மத்திய தர வர்க்க மனோபாவம் பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். சொந்த வாழ்க்கையில் கடந்த காலம் பற்றிய பெருமூச்சுகளுடனும் எதிர்காலம் பற்றிய பயங்களுடனும் நிகழ்காலத்தை கோட்டை விடுபவன்தான் மிடில் கிளாஸ். பொது வாழ்க்கையில் கருத்துரீதியாக ஏதாவது ஒன்றுடன் ஒட்டிக் கொள்ளாமல் அவனால் வாழவே முடியாது. அங்கிட்டும் போகமாட்டான், இங்கிட்டும் போகமாட்டான். இடையிலே கிடந்து உழலுவான். சொந்த அபிப்ராயம் என்று ஒன்றும் இருக்காது. அவன்தான் மிடில் கிளாஸ். கன்ஸ்யூமர் என்ற பதம் அவனுக்கான இன்னொரு பெயர். பொருளாசையும் சுய நலமும் படாடோப வேட்கையும் அவனது அடிப்படை குணம்.
சீக்கிரம் பயந்து பதட்டமாகிற பீதியையும் வதந்திகளையும் விரைவாக பொது வெளியில் பரப்புகிற குணம் அவனுடையது. அன்றாடம் என்னும் சக்கரம் அதே கதியில் ஓடிக் கொண்டே இருக்கவேண்டும். அது நின்றால் பதட்டமாகி விடுவான். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் மட்டும் இன்னும் ஒரு மாதம் நீடித்திருந்தால் ஏராளமான ஊழியர்களுக்கு மனப் பிறழ்வே ஏற்பட்டிருக்கும். அவ்வளவு தான், மிடில் கிளாஸ் லிமிட். இப்படியெல்லாம் நம்மில் பலர் பேசவும், பேசக் கேட்கவும் செய்கிறோம்.
உண்மையில், இந்த மிடில் கிளாஸ் (மத்திய தர வர்க்கம்) என்று பரவலாக யாரைப்பற்றி பேசுகிறோம்? வர்க்கம் என்கிற சிந்தனையை உலகுக்குத் தெளிவாக அறிமுகப்படுத்திய காரல் மார்க்ஸும் ஏங்கெல்ஸுமே இவர்களைப் பற்றி அதிகமாக பேசவில்லை என்றே சொல்றார்கள். அவர்கள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் இத்தனை கோடி மத்திய தர வர்க்கம் உலகத்தில் எங்கும் பெருகியிருக்கவில்லை. ஆகவே, தொழிலாளி வர்க்கம், நில பிரபுத்துவ வர்க்கம், முதலாளி வர்க்கம் போன்ற அடிப்படை வர்க்கங்கள் பற்றியே அவர்கள் பேசினார்கள். வர்க்கம் என்பதன் அடிப்படை அவ்வர்க்கம் சமூகத்தின் உற்பத்தி உறவுகளில் வகிக்கும் இடம் சார்ந்தது. இந்த மத்திய தர வர்க்கம் அடிப்படை வர்க்கம் இல்லை. சமூக மாற்றத்தை விளைவிக்கிற அடிப்படை வர்க்கம் பாட்டாளி வர்க்கம்தான்.
அரசு எந்திரத்தின் நட்டு, போல்டுகளாகவும், ஆலை உற்பத்தி பொருள்களின் விற்பனை பிரதிநிதிகளாகவும், வக்கீல்களாகவும், ஏஜென்டுகளாகவும் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் பிறந்து வளரத் தொடங்கிய மத்திய தர வர்க்கம் தன் எண்ணிக்கையால் இன்று ஒவ்வொரு நாட்டினுடைய கொள்கைகள், கோட்பாடுகளைக் கூட தீர்மானிக்கிற சக்தியாக வளர்ந்து நிற்கிறது. இந்தியாவில் மட்டும் மத்திய தர வர்க்கத்தின் எண்ணிக்கை 300 மில்லியன். 2007க்குள் இந்த எண்ணிக்கை 445 மில்லியனைத் தாண்டும் என்று கணக்கிடப்படுகிறது. இந்த அளவு மாற்றம் நாட்டினுடைய குண மாற்றத்திற்கே காரணமாகி நிற்கிறது.
