திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடு, மனிதனின் பிறப்பை அல்ல, அவனது மனிதத் தன்மையை மதிப்பதே. மதம், சாதி, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து சமத்துவத்தை நிலைநாட்டுவதே அதன் நோக்கம். அந்தப் பார்வையில் மீரா கதிரவனின் ஹபீபி திரைப்படம் ஒரு முக்கியமான சமூக உரையாடலை உருவாக்குகிறது.
இன்றைய இந்திய அரசியல் சூழலில், முஸ்லிம் சமூகத்தை வேறு ஒரு கண்ணோட்டத்துடன் பார்க்கும் மனநிலையை சில பாசிச சக்திகள் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட காலத்தில், முஸ்லிம் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை இயல்பாகவும் மரியாதையுடனும் காட்சிப்படுத்தியிருப்பது கலை வடிவம் என்பதைத் தாண்டி ஒரு அரசியல் அறம். மதவாதிகளின் சூழ்ச்சியால் மனிதர்களிடமிருந்து பறிக்கப்பட்டு வரும் உண்மை முகத்தை சமூகத்திற்கு காட்டும் மாயக்கண்ணாடி என்பதை ஹபீபி உணர்த்துகிறது.
இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் அதன் எளிமை. கதாபாத்திரங்கள் வீர காவிய நாயகர்களாக வரவில்லை. அவர்கள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள். அன்பு செய்கிறார்கள், தவறு செய்கிறார்கள், பயப்படுகிறார்கள், எதிர்க்கிறார்கள், கனவு காண்கிறார்கள். இது “அவர்கள்” பற்றிய திரைப்படம் அல்ல; “நம்மில் ஒருபகுதியான மனிதர்கள்” பற்றிய திரைப்படம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அந்த உணர்வு தான் திரைப்படத்தை நம்பகமானதாக மாற்றுகிறது.
நட்புக்கும் நல்லுறவுக்கும் விருந்தோம்பலுக்கும் இலக்கணமான தென்மாவட்ட இஸ்லாமிய மக்களின் அழகான வாழ்வியலை அப்படியே காட்சிப்படுத்தியதோடு கருத்தில் சமரசம் இல்லாமலும் அதே நேரத்தில் இயல்பாகவும் காட்சிகளை நகர்த்திய விதம் பாராட்டுக்குரியது. தமிழ் சினிமாக்களில் வேறு விதமாக சித்தரிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் எளிய வாழ்வை அறம் சார்ந்து அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிற எழுத்தாளர் அமீனுக்கும் இயக்குனர் மீரா கதிரவனுக்கும் அன்பு பாராட்டுகள்.
என்ன நடந்தாலும் யார் சொன்னாலும் தன் முன்னோர்களின் நெசவுத் தொழிலை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டு இருக்கும் யூசுப், பல்வேறு கஷ்டங்களுக்கிடையேயும் தன் குடும்பத்தை நிலை நிறுத்த கல்யாணமான புதிதிலேயே தன் துணையைப் பிரிந்து வெளிநாட்டுக்குச் செல்லும் சேதுமான், கணவரைப் பிரிய மனமில்லாமல் தவிக்கும் இளம் மனைவி சாலிஹா, தன் காதலிக்காக உள்ளூரை விட்டு போக மறுக்கும் அபுதாகிர் , இப்படியாக ஒரு கூட்டுக்குடும்பம் வாழும் கண்ணாடி வாப்பா மன்சிலின் உணர்வை நம்முள் கடத்துகிறார்கள் இயக்குநரும் வசனகர்த்தாவும்.
