு. அதனால் பட்டதாரிகள் சிறை வாழ்வைப் பெருமையாகக் கருதினர். ‘பணி நிரந்தரம் வேண்டும்’ இதுவே அவர்கள் முதன்மைக் கோரிக்கை...

பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத்தை அரசு இயந் திரம் இரண்டாகப் பிளந்தது. பலர் பின்வாங்கினர். முதற்கட்டம் தோல்வி, அது தனித்துப் போராடி வெல்ல முடியாது என்பதைக் கற்றுக் கொடுக் கிறது. அனைத்துச் சங்கங்களையும் ஒன்றிணைத் துக் கூட்டமைப்பு உருவாக்குகிறார்கள். மையக் கோரிக்கை ‘மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்’ ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர், கருவூல ஊழியர்கள், காவல்துறை, அமைச்சுப் பணியாளர்கள் எனப் பல தரப்பினர் அணி திரள்கின்றனர். மறியல்... மறியல். சிறைகள் நிரம்பி வழிந்தன. தீபாவளி, ஊழியர்க்குத் துக்க நாளாயிற்று, கறுப்புக் கொடி வீடுகளில் பறந்தன.

முதலாளிகளின் சுரண்டல், கறுப்புப் பண முதலைகளின் மோசடி, அரசியல்வாதிகள், உயரதிகாரிகளின் ஊழல் போல்வன, நடுத்தர, ஏழை மக்களுக்கு நெருக்கடி தருவன. இதை அரசாங்கம் யானையை வெட்டி முறமெடுத்து மூடுவது போல் மறைத்தது. அரசு ஊழியர்களே ஏழைகளின் எதிரிகள் எனப் பிரச்சாரம் செய்தது. அதைப் போராளிகள் புள்ளி விவரங்களோடு முறி யடிக்கிறார்கள். மக்கள் ஆதரவோடு கோட்டை நோக்கிப் பேரணி, கோரிக்கை வென்றது. இருப் பினும் சில முன்னணி வீரர்கள் சமூக விரோதி களால் பழிவாங்கப்படுகின்றனர். இதுவே புதினத் தின் மைய நீரோட்டம்.

புதினத் தலைவன் வேலுச்சாமி, முதற்கட்டப் போராட்டத்தில் பங்கேற்றதால் அவருக்கு இட மாறுதல், அவர் அலைக்கழிக்கப்படும் விதத்தை ஆசிரியர் மிக அருமையாகச் சித்திரித்துள்ளார். வேலுச்சாமியின் நேர்மை, தன்னம்பிக்கை, கொள்கைப்பிடிப்பு நம்மை வியக்க வைக்கிறது. அவர் ஆசிரியர் பிரச்சினைகளில் தலையிடும் விதம், காயம் பட்ட பின்பும் களம் நோக்கிப் பயணிக்கும் துணிச்சல் போன்றவற்றை பூமி பாலகன் தன் அனுபவ உணர்வோடு வெளிப் படுத்தியுள்ளார். பின்பகுதியில் வரும் வேல்விழி யுடனான வேலுச்சாமியின் காதல் போராட்ட வெப்பத்தைச் சற்றுத் தணிக்கிறது. அவர்கள் திருமணம் வாசகனுக்கு மனநிறைவைத் தரும். அவர் விருப்ப ஓய்வு பெற்று, மலைவாழ் மக் களுக்குப் பாடுபடச் செல்வது வரவேற்கத்தக்கது. அதற்கான காரணத்தை பூமிபாலகன் இன்னும் விரிவாகவும், வலுவாகவும் தந்திருக்கலாம்.

புதின ஓட்டத்துக்கிடையே, பார்வதி ஆசிரியைக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு, ஆதிக்க சக்திகளின் சாதிவெறி, மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளின் வியாபார உத்திகள், அதிக மதிப்பெண் கிடைக்க தேர்வு மையத்தையும் தாள் திருத்தும் மையத்தையும் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள், கல்வித் துறையைப் பீடித்திருக்கும் லஞ்சம் போன்றவை தோலுரிக்கப்படுகின்றன. இவற்றில் சில நிகழ்வுகளை, வாசகர் மனத்தில் வேரடித்து நிற்கும்படி ஆசிரியர் புனைந்திருக்கலாம்.

இன்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்குக் கிடைத்துள்ள உரிமைகள், ஊதிய உயர்வு, பல்வேறு சலுகைகள் எவராலும் தானம் கொடுக்கப் பட்டவை அல்ல. நீண்ட காலம் போராடிப் பெற்றவை. அதில் உயிரிழந்தோர், சிறை சென்றோர், பணியிழந்தோர் பலருண்டு, என்பதை இப்புதினம் பறைசாற்றுகிறது. எனவே, இப்புதினம் ஓய்வு பெற்ற, ஓய்வு பெறும் நிலையிலுள்ளோர்க்கு மலரும் நினைவுகள், இன்றைய போராளிகளுக்கு ஓர் ஊக்க மருந்து. பூமிபாலகன், சிறுகதை, புதினங்கள் படைத்த ஆற்றல் மிக்கவர். இப் புதினம் அவரைத் தமிழுலகுக்கு அடையாளம் காட்டும். எதார்த்தமும் புனைவும் கலந்த பல படைப்புகளை மேலும் தந்து, தற்கால இலக்கிய உலகில் தனக்கென ஓரிடம் பிடிப்பார் என நம்பு கிறேன்.

போராட்ட வாழ்க்கை

பூமிபாலகன்

வெளியீடு:  மலர்விழிப் பதிப்பகம்

விலை: ரூ. 120.00

Pin It