தாலாட்டம்மா தாலாட்டு
         ரோராட்டம்மா ரோராட்டு
பச்செ தொட்டில் கட்டி
          பக்குவமா பால்புகட்டி
                  தாலாட்டம்மா தாலாட்டு
                  ரோராட்டம்மா ரோராட்டு

இசையிடு ரோஜாவே
         இருவார்த்தி செண்பகமே
மச்சையுடன் மணம் கமழும்
         என் தாரகமே தூங்கிமுழி

தங்க நிறமே - என்
         கருணைகுல ராஜகமே
பொங்கும் நிறைகுடமே
         என்னருமை தேங்கரும்பே
                  தூங்கிமுழி

வானம் கதிர்மணக்கும்
         வையகமும் பூ மணக்கும்
சுவர்கம் பரிமணக்கும்
         சோபனமே தூங்கிமுழி

கடலை பொரிகடலை
         கைநிறைய என்னத்துக்கு
கண்ணுக்கு இனிமையான - என்
         கனிஒன்னு போதாதோ

பால்கொடுத்து தொட்டிலிட்ட
         பசுங்கிளியே ஏனழுதெ
சித்தமுடன் அய்ம் பொரியும்
         செய்தமகன் தூங்கிமுழி

என் கதிஜால் கருந்தனிலே
         ஹஜன்குசைனார் தாயே நீ
என் மரியாத மாணிக்கமே
         மகராசி பத்துமுத்து

கடிநாயும் சங்கிலியும்
         புலிவேட்டை ஆடிவரும் - என்
பொன்மணியே தூங்கிமுழி

வல்லத்துக்குத் தெக்கே
         வயக்காடும் கால்வாயும்
உசந்தமரம் அத்தியடி
         வந்திரங்கும் வண்ணக்கிளி

ஆலஞ் சரு குதிர
         அங்கிருந்த கனியுதிர
கனிபெறக்கி போகவந்த
         கண்மணியே *தூங்கிமுழி

கரையிலே பசுமேயும்
         கமுகமரம் பூச்சொறியும்
பொழுதடைஞ்சு வரும்போது
         பொன்னுமக பால்குடிக்கும்

பொன்னில் தலைக்கரும்பே
         புண்ணியரே என் கண்ணே
கண்ணின் குலக்கொழுந்தே
         கண்மணியே தூங்கிமுழி

நூரணுங்கு கூறணிங்கு
         நுனி புடுச்சி தாலாட்டும்
நாரணிக்கும் கூறணுக்கும்
         அனிபுடுச்சி தாலாட்டும்

முன்னே வந்து ஓராட்டும்
         பள்ளிதன்னி தொறந்து
பதற்கு நின்று பாங்கு சொல்லி - அப்போ
         ஈசறபி வந்து உதவி செய்வார்

பச்ச தொட்டில் கட்டி
         பக்குவமாய் பால்புகட்டி
தாலாட்டம்மா தாலாட்டு
         ரோராட்டம்மா ரோராட்டு

லாயிலாஹ இல்லல்லாஹ்
         லாயிலாஹ இல்லல்லாஹ்

பாடல் சொன்னவர் : சிராஜ் நிஷா. (62)
                                              படிப்பு இல்லை
                                              கடையநல்லூர்.

சேகரிப்பு : செல்வி மா. சுஜாதா
                       முனைவர்பட்ட ஆய்வாளர்.


* தூங்கி முழி என்று சொல்லும் இந்த ரோரோட்டு புதுவகை !
எல்லா ரோராட்டுகளும் குழந்தைகளை தூங்கத் தான் சொல்லும்.
தூங்கி முழிக்கும் குழந்தை ஒரு ஆனந்தம் தான்.
- கி.ரா
Pin It