‘உலகாயதம்’ இந்திய மெய்யியல் ஆய்வுப் படைப்பு களில் செவ்வியல் படைப்பு; இந்திய மெய்யியல் ஆய்வில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த நூல்; இந்தியவியலில் மார்க்சியக் கையாளுகைக்கு ஒரு வழிகாட்டி; முன்னோடி. இப்படி எத்தனையோ பெருமைகளைக் கொண்ட இந்நூல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கின்றது. இந்நூலுக்கு முன்பு சுருக்கப்பட்ட தமிழ் மொழியாக்கத்தை சவுத்விசன் வெளியிட்டிருந்தது. இப்போது வெளி வந்திருக்கும் முழு மொழியாக்கமே புதியவற்றைக் காண வழியைத் திறந்துவிட்டிருக்கின்றது.

deviprasath_268இந்திய மெய்யியலை மார்க்சிய நோக்கில் ஆராய முடிவு செய்தவுடன் சட்டோபாத்தியாயா எடுத்துக் கொண்ட முதல் பணி உலகாயதம் பற்றிய ஆய்வுப் பணி. அவருக்குப் பட்ட வகுப்புகளில் இந்தியாவின் இருபெரும் புலமையாளர்களான இராதாகிருஷ்ணனும், தாஸ்குப்தாவும் மெய்யியலைக் கற்பித்தனர். சட்டோபாத்தியாயா தன் இரு பெரும் ஆசிரியர்களின் கருத்துமுதல்வாதப் பார்வையைக் கடுமையாக வெறுத்தார். எனவே உலகாயதத்தை ஆய்வு செய்ய அவர்கள் கையாண்ட முறைகளை ஒதுக்கிவிட்டார். கிரேக்க சமூக உருவாக்கம், கிரேக்க மெய்யியல், நாடகம் ஆகியவற்றின் தோற்றம்பற்றி ஆராய தாம்சன் கையாண்ட முறையை உலகாயதம் பற்றிய ஆய்வுக்குப் பயன்படுத்தினார். தாம்சன் ஒரு புலமை சான்ற மார்க்சியர்; மானிடவியலாளர்; கிரேக்க மொழி வல்லுநர். அவர் கிரேக்க சமூகத்தை ஆராய மார்க்சிய நோக்கிலான பல்துறை சார்ந்த ஆய்வு முறையை வளர்த்தெடுத்தார். மெய்யியல் தோற்றம் பற்றி ஆராய்வதற்கு மானிடவியலும், தொல்லியலும் இணைந்து வழங்கிய சமூக வளர்ச்சி பற்றிய அறிவைப் புதிய முறையில் கை யாண்டார். அப்படிச் செய்யும்போது அண்மைக் கிழக்கு நாகரிகங்களின் தொன்மங்களிலிருந்து கிரேக்க மெய்யியல் தோற்றமெடுத்திருப்பதை எடுத்துக்காட்டினார். அதே வேளையில் பண்பாட்டுப்பரவல் கோட்பாட்டை மறுத்து, கிரேக்க மெய்யியலின் வளர்ச்சியைப் பண்டைய கிரேக்க சமூக அசைவியக்கத்தின் வழியே விளக்கினார். தாம்சன் மானிடவியலின் இன ஒப்பாய்வியலை மார்க்சிய நோக்குடன் ஒழுங்கமைந்த கட்டிறுக்கமான முறையில் கிரேக்க சமூக ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினார். இந்த இனஒப்பாய்வியல் முறையையே சட்டோபாத்தியாயா உலகாயதம் பற்றிய ஆய்வுக்குப் பயன்படுத்தினார். இந்த முறையே பின்னர் மானிடவியல் சார்ந்த மெய்யியல் துறையாக வளர்ச்சி பெற்றது.

