கவிதை எழுத என்ன வேண்டும்? அதிக பட்சம் கவிஞனாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மொழியறிவு வேண்டும். ஆனால் மும்பையின் வீதி களில் பெருச்சாளிகளுடன் படுத்துறங்கி குற்றவாளிக ளுடன் உண்டு உறவாடி, விலைமாதர்களுடன் சகோதர பந்தம் கொண்டு அக்­ரமில்லா பேச்சு மொழியும் நாகரீகமாக கருதப்படாத மாநகர மொழி யும் கொண்டு வீரியமிக்க கவி தைகளை புனையலாம் என்று நிருபித்திருக்கிறார் உணர்ச்சிக் கவிஞர் நாம்தேவ் தாசல்.

மராத்தி மொழியில் தலித் கவிதைகளில் புது ரத்தம் பாய்ச்சிய பெருங்கவிஞனாக கருதப்படுபவர் தாசல். ஒன் பதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளின் பக்கங்களை கவி தைகளால் மட்டுமல்லாமல் அனுபவங்களாலும் ஆற்றல் மிகு மொழியாலும் நிரப்பிய நாம்தேவ் தாசல் 1949ம் ஆண்டு மகாராஷ்டிராவின் புனேவுக்கு அருகில் கனோசர் கிராமத்தில் பிறந்து மும்பையின் சிகப்பு விளக்குப் பகுதியின் கோல்பித் தாவில் வளர்ந்து ஆளாகி, அடித் தட்டு மக்களுடன் வாழ்வை கழித்து, அனுபவப் பாடங்களை அக்கறை யோடு கற்ற கவிஞன் நாம் தேவ் என்று சமகாலக் கவி ஞர்கள் பாராட்டி மகிழ் கின்றனர்.

நாம்தேவ் தாசல் மும்பை மாநகரக் கவிஞர் என்பது தான் அவரை அடையாளப்படுத்தும் படியாக அமையும். மாநகரத் தின் அத்தனை அவலங்க ளையும், வண்ணங்களையும், உயர்வு தாழ்வு, குற்றம் என்று மாநகரத்தின் நறுமணங்களி லிருந்து துர்நாற்றம் வரையி லான சகலமும் நாம்தேவின் கவி தைகளில் அடக் கம். இந்த மாநகரம் ஒரு தனி உலகம். இந்த உலகத்தில் மாமா வேலைப் பார்ப்பவனிலிருந்து கள்ளக் கடத்தல் செய்பவன் வரை, குற்றவாளிகளிலிருந்து சில்லரை அரசியல்வாதிகள் வரை, போதை பொருள்

வியாபாரிகளிலிருந்து விபச் சாரிகள் வரை கோபுரவாசிகளிலிருந்து தகர டப்பா குடிசைவாசிகள் வரை எல்லாவித மக்களின் வாழ்வி னூடாக இருந்து அனுபவப்பட்டது. இவரது கவிதை நாம் தேவின் கவிதைகள் ஒப்பனையில்லாத மும்பை அலங்கார மால்கள் அடுக்குமாடி திரை யரங்குகள், பின்னலிட்டிருக்கும் மேம்பாலங்கள், புணர மைக்க முடியாத, அடக்கவிய லாத மற்றும் மறுசுழற்சிக்குட்படுத்த முடியாத ஒரு நகரமாகும்.

1972ம் ஆண்டு தலித் சிறுத்தைகள் என்ற அமைப்பை உருவாக்கி தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் பல போராட்டங்களை சந்தித்து சமாளித்தார். நிழலுக தாதாக்களுடன் தொடர்பும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான போராளி என்ற அடையாளமும் அவரை பல சிக்கல்களை சந்திக்கச் செய்தது. இவர் மராத்தி கவிதைகளின் ஓவி, பஜனைகள், கீர்த்தனைகள், வர்கரி இசை, தமாசா ஆகிய எல்லா வடிவங்களிலும் தனது படைப்பாற்றலை வெளிப்படுத் தினார். மேலும் ஐரோப்பாவின் நவீன கவிதை வடிவங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை.

நாம்தேவ் தனது கவிதைகளில் வார்த்தைகளால் சொல்லும் வி­யங்களை விட வாசிப்பவர் புரிந்து கொள்ளும் படியாக வி­யங்களை பொதிந்து வைப்பது தான் சாமார்த்தியம் என்று நிரூபித்தார். அரசியலையும், மக்களின் பிரச்சனைக ளையும் எடுத்துரைக்க அவர் கவிதையின் வடிவத்தையும், நீள அகலத்தையும் நம்பவில்லை.மொழியை மட்டுமே நம்பியிருக்கிறார். அதுவும் மிகச் சாதாரண மொழியை மஹார் எனப்படும் மராட்டி மொழி யின் பேச்சு வழக்கு மொழியை குடும்ப மொழியாகக் கொண்ட நாம்தேவ் பம்பையா என்ற மும்பை மாநகருக்கே உரிய ஒரு வித வேடிக்கை மொழி ஆகியவைகளை மட்டுமே பயன்படுத்தி கவிதைகளை படைத்திருக்கிறார்.

