டில்லி ஒன்றிய மண்டலம், புதுச்சேரி, மேற்குவங்கம், தெலுங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா என எங்கெல்லாம் பா.ஜ.க அல்லாத அல்லது பா.ஜ.க, ஆள்பவர்களின் மீது சவாரி செய்ய முடியாத அரசுகள் உள்ளனவோ, அங்கெல்லாம் ஆளுநர்கள் தங்களையே அரசுகளாக நினைத்துக் கொண்டு அத்து மீறுவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்குத் தடையாக இருப்பதும் தொடர்ந்து வருகிறது.

கடந்த 6.11.2023 அன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு எதிரான பஞ்சாப் அரசின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு “ ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்.” என்று குட்டு வைத்திருக்கிறது. மாநிலங்கள் ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது வேதனை என்றும், ஆளுநர் என்பவர் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டவர் என்றும் அந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கருத்து தெரிவித்திருக்கிறது.raj bhavan chennai 67010.11.2023 அன்று மீண்டும் அந்த வழக்கை ஆளுநரின் பதிலுக்குப் பின் விசாரிப்பதாகச் சொன்ன அவர், அதோடு தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் ஆளுநருக்கு எதிராகப் போட்டிருக்கும் வழக்குகளையும் அன்று விசாரிக்க அனுமதித்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தெலுங்கானா அரசு தொடர்ந்த வழக்கில் அம்மாநில ஆளுநர் தமிழிசைக்குக் குட்டு விழுந்து, அதன் பின்னர் அவர் சில மசோதாக்களைக் கையெழுத்திட்டு அனுப்பினார். அந்த வழக்கில் மாநிலத்தின் சார்பில் வழக்காடிய துஷ்யந்த் தவே, “பா.ஜ.க. ஆளாத மாநிலங்கள் ஆளுநர்களின் தயவில் இருக்க வேண்டியிருப்பதாகவும், அவர்கள் தாங்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதாகவும் பதிவு செய்திருக்கிறார்.

தற்போது கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என்றும், அதில் நிதி மசோதாவும் அடங்கும் எனறு வழக்கு தொடுத்துள்ளது. 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பில் இருப்பதாகவும் அந்த அரசு குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற அமர்வில், விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான கே.கே.வேணுகோபால், “மக்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் அரசு மனு தாக்கல் செய்வது குறித்து அறிக்கை வெளியான பிறகும் கூட, அதை நீதிமன்றத்தில் சந்திப்பதாகக் கூறுகிறார்” எனச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஆளுநரின் அதிகாரங்களை வரையறுக்கும் போது, அரசமைப்பின் வரைவுச் சட்டத்தில் இருந்த உறுபு 175, ஆளுநர்களுக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பும் விருப்ப அதிகாரத்தைக் (discretionary powers) கொடுத்தது. எனினும், 1949இல் அரசமைப்புச் சபையில், அந்த உறுபு திருத்தப்பட்டு, ஆளுநரின் அதிகாரம் நீக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர், தன் விவாதத்தில், “ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தில், ஆளுநர் தன் விருப்ப அதிகாரத்தை செலுத்தும் பேச்சுக்கே இடமில்லை.” என்று தெளிவாகக் கூறி உள்ளார்.

உறுபு 200 சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள், ‘எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக’ முடிவெடுக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் ஒருகால அளவை அது சொல்லவில்லை. 1972 இல் நடைபெற்ற துர்கா படா கோஷ் எதிர் மேற்கு வங்கம் வழக்கில், அது, ‘காலம் தாழ்த்தாமல், நடைமுறையில் எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக’ முடிவெடுக்க வேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டது.

அதுவே 2020 இல் நடைபெற்ற கைஷம் மேகா வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹின்டன் நரிமன் ‘நியாயமான காலம்’ என்பது 3 மாதங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நியமனப் பதவியை அனுபவிக்கும் ஆளுநர்கள், இவ்வாறெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்குத் தொல்லைகள் தருவார்கள் என அரசமைப்பை உருவாக்கிய காலத்தில் தலைவர்கள் எதிர்பார்த்து இருப்பார்களா என்ன!

உச்ச நீதிமன்றத்தில் வரிசை கட்டி நிற்கும் வழக்குகள், இந்த சிக்கலுக்கு என்ன தீர்வை தரப் போகின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

- சாரதாதேவி

Pin It