அரசு சாரா அமைப்புகள் (என்.ஜி.ஓ) ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாடுகளில் மட்டும் ஈடுபடுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
குறிப்பாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சிறப்பாக செயல்படுவதை ஒரு அரசு சாரா அமைப்பு மேற்கொள்ளும்.
சிறப்பாகச் செயல்படும் அரசு சாரா அமைப்புகள் மக்களிடம் செல்வாக்கு பெறும்.
எடுத்துக்காட்டாக அகரம் அமைப்பு கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு, கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்து சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்கிறது.
கடந்த 15 ஆண்டுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பட்டதாரிகளை, மருத்துவர்களை, பொறியாளர்களை, எம்.என்.சி. பணியாளர்களை உருவாக்கி, அவர்களை மேடைகளில் ஏற்றி தங்களின் நம்பிக்கையை சமூகத்தில் பெற்றிருக்கிறது.
இதுபோன்று ஒரு அரசு செயல்பட முடியாது. அரசின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு பிரம்மாண்டமான முறையில் திட்டங்களைக் கொண்டு இருக்க வேண்டும்.
ஆனால் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தும் செயல்பாடுகளை மேற்கொள்ளாமல் மாவட்டத்திற்கு ஒரு மாதிரிப் பள்ளி, தொகுதிக்கு ஒரு தகைச்சால் பள்ளி, ஒன்றியத்திற்கு ஒரு வெற்றிப் பள்ளி என்று தங்களின் செயல்பாடுகளை வட்டத்திற்குள் வரையறுத்துக் கொள்வது ஒட்டுமொத்த மக்களுக்கான செயல்பாடாக இருக்க முடியாது.
மாநிலம் முழுவதும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது.
இந்தப் பள்ளிகளுக்கான சமூகத் தேவையும் நிரம்பி இருக்கிறது. இந்தப் பள்ளிகள் இல்லையென்றால் ஏழை எளிய மாணவர்கள் படிப்பதற்கு வாய்ப்பின்றி அள்ளாடுகிற நிலை ஏற்படும்.
இந்நிலையில் மாதிரிப் பள்ளிகளுக்கு மட்டும் அரசால் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வகுப்பறையிலும் திறன் பலகை (ஸ்மார்ட் போர்டு), திறன்மிகு ஆய்வகம், அதிக எண்ணிக்கையிலான கழிப்பறைக் கட்டமைப்பு, போதுமான விளையாட்டு மைதான மேம்பாடு, வகுப்பறை வசதிகள், நூலக கட்டமைப்பு என தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு பெருமளவிலான வாய்ப்புகளை இந்தப் பள்ளிகள் பெறுகின்றது.
ஆனால் ஊரகப் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு தேவையான கழிப்பறை இல்லாமல், வகுப்பறை இல்லாமல், ஒட்டுமொத்த பள்ளிக்கும் சேர்த்து ஒரே ஒரு திறன் பலகை கூட இல்லாமல், விளையாட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு திண்டாடுகிறது.
இது எப்படி சமூக நீதியாக இருக்க முடியும்?
பள்ளிக்கல்வித்துறை சார்ந்து நமக்கு இருக்கும் சில கேள்விகள்...
பள்ளிக்கூடங்களில் எப்பொழுது ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்?
பள்ளி மேலாண்மை குழுவால் நியமிக்கப்படும் ஆசிரியர்களை வைத்தே இனி பள்ளிகள் இயங்கிடப் போகிறதா? இல்லை நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்களா?
பள்ளிகளில் தூய்மைப் பணிக்கு போதிய வசதிகள் செய்து கொடுப்பதில்லையே ஏன்?
குறிப்பாக மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதிகள் இருக்க வேண்டும் தானே? அப்படி இல்லை என்பது அரசுக்குத் தெரியுமா இல்லையா?
ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 35 என்பது அரசு பள்ளிகளில் பின்பற்றப்படவில்லை ஏன்?
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி நடைமுறையில் இருக்கும் பொழுது அதற்கென்று தனித் தனி வகுப்பறை, தனித் தனி ஆசிரியர் இருக்க வேண்டும் தானே?
பெரும்பாலான பள்ளிகளில் அப்படி இருப்பதில்லை என்பது அரசுக்கு தெரியுமா?
பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி நடைமுறையில் உள்ள ஒரு பள்ளியில் 11, 12 வகுப்புகள் தமிழ் வழியில் மட்டும் நடத்தப்படுவது எப்படி? பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்தவர்கள் எங்கு சென்று பதினோராம் வகுப்பில் சேர்வது?
தமிழுக்கும் தாய் மொழி வழிக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறிக் கொள்ளும் அரசு, அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவது ஏன்?
தேசியத் திறனறித் தேர்வு, பத்தாம் வகுப்புப் பொது தேர்வு போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மாதிரி பள்ளிகளை நடத்துவது சரியா? இது சமூக நீதியா?
தற்காலிக ஏற்பாடுகளாக தொடங்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு நியமன ஆசிரியர் முறை, ஆண்டு கணக்கில் தொடர்கிறது. இந்த நியமன முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா? இல்லையென்றால் இது சமூக நீதியா?
பல பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் முறையாக பின்பற்றப்படாததால் பெற்றோர்களிடம் கட்டணம் பெற்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பள்ளிகள் இயங்குகிறது இது அரசுக்கு தெரியாதா?
அலுவலகப் பணி மற்றும் கற்பித்தல் பணிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் ஆட்கள் நியமிக்கப் படுகிறார்கள்.
இதற்காக லட்சக்கணக்கில் பெற்றோர்களிடம் நிதி பெறப்படுகிறது. நிதி தர மறுக்கும் பெற்றோர்கள் அவமானப் படுத்தப் படுகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் தேர்வு கூடங்களில் மற்ற மாணவர்களுக்கு மத்தியில் நிற்க வைக்கப் படுகிறார்கள். இவையெல்லாம் சமூக நீதியா?
தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து படிக்க வைக்க வேண்டும். இங்கு ஆயிரம், ஐநூறு உங்களால் கொடுக்க முடியாதா? என்று பெற்றோர்களைப் பார்த்து கேட்பது முறையா?
பெற்றோர்களிடம் பணம் வசூலிப்பது சட்டவிரோதம் என்றால் போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டியது அரசின் கடமை தானே?
ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் அதனால் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சல்கள், மோதல்கள் ஏராளம் ஏராளம்.
என்ஜிஓ-க்களை போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு செயல்படுவது ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் சீர் கெடுக்கும் செயலாகும்.
இதனால் உங்களின் மாதிரி பிம்பங்கள் உடைந்து போகும்.
ஏதேனும் ஒரு நகர் பகுதியில் நடத்தப்படும் பள்ளிகளின் கட்டமைப்பை காணொளிகளாக கடத்துவதால் ஊரகப் பள்ளிகளின் காட்சிகள் மாறாது.
ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கைதான் மாறிப் போகும்.
திராவிட மாடலுக்கு, சமூக நீதிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் ஆளும் அரசின் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்யும். எதிரிகளை வலிமையாக மாற்றும்.
அரசியல் பார்வையில் சிந்தித்தால் கூட மேற்கண்ட சிக்கல்களை திராவிட முன்னேற்ற கழக அரசு சரி செய்ய வேண்டியது காலத்தின் அவசியமாகும்.
அப்பொழுதுதான் மக்களின் செல்வாக்கோடு ஆட்சியைத் தொடர முடியும். வாக்குகளை விலைக்கு வாங்கும் நடைமுறை எல்லா காலத்திற்கும் பொருந்தாது.
- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர்