“ஒரே நாடு, ஒரே சட்டசபை அமைய வேண்டும்” என்று, இமாச்சலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில் நடைபெற்ற 82ஆம் சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

அவர் பேசிய பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள், நம் நாட்டில் சில அரசுகள் சட்டசபைகளைத் தபால் பெட்டிகளாகப் பயன்படுத்துகின்றன. சட்ட மசோதாக்கள் மீது விவாதம் நடத்தவோ அல்லது கேள்வி கேட்கவோ அனுமதிக்காமல், மசோதாக்களை விரைவாக நிறைவேற்றுகின்றன. சில அரசுகள் சட்டசபையை ‘ரப்பர் ஸ்டாம்பு’களாகப் பயன்படுத்துகின்றன என்று பேசியிருப்பதில் பொருள் பொதிந்து இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பெரும்பான்மைச் சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் முக்கியமானவைகளை, ஆளுநர் கிடப்பில் போட்டு விடுகிறார். அது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டியவை என்றாலும், ஆளுநர்கள் அதைப் பல மாதங்களுக்குக் குடியரசுத் தலைவரிடம் எடுத்துச் செல்வதில்லை. இப்படி இருக்கும் நிலையில் எந்தெந்த மசோதாக்களுக்கு, எந்தெந்தக் காலகட்டத்திற்குள் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும், அல்லது திருப்பி அனுப்ப வேண்டும் என்பதற்கான காலக்கெடுவை வரையறை செய்ய வேண்டும் என்றும் அவர் பேசியிருக்கிறார்.

ஆளுநர் என்பவர் நடுவண் அரசின் ‘ஏஜண்ட்’ஆக இருக்கிறார். அவரை மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும். அந்த நடைமுறை இன்று இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருக்கும் போது அங்கு ஆளுநர் தேவையில்லை. இதைத் தான் அறிஞர் அண்ணா “ஆட்டுக்கு எதற்குத் தாடி; நாட்டுக்கு எதற்கு ஆளுநர்” என்று சொல்லிருக்கிறார்.

இருந்தாலும் இன்று ஆளுநர் நடுவண் அரசால் நியமிக்கப்படுகிறார். அவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்தான். எனவே அவரின் அதிகார எல்லைகளை வரையறை செய்வது மிகவும் அவசியமானது என்ற கருத்தை சபாநாயகர்கள் மாநாட்டில் ஓங்கி ஒலித்திருக்கிறார் நம் பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள்.

ஒரே நாடு, ஒரே சட்டசபை என்ற ஆர்.எஸ்.எஸ். ஊதுகுரலுக்கு, மாநில சுயாட்சியை, அதன் தேவையை தெளிவாகவும், துணிச்சலாகவும் சொல்லியிருக்கும் அப்பாவு அவர்களின் திராவிடக் குரலை வாழ்த்தி வரவேற்போம்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It