அரபிக் கடலில் மையம் கொண்டு காற்றழுத்தத் தாழ்வுநிலையில் இருந்த புயல், மோந்தா என்ற பெயரோடு ஆந்திராவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கரை கடந்து அமைதியாகிவிட்டது, என்பது செய்தி.

சென்னையில் மையம் கொண்டு அரசியல் தாழ்வுநிலையில் இருந்த தவெக என்ற கட்சி, நாற்பத்துஓர் உயிர் சேதத்தை ஏற்படுத்திவிட்டுக் கரூரைக்கடந்து சென்னையில் அமைதியாகிவிட்டது, என்பதும் செய்திதான். இந்தச் செய்திக்கு நடுவில் கொஞ்சம் அரசியலும் இருக்கிறது.

முதலமைச்சர் நாற்காலி எனக்குரியது என்கிறார் எடப்பாடியார். இல்லல்ல அது 'என்னிதி' என்கிறார் நடிகர், தவெக தலைவர் விஜய். இது இப்படியிருக்க தவெகவுடன் கூட்டு, பிள்ளையார் சுழி போட்டாச்சி என்று எடப்பாடி சொல்ல, ஆமாமா, விஜய் இங்கே இருப்பது தான் பாதுகாப்பு என்கிறார் ராஜேந்திர பாலாஜி, விஜய் அதிமுகவுடன் வரவேண்டும் என்று ஆர்.பி.உதயகுமாரும் கூறிவிட்டார். ஒரு சோகத்தில் இருந்து கட்சியை, அதன் தலைவரை இப்படி 'மாங்கு மாங்கு' என்று ஏன் அதிமுக அழைக்கிறது? விடை மிக எளியது, தெளிவானது.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் வலிமையாக இருந்த அதிமுக இப்போது சிதறு தேங்காய் ஆகிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விகிதாச்சார அளவில் பங்குபோட்டுக் கொண்டார்கள். இதில் எடப்பாடிக்குக் கொஞ்சம் கூடுதல் பங்கு, அவ்வளவுதான். இதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலமும், ஈரோடு இடைத்தேர்தல் மூலமும் தெளிவாகச் சொல்லி விட்டார்கள் வாக்காளப் பெருமக்கள், அதிமுக செல்வாக்கு சரிந்துவிட்டது என்று. அதனால்தான் நீரில் தத்தளிக்கும் ஒருவன் எதைக் கண்டாலும் பிடித்து கரையேறத் துடிப்பது போல எடப்பாடி, அமித்ஷா கையைப் பிடித்தார். இப்போது விஜய் கையைப் பிடிக்க முயல்கிறார்.

இது இப்படியென்றால் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், எச்.ராஜா போன்றவர்கள் மூலம் விஜய்க்குத் தூண்டில் போட்டுப் பார்த்தார் அமித்ஷா. ஒன்றும் படியவில்லை. சிபிஐயிடம் கரூர் சம்பவம் இருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் விஜயுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு 'தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தமிழ்நாட்டில் விரிவுபடுத்த விரும்புகிறோம். அதுகுறித்து கூட்டணி கட்சிகளிடம் பேசி முடிவெடுப்போம்' என்று பட்டும், படாமலும் சொல்லி இருக்கிறார் அவர். அவருக்குத் தெரியும் பாஜகவை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் என்று. எடப்பாடிக்குத் தெரியும் தான் இந்தத் தேர்தலில் கரையேறப்போவதில்லை என்று.

அதிமுகவுடன் கூட்டா என்ற கேள்விக்கு 'போன மாதம்வரை எடுத்த நிலைதான் இன்னமும் தொடர்கிறது' என்கிறார் தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார். 'கூட்டணி உண்டு' என்றோ, 'கூட்டணி இல்லை' என்றோ அவர் கூறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், விசுவாமித்திரருக்கும், வசிஸ்டருக்கும் இடையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும் திசங்குவின் நிலைமை இப்போது விஜய்க்கு ஏற்பட்டு விட்டது. பார்ப்போம், என்னதான் நடக்கப் போகிறது என்று!

எழில். இளங்கோவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.