திரும்பும் திசை எங்கும் குழப்பங்கள் நிலவும் காலகட்டத்தை நாடு இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது!
பெட்ரோல், டீசல் விலை கூடியிருக்கிறது. தங்கத்தின் விலை கூடிக்கொண்டே போகிறது. சோதனைகள் என்ற பெயரில் பல்வேறு சித்திரவதைகளை நடத்தி முடித்த பிறகு நடைபெற்ற நீட் தேர்வு செல்லாது என்றும், மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளிவந்திருக்கிறது!
ஒன்றே ஒன்று மட்டும் சரிந்து கீழே வந்திருக்கிறது. ஆம், இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரையில் காணாத வகையில் சரிந்து, ஒரு டாலருக்கு 96 ரூபாய் என்று ஆகியிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை கூடுவது என்பது, மிகத் தேவையான பொருள்களின் விலைகளும் விரைவில் கூட இருக்கின்றன என்பதற்கான முன்னறிவிப்பு!
இந்தியாவின் நிலை இது என்றால், தமிழ்நாட்டின் அரசியல் நிலையோ மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கிறது!
அதிமுக என்னும் கட்சி அழிந்து கொண்டிருக்கிறது என்பதைவிட, திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை!
மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இல்லாத நிலையில், கொறடாவினுடைய ஆணை மீறப்படுமானால், அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே விதி! ஆனால் 47 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில், 25 பேர் மட்டுமே கொறடாவின் ஆணையை மீறி, தவெக விற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது முற்றிலுமான விதிமீறல்! ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம், கொறடா யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்கிறார்!
இரண்டு குழுவில் இருந்தும் கடிதங்கள் வந்திருப்பதால், யார் கொறடா என்பதை முடிவு செய்ய முடியவில்லை என்கிறார்.
இது என்ன நியாயம்? கட்சியின் பொதுச் செயலாளர், சட்டமன்றக் குழு உறுப்பினர்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் எவரோ, அவர் சொல்வது தானே இறுதியாக இருக்க முடியும்!
திட்டமிட்டுச் சதி வேலைகள் நடைபெறுகின்றன. அதன் தொடக்கமாகத்தான் எடப்பாடியாரைச் சந்திக்காமல், முதலமைச்சர் அந்தக் கட்சியின் ஒரு குழுவினரைச் சென்று சந்தித்தது என்பது நமக்குப் புரிகிறது!
இங்கே பொம்மைகள் சுழல்கின்றன.
பொம்மலாட்டத்தை நடத்துகின்றவர்கள் யார் என்று நமக்குத் தெரியும்! அதிமுகவை மட்டும் அழிப்பது அவர்கள் நோக்கமில்லை. திராவிட இயக்கத்தை அழிப்பதுதான் அவர்களின் முழுமையான நோக்கம்.
அது ஒரு நாளும் நிறைவேறாது!
- சுப.வீரபாண்டியன்