"கற்றனைத் தூறும் அறிவு" - இது வெறும் வள்ளுவன் வரி மட்டுமல்ல, வீழ்ந்து கிடந்த இனத்தை மீட்டெடுத்த திராவிட இயக்கத்தின் தாரக மந்திரம்! இதோ, உலகமே உற்றுநோக்கும் சென்னை மெரினா கடற்கரையில், உழைப்பாளர் சிலைக்கு வலுசேர்க்கும் வகையில், தமிழரின் கல்விப் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் ‘கற்றனைத் தூறும் அறிவுச் சிலை’ கம்பீரமாகத் திறக்கப்பட்டிருக்கிறது.
சிலை சொல்லும் செய்தி: விடுதலையின் வேர் கல்வி! இந்தச் சிலை வெறும் வெண்கல வார்ப்பல்ல, இது தமிழினத்தின் தலைவிதியை மாற்றியெழுதிய திராவிட மாடல் ஆட்சியின் சாட்சியம்.
அடிமைத்தளையை அறுத்து, அறிவெனும் சிறகை விரித்து இளைஞர்களும் மாணவர்களும் வானத்தை வசப்படுத்தத் துடிக்கும் பாய்ச்சல் அச்சிலையின் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிறது.
ஏழை, எளிய, விளிம்புநிலை மக்கள் என எவருக்கும் எட்டாக்கனியாக இருந்த கல்வி, இன்று அனைவருக்கும் வசப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும் வகையில், அனைத்துத் தரப்பு மாணவர்களின் உருவங்களும் அங்கு இடம்பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர் முதல் பெண் கல்வி வரை, "யாவருக்கும் கல்வி" என்ற சமத்துவக் கோட்பாட்டை இச்சிலை காண்போர் மனதில் ஆழமாகப் பதிக்கிறது.
“அறிவே அதிகாரத்தின் திறவுகோல்!” என்பதே இந்தச் சிலையை நிறுவிய நம் முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் சிந்தனை. “தமிழர்கள் கல்வியை இறுகப்பற்றிக் கொண்டால் போதும், ஒருபோதும் நாம் வீழ மாட்டோம்!" என்ற முதலமைச்சரின் முழக்கம், திராவிட இயக்கத்தின் நூற்றாண்டுக் காலப் போராட்டத்தின் சாரம்.
அன்று தந்தை பெரியார் சொன்ன "அறிவு தான் மனிதனை மனிதனாக்கும்" என்ற தத்துவத்தை, இன்று நடைமுறைச் செயல்பாடாக மாற்றி, "புதுமைப் பெண்" "இல்லம் தேடிக் கல்வி" “தமிழ்ப்புதல்வன் “ “நான் முதல்வன்” “உங்கள் கையில் உலகம்” உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்களின் மூலம் தமிழகத்தைக் கல்விப் புரட்சியில் முதன்மை மாநிலமாக மாற்றிய பெருமை திராவிட மாடல் அரசையே சாரும்.
மெரினாவிற்கு வரும் மக்கள் இனி வெறும் அலைகளை மட்டும் பார்த்துச் செல்ல மாட்டார்கள்.
தமிழினத்தின் அறிவு வலிமையைப் பறைசாற்றும் இந்தச் சிலையைக் கண்டு, "கல்விதான் எங்களைக் காக்கும் கேடயம்" என்ற உறுதியோடு திரும்புவார்கள்.
புத்தகங்களை ஏந்திக் கொண்டு புதிய உலகத்தைப் படைக்கும் வலிமை இளைஞர்களின் கைகளில் இருக்கிறது.
அறிவால் இணைவோம், அன்பால் வெல்வோம்! வெல்வோம் ஒன்றாக!
- முனைவர்.காந்தி பாபு