காமாட்டிப்புரா என்ற மும்பையின் சிகப்பு விளக்குப் பகுதியில் பெரும்பாலான தனது காலத்தைக் கழித்த நாம்தேவ் இங்குள்ள வாழ்க்கை இவரைப் போல் இத்துனை சிறப்பாக இதுவரை யாரும் பதிவு செய்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாக சொல்லலாம். பிரபலக் கவிஞர் அமர் ஷேக்கின் மகள் மல்லிகா அமர் ஷேக்கை திருமணம் செய்து கொண்டார்.

கோல்பித்தாவுக்காக சோவியத்தின் நெஹரு விருதை 1974ல் பெற்றார்.மஹாராஷ்டிர மாநிலத்தின் இலக்கிய விருதை 1973, 1974, 1982 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் பெற்றார். 1999ம் ஆண்டு இந்திய அரசு சார்பில் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றார். பரிசுகளையும் விருது களையும் மறுத்த வந்த இவர் சாஹித்திய அகாடமியின் வாழ் நாள் சாதனையாளர் விருதை பெற்றுக் கொண்டார். இவ் விருதை பெற்ற ஒரே இந்தியக் கவிஞர் என்ற பெருமையும் இவருக்குண்டு. இவருக்கு பரிசோ, விருதோ கொடுக்க அழைக்க வருபவரிடம் "எனது கவிதைகளை வாசித்திருக்கிறீர் களா?' என்ற ஒர கேள்வியை மட்டுமே கேட்கிறார்.

மரித்த சருமம் நீரில் உதிருகிறது

வளரும் பசுங்கொடி மீண்டும் புதுச் சருமத்தில் படர்கிறது

தேவைகளின் விருட்சம் பற்றி எரிகிறது செயற்கை கோடையில்

ஆவலைத்தாண்டி பயணிக்கிறதுன் கண்கள் அவைகளில்

ஒளிருகிறது மின்னல்

நீயற்ற இடத்திலிருந்து சமிக்ஞை வருகிறது

கடல் உருண்டு புரண்டு கரைக்கு வருகிறது

இளமையின் பட்டாம்பூச்சி நிர்வாணத் தொப்புளுக்கருகில்

மிதக்கிறது

மார்பின் வெள்ளை நத்தைகள் என்னுடலுக்குள் ஊர்கிறது

கால்களில்லாமல் நடந்து கடக்கிறது நீர்

இதயத்துள் பொழியத் துவங்குகிறது இதமான மழை

மதர்ப்பான மேனி பலநாட்களுக்குப்பின் நடனமாடத் துவங்குகிறது

உள்வெளிகளனைத்தும் இயக்கம் கொள்கின்றன

இசைக்கேற்ப அசைந்தாடுகிறது பசுமரக் கன்றுகள்

கனவுகளின் கதவை மெல்லத் தட்டுகிறதோர் கோரிக்கை

ஓ தோழர்களே,

ஆசையயனும் இளஞ்சிகப்பு மான்களே

செம்பருத்திகளை முத்தமிடுகிறது பட்டாம்பூச்சிகளே

வியக்கும் மின்னல்களை சிந்துகிறது சூரியக் கதிர்களே

இங்குவரை ஊடுருவி நுழைந்ததெப்படி இக் காதல்

காயம்பட்ட நாயயான்று தன்னைத்தானே சுற்றுகிறது

இந்த மங்கலகரமான நித்திரையின் வேர்களுக்கு பங்கம் வருமா?

2.

இருக்க முடியுமா, இதைவிட கடுமையான துன்பம்,

இவ்வனுபவம் முட்பாதைகளில் அலைக்கழிக்கிறது

இந்நதியோடு ஆசையின் நீரும் பாய்கிறது

விறைத்த நாகத்தின் நஞ்சு புல்லில் விளையாடுகிறது

பாதித்திறந்த மார்போடு வாத்துப்பறவை ஆடுகிறது

லேசர் கதிர்களாலான துணியால்

நகரம் வாரிச் சுருட்டப் பட்டிருக்கிறது

ஆழ்துயிலின் போது அடர் இருட்டுகளில்

மானம் சூறையாடப்படுகிறது

இச்சமகால வரலாற்றில் நானொரு சாதாரண மனிதன்

சுயவிரக்கம் கொள்ளும் பழக்கம் விட்டேன்

என்னையேத் தழுவிக் கொள்ளும் ஆசை கொண்டேன்

அதை அடையும் வழியையும் கண்டேன்

இவ்விலக்கணத்தில் வெகுளியான சருமத்தை உதிர்காதீர்

குற்றமிக்க இவ்வுலகம் மனிதர்களுக்கே சொந்தமானது

வார்த்தைகளில் அதிகாரமில்லை, ஆசைகளிலுண்டு

நோய்ப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட அனுமானம்

ஆழமான உறவுக்குள் விபரீதம் உண்டாக்கலாம்

நாமே தேர்ந்த மனிதமற்ற பாதையை விட்டு விலகலாம்

பருவங்கள் வரும் போகும்

யாருக்காக காத்திருக்கிறீர்கள்?

- தமிழில்: ஆனந்த செல்வி

 

Pin It