காளையின் கோபம்

 காயடித்துத் தகுதியாக்கி
ஓயாமல் உழைப்பில் ஆழ்த்தும்
எஜமானனை எதிர்க்கத் துணிவில்லை
எருதுக்கு. . .
அவன் புல் போடுகிறான் தவிடு
புண்ணாக்கும் தருகிறான்
என்பதற்கு மட்டுமில்லை
ஆனால்
தினம் தினம்
அது தன் பாய்ச்சலைக் காட்டி
பயமூட்டுகிறது
அதிகாலை வாசல் தெளிக்க
சாணம் எடுக்க வரும்
பெண்களிடம் மட்டும்.


போர்வை

எப்போதும் போர்வையே
அத்யாவசியமாகக் கருதியதில்லை
எனினும்
போர்வையுடன்தான் படுக்கிறேன்
நான் உறங்கும் வரை
காத்திருக்கும் போர்வை
வெளியில் எழுந்து உலாவப் போனாலும்
நான் அறியப் போவதில்லை
சில நாட்களில்
இழுத்து போர்த்த போர்வையை எடுத்தால்
ஒரு உடலாகக் கனக்கிறது
நீண்டு கிடக்கும் கை கால்களோடு
அப்போது அதை அப்படியே விட்டு விடுகிறேன்
அதன் கனவை கலைத்துவிடக் கூடாது என்று.


தனிமையின் வலி

மழைக் கால இரவில்
மருத்துவனிடம் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன்
ஒற்றையடிப் பாதை
நான் பேச ஆர்வமில்லாதபோது
என் செருப்பு
பேசத் தொடங்கியது
பதிலுக்கு தவளைகளும் பேசுகின்றன
இரண்டோடும் பேச எனக்கு
ஒன்றுமில்லை
திடீரென என் செருப்பு கனக்கிறது
பாதையோரம் கழட்டிவிட்டு
வீட்டுக்கு வந்து விட்டேன்


கனவின் விளையாட்டரங்கம்

உடைகளிலெல்லாம் மண் படிய
மூன்று சிறுவர்கள் விளையாடுகிறார்கள்
மண்ணைக் குழைத்து
உருண்டையாகவோ வட்டமாகவோ செய்து
வகைவகையான தின் பண்டங்களைத் தயாரித்து
பாவனைகளில் உண்டு ஊட்டி மகிழ்கிறார்கள்.
ஒருவனின் அம்மா
தன் அதட்டலான அழைப்பில்
அவர்களைப் பிரித்து அழைத்துச் செல்லும் தன்
மகனை
குளிப்பாட்டி உணவூட்டி உறங்கவும் வைத்துவிட்டாள்
அதுவரை பிரிந்திருந்த அவன் நண்பர்கள்
ஓடோடி வந்து கூடி விட்டார்கள்
அவன் அம்மாவால் நுழையவே முடியாத
கனவின் விளையாட்டரங்கில்.
Pin It