வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற பெயரில் லட்சக்கணக்கான பேர்களின் வாக்குரிமையைப் பறித்துத் தேர்தல் ஆணையம் பீகாரில் நடத்திய ஜனநாயகப் படுகொலையின் விளைவாக பா.ஜ.க கூட்டணி அங்கு இமாலய வெற்றியைப் பெற்று இருக்கிறது.‌ அது போன்றதொரு நிலையை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தி விட வேண்டும் என்று பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

அதேநேரம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாத்திடும் பணியில் தி.மு.க தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.‌ ஒரு புறம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியைச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் தறுவாயில் அவசரகதியில் நடத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. மறுபுறம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை மேற்கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் உள்ளிட்டப் பிறபணியாளர்களுக்குத், தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.dmk cadres 700வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் உள்ளிட்ட பணியாளர்களுக்குத் தேர்தல் ஆணையத்தால் போதுமான பயிற்சி கொடுக்கப்பட வில்லை. எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் அவர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். தற்போதைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் ஏறத்தாழ 40 சதவிகிதம் பேர் மட்டுமே 2002 / 2005 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். எஞ்சிய வாக்காளர்கள் தங்கள் வாக்கு நிலைக்குமா என்ற குழப்பத்தில் கேட்கும் சந்தேகங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரால் பதிலளிக்க முடியவில்லை. ஆனால் அப்பணிக்கு அவர்களை முறையாகத் தயார் செய்யாத தேர்தல் ஆணையமோ அவர்களுக்கு கெடுவிதித்துப் பணியை விரைந்து முடிக்குமாறு நெருக்கடி கொடுக்கிறது. "உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி" என்பதைப் போல வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர்கள் என்ற இருதரப்புக்கிடையே சிக்கித் தவிக்கிறார்கள். இந்த மன உளைச்சலைத் தாங்க முடியாமல் அண்மையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாகக் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ளும் போது பணிக்குச் சென்றவர்கள், அப்பகுதிக்குள்ளாகவே வீடு மாறிச் சென்றவர்கள் போன்றோர் படிவம் பெற முடியாமல் அவதிக்கு உள்ளானதை அறிந்த தமிழ்நாடு அரசு, அந்தந்த வாக்குச்சாவடியிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த முகாமை 5 நாட்கள் நடத்தி இருக்கிறது. அதன் விளைவாகக் கணக்கெடுப்புப் படிவத்தைப் பெற்றவர்கள் மற்றும் அதைப்

பெற்று பூர்த்தி செய்து கொடுத்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. பீகாரைப் போன்று தமிழ்நாட்டிலும் ஏராளமான வாக்காளர்களை, பட்டியலில் இருந்து நீக்கி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் பாஜகவுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அ.தி.மு.க, அதன் நிர்வாகிகள் மூலம் இப்பணியில் ஆங்காங்கே குழப்பம் விளைவித்து வருகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை அமல்படுத்திய பா.ஜ.க கூட உச்சநீதிமன்ற வழக்கில் அதற்கு ஆதரவாகத் தன்னை இணைத்துக் கொள்ளாத நிலையில், அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யும் அ.தி.மு.க தன்னை அந்த வழக்கில் இணைத்துக் கொண்டுள்ளது. அந்த வழக்கில் தி.மு.க வழக்கறிஞர் "தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் அதிவேகமாக இணைய இணைப்பு இல்லை எனபதால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்" என்ற வாதத்தை முன்வைத்த போது அ.தி.மு.க வழக்கறிஞர் "தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் அதிவேக இணைய இணைப்பு உள்ளது" என்று மறுத்தார். ஆனால் ஊடகங்களில் பேசும் அ.தி.மு.க. வினரோ "எப்படி ஒரே நாளில் இவ்வளவு படிவங்களை இணையத்தில் பதிவேற்ற முடியும்" என்று கேள்வி கேட்கின்றனர். இதன் மூலம் அ.தி.மு.கவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்குத் தேர்தல் ஆணையம் முதலில் 11 அடையாள ஆவணங்களை மட்டுமே குறிப்பிட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு ஆதார் 12 வது ஆவணமாகச் சேர்க்கப்பட்டது. ஆனால் 13 வது ஆவணமாக ஜூலை மாதம் 2025 இல் வெளியிடப்பட்ட பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. இதன் மூலம் பீகாரைச் சேர்ந்த வாக்காளர்களைத் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இணைத்து அவர்களை எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளது என்ற ஐயம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

முறையான திட்டமிடல் இல்லாமல், அவசர கோலத்தில், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மூலம் எந்தவொரு தனிநபரின் வாக்குரிமையும் பறிபோய் விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் தி.மு.க உச்சநீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் களமாடி வருகிறது. பா.ஜ.கவும் தேர்தல் ஆணையமும் இணைந்து மேற்கொள்ளும் இந்த சூழ்ச்சிகளை எதிர்த்து தமிழ்நாடு போராடும் ! தமிழ்நாடு வெல்லும் !!

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.