1. தமிழில் இன்றைக்கு பரவலாய் வெளிவருகிற ஹைக்கூக் கவிதை கூட்டுத் தொகுப்புகள் பற்றி...

தமிழ்க் கவிதைக்கு புதிய வீச்சினைத் தரவல்ல இளைய கவிஞாகள் பலரும் இணைந்து ஹைக்கூ கவிதைகளை கூட்டுத் தொகுப்பாக வெளியிடுவது மிகந்த மகிழ்வைத் தருகிறது. தமிழில் ஹைக்கூ கூட்டுத்தொகுப்பை முதன்முதலாக நானும், நண்பர் உதயகண்ணனும் சேர்ந்து 1995‡ல் "கிண்ணம் நிறைய ஹைக்கூ' எனும் பெரிய நூலாகத் தொகுத்தோம்.

59 கவிஞர்களின் கவிதைகளைத் தொகுக்க 200‡க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்களுக்கு மடலிட்டுத் தொடர்பு கொண்டோம். 1993‡ல் தொடங்கிய இம்முயற்சி நூலாகக் கனிய ஈராண்டு ஆனது. தமிழ் ஹைக்கூ பற்றிப் பலரும் விவாதிக்க இந்நூல் விரிவான தளமமைத்துத் தந்தது. மூவாயிரம் பிரதிகள் இந்நூல் விற்பனையானது அதன் பரவலான வரவேற்பையே காட்டுகிறது.       இன்னொரு மகிழ்வான வி­யம். அந்தக் கூட்டுத் தொகுப்பில் உள்ள பலரும் இன்றைக்கு தமிழில் முன்னணி ஹைக்கூ கவிஞர்களாய் கவனிப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

கவிஞர் மித்ரா, க.அம்சப்ரியா, க.இராமச்சந்திரன், தங்கம் மூர்த்தி, பழனி இளங்கம்பன், சி.விநாயகமூர்த்தி, ந.முத்து... என நீளும் அப்பட்டியல் கூட்டுத் தொகுப்பின் வெற்றிக்குச் சான்று. இங்கே இன்னொரு தகவலையும் பதிவு செய்ய விரும்புகின்றேன்.      சென்னை புஷ்கின் இலக்கியப் பேரç சார்பாக நடத்தப்பட்ட ஹைக்கூ கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிதைகளை கவிஞர்கள் த.சலாவுதீன், பழநிபாரதி, எம்.எஸ். தியாகராஜன் மூவரும் தொகுத்து 1991‡ல் மே‡ல் "இன்னும் மக்கள்' எனும் நூலாக வெளியிட்டுள்ளார்கள்.

ஆனாலும் கூட்டுத்தொகுப்பென்று தனியே கேட்டு வாங்கப்பட்டு, தொகுக்கப்பட்ட முதல் நூல் "கிண்ணம் நிறைய ஹைக்கூ' தான். இந்நூலில் உள்ள சில கவிதைகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தனது இளங்கலைப் பாடத்தில் சேர்த்துள்ளது. ஹைக்கூ கவிதைகள் பற்றி ஆய்வு செய்துள்ள பலருக்கும் பல்வேறு புதிய தகவல்களை, தொடர்புகளை தரும் நூலாக, எங்களின் முதல் கூட்டுத் தொகுப்பு அமைந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு பலரும், பல்வேறு சிற்றூர்களில் இருந்துங்கூட, ஹைக்கூ  கூட்டுத்தொகுப்பு நூல்களைக் கொண்டு வருகிறார்கள். காலத்தின் தேவை கருதிய இந்நூல் முயற்சிகளை மனசின் உற்சாகப் பூத்தூறல்களோடு வரவேற்கிறேன்.

நானும் கவிஞர் பா.உதயக்கண்ணனும் கூட்டாக சேர்ந்து தொகுத்துள்ள இனியயல்லாம் ஹைக்கூ நூல் எங்களது ஐந்தாவது கூட்டுத் தொகுப்பாக இவ்வாண்டின் இறுதியில் கண் விழிக்கிறது.

