இருப்பதைக் காப்போம்

இழந்ததை மீட்போம்

எழுவோம் தமிழர்களே ‡ நாம்

நெருப்பென அழிப்போம்

நெடும்பகை இருப்போம்

நிமிர்வோம் தோழர்களே

செருப்பென உழைத்தோம்

சிறுமையில் மரித்தோம்

சித்திரச் சோலைகளே ‡ வரும்

மறுப்பினில் உதிப்போம்

மறுபடி சிரிப்போம்

மானுட தீபங்களே

இருப்பினைத் தொலைத்தோம்

இனப்பகை துதித்தோம்

எதிர்மறை மனிதர்களே ‡ தமிழ்

விருப்பினில் நிலைப்போம்

விடுதலை விதைப்போம்

விடியலின் பறவைகளே

கருப்பினைப் பழித்தோம்

கனவுகள் எரித்தோம்

கடவுளின் குழந்தைகளை ‡ இனி

வெறுப்பினை விடுப்போம்

வெகுசனம் மதிப்போம்

விடுகதை உறவுகளே

துருப்பென களைத்தோம்

துரும்பென இளைத்தோம்

துணைவரும் நிலவுகளே ‡ நம்

பொறுப்பினை நினைப்போம்

புதுயுகம் படைப்போம்

பூமியின் கவிதைகளே

- பாரதி வசந்தன்

 

Pin It