சட்டோபாத்தியாயா உலகாயதம் நூலை 1956இல் வங்காளியில் வெளியிட்டார். பின்பு 1959இல் ஆங்கிலத்தில் வெளியிட்டார். அவர் உலகாயதம் பற்றிய ஆய்வில் தந்திரத் தையும், சாங்கியத்தையும் உலகாயதத்தோடு இணைத்துக் காட்டினார். இதைக் கண்டு இந்திய ஆய்வாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். ஏனென்றால், தந்திரம் நம் நாட்டின் மிகப்பெரிய ஆன்மிக நெறி, சாங்கியம் ஒரு கட்டுத்திட்டமான வைதிக நெறி சார்ந்த தரிசனம் என்று அவர்கள் கருதினர். இந்த நம்பிக்கைகளைச் சட்டோபாத்தியாயாவின் நூல் தகர்த்தெறிந்துவிட்டது. இந்திய ஆய்வாளர்கள் தங்கள் மரபார்ந்த நம்பிக்கைகளைச் சிதறடிக்கும் இந்த நூலை ஏற்க நெடுங்காலம் தயக்கம் காட்டி வருகின்றனர். அயலகப் புலமையாளர்களே சட்டோபாத்தியாயாவின் ஆய்வை முதலில் ஏற்றிப் போற்றினர்.

உலகாயதம் நான்கு பாகங்களைக் கொண்டது. நான்கு பாகங்களும் எட்டு இயல்களாகப் பிரிக்கப்பட்டிருக் கின்றன. எட்டு இயல்களும் ஒரே மையமான பொருளின் மீது தொடர்விவாதத்தை எடுத்துரைத்து ஒரு உறுதியான முடிவுக்கு வரும் வகையில் இட்டுச் செல்கின்றன. நூலின் தொடக்கத்தில் சட்டோபாத்தியாயா விரிவான அறிமுகம் எழுதியுள்ளார். இந்த அறிமுகத்தில் தன் ஆய்வுத் திட்டத்தை விவரித்துள்ளார். இயல்களின் அமைப்பில் உள்ள விவாதத் தொடர்ச்சியை எடுத்துக் கூறியுள்ளார்.

முதல் பாகத்தின் முதல் இயலில் உலகாயதம் பற்றிய ஆய்வுச் சிக்கலையும், இரண்டாம் இயலில் ஆய்வுச் சிக்கலை விடுவிப்பதற்குத் தாம் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வு முறையையும் எடுத்துக் கூறியுள்ளார். முதல் இயலில் உலகாயதம் பற்றிய சொல் தோற்ற ஆய்விலிருந்து தொடங்கு கிறார். இந்திய மெய்யியல் ஆய்வாளர்கள் உலகாயதத்தைப் பற்றி ஆராய்வதற்கு அடிப்படையாகக் கொள்ளும்; சர்வ தரிசன சங்கிரகத்தின் எடுத்துக்கூறல் நம்பத்தகுந்ததன்று என்று காட்டுகிறார். உலகாயதம் ஒழுக்கம் கெட்டது, இன்ப நாட்டமுடையது, சுயநலத்தைப் போதிப்பது என்ற ஆன்மிகவாதிகளின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை; இப்பண்புகள் எல்லாம் ஆன்மிகவாதிகளிடமே காணப் படுகின்றன என்று காட்டுகிறார். பழங்காலத்தில் உலகாயதம் மிகவும் போற்றப்பட்ட அறிவுத்துறையாக விளங்கியதை மகாபாரதம் முதலிய சான்றுகளிலிருந்தே எடுத்துக் காட்டுகிறார். அச்சான்றுகளிலிருந்தே ‘உலகாயதம் வேதச் சடங்குகளை எதிர்க்கும் நெறி. ஆனால் எல்லாச் சடங்குகளையும் வெறுத்து ஒதுக்கவில்லை. உடலைப் போற்றும் சடங்குகளை அடிப்படையாகக் கொண்டதே உலகாயத நோக்கு’ என்று விளக்குகிறார். அச்சடங்குகள் தாந்திரிகத்தில் உள்ளன. இத்தாந்திரிகத்தின் தொல் வடிவமே இந்திய மரபில் உலகாயதம் என்று சொல்லப் பட்டது. தாந்திரிக உலகப் பார்வையின் தொடர்ச்சி சாங்கியத்தில் உள்ளது. எனவே உலகாயதம் பற்றித் தெளிவு பெறுவதற்குத் தந்திர மரபையும், சாங்கியத்தையும் ஆராய வேண்டும் என்ற முடிவுக்கு இட்டுச் செல்கிறார்.