2. ஹைக்கூ கவிதைத் திருவிழா கவிஞர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?

தமிழ்ச் சூழலில் எப்போதும் சிகரமேறிய வெற்றியாளர்களை வெளிச்சமிட்டு மாலையிட்டுக் கொள்கிற சமுதாயம், வளரும் புதியவர்களின் கன்னி முயற்சிகளுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூட தருவதில்லை. ஹைக்கூ கவிதைகளின்பால் ஈடுபாடு கொண்டு எழுதி வரும் கவிஞர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து, ஹைக்கூ கவிதை குறித்த புரிதலை மேலும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விளைந்ததே "ஹைக்கூ கவிதைத் திருவிழா‡2000'.

இந்த விழாவை நடத்திட அப்போது பெரிதும் உதவியாக இருந்தது, சென்னை லயோலா கல்லூரியின் பண்பாடு‡மக்கள் தொடர்பகம். அதன் குளிர்சாதனக் கூட்ட அரங்கை எங்களுக்காய் இலவசமாய்த் திறந்து வைத்தது. நானும் உதயகண்ணனும் தொகுத்த "நீங்கள் கேட்ட ஹைக்கூ' நூலை அவ்விழாவிலேயே வெளியிட்டோம். அந்த விழாவில் நடைபெற்ற ஹைக்கூ கவியரங்கிற்கு நான் தலைமை ஏற்றேன்.

22.7.2000 அன்று நடைபெற்ற இந்த விழாவில் தமிழகத்தின் 20‡க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்து கொண்டனர். நிச்சயம் நாங்கள் எதிர்பார்க்காத கூட்டம் அது. அரங்கம் நிரம்பியது.

அந்த கவியரங்க நிகழ்வை அப்படியே ஜெயா தொலைக்காட்சி ஒளிப்பதிவு செய்து, வாரம் 5 கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து "தமிழ்ச் சங்கம்' பகுதியில் ஒளிபரப்பியது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் ஹைக்கூ கவியரங்கம் இது. இதற்கு உறுதுணையாக இருந்தவர் கவிஞர் இயக்குநர் பாலுமணிவண்ணன்.

இதற்குப் பிறகு, புதுச்சேரி, கும்பகோணம், திருச்செங்கோடு, செங்கல்பட்டு, செய்யாறு, வந்தவாசி ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஹைக்கூத் திருவிழாவில் ஹைக்கூ நூல் வெளியீடு, கருத்தரங்கம், கலந்துரையாடல், கவியரங்கம் என பல நிகழ்வுகள் தொடர்ந்தன. ஹைக்கூ எழுதிக் கொண்டிருந்த பலருக்கும் இந்த விழா மிகுந்த எழுச்சியைத் தந்தது என்பது பங்கேற்ற அனைவரும் அறிவர்.

 3. "இனிய ஹைக்கூ' இதழைத் துவங்கியதன் நோக்கம் என்ன?

பத்தாம் வகுப்பு படிக்கும்போதே "விடியல்' என்ற உருட்டச்சு இதழைத் துவங்கி அதன் பிறகு விடியல் (அச்சிதழ்), சங்கமம், தடம்... என பல்வேறு இதழ்களை நடத்திய அனுபவமுண்டு. இருந்தபோதிலும், தமிழ் இதழ்களில் ஹைக்கூ கவிதைக்கென்று சிறப்பான இடம் இல்லையே என்கிற ஏக்கம் இருந்தது. இதற்கான வடிகாலாய் வந்தார் பத்திரிகையாளர் சபீதா ஜோசப்.

