தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதில் உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் ஆவர். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 5.43 கோடியாக குறைந்துள்ளது. மொத்த எண்ணிக்கையில் 15.18% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது அந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 35.71 சதவீதமாகும். துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது அந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 37.17 சதவீதமாகும். இந்த இரண்டு தொகுதிகளிலும் நீக்கப்பட்ட வாக்காளர்களின் சதவீதம் மாநில சராசரி சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் 26,375 பேரும், ஓ.பன்னீர் செல்வத்தின் போடி தொகுதியில் 24,386 பேரும், அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் 17,104 பேரும், காமராஜின் நன்னிலம் தொகுதியில் 28,888 பேரும் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். இதே போல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் திருநெல்வேலி தொகுதியில் 42,119 பேரும், தமிழிசை போட்டியிட விரும்புவதாகச் சொல்லப்படும் நாங்குநேரி தொகுதியில் 54,260 பேரும் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் தான் தங்கள் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் எல்லாம் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டுகிறது தி.மு.க.
மறுபுறம் எஸ்.ஐ.ஆர் நடைமுறை மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலை தொடக்கத்தில் முழுமையாக வரவேற்ற அ.தி.மு.கவின் நிலைப்பாட்டில் நாட்கள் செல்லச் செல்ல மாறுதல் ஏற்பட்டிருப்பதை நாம் காண முடிகிறது. மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ "எஸ்.ஐ.ஆர் பணியின் மூலம் என் குடும்பத்தையே பிரித்து விட்டார்கள். என் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு இடத்தில் சீரியல் நம்பர் வந்துள்ளது. எங்கள் குடும்பம் ஒற்றுமையாக உள்ளது. பிரித்து விட வேண்டாம் என்று கலெக்டரிடம் தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் என்பதால் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சொல்லி விட்டார். பாமர மக்கள் யாரிடம் போய் சொல்வார்கள்.
சென்னை மாவட்டத்தில் 19.12.2025 மற்றும் 20.12.2025 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA - 2) வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக 2,48,294 ஆட்சேபனை மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். இதில் தி.மு.க 65,000 மனுக்களையும், அ.தி.மு.க 63,000 மனுக்களையும், பா.ஜ.க 54,000 மனுக்களையும் சமர்ப்பித்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று மகிழ்ச்சி தெரிவித்த அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் இரண்டே நாட்களில் சென்னை மாவட்டத்தில் மட்டும் இத்தனை ஆயிரம் ஆட்சேபனை மனுக்களை சமர்ப்பித்துள்ளதன் மூலம் எஸ்.ஐ.ஆர் தொடர்பாக தி.மு.க முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை உணர முடிகிறது.
2021ஆம் ஆண்டு உயிரிழந்த பாடலாசிரியரும், அதிமுக முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தனின் பெயர் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி 172 வது பாகத்தில் வரிசை எண் 78 ஆக இடம் பெற்றுள்ளது. மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி 148 வது பாகத்தில் வரிசை எண் 190 மற்றும் 191 சக்தி (வயது - 35, வீட்டு எண் - 24/65, கணவர் பெயர் - நாராயணமூர்த்தி) என்ற ஒரே பெண்மணியின் பெயர் இரு வேறு வாக்காளர் அடையாள அட்டை (YQN1870443 & SBW0599647) எண்ணுடன் இடம் பெற்றுள்ளது. இறப்பு மற்றும் இரட்டை பதிவுகளை துல்லியமாக கண்டறிந்து நீக்க எஸ்.ஐ.ஆர் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று கூறிய தேர்தல் ஆணையத்தின் லட்சணத்தை உணர்ந்து கொள்ள இதுவே சான்றாகும். இதைத் தாண்டி, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி 76 வது பாகத்தில் உள்ள இரண்டு வாக்காளர்களின் பெயர் மட்டும் இந்தியில் இருப்பது, பெயர் இடம் பெறாமல் இருப்பது, வெறும் புள்ளிகள் மட்டும் இடம் பெறுவது என எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் நீண்டு கொண்டே போகிறது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவந்த நிமிடம் முதல் தி.மு.க முழு வீச்சில் களத்தில் இறங்கி அதன் வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் முந்தைய வாக்காளர் பட்டியல் மற்றும் எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியலையும் ஒப்பிட்டு விடுபட்ட வாக்காளர்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் பணியில் முனைப்போடு ஈடுபட்டு வருவது பாராட்டத்தக்கது.
- வழக்கறிஞர் இராம. வைரமுத்து