எலி அம்மணமாக ஓடுகிறதே என்று கவலைப் பட்டதாம் பூனை. அதைத் தின்று முடித்துவிட வேண்டும் என்பது பூனையின் நோக்கம்.
கங்கையில் திருவள்ளுவருக்குச் சிலை இல்லையே என்று கவலைப்படுகிறராம் தருண் விஜய் , வள்ளுவரை முடித்துவிட வேண்டும் என்பது ஆர். எஸ்.எஸ். ஆகிய பா.ஜ.கவின் நோக்கம் .
சமஸ்கிருதம் தான் சிறந்தமொழி,பகவத்கீதைதான் புனித நூல் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் தருண் விஜய்க்கு, திருக்குறள் மீது என்ன அக்கறை? திருவள்ளுவர்மேல் எதற்குக் கவலை?
சோழியன் குடுமி சும்மா ஆடாது, பூனூல் மூளை சும்மா இருக்காது. டாக்டர் அம்பேத்கர் ஆய்வின் அடிப்படையில், தமிழ்மொழி ஒன்றைத்தவிர,பிற இந்திய அனைத்து மொழிகளிலும் ஊடுருவி, நுழைந்து ஆதிக்கம் செலுத்தும். சமஸ்கிருதத்தால் தமிழ் மொழியின் மீது ஊடுருவவும் முடியவில்லை, ஆதிக்கம் செய்யவும் முடியவில்லை. காரணம் இந்தியாவின் ஒரே செம்மொழி தமிழ் மட்டும் தான்.
தமிழ் மட்டுமல்ல, தமிழர்களும் செம்மையானவர்கள். தந்தை பெரியாரின் தமிழ்நாடு, பெரியார் விதைத்த சாதி, மத எதிர்ப்பு, பகுத்தறிவு, சுய சிந்தனை, மொழி ஆதிக்க எதிர்ப்பால், பண்பட்டு உரமேறிய மாநிலம் தமிழ் மாநிலம்.
அதனால்தான் இந்துத்துவ பார்ப்பனியத்தால் இங்கே கால் ஊன்ற முடியவில்லை. இது அவர்களின் அகண்டபாரதத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் தடை.
கடந்த காலங்களில் டாக்டர் அம்பேத்கரை இந்துவாகக் காட்டினால், தாழ்த்தப்பட்டவர்களைத் தன்வயப்படுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க. இந்து அமைப்புகள், அது முடியாததால் மண்ணைக் கவ்வின.
இப்போது தமிழர்களை தன்வயப்படுத்த வேண்டும் என்றால் பெரியாரை இந்து மதத்துக்குள் கொண்டுவரவேண்டும். அது நடக்கக்கூடிய காரியம் இல்லை. எனவே திருவள்ளுவரை இந்துமதப் போர்வைக்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வால் தேடிப்பிடிக்கப்பட்ட தருண் விஜயின் தில்லுமுல்லு வேலைதான் காசியில் வள்ளுவர் சிலை என்ற நாடகம்.
சரி! காசியில் வள்ளுவருக்குச் சிலை நிறுவ முடியாமல் போனதற்கு என்ன காரணம்?
கங்கை புனிதமானது. திருவள்ளுவர் தீட்டானவர், அதனால் அங்கே சிலை வைக்கச் சாமியார்கள் எதிர்த்தார்களாம்.
இந்த செய்தி தமிழர்களிடம் எப்படிப் பரப்பப்படுகிறது? திருவள்ளுவர் கீழ்சாதி, அதனால் புனித கங்கையில் அவரின் சிலை வைக்கச் சாமியார்கள் எதிர்ப்பு.
இதுதான் வாட்ஸ்அப், முகநூல் உட்பட இதர தளங்களிலும் கூர்மையாக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் செய்தி. இங்கே ஒரு நுட்பமான அரசியல், வேலை செய்கிறது.
திருவள்ளுவரைக் கீழ்சாதி என்றா சொல்லிவிட்டார்கள்? அதனால்தான் அவர் சிலை வைக்க எதிர்ப்பா? என்று, இங்கே சாதிக்கும் வள்ளுவருக்கும் இடையில் சர்ச்சையை வளர்த்து விட்டு -&
நாங்கள் திருவள்ளுவரை மறுக்கவில்லை. அவர் புனிதமானவர். அதனால் தான் புனித கங்கை புரளும் காசியில் அவர் சிலையை வைக்க முயற்சி செய்தோம். சாதுக்கள் எதிர்க்கிறார்கள். இந்து மதம் திருவள்ளுவரையும், அவரின் புனித கருத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளது என்று வள்ளுவரை இந்து மதத்தால் ஆட்கொள்ளச் செய்யும் வேலையும் பார்பனிய இந்துத்துவாக்களால் நடைமுறைப்படுத்தபட்டுக் கொண்டு இருக்கிறது.
இன்னொருபுறம் திருவள்ளுவரைத் தீட்டு என்று சொல்வதன் மூலம், வட இந்திய மக்களிடம் வள்ளுவத்திற்கு எதிரான சிந்தனைகள் வளர்க்கப்படும்.
தீட்டான வள்ளுவர் எழுதிய திருக்குறள் எப்படிப் புனித நூலாகும். ஆகவே பகவத் கீதை தான் புனித நூல் என்று வட இந்திய மக்களின் சிந்தனையில் தமிழ், தமிழர் எதிர்ப்பு என்ற தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்யவும் இது பயன்படும்.
இப்படி திருவள்ளுவரைத் தீட்டு, கீழ்சாதி என்று சொல்வதன் மூலம், சாதிப் பிரச்சனையை மேலோங்கச் செய்து. மத ஆதிக்கத்தை நுழைத்து விடலாம் என்று கணக்குப் போடுகிறது இந்துத்துவ பார்பனிய சக்திகள்.
புத்தரை இந்துவாக மாற்றிக் காட்டிய பார்ப்பணியச் சதி, அம்பேத்கரிடம் முடியவில்லை.
தமிழகத்தில் தந்தை பொரியாரை நெருங்கவே முடியாது.
வேறு வழியில்லாமல் திருவள்ளுவரை இந்து மயமாக்கிக் காட்ட முயல்கிறது.
ஈரோட்டு நெருப்பு எரிந்து கொண்டு இருக்கும் போது, பார்பனியச் சக்திகளால் வள்ளுவரை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. வுக்கு மீண்டும் விழப்போகிறது மரண அடி - திருவள்ளுவரின் சிலையால், பொரியாரின் கொள்கையால்!