"ஹைக்கூ' என்கிற இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக நானும், பதிப்பாளராக சபீதா ஜோசப்பும் இருந்தோம். 2006 ஆகஸ்ட்டில் முதல் இதழ் வந்தது. சென்னையில் நடைபெற்ற முதல் ஹைக்கூ திருவிழாவில் வெளியிட்டோம். நல்ல வரவேற்பு கிட்டியது. பல புதியவர்களின் படைப்புகள் நிறையவே வந்தன. பதிப்பாளரின் முதலீட்டில்ல வெளிவந்த இதழுக்கு, பண வரவு ஏதும் வரவில்லை. சிற்றிதழுக்கே உரிய பொருளாதார நெருக்கடி. நானும் அப்போது சென்னையிலிருந்து வந்தவாசி வந்துவிட்டேன்.

முதல் சூட்டின் வலி தணிந்ததும், மீண்டும் "இனிய ஹைக்கூ'வாகி நானே கொண்டு வர முயன்றேன். மாவட்டந்தோறும் பொறுப்பாசிரியர்கள் என் நண்பர்களை ஒருங்கிணைத்தேன். தமிழ்நாடன், இரா.மோகன், நிர்மலாசுரேஷ் போன்றோரின் கட்டுரைகள், ஈரோடு தமிழன்பன் அவர்களின் கேள்வி‡பதில் என இதழ்வட்டம் விரிந்தது.

தமிழக எல்லையைத் தாண்டி, கர்நாடகம், கேரளம் என வளர்ந்து, சிங்கப்பூர், ஜெர்மனி, கனடா வரை தொடர்புகள் நீண்டன. சில நண்பர்கள் உறவினர், பலர் அனுப்பிய இதழ்களுக்குக் கூட பதிலில்லாமல் போக 20‡வது இதழோடு (ஜூலை‡ஆகஸ்டு 2008) நின்று விட்டது. வெளிவந்துள்ள 20 இதழ்களிலும் புதுப்புது படைப்பாளர்களின் அறிமுகம், ஹைக்கூ நூல்கள் அறிமுகம், கட்டுரை, கேள்வி‡பதில், மொழிபெயர்ப்பு என மனநிறைவைத் தரும் படைப்புக் கதிர்கள். இரண்டாவது சூட்டின் வலியும் லேசாய் ஆறிவருகிறது. மீண்டு(ம்) மலரும் "இனிய ஹைக்கூ'.

4. தமிழில் ஹைக்கூ புதிய முயற்சியாக எவ்வாறெல்லாம் அறிமுகம் செய்யப்பட்டது?

தமிழுக்கு புதுவரவான ஹைக்கூவை தமிழ் இலக்கிய உலகம் ஒன்றும் உடனே ஆரத்தழுவி வரவேற்கவில்லை. ஏகப்பட்ட விமர்சனக் கணைகள், கூடவே "குள்ளக்கவிதை' என்று நையாண்டியும் செய்தனர். தமிழில் முதல் ஹைக்கூ நூலைத் தந்த ஓவியக்கவிஞர் அமுதபாரதி, 17 அசைகளைக் கொண்டதாக ஹைக்கூ (காற்றின் கைகள்) எழுதினார். ஹைக்கூ அந்தாதி எழுதினார். இவை ஓரளவு கவனிப்பைப் பெற்ன. இப்போது புதிய முயற்சியாக "ஹைக்கூ பதிகம்' எனக் கவிஞர் அமரன் ஹைக்கூக் கவிதைகள் வெளிவந்துள்ளன.

5. 7. 5 அசையோடு, எதுகையும் மிளிரும் அக்கவித் தொகுப்பின் பெயர்: சில ஹைக்கூ, சில சென்ரியு. தன்னைச் சந்திக்க வரும் நண்பர்களுக்கு "ஹைக்கூ பிரசாதம்' என்று சிறிய பொட்லம் கொடுத்தார் ஓவியக்கவிஞர் அமுதபாரதி. அதில் ஹைக்கூ ஒட்டிகள் இருந்தன. பலரையும் இது கவர்ந்தது. 1998‡ல் கவிஞர் செ. காமராசன் "விதைக்குள் விருட்சம்' என்கிற இருவிரல் அளவில் நூலொன்றை கொண்டு வந்தார்.