சாலிஹா, ஒரு கூட்டுக்குடும்ப அமைப்பிற்குள் வாழும் சமகாலப் பெண்ணின் பிரதிநிதி. சமூகக் கட்டுப்பாடுகளுக்கும், குடும்பத்தின் கௌரவத்திற்கும் இடையே நசுக்கப்படும் அவளது ஆசைகளும், அவள் வெளிப்படுத்தும் மீறல்களும் மிக முக்கியமானவை. சமூகம் அவளுக்கு வகுத்துள்ள எல்லைகளுக்குள் நின்றுகொண்டே, தன் உரிமைகளுக்காகவும் உணர்வுகளுக்காகவும் அவள் நடத்தும் போராட்டம், சிறுபான்மைச் சமூகப் பெண்களின் அன்றாட வாழ்வியல் எதார்த்தத்தை மிக நுணுக்கமாகப் பேசுகிறது.
முந்தைய தலைமுறையின் மரபுகளைச் சுமந்து கொண்டு, அடுத்த தலைமுறையின் மாற்றங்களை உள்வாங்கத் துடிக்கும் நிலோபர் காட்சியளிக்கிறார். ஆணாதிக்கச் சூழலின் அழுத்தங்களை அவரும் எதிர்கொள்கிறார் என்றாலும், குடும்பப் பிணைப்பைக் காக்கும் அதே வேளையில், காதலையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் முதிர்ச்சி அவரிடம் வெளிப்படுகிறது. இறுதிகட்ட கட்சியில் நிலோபர் “ நான் குலா சொல்லிட்டேன்” என்பது மரபார்ந்த அழுத்தங்களிலிருந்து இருந்து ஒரு பெண் தன் அனுபவங்களின் வாயிலாக எவ்வாறு பக்குவப்பட்டு விடுதலையடைகிறாள் என்பதைக் காட்டும் சமூகவியல் நகர்வு.
பர்வீன் ஆணாதிக்கக் குரல்களையும் சடங்குகளையும் எதிர்த்து நிற்கிற நவீனத்துவ பெண்ணாக மிக இயல்பாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். கல்வியும், வெளி உலகத் தொடர்பும் பெண்ணின் உலகை எவ்வளவு பரந்துபட்டதாக மாற்றுகிறது என்பதை புரியவைக்கிறது.
ஆனால், ஒரு திராவிட இயக்க கருத்தாளனின் கடமை பாராட்டுவதோடு முடிவதல்ல. சில விமர்சங்களையும் கேள்விகளையும் முன்வைக்க வேண்டியிருக்கிறது. அது தான் பெரியாரியப் பார்வையும் கூட . ஒரு சமூகத்தை மனிதநேயத்துடன் சித்தரிப்பது மட்டும் போதுமா? அந்த சமூகத்தின் பெண்கள் எதிர்கொள்ளும் ஆணாதிக்கச் சிக்கல்கள், பொருளாதார அநீதி, கல்வி வாய்ப்புகளில் உள்ள சமத்துவமின்மை போன்றவற்றை திரைப்படம் எவ்வளவு ஆழமாகத் தொட்டிருக்கிறது? காதல் சமூக மாற்றத்திற்கான கதவாக இருக்கலாம்; ஆனால் அது மட்டுமே முழுமையான விடுதலையல்ல. காதல் என்பது தனிமனித விடுதலையின் ஒரு வடிவம்தான்; ஆனால் சமூக விடுதலைக்கான அரசியலை அது எந்த அளவிற்கு பேசுகிறது என்பதும் முக்கியம். அந்த அடிப்படையில் பெண்களின் முழுமையான விடுதலை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சமூக அமைப்புகளின் அழுத்தம் போன்றவை இன்னும் ஆழமாகப் பேசப்பட்டிருக்கலாம்.இருப்பினும், வெறுப்பை அரசியலாக்கும் காலத்தில் அன்பைப் பேசுவதும் ஒரு புரட்சிகரமான செயலே!.
நான் சிறுவயதிலிருந்தே பின்னிப்பழகி வரும் பேட்டை, மேலப்பாளையம் பகுதிகளைப் போலவே கடையநல்லூர் மாமா, மாமிகளின் மொழியும் ரசிக்க வைக்கிறது. மொத்தத்தில் மயிலிறகால் மனதை வருடுயிருக்கிறார்கள் ஹபீபி படக்குழுவினர்.
- முனைவர் காந்தி பாபு