தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிதைத் துறையில் இமாலய சாதனைகள் செய்தவர் பாட்டுக்கொரு புலவன் பாரதி. அந்தப் புதுயுகக் கவிஞனின் புரட்சிப்பாக்களின் தாக்கம் இன்றும் என்றும் கவிதையுலகில் இருந்து கொண்டுதான் இருக்கும். பாரதி கவிதையில் செய்த சாதனைகளைச் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் தனது பீடு நடையால் சிறுகதைத் துறையில் அளவற்ற சாதனைகள் புரிந்தார். அவரது சிறுகதை சொல்லும் பாணியும் உத்தியும் நமக்கு வியப்பைத் தருகின்றது. அந்தச் சாதனைகள் நமது தமிழ்ச் சிறுகதை எழுதும் எழுத்தாளர்களுக்கு ஓர் வழிகாட்டியாக உள்ளது.

நாவலாசிரியர் அகிலன் அவர்கள் புதுமைப்பித்தன் படைப்புக்கள் பற்றிக் குறிப்பிடும் பொழுது “எத்தனை விதப் புதுமைகள் உண்டோ அவ்வளவும் புதுமைப் பித்தன் சிறுகதை எழுதுவதில் செய்து பார்த்து விட்டார். அவர் கட்டிய சுவருக்கு மேலே இன்னும் பெரிய சுவர் கட்ட இயலவில்லை. எட்டித்தான் பார்க்கிறோம். அவ்வளவு ஆழமான பரந்த சோதனைகள்” என்கிறார்.

புதுமைப் பித்தனே தன் நடையைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு, வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட பாதை.”

மெளனியைப் பற்றிப் புதுமைப்பித்தன் எழுதும் பொழுது, “கற்பனையின் எல்லைக்கோட்டில், வார்த்தைக்குள் அடைபட மறுக்கும் கருத்துக்களையும் மடக்கிக் கொண்டு வரக்கூடியவர்” என்கிறார். இதே கருத்து புதுமைப் பித்தன் மொழி நடைக்கும் பொருந்தும்.

புதுமைப் பித்தன் மொழி வீச்சிற்கு கீழே காணும் வர்ணணை சிறந்த சான்றாகும். ‘வாழ்க்கை’ என்ற கதையில் பொதிகை மலையைப் பற்றி அவருக்கே உரிய தனித்த சொல்லாட்சி மூலம் கவித்துவ உணர்வுடன் நெஞ்சையள்ளும் விதத்தில் வர்ணிக்கிறார்.

‘மலைச் சிகரத்தின் இரு பக்கங்களிலும் குவிந்திருந்த கறுப்பு மேகங்களில் மறைந்து அதற்குச் சிவப்பும், பொன்னுமான ஜரிகைக் கரையிட்ட சூரியன் கீழ்த்திசையில் மிதக்கும் பஞ்சு மேகங்களில், தனது பல வர்ணக் கனவுகளைக் காண்பிக்க ஆரம்பித்து விட்டான். பொதியை பெரிய ரிஷிக் கிழவர் மாதிரி கருநீலமும், வெண்மையும் கலந்து கரையேற்றிய மஞ்சுத்தாடிகளை அடிக்கடி ரூபம் மாற்றிக் கொண்டு, பார்ப்பவனின் மனத்தில் சொல்ல முடியாத அமைதி’ துன்பக் கலப்பில்லாத சோகம் இவற்றை எழுப்பியது. பக்கத்தில் அதாவது இருசிகரங்களுக்கும் ஊடே தெரியும் வான வெளியில் அக்னிக் கரையிட்ட கறுப்பு மேகங்கள் அதற்குத் துணை புரிந்தன. சக்தி பூஜைக்காரனுக்கு சிவனும் சக்தியும் மாதிரி இக்காட்சி தோன்றியிருக்கும்.

ஒரு காட்சியைப் பார்த்தவுடன் தேர்ந்த ஓவியன் போல் வார்த்தைகளில் வடிக்கும் கலையில் வல்லவர் புதுமைப்பித்தன் என்பதைப் பல கதைகளில் நாம் காண முடிகிறது.

“மனக்குகை ஓவியங்கள், என்ற கதையில் அவரது வார்த்தை ஜாலங்கள் இதோ”: “கைலயங்கிரியில் கண்ணைப் பறிக்கும் தூய வெண்பனி மலையருக்குகள் சிவந்த தீ நாக்குகளைக் கக்குகின்றன. திசையும் திசைத் தேவர்களும் யாவரும் யாவையும் எரிந்து மடிந்து ஒன்றுமற்ற பாழாக சூனியமாகப் போகும்படி பிரான் கோரச் சுடரான நெற்றிக் கண்ணைத் திறந்து தன் தொழிலில் திறமையில் பெருமிதம் கொண்டு புன்னகை செய்கிறான். கண்ணில் வெற்றியின் பார்வை.”

சூரியனின் அஸ்தமன செளந்தர்யத்தைச் சொற்களில் ஓவியமெனத் தீட்டுகிறார்.

“சூரிய அஸ்தமனச் சமயம். அஸ்தமனச் சூரியனின் ஒளியே எப்பொழுதும் ஒரு சோக நாடகம். கோவில் சிகரங்களிலும், மாளிகைக் கலசங்களிலும் தாக்கிக் கண்களைப் பறிப்பது மட்டுமல்லாது கடற்கரையில் கரும்பாறையில் நிற்கும் துவஜஸ்தம்பத்தின் மீது கீழ்த்திசை நோக்கிப் பாயும் பாவனையில் அமைக்கப்பட்ட பொன்மூலாம் பூசிய வெண்கலப் புலியின் முதுகிலும், வாலிலும் பிரதிபலிப்பது அவ்விடத்திற்கே ஒரு மயக்கத்தைக் கொடுக்கிறது.”

‘ஞானக்குகை’ என்ற கதையில் அவரது சொற்களைப் பார்த்து நாம் பிரமிக்கிறோம்.

“எங்கு பார்த்தாலும் செங்குத்தாகவும், குறுக்கும் நெடுக்குமாகவும் கிடக்கும் மணிகள், பாறைகள். அதில் தங்கங்களும், வெள்ளியும் கொடி போலப் படர்ந்து மூடிக் கிடக்கின்றன. பவழத்தாலும் தங்கத்தாலும் கிளைகள் கொண்டு வைரங்களாக மலரும் ஓர் அற்புதப் பூங்காவனம். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு லோகம். அதன் மலர் அல்லது கனி பல வர்ணங்களில் பிரகாசிக்கும் வைர வைடூரியங்கள். கிளைகளிலிருந்து சுருண்டு தொங்கும் நாக சர்ப்பங்கள். கண்ணாடி போல் பிரகாசிக்கும் மேல் தோலையுடைய பிரம்மாண்டமான விரியன்கள், விஷப்புகையைக் கக்கிக் கொண்டு திமிர் பிடித்தவை போல சாவதானமாக நெளிகின்றன.”

அவர் படைப்புக்கள் அபூர்வமான தங்கச் சுரங்கங்கள். அதை மீண்டும் மீண்டும் படித்தாலே அவர் தம் ஆழ்ந்தகன்ற தமிழ் உரை நடை மேன்மையை உணரலாம்.

Pin It