நான் "ஹைக்கூ டைரி‡2000' எனும் பெயரில் 80 பக்க டைரியை சிறு நூலாக தந்தேன். திருச்சிற்றம்பலம் சுரேஷ் உள்நாட்டு மடலையே ஹைக்கூ நூலாக(Inland letter) தந்தார். மதுரையில் கவிஞர் தமிழ்ராஜ் நூலாக மடிக்கக்கூடிய பெரிய அளவு தாளில் ஹைக்கூ அச்சிட்டு வழங்கினார். கவிஞர் கவிமுகில் தனது "சூரியத் துளிகள்' நூலாக்கு வெண்கலச் சிற்பங்களையே வெண்மையான படமாக்கித் தந்தார்.

கன்னிக்கோவில் ராஜா குறுஞ்செய்தி(SMS) இதழாக ஹைக்கூவைக் கொண்டு சென்றார். இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், கவிஞர் மணிமேகçலை நாகலிங்கம் "தமிழின் முதல் ஐக்கூ குறும்படம்' எனும் பெயரில் "ஐக்கூ தரிசனம்' என 36 கவிதைகளை ஒளிஓவியமாய் காட்சிப்படுத்தி பரவலாய் பாராட்டைப் பெற்றார்.

5. தமிழ் ஹைக்கூ பிறமொழிகளில் அறிமுகமாகி உள்ளதா?

எந்த ஒரு படைப்பும் அது எழுதப்படுகிற மொழிக்குள்ளேயே இருப்பது அதன் சிறப்பைக் குறைத்து மதிப்பிட வைத்து விடும். "பிறநாட்டு கலைச் செல்வங்களை கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற மகாகவி பாரதியின் கோரிக்கையை நாம் ஓரளவு செயல்படுத்தி இருக்கின்றோம். ஆனால், தமிழ் கூறு நல்லுலகின் மிகச் சிறந்த படைப்புகள் கூட இன்னும் பக்கத்து மாநில மொழிகளில் கூட (மலையாளம், கன்னடம், தெலுங்கு) மொழிபெயர்க்கப்படவில்லை.

தமிழ் ஹைக்கூவை அவ்வப்போது "இனிய ஹைக்கூ' இதழில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிரசுரித்தோம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிறமொழி ஹைக்கூ கவிதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டோம். இப்படியான செயல்பாட்டின் விளைவாக, டாக்டர் டி.எம். ரகுராம், எல்.பி.சாமி போன்றோர் எனது மற்றும் சில நண்பர்களின் கவிதைகளை மலையாளத்தில் மொழி பெயர்த்தனர். எனது 180 ஹைக்கூ கவிதைகளை "நிலா முத்தம்' என்கிற பெயரில் மலையாளத்தில் நூலாக சபலா புக்ஸ் வெளியிட்டது எல்.பி.சாமி மொழிபெயர்ப்பில்.

தற்போது தமிழின் சிறந்த 100 கவிஞர்கள் ஹைக்கூக்களை தேர்வு செய்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து "இரு மொழிகளில் ஈராயிரம் தமிழ் ஹைக்கூ' எனும் பெயரில் காவ்யா மூலமாக வெளியிடுகிறார் கவிஞர் அமரன். அத்துடன் அமரன் முயற்சியில் நண்பர் உதயகண்ணன் வெளியீட்டில் கவிஞர்க்கு ஒன்றாய் 300 கவிஞர்களின் ஹைக்கூ ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு "தமிழ் ஹைக்கூவுலகம்' எனவும் ஒரு நூல் வருகிறது. இது தமிழ் ஹைக்கூவின் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு அடையாளம். .அமரனின் இரு நூல்களின் அறிமுகக் கட்டுரைகள் திறனாய்வுக் கட்டுரைகள் மூலமாக கவிஞர்களுக்கான ஹைக்கூ வாசல் திறந்து வைக்கப்பட்டிருப்பது நல்ல எழுத்து முயற்சி.

தமிழ் ஹைக்கூ இதர உலக மொழிகளிலும் சிறகுவிரிக்கும் நாள் வெகுதூரமில்லை.  

