"கடந்த ஒரு மாத காலமாக, இந்தியாவே பிகாரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் பிகார் மக்களின் பலம்! ராகுல் காந்தியின் பலம்! தேஜஸ்வியின் பலம்!" பீகாரில் 27-08-2025 அன்று தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் இரண்டு வரிகள் இவை.
பாஜக ஆட்சி இன்னும் 50 ஆண்டுகள் நடக்கும் என்று அமித்ஷா பேசி இருந்தார். தேர்தல் முறை கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில் இது எப்படி சாத்தியம் ஆகும்?
ஆகும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார் மக்களவை எதிர்கட்சித் தலைவர். ராகுல்காந்தி பீகாரில். அதற்குப் பெயர் 'வாக்குத் திருட்டு'. பாஜகவுக்காகத் தேர்தல் ஆணையமே செய்திருக்கும் திருட்டுத்தனம் இது.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் திடீரென்று காணாமல் போய்விட்டார்கள். புதிதாக எங்கிருந்தோ பலர் முழைத்து விட்டார்கள். அதுபற்றி ராகுல் காந்தியில் நியாயமான கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் நேர்மையுடன் விளக்கம் தராமல், 'நீ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்' என்று பிதற்றிக் கொண்டு இருக்கிறது.
திருடன் மாட்டிக் கொண்டால் திருதிருவென முழிப்பான் என்று சொல்வார்கள். அப்படித்தான் முழித்துக் கொண்டு இருக்கிறது தேர்தல் ஆணையம். சரி, பிரதமர், உள்துறை அமைச்சர்களாவது இது குறித்துப் பேசுகிறார்களா என்றால், அவர்கள் முக்காடு போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
திருடப்பட்ட இடத்தில்தானே தேடவேண்டும்.
ராகுல்காந்தி தலைமையில் பீகாரிலேயே இந்தியா கூட்டணித் தலைவர்கள் மக்களிடம் போய்விட்டார்கள்.
எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரியங்கா காந்தி, கனிமொழி, பீகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்ட பேரணிக்குப் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் நம் முதல்வர் பேசிய இரண்டு வரிகள் இதன் தொடக்கத்தில் பார்த்தோம்.
இது பீகாரின் பலம் அல்ல, இந்திய ஒன்றியத்தின் பலம், ஆட்சி மாற்றத்திற்கான பலம். அங்கே ஓட்டுத் திருடர்களைத் தண்டிப்பதற்கான பலம்.
மக்கள் பலத்திற்கு முன்னால் சர்வாதிகாரம் வீழும் என்று அதே கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சொன்னது நடக்கும்!
- கருஞ்சட்டைத் தமிழர்