இரண்டாம் இயலில் தந்திரம், சாங்கியம் ஆகிய வற்றை ஆராயத் தாம் கையாளும் முறையை எடுத்துக் கூறுகிறார். தம் ஆய்வு முறையை விளக்கிக் கூறுவதற்குப் பதில் அதைக் கையாளும் வகையைக் காட்டி விடுகிறார். இனஒப்பாய்வியல் முறையில் விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்த வேதப் பகுதிகளை விளக்கிக் காட்டித் தாம் கைக்கொள்ளும் ஆய்வு முறையின் சிறப்பைக் காட்டு கிறார். ஆய்வுமுறையைக் கையாண்டு காட்டியவுடன் தந்திரம், சாங்கியம் பற்றி ஆராயத் தொடங்கவில்லை. தந்திரம், சாங்கியம் ஆகியவை தோன்றிய சமூகப் பின்புலத்தை ஆராய்கின்றார். மூன்றாவது, நான்காவது இயல்களில் இந்தியச் சமூக அமைப்பின் வளர்ச்சியை எடுத்து விளக்குகிறார்.

இந்தியச் சமூகத்தில் தொல்குடி / பழங்குடி மரபு விடாப்பிடியாகத் தொடர்ந்திருக்கின்றது. வரலாற்று வளர்ச்சியில் தொல்குடி மரபு, சாதிய அமைப்பினுள்ளும் உயிர்வாழ்வதை விரிவாக விளக்குகிறார். இந்திய வரலாற்றில் பழங்குடிப் பண்புகள் அழிக்கப்பட்ட விதத்தையும், பழங்குடிப் பண்பு எச்சங்கள் பிழைத்திருக்கும் விதத்தையும் தெளிவாக நமக்கு எடுத்துச் சொல்கிறார். எப்படிப் பழங்குடிப் பண்பு எச்சங்கள் எதிர்மறைத் தன்மை பெற்று சாதிய அமைப்பில் பிழைத்திருக்கின்றனவோ அவ்வாறே பழங்குடிச் சிந்தனை மரபான தந்திரமும் எதிர்மறைப் பண்புகளுடன் பல்வேறு மதங்களுக்குள்ளும் ஊடுருவிச் சென்று பிழைத்திருக்கின்றது என்று கூறி மூன்றாவது இயலை நிறைவு செய்கின்றார்.

இந்தியச் சமூக ஆய்வின் தொடர்ச்சியாக அடுத்த இயல் தாய்வழிச் சமூகம் பற்றி ஆராய்கின்றது. தொல் வேளாண் சமூகத்தில் நிலவியது தாய்வழி உரிமை ஆகும். இந்தத் தாய்வழி உரிமை முறை பெண் முதன்மையைப் போற்றியது. அச்சமூகத்தில் நிலவிய பெண் முதன்மைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே தந்திர, சாங்கிய பிரகிருதி அல்லது மூலப்பகுதி கோட்பாடு தோன்றியது என்று காட்டுகிறார்.

