மக்களவையில் மூன்றாவது முறையாக 2024 இல் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இரண்டாவது முறையான 2019இலேயே மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அப்போது எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளாததால் தான் பா.ஜ.க வென்றது என்று அரசியல் நோக்கர்கள் விமர்சித்தார்கள். மூன்றாம் முறை, ஒரு சிலரைத் தவிர அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்ததால், பா.ஜ.க.வை வீழ்த்துவது உறுதி என நினைத்தோம். தேர்தல் முடிவுகள் நாளின் தொடக்கத்தில் நிலைமை அப்படித்தான் இருந்தது. இ.ந்.தி.யா. கூட்டணியின் எண்ணிக்கை குலையாமல் மேலேயே இருக்க, மாலை 5 மணி அளவில், பா.ஜ.க. கூட்டணி தோல்வி முகத்தில் இருந்த, கிட்டத்தட்ட 70 தொகுதிகள் அனைத்திலும் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. மீண்டும் மக்கள் விரும்பாத ஆட்சியில் திணிக்கப்படுகிறார்கள்.rahul gandhi 650அப்போதே சந்தேகம் இருந்தது. இப்போது அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 6 மாதங்கள் கடுமையாக, வாக்காளர் பட்டியலையும், களத்தையும் ஆய்வு செய்ததில், குறைந்தது 48 தொகுதிகளில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி மக்களவைத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கண்டுபிடித்து, செய்தியாளர்களிடம் தக்க ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார். முதலாவதாக காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், மகாதேவபுரம் என்னும் தொகுதியில் 1,00,250 வாக்குகள் முறைகேடாக, போலி வாக்காளர்கள், போலி முகவரிகள், படிவம் 6 முறைகேடுகள், ஒரு நபருக்கு பல வாக்குகள், புகைப்படங்கள் முறைகேடு என பல்வேறு வகைகளில் சேர்க்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

பீகாரில் தேர்தல் நெருங்கும் வேளையில், 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியிருக்கும் தேர்தல் ஆணையம், அதன் மூலம் தங்களுக்கு எதிரான சிறுபான்மையினரின் வாக்குரிமையையே பறித்திருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 65 லட்சம் பேரும் புலம்பெயர்ந்தவர்கள் என்று அவர்களைத் தமிழ் நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்த்து விடுவார்கள் என்று அரசியல் தலைவர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கும் தேர்தல் ஆணையம், தன்னாட்சியாக இயங்க அரசமைப்பால் அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்பாக இருந்தும், குற்றச்சாட்டுகள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல், சலசலப்பு கூட இல்லாமல், ராகுலை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யக் கோருகிறது. உச்ச நீதிமன்றம் வாக்காளர் பட்டியலைக் கேட்டும் தர மறுக்கிறது. எங்கிருந்து இவர்களுக்கு இத்தனை துணிவு வந்திருக்கிறது? இந்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் பா.ஜ.க.அரசு தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஆளுங்கட்சிக்கு மடைமாற்றிக் கொண்டது. அதன் பரிந்துரையில் பதவிக்கு வந்த க்யானேஷ் குமார் வேறு என்ன செய்வார்?

ராகுல் காந்தி, கூட்டணிக் கட்சிகள், ஊடகங்கள், பொதுமக்கள் என எல்லாத் தரப்பின் முன்னால் தன் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களோடு முன்வைத்திருக்கிறார். எதிர்க்கட்சிகள் நாடாளுமன் றத்தில் இரண்டு நாட்களாக அனுமதி கேட்டும், இந்த சிக்கல் குறித்து விவாதத்திற்குக் கூட எடுக்கப்படவில்லை. பீகாரில் 124 வயது என்று ஆணையத்தால் சொல்லப்பட்ட வாக்காளர் மின்டா தேவியின் பெயரை சட்டையில் அணிந்து நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் நோக்கி அவர்கள் ஊர்வலம் செல்ல முயன்ற போது, தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். ஆணையம் கொஞ்சமும் அசரவில்லை. அர்னாம் கோஸ்வாமி போன்ற அரசியல் கோமாளிகளை வைத்து, குற்றச்சாட்டுகளை திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

பீகார், கர்நாடகத்தைத் தொடர்ந்து, கேரளாவின் திரிச்சூர் தொகுதியில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கே மக்களவை உறுப்பினரும் ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கோபிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. மோடி தோல்வி முகத்திலிருந்து தப்பி, வெற்றி அடைந்த உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியின் முறைகேடுகள் வெளிவந்துள்ளன. ஒரு நபருக்கு 50 மகன்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியல் சொல்லியது, கொடுமை! மகாராட்டிரத்தின் பால்கார் தொகுதியில் ஒரு பெண்ணுக்கு ஒரே பக்கத்தில் 6 வாக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது உண்மை. கையும் களவுமாக மாட்டிக் கொண்டாலும் தான் சீர்குலைத்து வைத்திருக்கும் அமைப்புகளின் வழி இன்னும் கொஞ்ச நாள் ஆட்சியில் நிலைத்திருக்க பா.ஜ.க. எல்லா சித்து வேலைகளையும் செய்யும். இதில் உச்ச நீதிமன்றத்தைக் கூட எந்த அளவு நம்ப முடியும் எனத் தெரியவில்லை. அவர்கள் கேட்கும் தரவுகளைக் கொடுக்க மறுக்கும் தேர்தல் ஆணையத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்தோடு 5 கோடிக்கு மேல் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் (!) விடமாட்டோம் என தாராள வழி கொடுத்து ஒரு சின்ன மிரட்டல் விடுத்திருக்கிறது.

உச்சநீதிமன்றம் இறையாண்மை உள்ள அமைப்பாக இருக்குமானால், வழக்கை சரியாக எடுத்து, முறைகேடுகளை ஏற்று, தேர்தலையே செல்லாததாக செய்யலாம். மக்கள் விரும்பாத, மக்களாட்சியைத் திருடும் இந்த அரசை வீழ்த்தலாம். ஆனால், அரசின் ஊதுகுழலாக, பதவிக்கு நன்றி காட்டும் நீதிபரிபாலனம் இருக்குமானால், நாம் மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டி வரும்.

தமிழ்நாட்டில் பூத் முகவர்களை வலிமைப்படுத்த வேண்டும் என முதல்வர் கூறி இருக்கிறார். இங்கு ஒரு வலிமையான கட்டமைப்பு இருப்பதால் தான் இதுவரை இங்கு அவர்களின் விளையாட்டுகள் எடுபடவில்லை. ஏனைய மாநிலங்களும், காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் இதுபோலத் தமிழ்நாட்டையும், தி.மு.க.வையும் பின்பற்றி வாக்காளர் பட்டியலையும், பூத் முகவர்களையும் வலுப்படுத்த வேண்டியது உடனடித் தேவை!

- சாரதாதேவி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.