கடந்த நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடந்து முடிந்துள்ளது சென்னை முற்போக்குப் புத்தகக் காட்சி.
கருத்தியல் சார்ந்த புத்தக அரங்குகள் மட்டுமே கொண்ட புத்தகக் காட்சியாக இது நடந்து முடிந்துள்ளது.
கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானதாக மாண்புமிகு துணை முதல்வர் தெரிவித்துள்ளார்கள்.
'கருஞ்சட்டைப் பதிப்பகம்' 5% அளவிற்கான புத்தகங்களை விற்பனை செய்துள்ளது. இந்த 35 லட்சத்தில் சுமார் 25 லட்சத்துக்கும் மேலான கொள்கை சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இந்தப் புத்தகக் காட்சியில் விற்பனையாகி உள்ளன. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், திராவிடம், தமிழ்த் தேசியம் போன்ற கருத்தியல் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இந்தப் புத்தகக் காட்சி அரங்குகள் முழுக்க நிரம்பி இருந்தன. அந்த வகையில் இது ஒரு நல்ல கருத்துப் பரப்புரை புத்தகக் காட்சி என்றே குறிப்பிடலாம்.
அந்தக் காலத்தில் திமுக பொதுக்கூட்டம் என்றால் அது மாலை நேரத்தின் பல்கலைக்கழக வகுப்பு போல் இருக்கும் என்பார் பேராசிரியர் சுபவீ அவர்கள். அதேபோல் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கிராமத்திலும் படிப்பு வட்டம் எனும் பெயரில் மிகப்பெரிய அரசியல் விவாதம் கொள்கைகள் சார்ந்த படிப்பு என்று 75ஆண்டுகளாக இயங்கி வரும் திராவிட முன்னேற்றக் கழகம் இன்று அடுத்த கட்டப் பரப்புரைக்காக ஏற்பாடு செய்த நிகழ்வுதான் இந்த சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி.
இங்கே வெறும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டும் அல்லாமல் குடும்பம், குடும்பமாகப் பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்வாக கட்டமைத்துப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து சென்றுள்ளார்கள்.
இப்படிப் பல்வேறு சிறப்புகளோடு மேலும் சிறப்பு சேர்க்கும் நிகழ்வு கண்காட்சி இறுதி நாள் அன்று நிகழ்ந்தது. மாண்புமிகு முதல்வர் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் இருவரும் இறுதி நாளன்று காலையில் புத்தக அரங்குக்கு வருகை தந்தார்கள். பொதுவாகப் புத்தகக் கண்காட்சி அரங்குக்கு வருகை தருவோர் முக்கிய விருந்தாளர்கள் ஒன்று இரண்டு அரங்குகளை பார்வையிட்டு சென்று விடுவார்கள். ஆனால் மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் 52 அரங்கிலும் சென்று இரண்டு மணிநேரம் பார்வையிட்டுப் புத்தகங்கள் வாங்கிச் சென்றனர். இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் புத்தக கண்காட்சியில் புத்தகம் தேர்வு செய்து வாங்கிய ஒரே முதல்வர் நம் முதல்வராகத்தான் இருப்பார்.
பொதுவாக இந்த ஆட்சி வந்தது முதல் புத்தகக் காட்சி என்பது தமிழ்நாடு முழுக்கத் தொடர்ந்து நடக்கிறது. அதில் சென்னையில் மட்டும்தான் மிகமிகப் பெரியகாட்சி, மற்ற மாவட்டங்களில் நடக்கும் புத்தகக் காட்சிகள் 100 அரங்குகள் இருந்தால் அதில் பெரும்பாலான அரங்குகள் மிகப் பழமையான பதிப்பகமே ஆக்கிரமித்துக் கொள்ளும்.
இந்த நிலையில் துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் செயல்பட்ட முற்போக்கு புத்தகக் காட்சி என்பது கருத்தியல் சார்ந்த பதிப்பகங்களுக்கு மிகப்பெரிய ஊக்கம் அளித்திருப்பது ஒரு நல்ல தொடக்கம்.
திராவிட இயக்கம் மற்றும் கருத்தியல் சார்ந்த புத்தகங்கள் சென்னை மட்டுமல்லாமல் மற்ற அனைத்து மாவட்டங்களில் நடக்கும் புத்தக காட்சியில் இடம்பெறச் செய்வது நன்கு பயனளிக்கும்.
- இக்லாஸ் உசேன்