அரசியல் முதிர்ச்சியும், நாகரிகமும் இல்லாமல், பொது மேடைகளில் பேசக்கூடிய ஒரு சிலர் எல்லா கட்சிகளிலும் இருப்பார்கள். அவர்களைத் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்! ஆனால் சில கட்சிகளில் தலைவர்களே அப்படி இருக்கும் அவலத்தை இப்போது காண நேரிடுகிறது! சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் உறுப்பினர்களாக இருந்தவர்கள், முன்னாள் அமைச்சர்கள் சிலர், அதிமுகவின் மேடைகளில் இப்போது அப்படிப் பேசுகின்றனர்!
உங்கள் கனவுகளைச் சொல்லுங்கள், நிறைவேற்றித் தருகிறோம் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூறியிருக்கும் சொற்கள், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன!
குழந்தைகளின் படிப்பு, குடியிருக்க வீடு, அன்றாட வாழ்வின் அவசியத் தேவைகள் போன்றவைகளில் மக்களுக்கு கனவுகள் இருக்கும் ! அவற்றைச் சொல்லுங்கள் என்று முதலமைச்சர் கேட்டிருக்கிறார்! இயன்ற வரையில் நிறைவேற்றித் தருகிறோம் என்று உறுதியும் அளித்திருக்கிறார்!
இதுகுறித்து அதிமுக ஆட்சியில், முன்னாள் அமைச்சராக - அதுவும் சட்ட அமைச்சராக - இருந்த திரு சி.வி. சண்முகம் அவர்கள், மிகவும் கொச்சையாக ஒரு செய்தியை மேடையில் வெளியிட்டு இருக்கிறார்!
ஒரு புகழ் பெற்ற நடிகையின் பெயரைச் சொல்லி, எனக்கு அவர் வேண்டும் என்று ஒரு கனவு இருக்கிறது, நிறைவேற்றித் தருவீர்களா என்று பொது மேடையில் கேட்கிறார்!
தன்னைத்தானே அவர் ஒரு பொது மேடையில் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதோடு, ஒரு பெண்ணின் பெயரை மேடையில் கூறி அவரையும் இழிவு படுத்தி இருக்கிறார்! அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பற்றி இப்படி வேறு யாராவது பேசி இருந்தால், அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எவ்வளவு சீற்றம் ஏற்பட்டிருக்கும் ! இவரெல்லாம் எப்படி ஓர் ஆட்சியில் அமைச்சராக இருந்திருக்கிறார் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது!
அதே அதிமுகவின் இன்னொரு முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், திரு திண்டுக்கல் சீனிவாசன், பெண்களுக்கு சேலை மட்டும் கொடுத்தால் போதுமா, பாவாடை கொடுக்க வேண்டாமா என்று கேட்கிறார். இவர்களின் சிந்தனை எல்லாம் எங்கே மூழ்கிக் கிடக்கிறது என்பதை இவர்களின் உரைகளே எடுத்துக் காட்டுகின்றன!
புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் தவெக கட்சியில், புதிதாக இணைந்திருக்கும் அதன் தேர்தல் மேலாண்மைச் மேலாளர் திரு ஆதவ் அர்ஜுனா, தேவையில்லாமல் நடிகர் ரஜினிகாந்தை வம்புக்கு இழுத்து, எல்லோரிடமும் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார்! ரஜினிகாந்த் எந்த வம்புக்கும் போவதில்லை, யாரைப் பற்றியும் இழிவாகப் பேசுவதில்லை. அப்படி இருக்கும் அவரைத் தவறாக பேசுவது தங்களுக்குத் தான் அவமானம் என்பதை ஆதவ் உணர வேண்டும்!
தேர்தல் நெருங்க நெருங்க, இப்படிப்பட்ட அநாகரிகங்களும், அத்துமீறல்களும் பொது மேடைகளில் தலை காட்டுவது தமிழகத்தைத் தலை குனிய வைக்கும் !
இப்படிப்பட்ட தரக்குறைவான பேச்சுகளைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது!
மாண்புமிகு முதல்வரின் வழி நின்று, தமிழ்நாடு தலை குனியாது என்று உரத்துச் சொல்கிறது!
- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்