வெங்கடாத்திரி மாமா, 1960களில் சிறீவில்லிபுத்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய்மொழி தெலுங்கு எனினும், தெலுங்கு வாசிக்கத் தெரியாது. கர்ண பரம்பரையாக தெலுங்கு இலக்கியங்களில் பரிச்சயம் உடையவர். யாரோடும் மிக இனிமையாகப் பழகும் திறனாளர்.

1970களின் இறுதியில் மத்திய, மாநில அரசியலில் யார் பெரியவர் என்று விவாதம் நடந்து கொண்டிருந்தது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான் எப்பொழுதெல்லாம் சுவாரஸ்யமாக எதாவது கேட்க நினைக்கும் போது மாமா வாயைக் கிளறுவதுண்டு.

யார் பெரியவர் என்றதும் மாமா தனக்குத் தெரிந்த தெலுங்கு பதிகங்களை அவிழ்த்து விட ஆரம்பித்தார். பேச்சில் சுவாரஸ்யம் ஏற்பட்டால் மனிதர் அவராகவே நாக்கை சுழட்டிச் சப்புக் கொட்டிக் கொண்டு பேசுவார். குரலில் ஏற்ற இறக்கங்களும் நவரஸங்களும் கூடிய நாடகத் தன்மை களை கட்டும்.

“..... துன்னேவானிகி வித்தேவாடு கெட்டிகாடு
(உழுபவனைக் காட்டிலும் விதைப்பவன் கெட்டிக்காரன்)
வித்தே வானிகி மேகலவாடு கெட்டிகாடு
(விதைப்பவனைக் காட்டிலும் ஆட்டுக்காரன் கெட்டிக்காரன்)
மேகலவானிகி சாகலவாடு கெட்டிகாடு
(ஆட்டுக்காரனுக்கு சலவைத் தொழிலாளி கெட்டிக்காரன்)
இது எப்படி மாமா சரியாகும்? என்று வாயைப் பிடுங்கினேன்.

இத்தனை காணி நிலத்தில் இவ்வளவு ஆழத்தில் உழுதுமுடிக்க இத்தனை மணி ஆகும். இந்த இடத்தில் மேழியை அழுத்திப் பிடிக்கணும் என்ற அனுபவ அறிவு உள்ளவன் உழவன்.

இவனை விடவும் கெட்டிக்காரனான விதைப்பவன் - ஒரு கைக்குள் இத்தனை விதைகள் இருக்கும்; ஒரு கை வீச்சில் இத்தனை விதை விழும்! இந்த மண்வாகுக்கு இந்த இடத்தில் விதை விழணும்; இந்த இடத்தில் விழக்கூடாது என்று அறிந்து விதையை வீசி விதைப்பான்.

ஆனால் மந்தை ஆடு மேய்ப்பவன் பலவீட்டு ஆடுகளில் இது இது இன்னார்வீட்டு ஆடு: அது அது அன்னார் வீட்டு ஆடு என்று இனம் காணும் திறமை உள்ளவன். இந்த ஆட்டுக்காரன் விதைப்பவனை விடத் திறமைசாலி.
ஆனால் இந்த ஆட்டுக்காரனைவிட ஒரு சலவைத் தொழிலாளி கெட்டிக்காரன். ஒரு ஊரில் உள்ள அத்தனை வீட்டுக்காரர்களும் துணிகள் போட்டாலும், எது எது எவர் வீட்டு துணி என்று அடையாளம் கண்டு சலவை செய்து அவரவரிடம் தரும் சலவையாளி திறமை உள்ளவன் என்று தெளிவுரை சொன்னார். அவர் நாக்கை சொட்டாங் கொட்டி சுழட்டிச் சொல்லுகையில் அந்தக் கூற்றில் ஈர்ப்பையும் நம்பகத் தன்மையையும் கூட்டி விடும். மேற்குறித்த பதிகத்தில் நமது கிராமத்துக்காரர்களின் திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.

“என்ன மாமா இதில் யார் பெரியவர்” என்று கேட்டதும், அட இன்னும் ஒரு பதிகம் இருக்கு கேளும் என்று தொண்டையைச் செறுமி சொல்ல ஆரம்பித்தார் வெங்கடாத்திரி மாமா.

குக்க தின்னவாடு குருநாதடு
நக தின்னவாடு நாராயணடு
பந்தி தின்னவாடு பரமசிவடு
ஏனிக தின்னவாடு என்த்தபெத்தவாடோ ...?

என்று கடகடவெனச் சொல்லி சோழியை உருட்டிப் போட்டது போலச் சிரித்தார்.

இது என்ன மாமா புதிர்? ஒண்ணும் விளங்கல; நீங்களே சொல்லுங்க! என்று நான் கேட்டதும் சிரித்தபடி கம்பீரமாகத் தொடர்ந்தார்.

குக்க தின்னவாடு குருநாதடுன்னா நாயின் குணத்தை வென்று செரித்தவன் குருநாதனாக இருக்க தகுதி பெற்றவன். நக்கதின்னவாடு நாராயணடு என்றால் நரியின் தந்திரகுணங்களை எல்லாம் வென்று சீரணித்தவன் சிறீ மன் நாராயணனாவான். பந்தி தின்னவாடு பரமசிவடு என்றால் பன்றியின் உக்கிரகுணங்களை கெலித்து செரித்தவன் பரமசிவனைப் போல ஆற்றல் உள்ளவனாவான். இவர்களில் ஏனிக தின்னவாடு என்த்த பெத்தவாடோ.... என்றால் உருவத்தில் பெரிய, பழிவாங்கல் குணம் கொண்ட யானையின் குணத்தை ஜெயித்து ஏப்பம் விட்டவன் எவ்வளவு பெரிய மகானாக இருப்பானோ... என்று மாமா சொல்லி முடிக்கவும் அத்தை வந்து சாப்பிடக் கூப்பிடவும் சரியாக இருந்தது. சரி குறைஞ்ச பட்சம் இந்தப் பசியையாவது வெல்ல முடியுதா நம்மால...! என்று புலம்பி துண்டை உதறி எழுந்தார். சிரிப்பும் சிந்தனையும் என்னைப் பற்றிக் கொண்டது. முப்பது வருஷம் கழிச்சி இப்போ நான் உங்க முன்னால இறக்கி வச்சிட்டேன் ...

Pin It