300 மில்லியன் என்பது அமெரிக்காவின் ஜனத் தொகையைவிட அதிகம் என்று ஜார்ஜ் புஷ் பேசிச் சென்றுள்ளார். அவர்கள் ஜனத் தொகையை சந்தை என்று பார்ப்பவர்கள். 300 மில்லியன் கன்ஸ்யூமர்கள்! ஆகவே, இவ்வளவு பெரிய மார்க்கெட் உள்ள இந்தியா மீது ஏகாதிபத்தியங்களும் பன்னாட்டு மூலதனங்களும் அக்கறை கொள்ளாமல் இருக்கமுடியாது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் மத்தியதர வர்க்கத்திற்கென்று விசேஷமான சில குணங்கள் உண்டு. ஒன்று இதனுடைய தகப்பனார் மெக்காலே என்ற வெள்ளைக்காரர். உடம்பால் இந்தியர்களாகவும் சிந்தனையால் ஆங்கிலேயர்களாகவும் இருக்கிற ஒரு படித்த வர்க்கத்தை உருவாக்குவதையே லட்சியமாகக் கொண்டு தொடங்கப்பட்ட மெக்காலே கல்வித் திட்டத்தின் தயாரிப்பு தான் இன்றைய இந்திய மத்திய தர வர்க்கம்.
கிராமப் புறங்களில் பண்ணையார்களாகவும் இல்லாமல் விவசாயக் கூலிகளாகவும் இல்லாமல் கைவினைஞர்கள், பூசாரிகள் என்று ஒரு கிராமத்து மத்திய தர வர்க்கம் உண்டுதான். என்றாலும், பொதுவாக நாம் மத்திய தர வர்க்கம் என்று பேசுவது மெக்காலேயின் குழந்தைகளாக மாத வருமானம் உள்ள 300 மில்லியனைத்தான்.
காலனிய காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் சகல லஞ்ச லாவண்யம், ஃப்ராடு மற்றும் திகிடுதக்க வேலைகளையும் ஐயம்திரிபற கற்றுக்கொண்டனர் நம் முன்னோர். காந்தி, நேரு, சுபாஷ், எம்.என்.ராய், பகத்சிங் போன்ற மத்திய தர வர்க்கத்து மனிதர்கள் வேறு திசையில் இவர்களைக் கொண்டு செல்ல முயன்றனர். 1915 வரையிலும் மத்திய தர வர்க்கத்தினரால் மட்டுமே நிரப்பப்பட்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் ஒவ்வொரு மாநாட்டிலும், உயர்பதவி, உயர் பதவிகளிலும் இந்தியர்களுக்கு வாய்ப்பு என்று நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கைகளையே வைத்துக்கொண்டிருந்தது. காந்தியின் வருகைக்குப் பிறகு அடிப்படை வர்க்கங்களான ஏழை விவசாயிகளும், விவசாயக் கூலிகளும், தொழிலாளிகளும், தேசிய இயக்கத்தில் சேர்கின்றனர். அதன்பிறகுதான் சுயராஜ்ய கோரிக்கையே எழுகிறது. எழுகின்ற அலை யோடு அசைகின்ற மத்திய தர வர்க்கம் சுதந்திர போராட்ட காலத்திலும் தன் நலன்களை பாதுகாக்கிற கோரிக்கைகளை வடித்துக் கொண்டது.
ஐரோப்பிய மத்திய தர வர்க்கம்போல அல்லாமல் இந்தியாவின் மத்திய தர வர்க்கம் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்து மத்திய தர வர்க்கம், இஸ்லாமிய மத்திய தர வர்க்கம், மத சார்பற்ற மத்திய தர வர்க்கம் போன்ற சில முக்கிய பிரிவுகளில் அடைந்திருந்தது. தலித் மத்திய தர வர்க்கம் என்ற ஒன்று கணக்கில் கொள்ளும் அளவுக்கான சக்தியாக எண்பதுகளை ஒட்டித்தான் எழுந்தது. ஆகவே 1947க்கு முன்னர் இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய இந்து மத்திய தர வர்க்கம் உருவாகிவிட்டது. 47க்குப் பிறகு அது இன்னும் வளர்ந்தது.
பெரும் தொழில்களில், நவீன ஆலைகளில் முதலீடு செய்கிற குணத்தோடு இந்து மத்திய தர வர்க்கம் வளர்ந்தது. இஸ்லாமிய நடுத்தர வர்க்கமோ நில பிரபுத்துவ குடும்பங்களில் இருந்து பிறந்தது. ஆகவே, நவீன முதலாளிகள் என்று இந்திய வரலாற்றில் இஸ்லாமியர்கள் யாரும் இல்லை. நிலபிரபுத்துவ பின்புலம் கொண்ட அந்தக் கணிசமான இஸ்லாமிய நடுத்தர வர்க்கமும் 1947 தேச பிரிவினையை ஒட்டி (வளமான வாழ்வுக்கான கனவோடு) பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டது. சுதந்திர இந்தியாவில் இஸ்லாமிய நடுத்தர வர்க்கம் என்பது கீழ் மட்ட இஸ்லாமிய குடும்பங்களிலிருந்து (பின்னாட்களில் தீவிரவாதத்துக்கு இரையாகிற ஒரு பகுதியை தருவதற்காக) புதிதாக பிறந்து வளர வேண்டியிருந்தது.