மூன்றாம் பாகம் பண்டைய இந்தியாவில் பொருள் முதல்வாதமாக விளங்கிய தொல்தந்திரம், தோற்ற காலச் சாங்கியம் பற்றிய ஆய்வை மேற்கொள்கிறது. தொல் வேளாண்மைச் சடங்குகளுடன் தந்திர மரபிற்கு உள்ள நேரடி உறவைக் காட்டுகிறார். அவற்றிலிருந்து தந்திரத்தின் கோட்பாடுகள் பற்றி விளக்கத்தை வருவிக்கின்றார். இப்போது தந்திர மரபின் பொருள்முதல்வாதக் கருத்துகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. இதனுடன் இணைந்தே இந்திய அறிவியல் மரபு வளர்ச்சியடைந்தது. இந்தத் தந்திர மரபே அடிப்படை அறிவியல் கோட்பாடுகளை நிறுவியது. இத்தந்திர மரபு உழைப்பிலிருந்து விடுபடாத சிந்தனை முறையாக, தொல்பொருள்முதல்வாதமாக விளங்குகிறது. தந்திர மரபிலிருந்தே சாங்கியம் தோன்றியுள்ளதையும், சாங்கியத்தை வேதாந்திகள் முதன்மை எதிரி என்று கருதியதையும், மூல சாங்கியமே பண்டைய இந்தியாவின் பொருள்முதல்வாதம் என்றும் ஆறாம் இயலில் நிறுவு கிறார். ஏழாம் இயலில் புத்தருடைய கொள்கைகளின் தோற்றத்தையும், புத்தரின் காலத்தில் நிலவிய மெய்யியல் களின் பொருள்முதல்வாதக் கூறுகளையும் ஆராய்கிறார்.

எட்டாம் இயல் இந்தியாவில் கருத்துமுதல்வாதத்தின் தோற்றம் பற்றி ஆராய்கிறது. வேதப் பழங்குடிகளின் தொல் பொருள்முதல்வாதம் எவ்வாறு தொடக்ககால வேதாந்த மாகத் தோற்றம் பெறுகிறது என்பது பற்றிய மிக நுண்ணிய ஆய்வு. வேதகாலச் சமூக வளர்ச்சியைப் பின்புலமாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆய்வு வர்க்கச் சமூகத் தோற்றத்தின் விளைவாக, உடலுழைப்பில் ஈடுபடாத குருமார்கள், சத்திரியர்கள் வாயிலாக வேதகாலக் கருத்துமுதல்வாதம் உருப்பெறுவதை விளக்கமாக எடுத்துக் கூறுகிறது. இந்த இயல் வேதம் பற்றிய ஆய்விற்கே ஒரு புதிய ஒளியை வழங்கியது. இந்த இயலில் கருத்து முதல் வாதச் சமூக அடிப்படை பற்றிச் சொன்ன கருத்து களைச் சுருக்கமாக, கோட்பாட்டுரீதியாகப் பின்னிணைப்புக் கட்டுரையிலும் கூறுகிறார்.

தமிழில் இந்நூல் 948 பக்கங்களைக் கொண்டது. இயல் தலைப்புகள், நூலமைப்பு ஆகியவை கவித்துவமாக அமைக்கப்பட்டுள்ளன. சட்டோபாத்தியாயா கல்லூரி நாட்களில் வங்காளியின் முன்னணி இளம் கவிஞராக விளங்கினார். அதனாலே என்னவோ இந்த நூலே கவித் துவமாக அமைந்துள்ளது. இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆய்வு முறையை நன்கு கற்று, பண்டைத் தமிழ் இலக்கிய ஆய்வுக்குப் பயன்படுத்த வேண்டியது மிகமிக அவசியம். இந்திய மெய்யியல் பெருங்காட்டில் பயணம் செய்வோருக்கு ஒரு மிகச் சிறந்த ஒளிவிளக்காக இந்நூல் விளங்குகிறது.

உலகாயதம் - பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு

ஆசிரியர் : தேவிபிரசாத் சட்டோபாத்யாயா

தமிழில் : எஸ்.தோதாத்ரி

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.500.00

Pin It