6. தமிழ் ஹைக்கூ கவிதை நூல்களுக்கு கவிஞாயிறு தாராபாரதி விருது வழங்கப்படுவது பற்றி...

"இனிய ஹைக்கூ' கவிதை இதழின் சிறப்பாசிரியர் கவிஞர் கவிமுகில், நல்ல கவிஞர், ஹைக்கூ காதலர். கவிஞாயிறு தாராபாரதியின் தாசர். ஆண்டுதோறும் புத்தாண்டு துவக்கத்தை தனது நண்பர்களோடும், படைப்பாளர்களோடும் தனது அலுவலக வளாகத்திலேயே கொண்டாடி வருபவர்.     2002‡ஆம் ஆண்டின் துவக்க விழாவின்போது, விழா மேடையில் நீண்ட நாட்களாக எனக்குள் இருந்த கனவொன்றை கவிமுகில் வசம் கோரிக்கையாக வைத்தேன்.

"தமிழில் வெளிவரும் பல்வேறு தலைப்பு நூல்களுக்கும் பரிசுகள், விருதுகள் தரப்படுகின்றன. ஹைக்கூ நூல்களுக்கும் தனியே பரிசொன்றை வழங்க வேண்டும்' என்று. அதே விழா மேடையிலேயே கவிமுகில் அறிவித்தார். "2001ஆம் ஆண்டு முதல் கவிஞாயிறு தாராபாரதி பெயரில் தமிழில் ஆண்டுதோறும் வெளியாகும் சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்குப் பரிசு வழங்கப்படும்' என்றார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக ஹைக்கூ நூல்கள் பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டு, சிறந்த நூலாசிரியர்களுக்கு பரிசும், பாராட்டும் வழங்கி சிறப்பித்து வருகிறார்.  இந்த தொடர் செயல்பாட்டின் காரணமாக, புதுவையிலும் தற்போது சிறந்த ஹைக்கூ நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறார்கள்.

7. சென்ட்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், லிமரி சென்ட்ரியூ எனத் தமிழில் ஹைக்கூ வடிவங்கள் நீட்சி அடைகின்றனவே... இது வளர்ச்சி போக்கிற்கு வழி காட்டுமா?

எந்த ஒரு படைப்பும் தன்னளவில் சுருங்கிப்போய் நிற்பது பயனளிக்காது. தமிழில் ஹைக்கூ கவிதைகள் அறிமுகமாகி, பரவலான பாராட்டையும் பெற 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. வெறும் ஜப்பானிய அளவுகோலோடு தமிழ் ஹைக்கூ எழுதப்பட்டிருக்குமானால், இவ்வளவு வரவேற்பை அது நிச்சயம் பெற்றிருக்காது.       தமிழ்ச் சூழலோடும், தமிழர் வாழ்வியலோடும் கலந்து எழுதப்பட்டதன் வெற்றியே இதற்குக் காரணம்.

ஹைக்கூவை "வெறும் மூன்று வரி' என்று கேலி செய்பவர்கள் இன்னமும் நம்மில் உண்டு. ஹைக்கூவை வெறும் வடிவமாக மட்டுமே பார்க்கிற காமாலைப் பார்வையை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழில் ஹைக்கூவும் ஒரு கவிதை என்கிற புரிதலோடு அணுகும்போதுதான், ஹைக்கூ வாமனனின் விஸ்வரூபம் புரியும்.

புதுப்புது வடிவ பரிசோதனைகள் நிச்சயம் தேவைதான். ஒரே இனிப்பையே வேறு வேறு வடிவத்தில், கிண்ணத்தில் சாப்பிட்டு ருசிக்கும் நமக்கு, ஹைக்கூவின் வடிவ நீட்சியாய் தொடரும் லிமரிக்கூ, சென்ரியு, ஹைபுன், லிமரி சென்ட்ரியு ஆகியவை தேவை என்பதே எனது கருத்து. ஈரோடு தமிழன்பன் அவர்கள் லிமரிக்கூ, சென்ட்ரியூ வடிவத்தின் சிறப்பைக் கவிதைகளோடு தமிழின் முதல் நூல்களாக தந்துள்ளார். நானும், நண்பர்கள் ந.க. துறைவன், பல்லவிகுமார், சோலை இசைக்குயிலோடு இணைந்து "தமிழின் முதல் ஹைபுன் நூல்' ‡ "அறுவடை நாளின் மழை' யை வெளியிட்டேன்.

