siva thileepanஈழவிடுதலைப் போராட்டத்தில் முதல் களப்பலியானவர் (1974) பொன்.சிவகுமரன். தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் இறுதியாகக் களப்பலி ஆகியிருக்கிறார், மே 17 இயக்கத் தோழர் சிவகுமார் என்ற சிவா திலீபன்.

இலக்கணச் செழுமையோ, இலக்கிய வளமையோ இல்லாத, கடிபோலி வடிவத்தில் இருக்கும் இந்தியின் மூலம், உலகின் மூத்த, முதிர்ந்த மொழியான தமிழ்மொழியை அழிக்க முயலும் ஒன்றிய பாஜக அரசு அடுத்த இந்தி எதிர்ப்புப் போருக்குத் தமிழ்நாட்டைத் தயார் செய்கிறது என்று தோன்றுகிறது.

இரயில் நிலையங்களில், வங்கிகளில், அஞ்சல்துறையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றியம் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட இந்தியில் மட்டுமே கடிதம் எழுதுகிறது காவி ஒன்றிய அரசு.

சரியாகச் சொல்வதானால் இந்தி மொழிக்கும் எதிரி பாஜக ஒன்றிய அரசுதான். எதிர்காலத்தில் இந்தியை ஒழித்துவிட்டு, கேட்பாரற்றுக் கிடக்கும் சமஸ்கிருதத்தை ஆட்சியில் வைப்பார்கள். அப்போது இந்தி பேசும் மக்களும், அவர்கள் மொழியை இழப்பார்கள். மொழியழிப்பும், இன அழிப்பும் ஒன்றுதான்.

அழிவுசக்தியாகப் பார்க்கப்படும் ஆர்எஸ்எஸ், அதன், தொங்குசதையான பாஜக இரண்டையும் மக்கள் விரோத சக்திகளாகவே மக்கள் பார்க்கிறார்கள்.

1938 - 1965 ஆண்டுகளின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்முன் கொண்டு வருகிறார், தோழர் சிவா திலீபன். இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக இரயில் நிலையங்களில், குறிப்பாக பூங்கா இரயில் நிலையத்தில் 11-03-2026 அன்று இந்திப் பெயர் எழுத்துகளை அழித்தபோது, "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க" என்று சொல்லிக் கொண்டு அப்போது வந்த இரயில் முன்பாய்ந்த தோழர் சிவா திலீபன், 18-03-2026 அன்று வீரமணம் அடைந்துவிட்டார்.

போராடாமல் உரிமையைப் பெறமுடியாது. அப்படிப் போராடுவதற்கு நாம் உயிரோடு இருக்க வேண்டும். தோழர் சிவா திலீபன் உயிரிழப்பே கடைசியாக இருக்கட்டும். அவருக்குக் கனத்த இதயத்துடன், நம் வீரவணக்கம்!

- கருஞ்சட்டைத் தமிழர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.