ஆகவே, இந்திய மத்திய தர வர்க்கம் 1947க்குப் பிறகு குறிப்பாக சுதந்திரப் போராட்ட நினைவுகளும் லட்சியக் கனவுகளும் மங்கிய நினைவுகளாகிப் போகிற அளவுக்கு காலம் கடந்தபிறகு அதாவது, 1964க்குப் பிறகு நேரு போன்ற நினைவுபடுத்துகிற அடையாளச் சின்னங்கள் இறந்து விட்ட பிறகு முழுக்க முழுக்க சுயநலக் கும்பலாக மாறி விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியை ஆவலோடு உள்வாங்குவதில் மட்டுமே அது நவீனமாக இருக்கிறது. ஜீன்ஸ் போட்டு, டிஷர்ட் போட்டு, விரல்களை கணினியின் விசைப் பலகையின் மீது ஓட்டுகிற அது தன் மனங்களை சிந்தனைகளைக் கலைய ஆணாதிக்க, சாதிய, மதப் பழமைவாத சகதிக்குள் ஆழமாக புதைத்து வைத்திருக்கிறது. பிறர் நலன் பற்றிய நாளைய உலகம் பற்றிய கவலை அதற்குச் சிறிதும் இல்லை என்று எனக்கு மட்டும் கிடைத்தால் போதும், நான் மட்டும் தப்பித்துக் கொள்ள ஏதாவது ஓட்டைக் கிடைக்கிறதா பாருங்கள்.
உலகமயம், தனியார் மயம் வந்தால் வந்துவிட்டுப் போகட்டும் நமக்கு ஃப்ளாட், டி.வி.யும், தவணையில் காரும் கிடைக்கிறதா பாருங்கள். அருண் ஐஸ்க்ரீமுக்காக மனைவியைக்கூட விட்டுக்கொடுப்பது தப்பில்லை என்கிற விளம்பரங்கள் இவர்களைக் குறி வைத்தே தயாரிக்கப்படுகின்றன. விளம்பரங்கள் இவர்களின் மூளைகளை தயாரிக்கின்றன. அந்த மூளைகள் விளம்பரங்கள் காட்டும் பொருள்களை வாங்கும் கனவுடன் அலைகின்றன.
அடிப்படையான மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களல்ல. மாறாக, மத்தியதர வர்க்கத்தின் ஆடம்பர வேட்கைக்குத் தேவையான அழகு சாதனப் பொருட்களும் நுகர் பொருட்களும் சந்தை எங்கும் இறைந்து கிடக்கின்றன. அரிசியும் பருப்பும் உற்பத்தி செய்துவிட்டு விவசாயி கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து செய்துக் கொண்டிருக்கிறான். அதுபற்றி எந்த குற்ற உணர்வும் இல்லாமல் (அதுக்கு நேரடியா நாம பொறுப்பில்லையே) மெகா சீரியல்கள் பார்த்துக் கொண்டிருக்க நம்மால் முடிகிறது.
இப்படியான மத்திய தர வர்க்க மனோபாவம் இன்று தொழிலாளி வர்க்கத்துக்குள்ளும் விவசாயி வர்க்கத்துக்குள்ளும் புரட்சிகர இயக்கங்களுக்குள்ளும் வைரஸ் கிருமியைப் போல பரவி வருகிறது. ஆஷ் துரையைச் சுட்டுக் கொல்வதற்காக வனத்துறை வேலையை விட்டுவிட்டு வந்த வாஞ்சிநாதனும், நாடு அழைத்தது ஆகவே ராணுவத்தை விட்டு வெளியேறி மக்களோடு புரட்சிகர இயக்கத்தோடு கலந்துவிட்டேன் என்று கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்த மேஜர் ஜெய்பால் சிங்கும் அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளின்படி வாழ வில்லை. மீறினார்கள். அவர்கள் பிறந்ததும் மத்தியதர வர்க்கத்தில்தான்.
மத்திய தர வர்க்க மனோ பாவங்களை மீறுகிற புதிய மத்தியதர வர்க்கத்தை உருவாக்க வேண்டும். அதை தொழிற்சங்க இயக்கங்கள் மாத்திரமே செய்ய முடியும். அதற்கான தொழில் நுட்பம் என்ன? வடிவம் என்ன? வார்த்தை என்ன? அதுதான் நாம் அவசரமாக விவாதிக்க வேண்டிய விஷயம்.
கீற்றில் தேட...
விழி - டிசம்பர் 2007
மத்தியதர வர்க்க மனோபாவம்
- விவரங்கள்
- ச.தமிழ்ச்செல்வன்
- பிரிவு: விழி - டிசம்பர் 2007