ஏனோ இதுவரை நான் ஒரு லிமரைக்கூ கூட எழுதியதில்லை. அதற்காக அந்த வடிவம் எனக்குப் பிடிக்காமலில்லை. ஏன் எழுத தோன்றவில்லை என்ற கேள்வியை என்னிடமே கேட்டு வருகின்றேன். "ஆயிரம் பூக்கள் மலரட்டும்'. காலம் அழியாத மலர்களை தன் மடியில் ஏந்தட்டும்.  

8. ஒன்பதாவது உலக ஹைக்கூ விழாவில் பங்கேற்றது பற்றி...

நிச்சயம் மறக்க முடியாத விழா அது. அதில் நானும் பங்கேற்க வாய்ப்பளித்த கவிஞர் கலாரமேஷ் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஜப்பானைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமைப்பே "உலக ஹைக்கூ கிளப்' (World Haiku Club - WHC).

இந்த அமைப்பின் ஹைக்கூ விழா இதுவரை ஜப்பான், லண்டன், அயர்லாந்து, ருமேனியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன. அதன் ஒன்பதாவது உலக ஹைக்கூ விழா 2008 பிப்ரவரி மாதத்தில் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் முதன் முறையாக இந்திய மாநிலமொன்றில் (பெங்களூர்) நடைபெற்றது.

தமிழில் ஹைக்கூ எழுதுகிறவர்கள் சார்பாக நானும் கலந்து கொண்டேன். ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் சார்பாக தமிழகத்திலிருந்து ரமேஷ், வடிவேல் ராஜன் இருவரும், பார்வையாளராக பன்மொழிப் புலவர் எல்.பி.சாமியும் கலந்து கொண்டோம். இயற்கை எழில் நிறைந்த வாழும் கலை பயிற்சி மையத்தில் (பெங்களூர்) நடைபெற்ற விழாவில் உலகின் பல நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஹைக்கூ கவிஞர்கள் கலந்து கொண்டனர்.

ஹைக்கூ கவிதைப் பயிற்சி, ஹைக்கூ, தான்கா, குறும்படம் திரையிடல், ஹைக்கூ நூல் வெளியீடு, ஹைக்கூ கவிதை வாசிப்பு, கவிதைப் போட்டி என மூன்று நாட்களும் நிகழ்வுகள் தொடர்ந்தன. இதில் தமிழ் ஹைக்கூ நூல்கள், இதழ்களை கண்காட்சியாக நான் வைத்திருந்தேன். தமிழில் இவ்வளவு நூல்கள் வந்துள்ளதா என பலரும் வியந்தனர். பாராட்டிப் பேசினர்.

மூன்றாம் நாள் நடைபெற்ற உலக ஹைக்கூப் போட்டியில் நான் எழுதிய தமிழ் ஹைக்கூ கவிதை ஒன்றும் பரிசினைப் வென்றது. உலக ஹைக்கூ கிளப்பின் தலைவர் ஓவியக் கவிஞர் சுசுமு டகிகுச்சி பாராட்டுச் சான்றிதழோடு தனது புத்தகமொன்றையும் கையயழுத்திட்டு எனக்கு வழங்கினார்.    தமிழ் ஹைக்கூ இன்னும் பரவவேண்டிய பரப்பளவை எனக்கு உணர்த்திய நெகிழ்வான விழா அது.

9. ஹைக்கூ கவிதைகள் தமிழ் கவிதையுலகில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது என்பது உண்மைதானா?

யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை இது. மேலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை இது. மூத்த எழுத்தாளர் அய்யா வல்லிக்கண்ணன் சொன்னது போலவும், எழுத்தாளர் மாலன் கணையாழி கட்டுரையயான்றில் குறிப்பிட்டது போலவும், "தமிழ் கவிதைக்கு செறிவையும், சொல் அடர்த்தியையும் ஹைக்கூ கவிதைதான் தரும்' என்கிற நம்பிக்கை இன்றைக்கு நிஜமாகியிருக்கிறது.

குறைந்த படிப்பறிவு பெற்ற பல இளைஞர்களையும் ஹைக்கூ கவிதைகள் எழுத வைத்துள்ளன. தமிழில் இதுவரை எழுதப்படாத பலதரப்பட்ட வாழ்வையும் தமிழ் ஹைக்கூ எழுதி வைத்துள்ளது. இன்றைக்கு நூறாய், ஆயிரமாய் தமிழ்க் கவிஞர்கள் ஹைக்கூ மேல் காதலோடு எழுதி வருவதே அதன் ஆகச் சிறந்த சிறப்பாக நான் பார்க்கின்றேன்.

10. "தமிழ் ஹைக்கூ கவிதை இயக்கம்' என்பது சரிதானா?

தமிழ் கவிதைக்கென்று ஒரு நீண்ட வரலாறு உண்டு. சமூக தேவையை உணர்ந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனுனொரு இலக்கிய இயக்கம் முன் நின்று இயங்கும். அப்படி கோவையில் உருவானதுதான் "வானம்பாடி கவிஞர்களின் இயக்கம்'. அதற்குப் பிறகுதான் ஏராளமான கவிஞர்கள் மக்களுக்கான கவிதைகளை எழுத முன்வந்தனர்.      தமிழில் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கவிதை இயக்கம் ஏதும் தற்சமயம் இல்லை.

இந்த காலத் தேவையை உணர்ந்த தமிழின் மூத்த கவிஞர் கவிக்கோ அப்துல்ரகுமான், தமிழில் ஹைக்கூவை அறிமுகம் செய்தவர்களில் முக்கியமான முன்னோடி.      தமிழகமெங்கும் நடைபெற்று வரும் ஹைக்கூ செயல்பாடுகளை, நூல்களை, இதழ்களை கவனித்து வருபவர். 2003 மே‡11 அன்று சென்னையில் நடைபெற்ற கவிஞாயிறு தாராபாரதி ஹைக்கூ விருது வழங்கும் இரண்டாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் பேசும்போது.."தமிழ் இலக்கியப் பரப்பில் நிகழ்ந்து வரும் ஹைக்கூ கவிதை குறித்த செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

தமிழில் வானம்பாடிகளுக்குப் பிறகு ஒரு கவிதை இயக்கம் உண்டென்றால், அது ஹைக்கூ கவிதை இயக்கமாய்த்தான் இருக்கும்' என்றார்.   இது, வெறுமனே பாராட்டிப் பேசுவதற்காக சொன்ன வரிகள் அல்ல என்பதை கவிக்கோ அப்துல்ரகுமானை நன்கு அறிந்தவர்களும், தமிழில் இன்று இயக்கமாய் வளர்ந்து நிற்கும் ஹைக்கூ கவிஞர்களின் செயல்பாடுகளையும் கவனித்தவர்கள் உணர்வார்கள்.

நாங்கள் காலமறிந்து கூவிய குயில்கள். எங்களுக்கான தளங்கள் வேறுவேறு. ஆயினும், ஹைக்கூ கவிதைகள் வழி இப்பூலகிற்கான அமைதியை, சமாதானத்தை, மக்கள் ஒற்றுமையை, தேசமுன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல இயக்கமாய் சங்கமித்துள்ளோம். பேராசிரியர் மனோன்மணிம் சுந்தரனாரின் வரிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?'.

 - வினாக்களும் தொகுப்பும்

அன்பாதவன்- மதியழகன் சுப்பையா

Pin It