woman in stressகோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி, தன்னுடைய ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தால், மன உளைச்சலுக்கு ஆளாகி நவம்பர் 20ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு “யாரையும் சும்மா விடக்கூடாது” என்று மூன்று நபர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.

பள்ளித் தலைமை ஆசிரியரிடம் மாணவி புகார் கொடுத்தபோது “பஸ்ல போறப்ப இந்த மாதிரி நடக்கும் இல்ல அப்படி நினைச்சுக்கோ, வீட்ல சொல்லாதே” என்று கூறி கவுன்சிலிங் அனுப்பி இருக்கிறார்கள். தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவியின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால் மாணவியின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். கல்வி வியாபாரத்தில் இலாபம் குறைந்து விடக் கூடாது என்பதற்காக, குற்றவாளிகளைப் பள்ளிகள் காப்பாற்றுகின்றன. ஆனால் இங்கு, உலகம் அறியாத நிரபராதிகளான மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

இங்கு குற்றவாளிகள் பள்ளி நிர்வாகமும், தனிப்பட்ட ஒரு ஆசிரியரும்தானா? பெண்ணை ஒரு போகப் பொருளாக காட்சிப்படுத்தும் மதங்கள் குற்றவாளிகள் இல்லையா? அவளுடைய நம்பிக்கை குடும்பத்தின் மீதும் கூட ஏன் இருப்பதில்லை? ஒரு பெண் தன்னுடைய பிரச்சனையை முறையிடப் புகலிடமே இங்கு ஏன் இல்லை?

வயது வரம்பு இல்லாமல் தினந்தோறும் பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகுதலும் அடங்கும். இங்கு வீட்டில் சொன்னாலும் அதைக் கண்டு கொள்ளாமலும் அல்லது மேற்சொன்ன தலைமையாசிரியரின் பதிலையே கூறும் பெற்றோர்களும் இந்தச் சமூகத்தில் உண்டு.

பெண்களின் கற்பிலேயே மானம், மரியாதை, கவுரவம் இன்னும் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்று வெளியே பிம்பத்தை உருவாக்கிக் கொண்டுதான் இந்தச் சமூகத்தில் இத்தனைப் பேரும் பெண்களுக்கு எதிரானப் பாலியல் வன்முறைகளுக்குக் கள்ளத்தனமாகத் துணை போகின்றனர். இதுவே அந்தப் பெண், தான் விரும்பியவர்களுடன் உறவு வைத்துக் கொண்டால் அப்போது, குடும்ப மானமே போய்விட்டதாக அந்தப் பெண்ணைக் கொலை செய்கிற அளவுக்கு இந்தச் சமூகம் துணிகிறது.

“Home, the most dangerous place for women, with majority of female homicide victims worldwide killed by partners or family” வீடுகளே பெண்களுக்கு ஆபத்தான இடம் என்ற ஆய்வு முடிவை அய்.நாவின் ஒரு கிளை அமைப்பு (United Nations Office on Drugs and Crime) வெளியிட்டது.

பெருமதங்களின் ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பைத் தகர்க்காமல், பெண்களின் இந்தப் பிரச்சனைகளுக்கு எப்படித் தீர்வு காண முடியும்? இதில் பெண்கள் விடுதலை மட்டுமன்று ஆண்களும் விடுதலையும் உள்ளடங்கியிருக்கிறது.

தந்தை பெரியார் சொன்னதைப்போல ஆண்-பெண் இருவருக்கும் உண்மை இன்பத்திற்கும் சுதந்திர வாழ்க்கைக்கும் இடம் ஏற்படும் சமூகத்திலேயே பெண்கள் இது மாதிரியான பாலியல் தொந்தரவுகளில் இருந்து விடுபடுவர்.

இர.ஜனனி

Pin It