(இடம் :நீதிமன்றம். முன்னிலை: நீதியரசர். கூண்டில்: போராட்டத் தில் ஈடுபட்ட சாமானிய மக்கள் சார்பாக ஒரு வாலிபன்)

நீதியரசர்: (சுத்தியலால் மேஜையைத் தட்டி) அமைதி! அமைதி! நள்ளிரவு என்றும் பாராமல், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, சாலையிலே அமர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக முழக்கமிட்டதாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது! இதற்கு உங்கள் பதில் என்ன?

 வாலிபன்: (கூண்டின் கம்பிகளைப் பிடித்தபடி) நீதியரசர அவர்களே!

சட்டத்தை மீறினோம் என்பது சாட்டப்பட்டக் குற்றம்! ஆனால், அந்தச் சட்டத்தைப் படைத்த மனிதன், இங்கே வாழ முடியாமல் தவிக்கிறான் என்பதுதான் நிதர்சனமான உண்மை!

போக்குவரத்துக்கு இடையூறு செய்தோம் என்கிறார்களே... பகலெல்லாம் உழைத்துக் களைத்த உடம்போடு, இரவில் ஒரு சொட்டுத் தூக்கத்திற்காகக் ஏங்கித் தவிக்கும் எங்களுக்கு, இந்த வாழ்க்கையே பெரும் இடையூறாக மாறிவிட்டதை இந்த அரசு ஏனோ கவனிக்கத் தவறிவிட்டது!

வழக்கறிஞர்: (குறுக்கிட்டு) யுவர் ஆனர், குற்றம் சாட்டப்பட்டவர் தத்துவப் பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறார்!

வாலிபன்: (உரத்த குரலில்) இது தத்துவமல்ல தர்மத்தின் குரல்!

விளக்குகள் எரியும் இந்த நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் உங்களுக்கு, இருளின் கொடுமை தெரியாது!

"தூக்கமில்லை... தூக்கமில்லை..." என்று நாங்கள் கத்தினோமே, அது ஏதோ ஆடம்பர உல்லாசத்திற்கான கூக்குரல் அல்ல!

பச்சை மண்ணாய், தொட்டிலிலே கிடக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தூக்கமில்லை!

நாளை நாட்டின் தூண்களாய் மாறவிருக்கும் மாணவக் கண்மணிகளுக்குத் தூக்கமில்லை!

விடிய விடிய வியர்வை சிந்தி, இந்த தேசத்தின் பசியைத் தீர்க்கும் உழைக்கும் வர்க்கத்திற்குத் தூக்கமில்லை!

நீதியரசர்: அதற்காக நள்ளிரவில் சாலையில் இறங்கிப் போராடுவதா? சட்டத்தைக் கையில் எடுக்க உங்களுக்கு யார் உரிமை தந்தது?

வாலிபன்: (உணர்ச்சிப் பெருக்கோடு)

வயிற்றுக்குச் சோறிடாத சட்டம், வாழும் உரிமை தராத சட்டம்... எங்களை இருட்டில் தள்ளி வேடிக்கை பார்க்கும்போது, எங்கள் கைகள் என்ன செய்யும் நீதியரசரே?

"கரண்ட் வேண்டும்... கரண்ட் வரும் வரை போராடுவோம்" என்று நாங்கள் முழங்கியது, ஏதோ இந்த அரசாங்கத்திடம் பிச்சை கேட்பதற்கல்ல! நாங்கள் கட்டிய வரிப் பணத்திற்கான உரிமை அது!

பகலெல்லாம் வெயிலின் கொடுமை! இரவிலோ மின்சாரப் பற்றாக்குறையின் கொடுமை! கொசுக்களின் கடியிலும், உஷ்ணத்தின் தகிப்பிலும் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் அழும்போது, எந்த ஒரு தகப்பனால் வீட்டில் நிம்மதியாகப் படுத்துறங்க முடியும்?

வீதியிலே மின்சாரம் இல்லை... ஆனால் எங்கள் நெஞ்சிலே புரட்சித் தீ இருக்கிறது! அந்தத் தீயின் வெளிச்சத்தில்தான் நாங்கள் நேற்று வீதியில் இறங்கினோம்!

நீதியரசர்: (சற்றே யோசித்து) சட்டம் தன் கடமையைச் செய்யும். உங்கள் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், போராட்ட வடிவம்...

வாலிபன்: (இடையில் புகுந்து)

போராட்ட வடிவத்தைப் பார்க்காதீர்கள் நீதியரசரே, அதன் பின்னாலுள்ள வலியப் பாருங்கள்!

மக்களுக்கு மின்சாரம் வழங்குவது அரசாங்கத்தின் கடமை என்றால், அந்தக் கடமையை நினைவூட்டுவது குடிமகனின் உரிமை!

பிள்ளைகளின் அழுகுரலை நிறுத்தவும், உழைக்கும் மக்களின் ஓய்வை மீட்டெடுக்கவும், இருளை விரட்டி ஒளியைக் கொண்டுவரவும் நாங்கள் போராடினோம்! இது குற்றமென்றால்... ஆம், நாங்கள் குற்றவாளிகளே!

எங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன், மக்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்கத் தவறிய இந்த அரசாங்கத்திற்கு என்ன தண்டனை வழங்கப் போகிறீர்கள்?

இருளைத் தந்துவிட்டு வெளிச்சத்தைக் கேட்கும் இந்தச் சமுதாயத்தில், ஒளிரும் மின்சாரத்தைக் கேட்பது குற்றமல்ல... அது எங்கள் உயிர் மூச்சு!

"கரண்ட் வேண்டும்... கரண்ட் வரும் வரை எங்கள் போராட்டம் ஓயாது!" இது நீதிமன்றத்திற்கு நாங்கள் விடுக்கும் சவாலல்ல, இந்த நாட்டின் சாமானியனின் நியாயமானக் கோரிக்கை!

 (நீதிமன்றமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போகிறது. நீதியரசர் தீர்ப்பை ஒத்திவைக்கிறார்!)

- முனைவர் காந்தி பாபு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.